Inspiration

ஆசையாய்த் தொடர்ந்து ஓடு

நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” பிலி 4:12. கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி தங்கைகளே, பந்தயப்பரிசாகிய பரலோகத்தை நோக்கி, நம்மை அழைத்த நம் ஆண்டவரும், தந்தையுமான இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அது 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜீனியர் கிரிக்கெட் மேட்ச். இதில் முதலிடம் பெற்றால் இந்திய கிரிக்கெட் டீமில் இடம் பிடிக்க வாய்ப்பு. நரேன் ஓய்வு அறையில் ஷீ மாட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது பயிற்சியாளர் பதட்டமாக ஓடிவந்தார். நரேன் உனக்கு ஒரு சோக செய்தி, உன் தகப்பனார் இறந்துபோய் விட்டார்’ என்றார். நரேன் சிறிது நேரம் அமைதியாக நின்றான். பின்பு தலையை உலுக்கியபடி, சார், நான் விளையாட விரும்புகிறேன் என்று மைதானத்திற்குச் சென்றான். வெறித்தனமாக ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கினான். தமிழ்நாடு டீம் ஜெயித்தது. Man of the match வாங்கி வந்த அவனிடம், கேட்டாங்க எப்படிப்பா இது சாத்தியமாயிருந்தது? என்று கேட்டபொழுது அவன், ஐயா, எனக்கு அப்பா மட்டும் தான், அவருக்குக் கண் பார்வை கிடையாது. கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். நான் பலமுறை match-ல் ஜெயித்து வரும்போது, “மகனே நீ விளையாடுவதை என்னால் பார்க்க முடியவில்லையே!” என வருந்துவார். ஆனால் இன்று அவர் பரலோகம் சென்றுவிட்டார். அவருடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கும். நிச்சயம் என் ஆட்டத்தை முதன் முறையாக பார்ப்பார் என்கிற நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆகவே உத்வேகத்துடன் விளையாடினேன் என்றான். இதை வாசிக்கிற அருமையான தம்பி, தங்கையே, பரலோகத்தை நோக்கி, ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி, ஒரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையை எது தடைசெய்கிறது? உங்களை வருத்தப்படுத்தி உங்களை பாதியிலே நின்றுவிடச் செய்தது என்ன? ஆண்டவரை விட்டே விலகி பின்னோக்கி ஓடச்செய்தது எது? உலகப்பிரகாரமான வெற்றிக்காகவும், கண் பார்வையில்லாமல் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்த தகப்பனாரின் சந்தோஷத்துக்காகவும் ஆசையாய் ஓடி ஜெயித்த இந்த வாலிபன் எவ்வளவு பெரிய முன்னுதாரணம். அக்கினியும், கந்தகமும் எரிந்து கொண்டிருக்கிற நரகத்திற்குப் போய் விடாமல், நிரந்தரமான, மகிழ்ச்சியான, பரலோகத்திற்கு நாம் வர வேண்டும் என்பதற்காக சிலுவையிலே பாடுபட்டு தன் உயிரையே கொடுத்த இயேசுவின் சந்தோஷத்திற்காக உங்கள் ஓட்டத்தை ஓட, இந்த உலகத்திலே வாழ உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கமாட்டீர்களா? அவரை விட்டு உங்களைப் பிரிக்கிற எதையும் உதறித்தள்ளமாட்டீர்களா? பவுல் சொல்லுகிறார் “நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதைப் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் ஓடுகிறேன்” பிலி 3:12 அதற்காக ஒன்று செய்கிறேன் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, இலக்கை நோக்கி ஓடுகிறேன். பிலி 3:13,14. யூதமார்க்கத்தில் மிகவும் தேறினவராய், செல்வாக்குடன் பெருமையுடன் வாழ்ந்த அவர் அவற்றையெல்லாம் ஒரு குப்பையைப் போல நினைத்து, அவருக்கு சந்தோஷமாகவும், லாபமாகவுமிருந்த அனைத்தையும் வேண்டாம் என்று விட்டுவிட்டு பரிசுப் பொருளாகிய இயேசுவை, பரலோகத்தை அடையும்படி எவ்வளவு கஷ்டங்கள், (கவர்ச்சிகள்) வந்தபோதும் ஆசையாய்த் தொடர்ந்து ஓடினார். நல்ல போராட்டத்தை போராடினேன். ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார், எனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் 2 தீமோ 4:7,8 பவுலைப் போல நீங்கள், நான் நல்ல ஓட்டத்தைத்தான் ஓடுகிறேன் என்று உண்மையாகச் சொல்லமுடியுமா? உங்கள் மனச்சாட்சியையும் மழுங்கப்பண்ண வைத்து, நான் செய்தது, செய்வது எல்லாம் சரி என்ற போக்கிலே ஓடிக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் இப்போதே மனம்வருந்தி, மனந்திருந்தி ஆண்டவரிடம் உங்களை ஒப்புக்கொடுங்கள். நெருப்பு தன்னை அழித்துவிடும் என்று அறியாமல் விட்டில் பூச்சி அதில் சிக்கியழியுமே, அது போல நீங்கள் சிக்கிக்கொண்ட தவறான நட்புகள், பாவங்களிலிருந்து விலகி இயேசுவை நோக்கி ஆசையாய் ஓடுங்கள். இதுவரை தவறினதை, தவறுகளை தப்பிதங்களை ஆண்டவரிடம் சொல்லி மன்னிப்புப், பெற்று அதை மறந்துவிடுங்கள். தகப்பன் பிள்ளைக்கு இரங்குவது போல நம் ஆண்டவரும் உங்களுக்கு இரங்கி உங்கள் பாவத்தை மன்னித்து மறந்து விடுவார். உங்களைச் சுற்றிலும் இருப்பவர்களும் மன்னித்து மறந்து விடுவார்கள். எனவே அதைப்பற்றிக் கவலைப் படவேண்டாம். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று. பின்னான, பழைய பாவ வாழ்க்கை ஓட்டத்தை வெறுத்து, மறந்து விட்டுவிட்டு, முன்னான நல்ல, பரலோகம், இயேசுவை நோக்கி ஓட்டத்தைத் துவங்குங்கள். நிச்சயம் நீதியின் கீரிடம், வெற்றி உங்களுக்கு உண்டு. ஆசையாய்த் தொடர்ந்து ஓட ஆண்டவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக!. ஆமென்.

Youth Special - Sis. Prema David