Inspiration
எழுப்புதல் காற்று
இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும், நான்கு தூதர்கள் நின்று பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். வெளி 7:1
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவராகிய தேவன் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷனாகிய யோவான் பத்முதீவிலே வயதான காலத்தில் இருந்த போது கடைசி நாட்களில் நடக்கப் போவதை, சம்பவிக்கப் போவதை யோவானுக்கு வெளிப்படுத்தினார். அப்படி வெளிப்படுத்திய அநேக காரியங்களில் ஒன்று தான் இந்த வார்த்தைகள். நான்கு தூதர்கள், நான்கு திசைகளிலுமிருந்து காற்றுகளைப் பிடித்திருக்க கண்டேன் என்ற வார்த்தை. காற்றை யாராவது தடுக்க முடியுமா? பிடிக்க முடியுமா? அது எங்கிருந்து வருகிறது? எங்கு போகிறது என்று யாருக்கும் தெரியாது. இயேசுவே யோவான் 3:8-ல் சொல்லியிருக்கிறார்.
மட்டுமல்ல அந்த காற்றுக்குத் தேவன் பண்டகசாலையை வைத்திருக்கிறார் சங் 135:7-லும், எரேமியா 10:13-ல் அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது. அவர் பூமியின் கடையாந்திரத்திலிருந்து மேகங்களை எழும்பப் பண்ணி மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலையிலிருந்து புறப்படப் பண்ணுகிறார். இன்றைக்கு மனிதர்கள் பூமியில் வாழ்வதற்கு அத்தியாவசியமானது காற்று, தண்ணீர், உணவு அவசியம். காற்று இல்லாமல் நாம் சுவாசிக்க முடியாது. காற்று நமக்கு மிகவும் அவசியம். நாம் உயிர் வாழ்வதே தேவனுடைய சுவாசக் காற்றினால் தான். தேவன் களிமண்ணினால் பிசைந்து மனிதனை உண்டாக்கி தம்முடைய ஜீவசுவாசத்தை, ஜீவகாற்றை அந்த மண்ணின் மேல் ஊற்றினார். மனிதன் உயிருள்ளவனாக மாறினான்.
அதே ஜீவகாற்றை ஆணóடவராகிய தேவன் திரும்ப வாங்கிக் கொண்டால் சங் 104:29-ல் நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும், நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக் கொள்ள அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும். தேவனுடைய ஜீவகாற்று நம்மேல் வீசுகின்றது. தேவனுடைய காற்று நமக்கு மிகவும் அவசியம். அது இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அவர் காற்றை வைத்துப் பூமியில் பலத்த காரியங்களை, அற்புதங்களைச் செய்தார். ஆதி 8:1-ல் தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மேலó காற்றை வீசப்பண்ணினார். அப்பொழுது ஜலம், தண்ணீர் அமர்ந்தது, வடியத் தொடங்கியது, குறையத் தொடங்கியது. நோவா பேழையிலிருந்து வெளியே வந்தார்.
ஒருமுறை சுனாமியிலே ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது. அந்த நாளில் விடுமுறையைக் கழிப்பதற்காக கடற்கரையிலே குடும்பமாகக் கூடினார்கள். திடீரென அலைகள் எழும்பி அவர்களை தூக்கி வீசியது. தனித்தனியே தூக்கி வீசப்பட்டார்கள். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அந்த சகோதரி நிலைமையைப் புரிந்து கொண்டு, ஏதோ நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தால் கணவனைக் காணவில்லை. இயேசுவே, இயேசுவே என்று கூச்சலிóட்டார்கள். அப்பொழுது ஒரு சுனாமி தண்ணீரோடு வந்து தனித்தனியாய் பிரிந்து போன, அந்த குடும்பத்தை ஒரு மணல் மேட்டில் ஒன்று சேர்த்தது. எல்லாரும் அதே இடத்தில் ஏறக்குறைய 5 மணி நேரத்திற்கு மேலாக இயேசுவே இயேசுவே என்று துதித்து நடுக்கத்துடனே கர்த்தருக்கு நன்றி சொல்லி உயிர் பிழைத்தார்கள். தேவன் அனுப்பிய காற்று அவர்களை மறுபடியும் ஒன்று சேர்த்து காப்பாற்றியது. அவர் காற்றை தமது பண்டகசாலையிலிருந்து புறப்படபண்ணி அவருடைய ஜனங்களுக்கு நன்மை செய்து தப்புவிக்கிறார்.
அதுமட்டுமல்ல இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு செங்கடலுக்கு அருகே போன போது, அதை எப்படி கடப்பது என்று தெரியவில்லை. ஒருவருக்கும் நீச்சல் தெரியாது, பின்பாக பார்வோனுடைய ராணுவம் துரத்தி வருகிறது, கொடிய இக்கட்டில் சிக்கி தவித்த அவர்கள், ஆண்டவராகிய தேவனை நோக்கி முறையிட்டு, கண்ணீரோடு கதறினார்கள். அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா? யாத் 15:8-ல் உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது, ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்து போயிற்று. ஆம் ஆண்டவராகிய தேவன் காற்றை அனுப்பி, செங்கடலை இரண்டாக பிளந்து ஜனங்கள் மூழ்காமல், நனையாமல் அற்புதமாய் கரை சேர்த்தார். காற்றை தம்முடைய பண்டகசாலையிலிருந்து அனுப்பி பாதுகாக்கிறார். தம்முடைய ஜனங்களை தப்புவிக்கிறார்.
அவர் காற்றை அனுப்பி அற்புதங்களைச் செய்து, தம்முடைய ஜனங்களுக்கு உணவு கொடுக்கிறார். எணó 11:31-ல் அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று, சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்து, பாளையத்திலும், பாளையத்தைச் சுற்றிலும் இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணம் மட்டும், அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணம் மட்டும் தரையின் மேல் இரண்டு முழஉயரம் விழுந்து கிடக்கச் செய்தது. இறைச்சிக் கேட்ட ஜனங்களுக்கு தேவன் காடையை அனுப்பி, காற்றை அனுப்பி அவர்கள் தேவைகளைச் சந்தித்து, பலத்த காரியங்களைச் செய்தார். அவர் காற்றை தமது பண்டகசாலையிலிருந்து அனுப்புகிறார், அது தேவன் விரும்புகிற அற்புதங்களைச் செய்கிறது, விடுதலையைத் தருகிறது.
ஆம் பிரியமானவர்களே, இன்றைக்கு காற்று அவசியம், காற்று இல்லாமல் எதுவும் அசையாது. அந்த காற்று எல்லாருக்கும் வீசாது. தனக்கு இஷ்டமானவருக்கு, தேவனுக்குப் பிரியமானவர்களுக்குத் தான் வீசும். யோவான் 3:8-ல் காற்றானது தனக்கு இஷ்டமான இடத்தில் வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறீர்கள் என்றார். ஆம் யார் யார் எல்லாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக, அவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் மேல் எல்லாம் இந்த காற்று அடிக்க வேண்டும், வீச வேண்டும். அப்பொழுது தான் நாம் சுவாசிக்க முடியும், ஜீவிக்க முடியும். கர்த்தருடைய பாதையில் நடந்து, அவர் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். ஆவியானவரே காற்றாய் வாரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த காற்றை நான்கு தூதர்கள் பூமியின் மீதோ, மரங்களின் மீதோ வீசாதபடிக்கு கையில் இறுகப் பிடித்திருக்க கண்டேன் என்று யோவான் எழுதுகிறார். ஏன் எப்பொழுது அவர்கள் அந்த காற்றை விடுவார்கள், அதனால் பூமியில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
அது எழுப்புதல் காற்று
அப்பொழுது அவர் என்னைப் பார்த்து, நீ ஆவியை நோக்கி தீர்க்கதரிசனம் உரைத்து, மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்றார். எசேக்கியேல் தீர்க்கதரிசியின் ஊழியத்தில் முதலாவது கல்லறையில் எலும்புக்கூடுகளின் மத்தியில் தான் கர்த்தர் அவரைக் கொண்டு போய் ஊழியப் பயிற்சிக் கொடுத்தார். இன்றைக்கு தேவன் நம்மை அப்படி அனுப்பினால் நிச்சயமாய் போக மாட்டோம், போனாலும் செய்ய மாட்டோம். அங்கே அவர் பார்த்த காட்சி எலும்புக் கூடுகள். தலைகள் ஒரு பக்கம், கைகள் ஒருபக்கம், கால்கள் ஒருபக்கம் எல்லாம் தனித்தனியே சிதறிக்கிடக்கிறது. இன்றைக்கு இந்த எலும்புகள் தேவப்பிள்ளைகள் தான். கர்த்தருடையவர்கள், அவர்கள் காணாமற் போனவர்கள், பூமியெங்கும் சிதறிக்கிடக்கிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கிறார்கள், ஐரோப்பாவில் இருக்கிறார்கள். ரஷ்யாவில் இருக்கிறார்கள். அவர்கள் தேவனை மறந்து, அவருக்காக வாழாமல், ஜெபிக்காமல், பரிசுத்த ஆவியின் ஜீவன் இல்லாமல் உலர்ந்து போய் பட்டுப்போய், அனலுமின்றி, குளிருமின்றி வேதனையோடு வாழ்கிறார்கள். தேவசமூகத்தை விட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். சாத்தானால் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். யார் நம்மை ஒன்று சேர்ப்பது யார் நம்மை இணைப்பது, யார் நம்மைக் கூட்டிச் சேர்ப்பது என்று பெலனுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட எலும்புகள் ஒன்று சேர்ந்து, ஜீவனை அடைய வேண்டுமென்றால் இந்த தேவனுடைய ஆவியானவர் நான்கு திசைகளிலுமிருந்து வர வேண்டும், அந்த எலும்புகளில் இறங்க வேண்டும். அதற்கு ஆவியானவர் காற்றாய் வீச வேண்டும். காற்றாய் வர வேண்டும். இபóபொழுது அந்த காற்று வீசாதபடிக்கு, வராதபடிக்கு நான்கு தேவ தூதர்கள் அவைகளை தடுத்துப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தல் 7:1-ல் பார்த்தோம்.
தேவனுடைய தூதர்கள் காற்றை இறுக கெட்டியாய் பிடித்திருக்கிறார்கள், காரணம் அவைகளால் தேவனுடைய பிள்ளைகள் சேதமடையாதபடிக்கு, மரமாவது, சூரியனாவது, சமுத்திரமாவது, மனிதர்களாவது சேதமடையாதபடி, மனிதர்களுடைய நெற்றியில் அடையாளம் போட்டு தீருமளவும் அந்தக் காற்றை விடாமல் தடுத்து இறுகப் பிடித்திருக்கிறார்கள். இன்னும் உலகத்தின் ஜனங்கள் மனந்திரும்பவில்லை, பொல்லாத வழியை விடவில்லை. தேவனுடைய நாமத்தை தரிக்காமல், முத்திரையைப் பெறாமல் காலம் தாழ்த்திக் கொண்டு தேவனுடைய பூரணத்தைப் பெறாமல் பாதியிலேயே நின்று விட்டார்கள். இப்படி அறை குறையாய் தேவனுக்குள் வாழ்கிறவர்களை காற்று அடித்துக் கொண்டு போய், அவர்களை காற்று தூற்றும் போது பதருக்கு ஒப்பாகி விடுவார்கள். ஆகவே தான் யோவான்ஸ்நானகன் சொல்லுகிறார் லூக்கா 3:17-ல் தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. தூற்றுக்கூடையில் இருக்கும் கோதுமை அல்லது நெல், காற்று அடிக்கும் போது பதர் தனியாக, கோதுமை, நெல் தனியாக பிரிக்கப்படும்ó.
இயேசு சொன்னார் லூக்கா 22:31,32-ல் பின்னும் கர்த்தர் சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு, பிரிப்பதற்கு, சிதறடிப்பதற்கு உத்தரவு கேட்டுக் கொண்டான். நானோ, உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன் என்றார். நாம் பதறாய் இருந்தால், விளையாமல் இருந்தால், அறுவடைக்குப் பயிர் முற்றாமல் இருந்தால் இந்தக் காறóறு பரத்திலிருந்து இறங்கும் போது பதறாய் போய் காணாமல் போய்விடக் கூடாது. பறந்து போய்விடக் கூடாது என்பதற்காக, தேவன் எதிர்பார்க்கிற ஒரு பரிசுத்தம், விசுவாசம், நிறைவு, பரிபூரணம் அடைய வேண்டுமென்று தூதர்கள் இந்த காற்றினாலே ஜனங்கள், மனுக்குலம் சேதமடையாதபடிக்கு இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஜனங்கள் உலக மாயையை விட்டு, பிசாசின் வழியை விட்டு, தேவனை சரியான விதத்தில் பின்பற்றினால், அவர் விரும்புகிற ஒரு வாழ்க்கை வாழ்ந்தால், அவருடைய முத்திரையைப் பெற்று, அவருடைய நாமத்தைத் தரித்தால் அப்பொழுது இந்த தேவதூதர்கள் தாங்கள் பிடித்திருக்கிற காற்றை விடுவார்கள். அதுவரை அது தடை செய்யப்பட்டிருக்கிறது.
அதனால் தான் ஆண்டவராகிய தேவன் எசேக்கியேலுக்கு தோன்றி இந்த எலும்புகள் உயிரடைய ஒன்று சேர நீ பரிசுத்த ஆவியானவரை நோக்கி, ஆவியே, நீ நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வா, என்று தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். விசுவாச வார்த்தைகளைப் பேச வேண்டும். அதுவரை தேவன் விரும்புகிற எழுப்புதல், தேவன் விரும்புகிற உயிர்மீட்சி வராது. அதை நாம் அறிந்து, விளங்கிக் கொள்ள வேண்டும். கருத்தோடு, ஆத்தும பாரத்தோடு ஜெபித்தால் தான் தேவதூதர்கள் அந்தக் காற்றை விடுவார்கள். அந்த தேவக்கட்டளை வரும் வரை அவர்கள் இறுக கொட்டியாய் பிடித்துக் கொள்வார்கள். இதைத்தான் தேவன் எசேக்கியேலுக்குக் காண்பித்து, இந்த உலர்ந்த போன, பட்டுப்போன, காய்ந்து போன, உயிர் போன எலும்புகள், தேவப்பிள்ளைகள் உயிரடையும்படி தேவன் எசேக்கியேலுக்கு இந்த எலும்புகளைக் குறித்துக் காண்பித்து, எழுப்புதலுக்காக, பின்மாரி மழைக்காக வேண்டிக் கொள்ளவும், ஜெபிக்கவும், தீர்க்கதரிசனம் உரைக்கவும் கட்டளையிட்டார்.
அப்பொழுது தான் அவர், ஆவியே காற்றாய் வாரும், நான்கு திசைகளிலுமிருந்து வாரும், தேவனால் உண்டாக்கப்பட்ட, தேவனை விட்டு பிரிந்த இந்த ஜனங்கள் எல்லாம் உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அவர்கள் ஒன்று சேரட்டும் என்று தேவ தரிசனத்தை எசேக்கியேலுக்கு காண்பித்தார். அதன்படி அவர் ஆவியே வாரும், அக்கினியே வாரும், காற்றாய் வாரும், நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வாரும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்றைக்கு தேவனிடத்திலிருந்து காற்று இறங்கி வர வேண்டும். தேசங்களின் மேலும் பூமியிலுள்ள தேவ பிள்ளைகள் மேல் இறங்கி உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழுந்து நிற்பார்கள்.
இதற்குத் தான் இந்த காற்றை அப்போஸ்தலர்கள் மேல் வீட்டறையில் கூடி ஜெபித்த போது தேவன் அனுப்பினார். அப் 2:2-ல் அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து இறங்கி சீஷர்களை நிரப்பியது. அப்பொழுது அவர்கள் உயிரடைந்து பெலனடைந்து வானத்தின் கீழ் இருந்தவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். சிதறிப்போன எல்லாரும் ஓரிடத்தில் கூடினார்கள். இந்த ஆவியானவருடைய காற்று இன்றைக்கு நம்மேல், நம் குடும்பத்தின் மேல், தேசத்தின் மேல், சபைகளின் மேல் பலமாய் ஊற்றப்பட வேண்டும். காற்று இறங்கி, தேவன் நியமித்த இடங்களுக்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். ஆண்டவராகிய இயேசு சொன்னார் காற்றானது தனக்கு இஷ்டமான இடத்தில் வீசுகிறது, அது எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குத் தேவன் பலத்த காற்றை நமக்குள் அனுப்பி, உலர்ந்த எலும்புகளை உயிரடையச் செய்து, தம்முடைய நாமத்தின் நிமித்தம் எலும்புகளை உயிரடையச் செய்து ஜீவனுள்ளவர்களாக மாற்றுவாராக. தூதர்கள் பிடித்து வைத்திருக்கிற காற்றைக் கட்டவிழ்த்து தம்முடைய ஜனங்களை உயிரடையச் செய்வாராக
காற்றின் ஊழியம்
ஊழியர்களை காற்றுகளாக மாற்றி, ஊழியம் செய்ய வைக்கிறார். அவர் தம்முடைய தூதர்களை காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினி ஜீவாலைகளாகவும் செய்கிறார். இப்பொழுது இருக்கிற விஞ்ஞான உலகத்தில் டிரங்கால் புக் பண்ணி பேசியது போயó, வீட்டுக்கு வீடு போன் பேசியது போல இதன் பிறகு மொபைல் போன், பட்டன் போன் வந்தது. இப்போ அதுவும் போய் ஆண்ட்ராய்டு டச் போன் வந்து விட்டது. வேகமாக உலகம் வேலை செய்கிறது. 2எ போய் 3எ, 4எ, 5எ வேகத்தில் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவனுடைய காரியத்தில் நாம் இன்னும் பழைய வேகத்தில் அதே ஜெபம், அதே ஊழியம், அதே காரியங்களைச் செய்து, நமமுடைய ஓட்டம் ஆகாப்பின் ஓட்டத்தைக் காட்டிலும் குறைந்து விட்டது. எலியாவைப் பாருங்கள் அக்கினி ஜீவாலையாக ஜீவித்தவர். 1 இராஜா 18:45,46-ல் ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்கு போனான், கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்தபடியால், அவன் தன் அரையைக் கட்டிக் கொண்டு யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான். ஆகாபின் குதிரை ஓட்டத்தைக் காட்டிலும், எலியாவின் ஓட்டம் வேகமாக, அதிகமாக இருந்தது.
அதற்குத்தான் ஆண்டவராகிய தேவன் நமக்கு பரிசுத்த ஆவியைத் தந்து, புது பெலன் கொடுத்து மான்கால்களைப் போல நம் கால்களை மாற்றி, ஏசாயா 43:31-ல் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, புதுபெலன் அடைந்து, கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஆம் நம்முடைய ஓட்டத்தில், ஊழிய வாழ்க்கையில், ஜெப வாழ்க்கையில் சோர்ந்து போகாதபடிக்கு வேகம் குறைந்து போகாதபடிக்கு ஆகாப்பின், உலக மனிதர்களின் ஓட்டத்தைக் காட்டிலும் ஆவிக்குரியவர்களின் ஓட்டம் வேகமாகும்படி, அதிகமாகும்படி கழுகுகளின் இளமையைப் போல் நம்முடைய இளமையைப் புதுப்பிக்கிறார். இதைத்தான் சங் 103:5-ல் சங்கீதக்காரன் சொல்லுகிறார் கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகுகிறது. இதை கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் கழுகுகளின் இளமையைப் போல உங்கள் பெலத்தை, இளமையை புதுப்பிக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. எதற்கு நமக்காக, உலக வேலைக்காக இல்லை. கர்த்தருடைய வேலையை செய்ய, கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்ட, அவருடைய நாமத்தை உயர்த்த, அவருக்காக ஜீவிக்க, அவருடைய வேலையைச் செய்ய, அவர் தம்முடைய ஊழியக்காரரை காற்றுகளாகவும், அக்கினி ரதங்களாகவும் மாற்றுகிறார்.
பிலிப்பு என்பவரைப் பாருங்கள், அப்போஸ்தலர் 8-ஆம் அதிகாரத்தில் அவரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சமாரியாவிலே கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான். பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு, கண்டு அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள். அநேகரிலிருந்து அசுத்த ஆவிகள் வெளியேறியது. பிலிப்பு என்பவர் மகிமையான அப்போஸ்தலர், எல்லாரைக் காட்டிலும் பயங்கரமான, வல்லமையான ஊழியத்தைச் செய்தார். அது மட்டுமல்ல எத்தியோப்பிய வர்த்தக அமைச்சரான கந்தாகே எருசலேமுக்கு தேவனைத் தொழுது கொள்ள, இயேசுவை அறிந்து கொள்ள, இரதத்தில் வந்திருந்தார். அப்பொழுது ஆவியானவர் பிலிப்புவை நோக்கி நீ, போய் அந்த இரதத்துடனே சேர்ந்து கொள் என்ற அப் 8:29-ல் சொன்னார். அவர் ஏசாயா 53-ம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டு போகும் போது, அதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா என்று கேட்டு பிலிப்பு அவருக்கு விளக்கம் கொடுத்து, சுவிசேஷத்தை அறிவித்து ஞானஸ்நானத்திற்கு நேராக நடத்தினார். அதன்பிறகு ஆவியானவர் பிலிப்புவை கொண்டு போய் விட்டார். பின்பு ஆசோத்தில் காணப்பட்டான். இது எப்படி நடந்தது. ஆவியானவர் காற்றாய் அவரை தூக்கிக் கொண்டு போய், அவரை சுவிசேஷம் அறிவிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் பயன்படுத்தினார்.
இதைத்தான் வேதம் சொல்லுகிறது அவர் தம்முடைய தூதர்களை, ஊழியர்களை காற்றுகளாகவும், ரதங்களாகவும் மாற்றுகிறார். இனி நடந்து அல்லது அலைந்து விமானத்திலோ, காரிலோ நாம் போய் ஊழியம் செய்ய முடியாது. ராஜாவின் கட்டளை அவசரமாக இருக்கிறது. முழு உலகத்திற்கு நாம் வேகமாய் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டும். அதற்குப் பரிசுத்த ஆவியானவருடைய காற்று நம்மேல் இறங்க வேண்டும். நாம் அவரால் தூக்கி செல்லப்பட வேண்டும் இனி நம்முடைய பெலனை விருதாவாக செலவழிக்காமல், நம்முடைய கிருபையை, இரட்சிப்பை வீணடிக்காமல், காலத்தை சரியாய் பயன்படுத்தி தேவனுடைய எழுப்புதலிலே நாம் பங்குபெற வேண்டும். அப்பொழுது தான் சிதறிக்கிடக்கிற எலும்புகளை, காணாமற் போன ஜனங்களை தேவனுடைய மந்தையில் பாதுகாப்பாய் கொண்டு வர முடியும்.
ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற இங்கிலாந்திலே, அமெரிக்காவிலே, ஆப்பிரிக்காவிலே ஆசியாவிலே தனித்தனியாய் கிடக்கிற எலும்புகளை எல்லாம் தேவன் ஒன்று சேர்த்து, தோலினால் முடி, சதையால் நிரப்பி, ஒரு மகாப்பெரிய சேனையாய் காலூன்றி நிற்க, காற்றின் வேகத்தைக் காட்டிலும் ஆவியானவர் வேகத்தை நமக்கு அதிகப்படுத்துகிறார். இதற்குத் தான் காற்று வேண்டும். காற்றே, நீ நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வா, இந்த உலர்ந்த எலும்புகளின் மேல் இறங்குவாயாக என்றார். இந்த வாஞ்சையோடு நாம் ஜெபிக்கின்ற போது, இந்த வாஞ்சையோடு நாம் ஊழியம் செய்கின்ற போது, தன் கையில் காற்றைப் பிடித்து வைத்திருக்கிற அந்த தூதர்கள் அந்த காற்றை பண்டகசாலையிலிருந்து அனுப்பி, தேவனுடைய திட்டத்தை, எழுப்புதலை, எலும்புகள் உயிரடைகிற காற்றை ஜனங்கள் மேல் வீசச் செய்வார்கள். என் ஆண்டவராகிய தேவன் தாமே இநóத பரிசுத்த ஆவியானவருடைய காற்றை உங்கள் மேல் வீசச் செய்து நீங்கள் தேவனோடு இணைக்கப்பட்டு மகா சேனையாய் காலூன்றி நிற்கச் செய்வாராக. உங்களை உன்னதங்களில் பறக்கச் செய்வாராக.