Inspiration

எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்கிற கர்த்தர்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!!. என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.1 ராஜா 1:30. தாவீது ராஜா பத்சேபாளுக்கு ஆணையிட்டுக் கொடுத்தபடியே மகன் சாலமோனை ராஜாவாக ஏற்படுத்துவேன் என்று சொல்லி என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தர் என்கிறார். 

 

தாவீது சந்தித்த இக்கட்டுகள் ஏராளம். சிறியவனாய் இருக்கும்போது வனாந்திரத்துக்கு தாய் தந்தையாலேயே அனுப்பி வைக்கப்பட்டவன். என் வாழ்க்கையே இவ்வளவு தானா? இந்த காட்டிலேயே முடிந்து போகப்போகிறதா? நன்மையின் நாட்களை நான் காண்பேனா? பலவிதமான கேள்விகள் அவனில் எழும்பும் போதெல்லாம் கர்த்தர் என் மேய்ப்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் என்று சொல்வான். சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும் என்பான். சங் 116:3-ல் மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக் கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது.. இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன் என்று சொல்லுகிறான். 

 

நம் வாழ்க்கையில் கூட தாவீதைப் போல பல இக்கட்டுகளை சந்தித்துக் கொண்டு இருக்கலாம், தாவீதை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தர் நம்மையும் விடுவிப்பார். காட்டிலிருந்து நாட்டிற்கு கொண்டு வருகிற மாதிரி இருக்கும். ஆனாலும் திரும்பவும் வனாந்திர வாழ்க்கை வழியாக கடந்து போனான். ஒருமுறை இரண்டு முறை அல்ல, பலமுறை அவன் அனாதை போல வனாந்திரத்தில் அலைந்தான். சொந்தங்களால் வந்த இக்கட்டுக்கள், மாமன் சவுல், மகன் அப்சலோம், பெலிஸ்தியரால் வந்த இக்கட்டுகள், எத்தனை நாட்டவர்களோடு யுத்óதம், கொஞ்சம் நிம்மதியாய் இருப்போம் என்று நினைத்தான், ஆனால் ஆத்துமாவை மரணத்துக்குள்ளாக்கும் விபச்சாரத்தில் விழுந்தான் பாவ போராட்டம். அவன் வாழ்க்கையில் ஜனங்களை எண்ணி தொகை பார்த்து அதில் ஒரு பெருமை, எவ்வளவு பேர் இருக்காங்க என்று அதில் ஒரு போராட்டம் இது சாத்தானின் தூண்டுதலால் வந்தது. அத்தனை போராட்டங்களில் இருந்தும் கர்த்தரே என்னை நீங்கலாக்கி விடுவித்து காத்தார் என்கிறான். 2 சாமு 24:14-ல் கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்பொழுது நாம் கர்த்தருடைய கைகளில் விழுவோமாக அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றான். 

 

கொடிய இடுக்கண் வந்த போது தாவீது கர்த்தரின் கையிலேயே விழுந்தான். நீங்கபாத்து ஏதாவது செய்யுங்க என்றான், மூன்று தண்டனையில் எதை தெர்ந்தெடுப்பது தெரியவில்லை.  ஏழு வருஷம் பஞ்சம் வேணுமா?, மூன்று நாள் கொள்ளை நோய் வேணுமா?, மூன்று மாதம் எதிரிகளால் துரத்தப்பட வேணுமா? என்று தீர்க்கதரிசியின் மூலம் தேவன் சொல்லி அனுப்பினார். ஏழு வருஷம், மூன்று மாதம், மூன்று நாள் என்று இருக்கிறதிலேயே சின்ன தண்டனை கொடுத்து சீர்படுத்தினார். 17-ஆம் வசனத்தில் இதோ, நான்தான் பாவஞ்செய்தேன், நான் தான் அக்கிரமம் பண்ணினேன், இந்த ஆடுகள் என்ன செய்தது என்று மனம் வருந்தி தன்னைத் தாழ்த்தினதும் தேவ கோபம் விலகிப்போனது. அந்த தேவன் நமக்கும் ஜெயம் தருவார். காரணம் தாவீதுக்கு என்ன கிருபை கொடுத்தேனோ அதே கிருபையை நான் உனக்கும் கொடுப்பேன் என்றார். பாவத்தினால், பொல்லாத மனிதர்களால், சாத்தானால் இக்கட்டுகளில் சிக்கித் தவிக்கிற நம்மை தேவன் விடுதலையாக்குவார்

 

எலிகூ யோபுவுக்கு உணர்óத்துகிறான், யோபு 34:31-33-ல் நான் தண்டிக்கப்பட்டேன், நான் இனிப் பாவஞ் செய்யமாட்டேன், நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால் நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே, நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச் சொல்வீரோó, அல்லவென்றால் நீர் அறிந்திருக்கிறதை சொல்லும் என்றான். தண்டனை வரும் போது இனிப் பாவம் செய்யமாட்டேன். நான் அநியாயம் பண்ணினால் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கி கெஞ்சு, நீர் அப்படி செய்யாமல் உம்மோடிருக்கிற ஒருவர் உமக்குப் பதிலாக செய்யச் சொல்வீரோ? தன் பாவத்தை தான்தான் அறிக்கை செய்யணும் என்று அவன் பேசினான் பின்பு, கர்த்தர் பேசினார் உடனே உணர்வுள்ளவனாகி தூளிலும், சாம்பலிலும் உட்கார்ந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். அறிவில்லாமல் ஆலோசனையை அபத்தமாக்கினது நான் தான். அலப்பிட்டேன் என்று தாழ்த்தின உடனே எல்லா இக்கட்டுகளும் மாறிப்போனது. ஒரு இக்கட்டு வந்த உடனே உங்களைத் தாழ்த்தி தேவனிடத்திலேயே ஓடுங்கள்.

 

ஐயோ, நான் ஜெபம் பண்ணிக் கொண்டு தானே இருக்கிறேன், ஏன் எனக்கு இப்படி நடக்குது என்று கேட்காதீங்க. யாத் 5:19-ல் நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீர வேண்டிய செங்களிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள். நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள் அதனால் தான் ஜெபம், ஆராதனை, பலியிட வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். இனி உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்பட மாட்டாது, தினமும் நீங்கள் அறுக்க வேண்டிய செங்கலும் குறைக்கப்பட மாட்டாது என்றதும் ஐயோ நமக்கு இக்கட்டு வந்தது என்று மோசேயோடும், ஆரோனோடும் சண்டை போட்டார்கள். இன்னும் நான் எதில் தவறி விட்டேன் எனக்கு காண்பியும் என்றால் ஆண்டவர் நம்மோடு பேசுவார். அதைக் கேட்காமல் இஸ்ரவேலர் சண்டை பண்ணினார்கள். நம் காரியம் என்ன என்று  அதை உணர்ந்து அறிக்கையிட்டு அர்ப்பணியுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று தாழ்த்துங்கள் இரக்கம் பெறுவீர்கள்.

 

கர்த்தர் யார்?

 

அவர் நல்லவர். நாகூம் 1:7 கர்த்தர் நல்லவர். இக்கட்டு நாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். சங் 37:39-ல் நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும். இக்கட்டு காலத்திலே அவரே அவர்கள் அடைக்கலம். சங் 32:7-ல் நீர் எனக்கு மறைவிடமாய் இருக்கிறீர். என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சணியப் பாடல்கள் என்னைச்  சூழ்ந்து கொள்ளும்படி செய்கிறீர். கர்த்தர் நல்லவர், அவர் நமது அடைக்கலம், அவர் நமது மறைவிடம், தம்மை நம்புகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார். இக்கட்டுக் காலத்திலே அவரே நமது அடைக்கலம். இக்கட்டுகள் சூழ்ந்திருக்கும் போது அவர் அதற்கு நம்மை மறைத்து இரட்சண்யத்தால் பாடல்கள் நம்மை சூழ்ந்து கொள்ளச் செய்கிறார். எனவே மனம் கலங்காதிருங்கள். அவர் நம்மை இந்த இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி காப்பாற்றி மீட்க வல்லவர்.

 

நாம் என்ன செய்ய வேண்டும்? 

 

தாவீதைப் போல ஜெபம் பண்ண வேண்டும். சங்கீதம் 141:5-ன் பின் பகுதியில் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம் பண்ணுவேன். சங் 60:11-ல் இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும். மனுஷனுடைய உதவி விருதா! என்று சங்கீதக்காரன் ஜெபிக்கிறான். இக்கட்டு அதிகரிக்கும் போது நாம் ஜெபம் பண்ண முடியாமல், அல்லது ஜெபம் பண்ணியும் இன்னும் பிரச்சனை தீர வில்லையே என்று ஜெபம் பண்ணாமல் போகிறோம், ஜெபம் பண்ணுவதை நிறுத்திவிடுகிறோம். ஆனால் இந்த சங்கீதக்காரன் இக்கட்டு நாளில் நான் இன்னும் ஜெபம் பண்ணுவேன் என்கிறான். சங் 34:6-ல் இந்த ஏழை கூப்பிட்டான் கர்த்தர் அதைக் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். சங். 71:20,21-ல் அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து,  திரும்பவும் என்னை பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். என் மேன்மையைப் பெருகப்பண்ணி என்னை மறுபடியும் தேற்றுவீர். ஏசா 33:2-ல் கர்த்தாவே எங்களுக்கு இரங்கும். உமக்கு காத்திருக்கிறோம். தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டு காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும் என்று ஏசாயா ஜெபிக்கிறார். நெகே 9:36, 37 அதிகாரம் முழுவதும் ஜெபம் தான் பலனையும், நன்மையையும் அனுபவிக்கும் தேசத்திலே தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். பின் பகுதியில் வசனம் 37 நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம். நெகேமியா தனக்காகவும் தம் ஜனங்களுக்காகவும் உட்கார்ந்து, அழுது, உபவாசித்து ஜெபித்ததைப் பார்க்கிறோம்.. சங் 107:6, 13, 19, 28-ல் இஸ்ரவேலர் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள், அவர் அவர்களை விடுவித்தார். சங் 25:22 தேவனே இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டு விடும் என்கிறான்.  யோனா 2:2-ல் மீனின் வயிற்றிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் எனக்கு உத்தரவு அருளினார், நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன். நீர் என் சத்தத்தை கேட்டீர் என்கிறான். 

 

நாம் விசுவாசிக்க வேண்டும்

 

ஆபகூக் 3:16 இக்கட்டு நாளில் இளைப்பாறுதல் அடைவேன். ஆவிக்குரிய யுத்தம் நடக்குது. ஆனாலும் இக்கட்டு நாளில் இளைப்பாறுதல் அடைவேன் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும். சூழ்நிலைகள் நமக்கு எதிர் மறையாகவே இருக்கும். நம்மால் விசுவாசிக்க முடியாததாய் இருக்கும். நான் இந்த இக்கட்டில் இளைப்பாறுதலை பெறுவேன், நன்மையை காண்பேன் என்று நம்பினால் நிச்சயம் நன்மையைக் காண்போம். அப்படி நாம் விசுவாசித்திருக்கும் போது எரே 15:11 தீங்கின் காலத்திலும்  உனக்காக நான் சத்துருக்களுக்கு எதிர்ப்பட்டு உனக்கு சகாயம் செய்வேன் என்று ஆண்டவர் சொல்கிறார். எரே 30:7-ல் யாக்கோபுக்கு இக்கட்டுக் காலம், ஆயினும் அவன் அதிலிருந்து மீள்வான் என்று வேதம் சொல்கிறது. நாமும் எல்லா இக்கட்டிலிருந்தும் மீளுவோம் என்று ஆண்டவர் வாக்குக் கொடுத்திருக்கிறதை விசுவாசித்து ஆசீர்வதிக்கப்படுவோம். என் ஆண்டவர் தாமே இதை வாசிக்கிற உங்கள் வாழ்விலும் ஏற்படுகிற எல்லாவித இக்கட்டுகளிலும், இன்னல்களிலுமிருந்து நீங்கலாக்கி உங்களை மீட்டு இரட்சிப்பாராக!!.

By Sis. Kala VincentRaj