Inspiration

நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்

நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்
மத்தேயு 5:48

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா, நம்முடைய தேவன் பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் நிறைவாக, பூரணராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இது தான் இயேசுவின் விருப்பம், இது தான் தேவனுடைய விருப்பம். நீங்கள் திராணி அற்றவர்களாகவோ, பலவீனமுள்ளவர்களாகவோ, குறைவு உள்ளவர்களாகவோ இருப்பதை தேவன் விரும்பவில்லை. அவர் எல்லா நிறைவுள்ளவராக, சகல பரிபூரணத்தோடும் இருக்கிறார். கொலோ 2:9-ல் ஏனென்றால் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது, நிறைந்திருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. கொலோ 1:19-ல் சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கிறது என்றார். அவருக்குள் எல்லாம் நிறைந்திருக்கிறது, அவர் சம்பூரணமுள்ளவர். அதனால் தான் நாம் ஜெபிக்கும் போது ஆம் என்று சொல்லி நம்மை ஆசீர்வதிக்கிறார். இன்றைக்கு அவரை பின்பற்றுகிற நாம் அவரைப் போலவும், அவருடைய பிள்ளைகளாகிய நாம் பரிபூரணப்படவும், நிறைவாக இருக்கவும் விரும்புகிறார். ஆனால் நாமோ முப்பதும், அறுபதும் இருந்தால் போதும் பரிபூரணமெல்லாம் தேவையில்லை, அன்றன்றைக்குத் தேவை சந்திக்கப்பட்டால் போதும் என்று நினைக்கிறோம். எலிசா தீர்க்கதரிசியின் நாட்களில் இஸ்ரவேலில் யோவாஸ் என்ற ஒரு ராஜா இருந்தான். எலிசா அவனைப் பார்த்து, உன் எதிரியின் மேல் அம்புகளை எய்யும், அது தேவனுடைய இரட்சிப்பின் அம்பு என்று சொல்லி எய்து கொண்டே இருக்கச் சொன்னான். ஆனால் யோவாஸ் ராஜாவோ மூன்று முறை மட்டுமே எய்து விட்டு திருப்தியடைந்து அப்படியே நின்று விட்டான். எலிசா சொன்னார் நீர் ஐந்து, ஆறு முறையாவது உன் எதிரியை விரட்டியடித்திருக்க வேண்டும். மூன்று முறை மட்டும் அடித்து விட்டு திருப்தியடைந்து விட்டாய், ஆகவே திரும்ப திரும்ப உன் எதிரியின் மேல் நீ படையெடுக்க வேண்டும், சண்டை போட வேண்டும். காரணம் நீ முன்னேறாமல், பரிபூரணமடையாமல் திருப்தியாகி போதும் என்று உன்னிலே திருப்திப்பட்டுக் கொண்டு நிறைவடையாமல் போனாய் என்றார். இன்றைக்குத் தேவ பிள்ளைகள் தேவன் எதிர்பார்க்கும் நிறைவை, பரிபூரணத்தை அடையாமல், தங்களில் தாங்களே திருப்திப்பட்டுக் கொண்டு, சந்தோஷப்பட்டுக் கொண்டு, முழங்கால் அளவு தண்ணீர் போதும், இடுப்பளவு தண்ணீர் போதும் என்று இருந்து விடுகிறோம். தண்ணீரில் நிற்கிறோம் ஆனால் நீந்த மாட்டோம். கடக்க முடியாத தலைக்கு மேல் தண்ணீர் போனால் தானே நீந்த முடியும். அதே போல் தான் நம்முடைய ஜெப ஜீவியத்திலும், ஊழியப் பாதையிலும், உலக வேலைகளில், ஆசீர்வாதங்களில் தன்னில் தானே நாம் சந்தோஷப்பட்டு திருப்தியடைந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை மூடி வைத்து விடுகிறோம். நாம் செய்கிற ஒவ்வொரு காரியங்களிலும், ஜெபத்திலும், ஊழியத்திலும், தேவனுடைய காரியங்களிலும் நாமாகவே திருப்திப்பட்டுக் கொண்டு சந்தோஷப்படக்கூடாது. தேவன் நம்மில் சந்தோஷப்பட வேண்டும், அவர் நம்மில் திருப்தியடைய வேண்டும். இதைத்தான் அவர் மத் 25:21-ல் சொல்லுகிறார் அவனுடைய எஜமான் அவனை நோக்கி, நல்லது. உத்தமமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் என்றார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே இன்றைக்கு நாம் எப்படியிருக்கிறோம்? நிறைவோடு இருக்கிறோமா? சம்பூரண ஆசீர்வாதத்தோடு தேவனை பின்பற்றுகிறோமா அல்லது குறைவுகளோடு, வேதனைகளோடு வாழுகின்றோமா? நம்முடைய இந்த நிலையை தேவன் மாற்ற விரும்புகிறார். உங்கள் குறைவை தேவன் நிறைவாக்க விரும்புகிறார். இயேசு சொன்னார் யோவான் 10:10-ல் நானோ என் ஆடுகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அவைகள் பரிபூரணப்படவும் வந்தேன் என்றார். ஆம் நீங்கள் பரிபூரணப்பட வேண்டும், நீங்கள் சகலவற்றிலும் நிறைந்து காணப்பட வேண்டும். இதற்கு தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். யோவான் 1:14-ல் அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார். வசனம் 16-ல் அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபையைப் பெற்றோம். அவர் நிறைவாய் இருப்பது போல இன்றைக்கு உங்களையும் நிறைவாக மாற்றி சம்பூரணப்படுத்துவார். பூரண சற்குணராக மாற்றுவார். ஆகவே தான் வேதம் சொல்லுகிறது நீதி 28:20-ல் உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். அந்த பரிபூரண ஆசீர்வாதங்களுக்கு நேராக தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து நடத்துவாராக. பூரணத்திற்கு நேராக உங்களை வழிநடத்துவாராக. யாக் 1:4-ல் நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும் இருங்கள் என்ற வார்த்தையின்படி என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக. போகட்டும் எதில் பூரணம், எதில் சம்பூரணம் அடைய வேண்டும் என்பதைப் பார்போம்.

இரட்சிப்பில் பூரணம்

பூரண இரட்சிப்பு, ஞானம், அறிவு உன் காலங்களுடையஉறுதியாயிருக்கும்.உலகத்திலேமுதன்மையானதும், மேன்மையானதும் ஒரு மனிதனுடைய இரட்சிப்பு மாத்திரமே. எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், நாட்டை ஆள்பவராக இருந்தாலும், உலகத்தில் கொடி கட்டிப் பறந்தாலும் தேவனுடைய இரட்சிப்பை, பாவமன்னிப்பை, கிருபையை பெறவில்லை என்றால் அவர் வாழ்க்கை ஜுரோ தான். அதை இயேசுவே சொல்லியிருக்கிறார் மத்16:26-ல் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? என்றார். உலகம் முழுவதும் ஆதாயப்ப- த்தினாலும், உலக- த்திற்கு அதிபதியாக இருந்தாலும், அவர் மனம்திரும்பி, பாவமன்னிப்பைப் பெற்று, இயேசு தருகிற இரட்சிப்பைப் பெறவில்லை என்றால், அவர் பூமிக்குரியவர் தான் பரலோகவாசி அல்ல. இந்த பூமியில் வேண்டுமானால் கொடி கட்டி பறக்கலாம், ஆனால் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது. இரட்சிப்பு எவ்வளவு விலையேறப் பெற்றது, மதிப்புக்குரியது. வேதாகமத்தில் மதிப்புக்குரிய ஒரு போதகர், ஊழியக்காரர் ஒருவர் இருந்தார். அவர் இஸ்ரவேலில் பிரசித்திப் பெற்ற போதகர். அவர் இரவிலே வந்து யாருக்கும் தெரியாமல் இயேசுவை சந்தித்துப் போவார். இயேசு அவரைப் பார்த்து நீ மறுபடியும் பிறக்க வேண்டும், அதாவது நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்றார். அவரோ நான் தாயின் வயிற்றிலே ஒருமுறை பிறந்து விட்டேன். இனி ஏன் மறுபடி பிறக்க வேண்டும் என்றார். அப்பொழுது இயேசு சொன்னார் யோவான் 3:5-ல் ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்றார். அவர் போதகர் தான், வேதத்தை அறிந்தவர் தான், ஊழியக்காரர் தான் ஆனால் இரட்சிக்கப்படவில்லை. இரட்சிப்பின் பரிபூரணத்தைப் பெறவில்லை. ஏன் ஒருமுறை பிறந்தால் போதாதா? ஆலயத்திற்குப் போனால் போதாதா? வேதாகமத்தைத் தூக்கினால் போதாதா? ஏன்? மறுபடியும் பிறக்க வேண்டும். மாம்சத்தில் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும் என்றார். போதகனாயிருந்தும்,ஊழியக்காரனாயிருந்தும் இரட்சிக்கப்படவில்லை, பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறவில்லை. இயேசுவை அறிவிலே அறிந்திருந்தான், ஆனால் அனுபவத்திலே அறியவில்லை. ஆகவே தான் இயேசு சொன்னார் முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப் படுவான் என்றார். இரட்சிப்பு என்பது ஏதோ ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல, நாம் ஒவ்வொரு நாளும் நம்மை தேவனுக்கு முன்பாக அர்ப்பணித்து அவர் சாயலாக மாறி, அவருடைய ஆலயமாக, அவரை சுமக்கிற பாக்கியத்தைப் பெற வேண்டும். அப்படிச் செய்யும் போது தான் ரோமர் 12:2-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தையின்படி நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல். தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகு- த்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகுகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்றார். ஆம் நம்முடைய மனம் ஒவ்வொரு நாளும் புதிதாக வேண்டும். நம்முடைய உள்ளான மனிதனில் குணப்பட வேண்டும், பெலனடைய வேண்டும். தேவன் விரும்புகிற மாற்றம், பரிசுத்தம் நமக்குள் வரவேண்டும். இந்த இரட்சிப்பில் பூரணப்பட வேண்டும். இதைத்தான் இயேசு இந்த பூமியிலே நிறைவேற்றினார். எபி 2:10-ல் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலேபூரணப்படுத்துகிறதுஅவருக்கேற்றதாயிருந்தது. மட்டுமல்ல எபி 5:8,9-ல் அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு, தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணமானார். ஆம் ஆண்டவராகிய இயேசு இந்த பூமியிலே எதையும் அவசர அவசரமாக, அரையும் குறையுமாக செய்யவில்லை எல்லாவற்றையும் நேர்த்தியாகவும், பூரணமாகவும் செய்து முடித்தார். என்னுடைய நண்பர் ஒருவர் மருத்துவராக இருக்கிறார். அவர் எப்பொழுதும் வேதாகமத்திற்கு விரோதமாகவே பேசுவார். ஆண்டவராகிய தேவன் விண்ணையும் மண்ணையும் படைத்து, கடைசியில் அவசர, அவசரமாக மனிதனைப் படைத்தார். அதனால் தான் அவனுக்கு வியாதியும், பெலவீனமும் வருகிறது என்று வாக்குவாதம் செய்வார். அப்படியல்ல தேவன் சகலத்தையும் நேர்த்தியாக, செவ்வையாக செய்து முடித்தார். இதுதான் படைப்பின் பூரணம், இரட்சிப்பின் பூரணம். இதை செய்யத்தான் அவர் சிலுவையில் சாவை ஏற்றார். நாம் இரட்சிப்பிலே சம்பூரணமடையவும், பரிபூரணப்படவும் நமக்காக அடிக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். இன்றைக்கு அந்த தேவனை நாம் அவரை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து, தெரிய வேண்டிய விதத்தில் தெரிந்து இரட்சிப்பிலே பூரணமடைய வேண்டும். அப்போது தான் பரலோகவாசியாக நித்திய ஜீவனை அடையவும், சுதந்தரிக்கவும் முடியும். அவருடைய இரட்சிப்பிலே பூரணமடைய வேண்டும் என்ற ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை இரட்சிப்பிலே பூரணப்படுத்துவாராக!.

ஞானத்தில் பூரணம்

பூரண இரட்சிப்பும், பூரண ஞானமும், அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும், கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். ஏசாயா 33:6. அடுத்ததாக நாம் பூரண ஞானத்தில் நிறைய வேண்டும். இன்றைக்கு நாம் வாழ்கிற உலகம், பொல்லாத உலகம், பொல்லாத சிந்தனையாளர்கள், தந்திரமானவர் நிறைந்தது. யாரை எப்படி பேசி, எப்படி மடக்குவது போன்ற சாதுரிய உலகத்தின் ஞானத்தால், அநேகரை பிசாசு நிறைத்து, அவர்களை அலைக்கழிக்கிறான். இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கின்ற நாம் நம்முடைய காரியங்களை செய்ய ஞானம் வேண்டும். படிக்கும் ஞானம் அல்ல, திறமையின் ஞானம் அல்ல, பரத்திலிருந்து வருகிற ஞானம் வேண்டும். யாக் 3:17-ல் பரத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்க முள்ளதாகவும்.இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும்,மாயமற்றதாயுமிருக்கிறதுஎன்றார்.இவ்வுலகத்தின் ஞானம் வேறு, தேவனுடைய ஞானம் வேறு. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார் 1கொரி 2:6,7-ல் அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம். இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையல்ல உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம் என்றார். உலக ஞானம் எதற்கும் உதவாது. தமிழில் பழமொழியில் சொல்வார்கள் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது, அதேபோல் தான் உலக ஞானத்தை வைத்து, அறிவை வைத்து நம் தேவனை அறியவோ, பிசாசை மேற்க்கொள்ளவோ முடியாது. பரத்திலிருந்து வருகிற ஞானம் வேண்டும். அதுதான் சுத்தமுள்ளதாயும், பரிசுத்தமுள்ளதாயும் நம்மை தேவனோடு இணைக்கிறதாகவும் இருக்கிறது. இந்த ஞானத்தை தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு கொடுத்து பரிபூரணப்படுத்த விரும்புகிறார். லூக்கா 21:15-ல் உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர் பேசவும், எதிர் நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்றார். தேவன் அவருடையபிள்ளைகளுக்குஇந்தஞானத்தைகொடுக்க விரும்புகிறார். அதிலே அவர்கள் நிறைவடையவும், பரிபூரணப்படவும் விரும்புகிறார். இதைத்தான் சாலமோனுக்குஇராஜ்யம்செய்ய கொடுத்தார். ஆனால் சாலமோன் அதை விருத்தி செய்து கொள்ளாமல், தேவன் கொடுத்த ஞானத்தை தேவனுக்காக பயன்படுத்துவதைப் பார்க்கிலும், தனக்காக, தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார். அந்த தேவ ஞானத்தை உலக ஞானத்தோடு கலப்படமாக்கிக் கொண்டார். அவ்வளவு பெரிய தேவாலயத்தைக் கட்டி, தேவனால் பாராட்டைப் பெற்ற அந்த ராஜா, தன் ஆத்துமாவை அடக்கி அமரப் பண்ணாமல் எகிப்திய பெண்கள் மேல் மோகம் வைத்து, தேவனை விட்டு விலகிப் போனார். அவருடைய ஞானம் குப்பையானது. தேவ ஞானத்திலே வளரவில்லை, பரிபூரணப்படவில்லை. இம்மைக்காக, உலகத்திற்காக பயன்படுத்தி அதிலே பரிபூரணப்படவில்லை. ஆகவே சாலமோன் அந்த ஞானத்திலே நிலைத்து நிற்கவில்லை. ஆனால் யோசேப்பை பாருங்கள் பாடுகளிலே, உபத்திரவத்திலே, வேதனையிலே தேவனுக்குள் நிலைத்திருந்தார். அவர் சிறைச்சாலையில் இருக்கும் போது தேவனோடு சஞ்சரித்து, பரிசுத்த ஆவியில் நிரம்பி உலகத்தினால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொண்டார் ஆதி 41:38-ல் பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி, தேவ ஆவியைப் பெற்ற, ஞானமுள்ள இந்த மனுஷனைப் போல வேறொருவன் எனக்கு கிடைக்க கூடுமோ என்றான். பார்வோன் யோசேப்பை எகிப்து தேசமனைத்திற்கும் அதிகாரியாக்கினான். யோசேப்பு தேசமனைத்திற்கும் தேவ ஞானத்தைப் போதித்து பஞ்சத்திலே ஜனங்களைப் பாதுகாத்தார்.காரணம் ஞானத்திலே பூரணமடைந்தார். அந்தஞானத்தை இந்தகடைசி காலத்தில், பொல்லாத உலகத்தில் வாழ்கிற நமக்கு தேவன் தர விரும்புகிறார். அதிலே நம்மை பூரணப்படுத்த விரும்புகிறார். அவர் பூரணசற்குணராய் இருப்பது போல நீங்களும் பூரணசற்குணராய், நிறையுள்ளவர்களாய் இருங்கள் என்றார். இன்றைக்கு இந்த ஞானத்தை நீங்கள் தேவனிடத்தில் கேளுங்கள், அதிலே சிறந்து விளங்க தேவன் உங்களுக்கு கிருபை செய்வார். யாக் 1:5-ல் உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவான். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என் ஆண்டவராகிய தேவன் தாமே அவருடைய ஞானத்திலே பூரணப்படுத்தி அவருக்கு மகிமையாக மாற்றுவாராக!. 

பூரண ஆயுசு நாட்கள்

இதற்குப்பின் யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும், தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான். யோபு 42:16,17. அடுத்து மனிதனுடைய வாழ்க்கையில், ஆயுசு நாட்களில் சுகத்திலும், பெலத்திலும் பூரணமுள்ளவனாக வாழ தேவன் விரும்கிறார். நாம் இந்த பூமியிலே நல்ல சுகத்தோடு, பெலத்தோடு, ஆரோக்கியத்தோடு ஜீவிக்க தேவன் விரும்புகிறார். சங் 35:27-ல் தம்முடைய ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று சொல்லப்பட்டுளளது. நீங்கள் நல்ல சுகத்தோடு அவருக்கு மகிமையாக வாழ, அவருடைய வேலையைச் செய்ய தேவன், இந்த ஜீவனை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நமக்கு பரிகாரி, அவர் நம்மை சுகமாக்குகிற தேவன். எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உங்களுக்கு வரப்பண்ணேன் என்றார் யாத் 15:26-ல் அப்படிச் சொல்லப்பட்டுள்ளது. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள் கர்த்தரை நேசித்தவரும், கர்த்தரை உத்தமமாய் பின்பற்றின அவரைப் போல வேறு ஒருவரும் இல்லை. அப்படிப்பட்ட மனிதனுக்கு பயங்கரமான இழப்புகளும், பாடுகளும், வேதனைகளும் வந்தது. இனிப்பிழைப்பார், இந்த பூமியில் திரும்பி வாழ்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படிப்பட்ட பாடுகள், வேதனையில் என்ன வந்தாலும், எது நடந்தாலும், யார் கைவிட்டாலும், நான் தேவனை விட்டு பின் வாங்கமாடடேன் அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். யோபு 13:15 அப்படிச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட நிலையிலும் விசுவாச அறிக்கை செய்தார். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றார். யோபு 19:25. நான் போகும் பாதையை அவர் அறிவார், அவர் என்னை சோதித்த பின் பொன்னாக விளங்குவேன் என்றார். அவ்வளவு பாடுகள் வேதனையில் கடந்து போன யோபு கர்த்தரால் சுகம் பெற்று, பெலன் பெற்று அதற்கு பிறகு 140 வருஷம் உயிரோடு இருந்து சுகத்தையும், பெலத்தையும் பெற்றான். பூரண ஆயுசு உள்ளவராக இருந்தாராம். அவருடைய பாடுகளும் வேதனைகளும் ஒரு சில மாதங்களும், ஒரு சில நாட்களும் தான். அதன் பிறகு பெலன், சுகம் தான். அவருடைய நாட்கள் மேன்மையாக இருந்தது. வேதம் சொல்லுகிறது நாம் இந்த பூமியிலே எவ்வளவு நாட்கள் வாழ்கிறோமோ அவ்வளவு நாட்கள் நமக்கு பெலனும், சுகமும் இருக்கும். உபா 33:25-ல் உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலன் இருக்கும். இந்த பூமியில் துன்மார்க்கனுக்கு எப்படியோ, பொல்லாதவனுக்கும் அப்படியே, அப்படியே நீதிமானுக்கும் நடக்கும். பிர 8:14-ல் அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும். ஆனால் நீதிமான்கள் எல்லாப் போராட்டத்திலிருந்தும் எழுந்திருப்பார்கள். காரணம் அவனை தேவன் தாங்குகிறார், தப்புவிக்கிறார். இப்படியாகத் தான் தேவன் யோபுவை ஆசீர்வதித்தார். தீர்க்காயுசைக் கொடுத்தார். இதுதான் தேவன் சொன்ன சம்பூரணம். பரிபூரண ஆசீர்வாதம். இந்த ஆசீர்வாதத்தை மனிதர்கள் அனுபவிக்க- த்தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நாம் ஜீவன் பெறவும், பரிபூரணப்படவும் வந்தேன் என்றார். இன்றைக்கு உங்கள் பெலன், உங்கள் சுகம் எப்படி இருக்கிறது. வியாதியோடு, வேதனையோடு உழன்று கொண்டிருக்கிறீர்களா? பெலவீனப்பட்டு ஒடுங்கிப்போய் இதுதான் தேவன் எனக்கு இட்டவழி என்று மனமுடைந்து போனீர்களா? சங்கீதக்காரனாகிய தாவீது அந்த வழியில் கடந்து போன போது என்ன நடந்தது?, எப்படி ஜெபித்தான் என்பதைப் பாருங்கள். சங் 102:23,24-ல் வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். அப்பொழுது நான், என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும், உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது. நான் ஏன் குறித்த, நியமித்த காலத்திற்கு முன்னே மரிக்க வேண்டும் என்று ஜெபித்தார். பிர 7:17-ல் மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே, உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும். தேவன் இந்த பூமியில் நமக்கென்று காலங்களையும், வருஷங்களையும் வைத்து அவருக்கு மகிமையாக வாழவும், அவருக்காக ஜீவிக்கவும் செய்கிறார். ஆகவே இந்த சரீரத்தைக் குறித்து, இந்த உடலைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை குப்பை தொட்டி போல கண்டதையும் சாப்பிட்டு வியாதியை வருவித்துக் கொள்ளாமல், என் சரீரத்தை மாற்றி அமைக்கிறேன் என்று உங்கள் இஷ்டத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய அதின் மேல் கை வைக்காமல், தேவனை சுமக்கிற ஆலயமாக, அவர் உலாவுகிற இடமாக இந்த சரீரத்தை பரிசுத்தத்தோடு பாதுகாக்க வேண்டும். அதற்குத்தான் தேவன் நம்மை அவருடைய ஆலயமாக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். மோசே 120 வயதிலும் பெலத்தோடும், சுகத்தோடும், ஆரோக்கியத்தோடும், சுகமாய் தேவனுக்காக பிரகாசித்து, மகிமையாக பூரண ஆயுசு உள்ளவராக இருந்தார். இன்றைக்கு தேவன், நாம் நீடித்த நாட்களாய் சுகத்தோடு, பெலத்தோடு வாழ விரும்புகிறார். சங் 91:16-ல் நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன் என்ற வார்த்தையின்படி தேவன் இந்த செய்தியை வாசிக்கின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல சுகத்தை, பெலத்தை, ஆரோக்கியத்தை தந்து, அவர் பூரண சற்குணராக இருப்பது போல. உங்களையும் பூரணசற்குணராக மாற்றுவாராக!. பூரண ஆயுசு நாட்களைத் தருவாராக!. ஆமென்.