Inspiration
மூன்று நாளில் நடப்பது என்ன?
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி உன்னை மறுபடியும் உன் நிலையில் உயர்த்துவார். ஆதி 40:13
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வேதாகமத்தில் நாட்கள், எண்கள் இவைகளைப் பற்றியும், சில முக்கிய நாட்களைப் பற்றிப் பார்க்கிறோம். நாற்பது நாட்கள், ஏழு நாட்கள், மூன்று நாட்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதிலே இந்த மூன்று நாட்களைப் பற்றித் தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறோம். நம்முடைய தேவன் திரித்துவ தேவனாய் இருக்கிறார். எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர். அவர் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவராகவும் இருக்கிறார். மத் 28:19-ல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற தம்முடைய நாமத்தை அங்கே சொல்லுகிறார்.மேலும் 1 யோவான் 5:7-லும் பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் என்றார். அப்படி திரித்துவ தேவனாயிருக்கிறவர் இன்றைக்கு நமக்குள் இருக்கின்ற ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்று அமைப்பின் மூலமாக செயல்படுகிறார். இந்த மூன்று என்பது முக்கியமானது. இயேசு செய்த முதல் அற்புதம் யோவான் 2:1-ல் நடந்த கல்யாணம். அதில் செய்த அற்புதம் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றினார். அதுமட்டுமல்ல இயேசு சொன்னார் மத் 16:21-ல் மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்றார்.இதுதான் நான் இந்த பூமிக்குக் கொடுக்கும் அடையாளம் என்றார். வேதபாரகர்கள், பரிசேயர்கள் நீர் யார்? எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டு என்ற போது இயேசு சொன்னார் மத் 12:40-ல் யோனா இரவும் பகலும் மூன்று நாள், ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் வயிற்றில், பூமியின் இருதயத்தில் இருப்பார் என்றார். இப்படி பல சம்பவங்கள் இந்த மூன்று நாளிலே நடந்ததைப் பற்றி வேதம் சொல்லுகிறது. இதைப் போல பல சம்பவங்களைப் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பார்க்கிறோம். இப்படி மூன்று நாட்களில் நடந்த அற்புதங்களை, நன்மைகளைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
யோசேப்பு சிறையில் இருக்கும் போது பார்வோனுடைய அரண்மனையிலே இருந்த இரண்டு பேர் ராஜாவின் கோபத்திற்கு உள்ளாகி, யோசேப்பு இருந்த சிறைச்சாலையிலே தள்ளப்பட்டார்கள். யோசேப்புக்கு சிறைச்சாலை என்பது தேவன் உலாவுகிற இடமாகவும், தங்கும் இடமாவும் இருந்தது. இந்த சிறைச்சாலையே யோசேப்புக்கு ஒரு பரலோகமாக மாறியது. காரணம் கர்த்தர் அவனோடே இருந்தார். அதனால் அந்த இக்கட்டில், உபத்திரவங்களில் மகிழ்ச்சியாய், சந்தோஷமாய் இருந்தான். அப்பொழுது ஒரு நாள் காலையில் ராஜாவின் கோபத்திற்கு உள்ளாகி, சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அந்த இரண்டு பேரும் சோர்வோடும், கலக்கத்தோடும் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட யோசேப்பு நீங்கள் துக்க முகத்தோடு, கவலையோடு இருக்க காரணம் என்ன? என்ன நடந்தது? என்ன சம்பவித்தது? என்றான். அப்பொழுது தான் அவர்கள் கண்ட கனவை, சொப்பனத்தை யோசேப்புக்கு விவரித்தார்கள். அந்த சொப்பனத்துக்கு, கனவுக்கு யோசேப்பு சொன்ன அர்த்தம், இந்த மூன்று கூடையும், மூன்று நாட்கள். இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, மீண்டும் அவருடைய ராஜ்ஜியத்தில் உன்னை உயர்த்துவார் என்றார். யோசேப்பு சொன்னபடியே பார்வோன் ஒருவனை விடுதலையாக்கி, மூன்று நாளைக்குள் அவர் தலையை உயர்த்தி, அவர் சமூகத்தில் நிற்க வைத்தார். மூன்று நாளைக்குள் தேவன் சூழ்நிலைகள், வேதனைகள், அவமானங்கள் அத்தனையையும் மாற்றி அவனுக்கு ஒரு அற்புதத்தைச் செய்தவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியேஉங்களுக்கும் தேவன் கட்டாயம் ஒரு அற்புதத்தைச் செய்வார், செய்ய முடியும், தோல்வியை மாற்ற முடியும், நிந்தையை மாற்ற முடியும், அவமானத்தை மாற்ற முடியும். ஆம் மூன்று நாளைக்குள் பார்வோன் உன் தலையை உயர்த்தி மேன்மைப்படுத்துவார் என்று யோசேப்பு சொன்ன மங்கள வார்த்தையை நிறைவேற்றினார்.
இன்றைக்கும் உயிரோடு இருக்கிற தேவன், உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கின்ற காரியங்களில் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்வார். தேவனுக்கு அதிகபடியாய் மூன்று நாட்கள் போதும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். டாக்டர் மருந்து எழுதும் போது மூன்று நாட்கள் தான் எழுதுவார்.உங்கள் வாழ்க்கையை சரி செய்ய, உங்களó போராட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட மூன்று நாட்கள் போதும். அதைத்தான் யோசேப்பு தீர்க்கதரிசனமாக மூன்று நாளில் நீதப்புவிக்கப்படுவாய், மூன்று நாளில் உன் தலை உயர்த்தப்படும் என்றார். இந்த செய்தியை வாசிக்கின்ற சகோதரனே, சகோதரியே உங்கள் போராட்டம் என்ன? உங்கள் பிரச்சனை என்ன? நெடுநாட்கள் தாமதிக்கிறது, நீண்ட நாட்கள் பிரச்சனையாக இருக்கிறது கோர்ட் கேஸ், இந்த வியாதி போராட்டம், சொத்துப் பாகப்பிரிவினை முடிந்தபடியில்லை, இனி அதன்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சோர்ந்து போனீர்களா? அவ்வளவுதான் என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது என்று நினைக்கின்றீர்களா? நீங்கள் தேவன் மேல் வைத்த உங்கள் நம்பிக்கை வீண் போகாது, உங்கள் பிரயாசம் வீண் போகாது. மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயõரோடு எழுந்த தேவன் இன்றைக்கு உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார். உங்கள் போராட்டத்திற்கும், பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பார். மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்றவர் கட்டாயம் உங்கள் காரியங்களில் ஒரு அற்புதத்தைச் செய்வார். ஓசியா 6:2-ல் தீர்க்கதரிசி சொல்லுகிறார் இரண்டு நாட்களுக்குப் பின் அவர் நம்மை உயிர்ப்பிப்பார், மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார். அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம் என்றார்.
நீங்கள் பிழைத்திருக்கும்படி, வாழ்ந்திருக்கும்படி, உங்களுடைய இந்த சூழ்நிலை மாறும்படி மூன்றே நாளில் அற்புதம் செய்கிறவர், கட்டாயம் உங்களுக்கு ஒரு காரியத்தைச் செய்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை நிருபிப்பார். மூன்று நாட்களுக்குள் உங்கள் காரியத்தில் ஒரு அற்புதத்தைச் செய்வார். அதற்குத் தான் அவர் உயிரோடு இருக்கிறார். போகட்டும் இந்த மூன்று நாட்களை யார் யார் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள், என்ன என்ன நன்மை நடந்தது என்பதைப் பார்ப்போம்.
1. மூன்று நாட்கள் அவரோடு இருந்தார்கள்
பின்பு இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன். இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். இவர்களை பட்டினியாய் அனுப்பி விட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார். மூன்று நாளுக்குள் நமக்கு ஒரு காரியம், ஒரு அற்புதம் நடக்க வேண்டுமானால் நாம் அவரோடு மூன்று நாட்கள் இருக்க வேண்டும். காரணம் நாம் தேவனோடு இல்லாமல் கண் கண்ட போக்கில் போய், மனம் போன போக்கிலே போய், நாம் நம்முடைய இஷ்டத்திற்கு சுற்றித் திரிந்து கொண்டு தேவன் எனக்கு அற்புதம் செய்ய வேண்டுமென்றால் எப்படி செய்வார், எப்படி அற்புதம் நடக்கும்? நாம் அவரோடு இருக்க, அவரோடு சஞ்சரிக்க பழக வேண்டும். 2 நாளா 15:2-ல் நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடினால், அவர் உங்களுக்கு வெளிப்படுவார் என்றார். ஆம் மூன்று நாளைக்குள் தேவன் நம் தலையை உயர்த்த வேண்டுமென்றால் நாம் அடிக்கடி உபவாசித்து தேவ சமுகத்தில் கூட வேண்டும். உபா 16:16-ல் வருஷத்திலே மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள் என்றார். எந்த ஒரு ஆண்மகனும், கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட எவரும், உபவாசத்தோடு தேவ சமுகத்திற்கு வரவேண்டும். இது தேவ சட்டம், இது தேவ நீதி, இதைச் செய்யாத யாவரும் தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்க முடியாது.
இதைத்தான் இயேசுவின் நாட்களில் வனாந்தரத்தில், ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஜனங்கள் மூன்று நாட்கள் வனாந்தரத்தில் தேவனுடைய வார்த்தையை கேட்க கூடினார்கள். சாப்பாட்டை மறந்து, தூக்கத்தை மறந்து, தங்கள் வேலைகளை விட்டு, அவர் சமுகத்தில் கூடவும், ஜெபிக்கவும், அவர் சொல்லுவதைக் கேட்கவும் ஒருமனப்பட்டார்கள். ஆண்டவராகிய தேவன் ஒரு மனிதனிடத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறார். இயேசு சொன்னார் மத் 18:20-ல் ஏனெனில், இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்றார்.இன்றைக்கு நமக்கு தேவவல்லமை வெளிப்பட வேண்டுமென்றால், நமக்கு வருகின்ற தீமைகள் நன்மையாய் மாற வேண்டுமென்றால், மூன்று நாளைக்குள் ஒரு மாற்றம் நிகழ வேண்டுமென்றால், அற்புதம் நடக்க வேண்டுமென்றால், மூன்று நாட்கள் அவருடைய பாதத்தில் அமர்ந்திருக்க வேண்டும், உபவாசித்து ஜெபிக்க வேண்டும். வேலையிலே பிரச்சனை இருக்கலாம், குடும்பத்திலே போராட்டம் இருக்கலாம், மற்ற மனிதர்களால் நமக்கு நெருக்கடி வரலாம், எத்தனை பிரச்சனை போராட்டம் வந்தாலும் தேவ சமூகத்தில் நாம் விழுந்து கிடக்கும் போது, உபவாசித்து ஜெபிக்கும் போது அந்த ஜெபம் பரலோகத்தினó தேவனை இந்த பூமியில் இறங்கி வரப்பண்ணும். எஸ்தர் 4:16-ல் நீ போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச் செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம், இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன் என்றாள். ஆம் யூதருக்கு விரோதமாக ஆமான் என்பவன் ராஜாவினிடத்தில் சென்று யூதர்களுக்கு விரோதமாக பேசி, சட்டத்தை மாற்றி, கொடுமைபடுத்தப்படவும், அழிக்கவும், பயங்கரமான கிரியை செய்ய ஆரம்பித்தான். யூதர்களை நாட்டை விட்டே, பூமியை விட்டே துரத்தி அழிக்க ஆமானும், அவனுடைய சகாக்களும் செயல்பட்டார்கள். ஆனால் எஸ்தரே, இந்த கெடு வைக்கப்பட்ட அந்த நாளிலே, மூன்று நாட்கள் அவளும், அவள் தாதிமார்களும், யூத ஜனங்களும் உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள். புசியாமலும், குடியாமலும் தேவ சமுகத்தில் மூன்று நாட்கள் விழுந்து கிடந்தார்கள். இவர்கள் செய்த இந்த மூன்று நாட்கள் உபவாச ஜெபம் தேவ சமுகத்தை எட்டியது. தேவன் எஸ்தருக்கும், யூத குலத்திற்கும் இரங்கினார். நடந்தது என்ன? எஸ்தர் 9:1-ல் சொல்லுகிறது காரியம் மாறுதலாய் முடிந்தது. பரலோகத்தின் தேவன் அவருடைய பிள்ளைகளுக்காக எழுந்தருளினார். தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள் என்று சங் 68:1 சொல்லுகிறது. எப்பவுமே நம் எதிரி, நமக்கு கெடு வைக்கிறான், நாள் குறிக்கின்றான் என்றால், நமக்கு அல்ல, அவனுக்கு அவனே கெடு வைக்கிறான். அந்த மூன்று நாட்களின் ஜெபம், புசியாமலும், குடியாமலும் இருந்த அந்த உபவாச ஜெபம் ஒரு பெரிய மாற்றத்தை, அற்புதத்தைச் செய்தது. தேசத்தின் காரியங்களையே மாற்றிப் போட்டது. ஆம் நாம் மூன்று நாட்கள் அவரோடு இருக்கும் போது, மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்கும் போது கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்கிறார். அப்பொழுது தான் அவர் சொன்ன வார்த்தை, தீர்க்கதரிசனம் நமக்கு நிறைவேறுகிறது. மூன்று நாட்களுக்குள் அவன் தலை உயர்த்தப்பட்டது.
தானியேல் 6:10-13 வசனங்களில் தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்த போதிலும், தன் வீட்டிற்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேல் மூன்று நாள் மட்டுமல்ல, தினமும் மூன்று வேளையும், காலை, மாலை, இரவு மூன்று நேரமும் ஜெப நேரமாக வைத்திருந்தான். ஒரு நாளைக்கு கிட்டதட்ட ஆறு மணி நேரம் ஜெபத்தில் தரித்திருந்தான். ஆறு மணி நேரம் ஓய்வு, 12 மணி நேரம் அரசு வேலையை செய்து தன் முழங்கால் ஜெபத்தால், தன் மூன்று வேளை ஜெபத்தால் முழு ராஜ்யத்தையும், ராஜாவையும் தன் கையில் வைத்திருந்தான். அந்த தேசத்தில் தானியேல் மூன்று வேளை ஜெபித்ததினால் அங்கே கிரியை செய்த ஆவிகள் கட்டப்பட்டு அழிக்கப்பட்டது, தேவ நாமம் உயர்த்தப்பட்டது. அவனுக்கு விரோதமாய் எழும்பினவர்கள் அழிக்கப்பட்டார்கள். தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது. காரணம் அவன் மூன்று வேளையும் ஜெபம் பண்ணி, பரிசுத்த ஆவியினால் நிரம்பி, மூன்று நாட்களை மூன்று நேரமாக மாற்றி தன் தேவனை தேசத்தில் நிருபித்தார். இன்றைக்கு நீங்களும் இப்படி செய்து பாருங்கள், மூன்று நாளைக்குள்ளே கர்த்தர் உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்து, உங்கள் தலையை உயர்த்தி, முன்பைக் காட்டிலும், பெலத்ûயும், சத்துவத்தையும் தந்து ஆசீர்வதித்து பெரிய காரியங்களைச் செய்வார்.
2. மூன்று நாளைக்குள்ளே உங்களை எழுப்புவார்.
இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள் மூன்று நாளுக்குள்ளே எழுப்புவேன் என்றார். யோவான் 2:19. நம்முடைய தேவன் மூன்றே நாளில் ஒருவனை உயிரோடு எழுப்ப முடியும். ஆகவே தான் யூதருக்கு சவால் விட்டு சொல்லுகிறார் என்னை கொன்று போடுங்கள், என்னை அழித்துப் போடுங்கள் மூன்றே நாளில் எழும்புவேன், எழுந்திருப்பேன் என்றார். கீழ்ப்படியாத யோனாவை, தேவ சித்தத்தை நிறைவேற்றாத யோனாவை விழுங்கும்படி, உடைத்து உருவாக்கும்படி கர்த்தர் ஒரு பெரிய மீனுக்கு கட்டளையிட்டார். அது மூன்று நாட்களுக்கு அசை போடாமல் தேவன் கொடுத்த கட்டளையை நிறைவேற்றி, பத்திரமாய் தன் வயிற்றிலே யோனாவை பாதுகாத்து மூன்று நாட்கள் முடிந்தவுடனே அது அவனை தரையிலே கக்கிப் போட்டது. அந்த மீன் தண்ணீர் குடியாமல், புசியாமல் இருந்தபடியால், உபவாசித்தபடியால் யோனா பத்திரமாக அங்கே தேவனால் பாதுகாக்கப்பட்டு கரைக்கு திரும்பினார்.
பேதுருவைப் பாருங்கள் எல்லாரும் மறுதலித்தாலும் நான் மறுதலிக்க மாட்டேன் என்று இயேசுவுக்கு முன்பாக சவால் விட்டான். நடந்தது என்ன? கடைசியாக எல்லாரும் அமைதியாக இருந்தார்கள், பேதுரு மூன்று முறை மறுதலித்தான். அவரை தெரியாது என்று சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கினான். கடைசியாக இருதயத்தில் குத்தப்பட்டு, உடைக்கப்பட்டு மூன்று முறை பாவ அறிக்கை செய்து நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மில் அன்பாயிருக்கிறேன் என்றான். மூன்றே நாளில் தேவன் அவருடைய வாழ்க்கையை கட்டியெழுப்பி, பின்வாங்குதலிருந்து உயிர்ப்பித்தார், மாற்றினார். அதைத்தான் வேதத்தில் நம்முடைய ஆண்டவராகிய தேவன் சொல்லுகிறார் ஓசியா 6:1,2-ல் கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள், நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார், மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார், அப்பொழுது நாம் அவர் சமுகத்தில் பிழைத்திருப்போம் என்றார். சிலபேரை திருத்த, மாற்ற பல வருஷங்கள், பல மாதங்கள் ஆனது. யாக்கோபு 20 வருஷம் தேவனை மறந்து, தேவ திட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தார். சவுல் 40 வருஷம் தேவனுடைய திட்டத்திற்குள் வராமல் பரிதாபமாக மரித்துப் போனான். ஆனால் இயேசுவினுடைய சிலுவை பாடுகளுக்குப் பின்பு மூன்றே நாளில் மனமாற்றம் நடந்தது. மூன்றே நாளில் எழுப்புதல் உண்டானது. மூன்றே மணி நேரத்தில் வியாதிகள் சுகமடைந்தது. மூன்றே நிமிடத்தில் எசேக்கியாவின் ஜெபம் கேட்கப்பட்டு சுகமடைந்து ஆயுசு நாட்கள் கூட்டிக் கொடுக்கப்பட்டது. மூன்றே நாளில் அப்போஸ்தலனாகிய பவுல் சந்திக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான். அப் 9:9-ல் அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். காரணம் தெற்கத்தி வெள்ளங்களை திருப்புவது போல தேவன் பவுலுடைய இருதயத்தை திருப்பினார். ஒரு மனிதன் மனதை மாற்றவும், உயிர்ப்பிக்கவும், அவருக்குள் எழுப்பவும் மூன்று நாள் போதும். ஆகவே தான் இயேசு சொன்னார் இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள் மூன்றே நாளில் எழுப்புவேன் என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியே நம் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நம்முடைய காரியங்கள் எப்படி இருக்கிறது எத்தனை வருஷங்கள், எத்தனை மாதங்கள் நாம் உழன்று, போராடிக் கொண்டிருக்கிறோம். மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் நான் உயிரோடிருக்கிறேன் என்றவர், இன்றைக்கு உங்கள் போராட்டத்திற்கும், உங்கள் பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி, ஒரு முடிவை உண்டு பண்ண விரும்புகிறார். அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. முடியாத காரியம் ஒன்றும் இருக்கப் போவதும் இல்லை. கட்டாயம் உங்களுக்கு ஒரு அற்புதத்தை, விடுதலையைத் தருவார். மூன்று நாட்கள் அவர் சமுகத்தில் அவரோடு இருந்த ஜனங்களுக்கு அற்புதம் செய்தார். மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபித்த ஜனங்களுக்கு அற்புதம் செய்தவர் உங்களுக்கும் செய்வார். உங்களை பின் தொடருகிற பிசாசின் போராட்டங்கள், பிசாசின் கிரியைகளை மூன்று நாளைக்குள் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார். இயேசு சொன்னார் தன்னைக் கொல்ல, அழிக்கத் தேடிக் கொண்டிருந்த ஏரோதுவைப் பார்த்து லூக் 13:32,33-ல் அதற்கு இயேசு, நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி மூன்றாம் நாளில் நிறைவடைவேன் என்றார். பிசாசுகளைத் துரத்தவும், வியாதிகளை சுகமாக்கவும், மரித்துப் போனவர்களை உயிரோடு எழுப்பவும் அவரால் ஆகும். ஒருமுறை டாக்டர் பால் யாங்கிச் சோ என்ற தேவ மனிதர் தன் ஆலயத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து விட்டார். அவரை பரிசேதித்த மருத்துவர்கள் சொன்னார்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அப்பொழுது போதகர் பால் யாங்கிச் சோ அவர்கள் சொன்னார்கள், எனக்கு மூன்று நாட்கள் வாய்ப்பு கொடுங்கள் பிறகு வந்து சொல்கிறேன் என்று அங்கிருந்து நேராக அவர் வைத்திருந்து ஒரு ஜெப மலையில் போய் மூன்று நாட்கள் ஜெபித்தார்கள். அந்த ஜெபம் முடிந்தவுடனே பரிசோதித்து பார்த்த போது எல்லா பெலவீனமும், எல்லா வியாதியும் அவரை விட்டு முற்றிலும் நீங்கி இருந்தது. காரணம் தேவ சமூகத்தில் அவர் விழுந்து கிடந்து ஏறெடுத்த ஜெபங்கள் தான். மூன்றே நாளில் ஒரு மாற்றத்தை ஒரு அற்புதத்தை நடப்பித்தது. ஆம் நம் ஆண்டவராகி இயேசு கிறிஸ்து இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். அவர் அற்புதங்களைச் செய்கிறவர். ஆகவே தான் மூன்றே நாளில் ஒரு அற்புதத்தை செய்து உன் தலையை உயர்த்துவார் என்றார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்து, ஜெபிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே தேவன் வரும் நாட்களில் உங்களுக்கு மகிமையாக காரியங்களை செய்து உங்களை ஆசீர்வதித்து உங்கள் வாழ்வை கட்டியெழுப்பி மேன்மையான காரியங்களை தேவன் செய்வாராக.