Inspiration

தேவ சமூகத்தை எட்டிய ஜெபங்களும் , மனிதனுடைய பாவங்களும்.

அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடுகிற சத்தம் தேவ சந்நிதியில் எட்டினது.
யாத் 2:23

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாம் வாழும் இந்த கடைசி காலத்தில் எங்கு பார்த்தாலும் கூக்குரல், வேதனையின் சத்தம், மனிதர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்களின் சத்தத்தை எந்த ஒரு ஆட்சியாளரும் கேட்பதாகவோ, செவிசாய்ப்பதாகவோ இல்லை. அதற்கு மாறாக அவர்களை ஒடுக்கவும், அடக்கவும் தான் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்களின் கூக்குரல் ஆளுகை செய்கிறவர்களுக்கு கேட்பதே இல்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுடைய புலம்பல், அவர்கள் எகிப்திலே பட்டபாடுகள், துயரங்கள், கூச்சல்கள் பார்வோனின் காதுகளில் கேட்டாலும், நீதி செய்யவோ இரக்கம் காட்டவோ இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான, கைவிடப்பட்ட, கடினமான சூழ்நிலையில் அவர்களின் முறையிடுதல், புலம்பலின் சத்தம் தேவசமூகத்தில் எட்டினது. இன்றைக்கு நம்முடைய முறையிடுதல், வேதனையின் சத்தம் மனிதனுக்கு கேட்கிறதோ இல்லையோ, நம்முடைய கதறல் நம் கூட இருக்கின்ற மனிதனுக்கு கேடகிறதோ இல்லையோ, அது கணவனாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், கூட பிறந்தவர்களாக இருக்கலாம், நம்முடைய நண்பர்களாகவும் இருக்கலாம், இவர்களுக்கெல்லாம் நம்முடைய வேதனையின் சத்தம் கேட்கிறதோ இல்லையோ தேவனுக்கு கேட்கிறது. ஆகவேதான் ஆண்டவராகிய தேவன் சொன்னார் யாத் 3:9-ல் இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது என்றார். நம்முடைய தேவன் யார்? அவர் உயரமும், உன்னதமுமான இடத்தில் வாசம் செய்கிறவர், மனிதன் வானத்தையும், பூமியையும் அளவிட முடியாது. கிழக்கிற்கும், மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திற்கு நம்முடைய பாவங்களை நம்மை விட்டு அகற்றி விடுகிறார்.  அவ்வளவு உயரமும், தூரமும் வாழுகின்ற தேவன் நம் அருகில் இருப்பவர்களை விட, நம்முடைய கூக்குரலையும், துயரங்களையும் கேட்கிறார். இன்றைக்கு பூமியிலே மனிதர்óகள் எழுப்பும் கதரல்கள், கூக்குரல்கள் தேவசமுகத்திற்குப் போய் எட்டுகிறது. ஆதி 4:10-ஐ வாசித்துப் பாருங்கள் காயீன் தன் தம்பியாகிய ஆபேலை கொலை செய்து விட்டான். காரணம் அவன் தேவனுடைய அன்பைப் பெற்று விட்டான், இரக்கத்தைப் பெற்று விட்டான். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத காயீன் அவனைப் பகைத்துப் பொறாமை கொண்டு அவனை கொலை செய்து விட்டான். அந்த இரத்தம் என்ன செய்தது தெரியுமா? தேவனை நோக்கிக் கதறியது, முறையிட்டது, தேவசமூகத்தை வந்து எட்டியது. உன் தம்பியின் இரத்தம், கதறல் பூமியிலிருந்து என்னை நோக்கி கூப்பிடுகிறது, முறையிடுகிறது என்றார். காரணம் அது தேவசமூகத்தை எட்டியது. மனிதனுடைய பாவத்தின் அக்கிரமம் இன்றைக்கு தேவசமூகத்தை எட்டுகிறது. அதனால் தான் பூமியில் வாதைகளும், பாடுகளும், உபத்திரவங்களும், தண்டனைகளும் உண்டாகிறது. வெளி 6:10-ஐ வாசித்துப் பாருங்கள் அவர்கள் பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே,  தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும், பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். கொலை செய்யப்பட்டு, ஆண்டவருக்காக ஜீவித்தவர்களின் இரத்தம் கூக்குரலிட்டது. அவர்களின் தொகை நிறைவடைய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரிகளே ஒவ்வொரு மனிதனுடைய புலம்பலும், பெருமூச்சும், வேதனையும் இன்றைக்கு பரலோகத்தில் தேவசமூகத்தில் எட்டுகிறது. இதைத்தான் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்லும்படி மோசேக்குச் சொன்னார். அவர்கள் கூக்குரலும், வேதனைகளும், புலம்பலும் தேவசமூகத்தை எட்டியது. அதை ஜனங்களுக்குச் சொல்ல, வெளிப்படுத்தத்தான் ஆண்டவராகிய தேவன் பூமியில் இறங்கி வந்து மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தினார். அதே தேவன் இன்றும் உயிரோடிருக்கிறார். யார் அவர் சமூகத்தில் போய் கதறினாலும், மனமுடைந்து அழுதாலும் அவர்கள் ஜெபத்தை, கூப்பிடுதலை கேட்கிறார்.               புலம்பல் 3:31,32,33-ல் ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார், அவர் சஞ்சலப்படுத்தினாலும், தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் வேதனை என்ன, பாடுகள் என்ன, உபத்திரவங்கள் என்ன, சஞ்சலம் என்ன, யாரால்? உங்களுக்கு வேதனை, போரட்டம், துக்கம் மனிதர்களால், உடன்பிறந்தவர்களால், கூட இருக்கிறவர்களானாலும் சரி. யாரும் உங்கள் குரலுக்கு, சத்தத்திற்கு செவிகொடுக்கவில்லையா? மனமுடைந்து தேவசமூகத்தில் முறையிடுகிறீர்களா? கதறுகிறீர்களா? உங்கள் சத்தம், உங்கள் கதறல் நிச்சயமாகவே இன்றைக்கு தேவசமூகத்தை எட்டும். உங்கள் கதறுதலின் ஜெபத்திற்கு நிச்சயமாகவே பரலோகத்திலிருந்து பதில் வரும், அற்புதம் நடக்கும். தேவன் அதனிமித்தம் உங்களுக்காக எழுந்தருளுவார். நீதி வழங்குவார். சீக்கிரத்திலே நியாயம் செய்வார். உங்களுக்கு வரவேண்டிய நன்மைகளும், ஆசீர்வாதங்களும் இனி யாராலும் தடுக்க முடியாது. உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.  அதற்காகத்தான் அவர் உயிரோடிருக்கிறார், உங்கள் விண்ணப்பத்தைக் கேட்கிறார். போகட்டும் யார் யாருடைய கதறலை கேட்டார், எந்தெந்த காரியங்கள் தேவசமூகத்தை எட்டியது.  அதற்குத் தேவன் என்ன நியாயம் செய்தார் என்பதைப் பார்ப்போம்.

நம்முடைய ஜெபங்கள் தேவ சமூகத்தை எட்டுகிறது

உன் ஜெபங்களும், உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில்  வந்து எட்டினது என்றான். முதலாவது தேவசமூகத்தை எட்டுகிற ஒரு காரியம் என்ன தெரியுமா? ஜெபம் தான். இன்றைக்கு ஒரு மனிதன் செய்கிற தவறு அடுத்த நிமிடமே முழுஉலகத்திற்கும் எட்டி விடுகிறது. காரணம் ஊடகங்கள், மீடியாக்கள் அதை திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்து உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் சொல்லி விடுவார்கள். ஆனால் இதைக் காட்டிலும் வேகமாக ஒரு செய்தி தேவசமூகத்தை சென்றடைகிறது அது தேவபிள்ளையின் ஜெபம், பல வேளைகளில் நாம் பண்ணுகிற ஜெபத்தை நாமே மறந்து விடலாம், காரணம் அதற்குப் பதில் வரவில்லை அல்லது கிடைக்கவõல்லை என்று. அதனால் நாம் விரக்தியடைந்து இனி மேலா? நமக்கு நடக்கப் போகிறது, கிடைக்கப் போகிறது என்று அந்த ஜெபத்தை விட்டுவிடுவோம், மறந்துவிடுவோம். ஆனால் தேவசமூகத்தில் ஏறெடுத்த எந்த ஜெபமும், எந்த ஒரு காரியமும் நடக்காமல் நிறைவேறாமல்,  போனதில்லை. அது  நிறைவேறியே தீரும்.  காரணம் நம்முடைய ஜெபங்களும், தருமங்களும் தேவ சமூகத்தை எட்டுகிறது. இதைத்தான் லூக்கா 1:13,14-ல் பார்க்கிறோம் தூதன் அவனை நோக்கி சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள் என்றார். ஏறக்குறைய 50 வருடத்திற்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் பிள்ளை இல்லாத போது தேவனை நோக்கி அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சி மன்றாடியிருப்பார்கள். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, மாதக்கணக்கில், வருடங்களாய் தேவனை நோக்கி அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சி ஜெபித்தார்கள். ஏறக்குறைய 50 வருடமாக ஒன்றும் நடக்கவில்லை சோர்ந்து போனார்கள். தேவசித்தம் எதுவானால் என்ன, இனி என்ன நடந்தால் என்ன என்று அமைதலாக, பொறுமையாக இருந்து விட்டார்கள். தேவன் எது செய்தாலும், எப்படி நடத்தினாலும் பரவாயில்லை என்று அமைதலாகிவிட்டார்கள். ஏனென்றால் நாளாகிவிட்டது, பல வருஷங்களும் ஆகிவிட்டது. அவர்கள் ஏறெடுத்த ஜெபத்தை, அவர்கள் கதறிச் சொன்ன வார்த்தைகளை அவர்களே மறந்து விட்டார்கள். ஆனால் தேவன் மறக்கவில்லை. நாம் கதறிச் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் தேவசமூகத்தில் போய் எட்டும். ஒரு நாள் வயதான காலத்தில் சகரியா ஆலயத்தில் ஆசாரிய ஊழியத்தைச் செய்கிறபோது, தூபங்காட்டுகிற போது ஆண்டவர் ஒரு தேவதூதனை அனுப்பி  உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்றார். என்ன வேண்டுதல்? நீ பிள்ளையில்லாமல் வெறுமையாய் இருக்கிறாய் அல்லவா அந்த வெறுமையைப் போக்க, உனக்கு அற்புதத்தைச் செய்ய இன்றைக்கு இறங்கி வந்தேன். குறித்த  காலத்திலே, உற்பவ காலத்திலே  எலிசபெத் ஒரு மகனைப் பெறுவாள். அவன் கர்த்தருக்கு முன்பாக நடப்பான். கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றார். காரணம் சகரியாவும், எலிசபெத்தும் ஏறெடுத்த ஜெபம் பூரணமாக, நிறைவாக அவ்வளவு நாள் ஜெபிக்க வேண்டியதாயிருந்தது. சில ஜெபங்களுக்கு உடனே பதில் வந்துவிடும், அற்புதமும் நடந்துவிடும். ஆனால் சில ஜெபங்களுக்கு பதில் தாமதமாகும். காரணம்  அதனுடைய நிறைவு பரிபூரணம் ஆக தாமதமாகலாம். இதைத்தான் வெளி 6:10-ல் உங்களைப் போல இரத்த சாட்சிகளாய் மரிக்க வேண்டிய உடன்ஊழியர்களின் தொகை நிறைவாகவில்லை, பரிபூரணப்படவில்லை என்றார். இவர்கள் ஜெபங்கள் தேவசமூகத்தை எட்ட அத்தனை வருஷம் தேவைப்பட்டது.  இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற உங்கள் ஜெபத்திற்கும் உடனே பதில் வரவில்லை என்றால் மனம் தளர வேண்டாம், மனம் பதற வேண்டாம். அது தாமதித்தாலும் நிறைவேறும். ஆபகூக் 2:3 சொல்லுகிறது குறித்த காலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்குக் காத்óதிரு, அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை என்று சொல்லப்பட்டுள்ள வார்த்தையின்படி ஆண்டவர் ஏற்ற காலத்திலே, முன்குறித்த காலத்திலே அவர்கள் விண்ணப்பத்திற்கு இறங்கி, ஜெபத்திற்குப் பதில் கொடுத்தவர் இன்றைக்கு உங்கள் ஜெபத்திற்கும் பதில் கொடுப்பார். தாமதித்தாலும் அது நிறைவேறும். வருஷங்கள் கடந்தாலும், சூழ்நிலைகள் விரோதமாக இருந்தாலும் கர்த்தருடைய கரம் குறுகிப் போகவில்லை. அவர்கள் ஜெபத்திற்கு பதிலை அற்புதமாய் கொண்டு வந்தது, அந்த ஜெபத்தின் பூரணத்தை அவர்கள் அனுபவித்தார்கள்.

கொர்நேலியுவின் ஜெபம்

அவன் ராணுவத்தில் பணிபுரிந்த, உயர் பதவியில் இருந்த, தேவனுக்குப் பயந்து தனக்கு கீழ் பணியாற்றுகிற யாவரையும் மதித்து, நேசித்து அன்பு செய்தவர். இவருக்கு தேவன் இயேசு  என்றால் யார் என்றே தெரியாது. கடவுள் யார் என்று தெரியமலே அவர் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். தானம், தர்மம் பண்ணிக் கொண்டிருந்தார். பக்தியாய் வாழ்ந்தவர். வேதம் சொல்லுகிறது           சங் 4:3-ல் பக்தியுள்ளவனைக் கர்த்தர்  தமக்காக தெரிந்து கொண்டார். இந்த பக்தியுள்ளவனுக்கு கர்த்தர் தம்மை வெளிப்படுத்த சித்தமானார். அவர் தம்மை வெளிப்படுத்தாமல் யாரும் தேவனை அறிந்து கொள்ள முடியாது. இப்படி அவர் தேவன் யார் என்று அறியாமலே தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த போது கர்த்தர் ஒரு தேவதூதனை அனுப்பி தம்மை வெளிப்படுத்தினார். உன் ஜெபங்களும், தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வநóதெட்டியிருக்கிறது என்றார் அப் 10:4 அப்படி சொல்லுகிறது. எத்தனையோ மாதங்கள், எத்தனையோ வருஷங்கள் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் இன்றைக்கு தேவசமூகத்தை எட்டினது. அந்த ஜெபம் நிறைவடைந்து பரலோகத்தில் எட்டினது, அப்படி நிறைவான போது ஆண்டவராகிய தேவன் அந்த ஜெபத்திற்குப் பதில் கொடுக்க ஆரம்பித்தார். நடந்தது என்ன கொர்நேலியுவும், அவன் வீட்டாரும்  இயேசுவை அறியவும், அவன் குடும்பத்தார்களும், உறவினர்களும் இரட்சிக்கப்படவும் கர்த்தர் தம்முடைய வார்த்தை  அனுப்பவும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தவும்  தேவன் பேதுருவை  அவர்களிடத்திற்கு அனுப்பினார் அப்படி பேதுரு போய் பிரசங்கித்த போது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அத்தனை பேர் மீதும் பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் இறங்கினார். கொர்நேலியுவின் ஜெபத்தின் பூரண நிறைவினால் ஆண்டவராகிய இயேசுவையும், அவருடைய பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இன்றைக்கு இந்த பூமியில் தேவனுடைய பிள்ளைகளின் ஜெபங்கள் பரிபூரணமடைய வேண்டும். அதனுடைய நிறைவு தேவ சமூகத்தை எட்ட வேண்டும். அதற்குத்தான் நாம் இடைவிடாமல், சோர்ந்துபோகாமல் ஜெபிக்கிறோம். அதனால் தான் ஆண்டவராகிய இயேசு, அவருடைய பிள்ளைகளைப் பார்த்து லூக்கா 18:1-ல் சோர்ந்து போகாமல், மனம் தளராமல் ஜெபிக்க வேண்டும் என்று பல உவமைகளைச் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே உங்களுடைய பக்தி, பரிசுத்தம், விசுவாசம், உங்களுடைய ஜெபங்கள் பூரணமடைந்து  அது தேவசமூகத்தை எட்டுவதாய் இருக்க வேண்டும். பாதியிலே நின்று விட்ட ஜெபங்களாய், பாதியிலே முடிந்து விட்ட ஜெபங்களாய், பூரணமாகாத ஜெபங்களாய் இருந்துவிடக்கூடாது. அதற்குத் தான் தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு பூரணத்தை வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஜெபங்கள் மாத்திரம், கதறல்கள் மாத்திரம், பெருமூச்சு மாத்திரம் தேவ சமூகத்தை எட்டி, நம்மைத் தேவனுக்கு முன்பாக நிறுத்தி குற்றமில்லாதவர்களாக, பரிசுத்தமானவர்களாக பூரணராக நிலைநிறுத்தி நம்மை தேவசமூகத்தில்  உலாவுகிறவர்களாக மாற்றும் என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் ஜெபங்களை தேவசமூகத்தில் எட்டுவதாக மாற்றுவாராக.

பாவத்தின் நிறைவு.

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமூகத்தில் வந்து எட்டினது. யோனா 1:2. நினிவேயில் இருந்த மக்கள் முரட்டாட்டம் உள்ளவர்கள். யாருக்கும் கட்டுப்படாதவர்கள், வணங்கா கழுத்துள்ளவர்கள், தெய்வ பயற்றவர்கள் இவர்களுடைய அக்கிரமம், பாவம், கூக்குரல் விண்ணைத்தொட்டது, தேவசமூகத்தை எட்டியது. இனி பூமியில் யாராக இருந்தாலும் சரி, எந்த ராஜாவாக இருந்தாலும், அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் செய்கிற நன்மைகள் அல்லது தீமைகள் தேவசமூகத்தை எட்டிவிடும். அதைத்தான் இப்பொழுது உலகத்தில் பார்க்கிறோம். ஓட்டுப்போட்டு நல்லவர் என்று தெரிந்தெடுத்த ராஜாவையே ஜனங்கள் ஆட்சியை விட்டு, நாட்டை விட்டு துரத்துகிறார்கள். தேவனுடைய நீதி வெளிப்பட ஆரம்பித்து, இனி தீங்கு செய்கிற, அக்கிரமம் செய்கிற எந்த மனிதனுக்கும் சமாதானம் இருக்காது. ரோமர் 2:9-ல் பொல்லாங்கு செய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும், வியாகுலமும்  உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் பாவத்தின் நிறைவு, அக்கிரமத்தின் நிறைவு பூமியிலே வெளிப்பட ஆரம்பித்து விட்டது.     ஆதி 18:20,21 வசனத்தின்படி பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப் போய் என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அந்த அக்கிரமம், பாவம் நிறைவடைந்து விட்டதா, அது பரிபூரணம் அடைந்து விட்டதா என்று பார்க்க கர்த்தர் சோதோம் கொமோராவுக்கு தேவ தூதர்களை அனுப்பினார். இன்றைக்கு உலகில் மனிதர்களுடைய அக்கிரமமும், பாவமும், அதன் நிறைவும் தேவசமூகத்தை எட்டுகிறதாயிருக்கும். ஆகவே தேவன் பூமியிலுள்ள மனுகுலத்தை எச்சரித்துக் கொண்டிருக்கிறார். மனம் திரும்ப வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 2 பேதுரு 3:9-ல் தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி  கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். எச்சரிக்கிறார், கண்டிக்கிறார். சிட்சைகளுக்கு உட்படுத்துகிறார்.. மனம் திரும்ப தவணை கொடுக்கிறார். பாவத்தை விட்டு ஓட வாய்ப்புக் கொடுக்கிறார். அதனால் தான் பூமியில் இயற்கை சீற்றங்களும், கொள்ளை நோய்களும், எதிர்பாராத சேதங்களும் உண்டாகி முழுமனுக்குலத்தையும் எச்சரிக்கிறது. அப் 8:22-ல் ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம் என்று பேதுரு மந்திரவாதியாகிய சீமோனை எச்சரித்தார். உடனே அவர் தன்னைத் தாழ்த்தி நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு எனக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள் என்று தேவதண்டனைக்குத் தப்பினான், தேவகோபத்திற்குத் தப்பினான். ஆகவே தான் அவ்வப்போது மனிதனை எச்சரித்ததால் பாவத்தின் அளவை, பாவத்தின் நிறைவை குறைத்தார்கள் என்று தேவன் சொல்லுகிறார். ஆதி 15:16-ஐ பாருங்கள் ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். அதனால் தேவன் நம்மை விட்டு வைத்து, பொல்லாத வழிகளை விட்டு மனம் திரும்பி அவரை ஏற்றுக் கொள்ள வாயóப்புக் கொடுக்கிறார். நாம் இன்னும் நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்தி மனம் திரும்பாமல், பொல்லாத வழிகளை விட்டுவிடாமல் இருக்கும் போது தேவ கோபத்திற்கும், தண்டனைக்கும் தப்ப முடியாது. 1 தீமோ 5:24-ல் சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். குறித்த காலத்திற்கு முன்பே பூமியில் அவனுக்கு நியமிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே சிலர் பரிதாபமாய் மரித்து விடுகிறார்கள். தேவ கோபத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். காரணம் பாவம் பூரணமாகும் போது மரணத்தை பிறபóபிக்கும் என்று வேதம் யாக்கோபு 1:15-ல் சொல்லுகிறது. இதை உணராமல், அறியாமல் இன்னும் கற்பனை உலகில், மாயை உலகில் மனிதர்கள் இவ்வுலகமே கெதி என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வெளி 18:5,6-ல் அவர்களுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவர்களுடைய அநியாயங்களை தேவன் நினைவு கூர்ந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியே உன்னுடைய எந்த காரியங்கள் தேவசமூகத்தில் எட்டுகிறதாய் இருக்கிறது உன் பாவமா? உன் ஜெபமா? உன் அக்கிரமங்களா அல்லது உன் நீதியா, உன் தீமையா அல்லது நீ செய்கிற நற்கிரியைகளா? எது தேவ சமூகத்தை எட்டுகிறதாய் இருக்கிறது. எது தேவசமூகத்தைப் பூரணப்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு அவைகளின் அளவைப் பார்க்க தேவன் இறங்கி வரப்போகிறார். உங்கள் தீமையின் அளவைக் குறைத்து, பாவத்தின் அளவைக் குறைத்து பரிசுத்தத்தின் அளவை, ஜெபத்தின் அளவை கூட்டுங்கள். அப்பொழுது கிருபையானது உங்களோடிருக்கும், தேவகரத்தினாலே பாதுகாக்கப்படுவீர்கள். 1 தெச 2:16-ல்  இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை  நிறைவாக்குகிறார்கள். அவர்கள் மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது என்ற வார்த்தையின்படி தேவன் அவர்களுக்கு நம்மை தப்புவித்து, பாதுகாத்து அவருடைய செட்டையின் கீழ் அடைக்கலம் கொடுப்பாராக. உங்களுடைய பாவம் அல்ல பரிசுத்தமும், ஜெபமும் தேவசமூகத்தை எட்டவும், அதன் நிறைவு மாத்திரமே தேவ சமூகத்திற்குப் போகவும் கிருபை செய்வாராக.