Inspiration
உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பேன்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!. நமக்கு ஒருவர் ஏதாவது கொடுப்பேன் என்று சொல்லிவிட்டாலே நமக்குப் பெரிய சந்தோஷம் வருகிறது. அது அப்படியே கிடைக்கும் போது பெரிய மகிழ்ச்சி. ஆனால் நமக்குக் கொடுப்பேன் என்று சொல்பவர் மனிதர் அல்ல, வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லவர் அவர் என்ன கொடுக்கிறார். லூக்கா 12:32-ல் பயப்படாதே! சிறுமந்தையே உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார் என்று இயேசு சொல்கிறார். எனக்குப் பணம் வேண்டியதிருக்கிறது, சுகமó வேண்டியதிருக்கிறது, சமாதானம் வேண்டியதிருக்கிறது, பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டியதிருக்கிறது, திருமணம் நடந்தும் பல வருடங்கள் ஆகியும் குழந்தையில்லாமலிருக்கிறது, எனக்கு வரவேண்டிய நன்மைகள் தடைபட்டிருக்கிறது, சொத்து, நிலம், பணம் வராமல் இருக்கிறது. டிரான்ஸ்பர் வர வேண்டியதிருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தை கொடுப்பேன் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே! அதனால் என்ன நன்மை என்று நினைக்காதீர்கள், மத் 6:33, லூக் 21:31-லும் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளொல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று ஆண்டவர் சொல்கிறார். தேவனுடைய ராஜ்யம் என்பது என்றால் என்ன? ரோமர் 14:17-ல் தேவனுடைய ராஜ்யம் என்பது புசிப்பும், குடிப்பும் அல்ல, அது நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்று பவுல் எழுதுகிறார். நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நீதியுள்ளவர்களாய், சமாதானத்தால், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷத்தால் நிறைந்தவர்களாய் வாழவும், அதைத் தருகிற தேவனாகிய கர்த்தருடைய முகத்தை தேடுகிறவர்களாய் இருக்கவும், அதினிமித்தம் இவ்வுலக ஓட்டம் முடியும் போது அவர் நமக்கு நியமித்திருக்கிற பரம ராஜ்யத்திற்குப் போகவும் வேண்டும் என்று தான், அந்த ராஜ்யத்தை உனக்குக் கொடுப்பேன் என்கிறார்.
1.இஸ்ரவேல் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆபிரகாமை தேவன் அழைத்து ஆதி 12:7-ல் உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார். சந்தோஷமாய் தேவனைப் பின்பற்றி கல்தேயர் தேசத்திலிருந்து புறப்பட்டு கானானை நோக்கிப் பிரயாணப்பட்டான். நீ இந்த தேசத்தின் நீளம் அகலம் எவ்வளவோ, அம்மட்டும் நடந்து திரி, உனக்கு அதைத் தருவேன் என்றார். ஈசாக்கிடமும் ஆதி 26:3-ல் இந்த தேசத்திலே வாசம்பண்ணு, நான் உன்னோடே கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும், உன் சந்ததிக்கும் இந்த தேசங்கள் யாவையும் தந்து உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவேன் என்றார். ஆதி 35:12-ல் யாக்கோபை பார்த்து நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன், உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தை கொடுப்பேன் என்றார்.
ஆபிரகாமை அழைத்து கர்த்தரே புறப்படச் செய்து கானான் தேசத்தை கொடுத்தார். ஈசாக்கை இங்கேயே தங்கியிரு நான் உன்னை ஆசீர்வதித்து, இந்த தேசத்தை உனக்கும், உன் சந்ததிக்கும் தந்து, என் தாசன் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்றார். ஆனால் யாக்கோபுக்கு அப்படியல்ல அவன் தன் தாயின் ஆலோசனையைக் கேட்டு குறுக்கு வழியில் ஈசாக்கை ஏமாற்றி மூத்தமகன் என்று சொல்லி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றான். இதினிமித்தம் வீட்டை விட்டு வெளியேறி, இருபது ஆண்டுகள் அடிமையாய் வாழ்ந்தான். திருமணத்தில் ஏமாற்றப்பட்டான், சம்பள பணத்தில் ஏமாற்றப்பட்டான், கடுமையாய் உழைத்தாலும் மனைவியின் சகோதரர்கள் எங்கள் தகப்பனுக்கு உண்டானதையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான் என்றும், இவன் எங்கள் தகப்பனாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்று குற்றச்சாட்டைப் பெற்றான். அதனால் அங்கிருந்து புறப்பட்டு, தகப்பனுடைய தேசத்துக்கு புறப்பட்டு வரும்போது ஏசா அழித்து விடுவானோ என்று பயந்து ஆண்டவரிடம் நெருங்கி நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடமாட்டேன் என்று ஜெபிக்கிறான். அங்கே தேவன் அவனை சரிசெய்து, அவனை ஆசீர்வதித்து அவனை இஸ்ரவேலாய் மாற்றினார். அதன்பிறகு மகள் தீனாள் நிமித்தம் பல உபத்திரவங்களைச் சந்தித்து அந்த பட்டணத்திலிருந்து கானான் தேசத்திலுள்ள, தேவன் முன்பு தனக்குத் தரிசனமான இடத்தில் வந்து அவருக்குப் பலிபீடம் கட்டின போது தான், தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்கு கொடுப்பேன், உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்றார். சுலபமாக உடனடியாக அவனுக்கு இந்த ஆசீர்வாதம் உண்டாயிருக்கவில்லை. அவனறியாமல் சில தவறுகள், சில சிட்சைகள், பல போராட்டங்கள் இவைகளைக் கடந்து, கர்த்தரிடம் தன்னைத் தாழ்த்தி அர்ப்பணித்து, அவன் இந்த ராஜ்யத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டான். அதே போலத்தான் இன்றைக்கு நம்óமுடைய வாழ்விலும் பல்வேறு தவறுகள், குறைபாடுகள், பலவித இன்னல்கள், சிட்சைகள் இவைகளையெல்லாம் கடந்து போகிறோம். யாக்கோபை போல பலவித பாதிப்புகளை சந்தித்த நம்மைப் பார்த்து ஆண்டவர் எசே 11:17-ல் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக் கொண்டு இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு என்று ஆண்டவர் சொல்கிறார். யாக்கோபு தன் குமாரன் யோசேப்பை பார்த்து ஆதி 48:4-ல் நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை நித்திய சுதந்திரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார் என்பதைச் சொல்லி யோசேப்பின் குமாரரை ஆசீர்வதித்தான் என்று வாசிக்கிறோம். மோசேயிடம் கர்த்தர் பேசின போது நானுற்று முப்பது வருஷம் எகிப்திலே யாக்கோபின் சந்ததி அடிமைத்தனத்தில் கொடுமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நான் உன்னை அனுப்பி பார்வோனின் கையிலிருந்து விடுவித்து கொண்டு வருவேன் வா என்று அழைத்து, நான் யெகோவா, சர்வ வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாய் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன் என்றார். யாத் 6:2-8 வரை வாசித்தால் நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டு போய், அதை உங்களுக்கு சுதந்திரமாகக் கொடுப்பேன் நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார். வேதத்தில் அநேக முற்பிதாக்களை இந்த ராஜ்யத்திற்காகவே வேறு பிரித்து அதற்காகவே அவர்களோடு இருந்து நடத்தினதை நாம் பார்க்கிறோம். அநேக ராஜாக்கள் சரியாய், பிரியமாய் தேவனுக்குள் வாழ்ந்தார்கள். பலர் செம்மையானதை செய்யவில்லை. நாம் அப்படி செம்மையானதைச் செய்யாதவர்களாய் இராதபடி, அந்த ராஜ்யத்தை இழந்து விடாதபடி மிகுந்த கவனமாயிருப்போம்.
2.இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்கு திரும்ப கொடுப்பீர்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாளளவும் தம்முடைய சீஷர்களோடு பேசி தாம் உயிரோடு இருப்பவராக நிரூபித்தார். அப்பொழுது கூடி வந்தவர்கள் ஆண்டவரே! இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலருக்கு திரும்ப கொடுப்பீர் என்று கேட்டார்கள். அப் 1:6-ல் அதற்கு இயேசு பிதாவுடைய காலங்களையும், வேளைகளையும் அறிவது நமக்கு உரியதல்ல என்று சொன்னார். சீஷர்கள், மக்கள் இந்த ராஜ்யம் தங்களுக்கு வேண்டும் என்று ஏங்கினார்கள். அதற்குப் பரிசுத்த ஆவியானவரைப் பெற எருசலேமில் காத்திருந்தார்கள். ஆனால் சாலமோன் மகன் ரெகொபெயாம் காலத்தில் இராஜ்யம் இரண்டாய் பிரிந்தபோது யெரொபெயாம் 1 இராஜா 11:38-ல் நான் உனக்கு கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து என் தாசனாகிய தாவீது செய்தது போல என் கட்டளைகளையும், என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்கு செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து நான் தாவீதுக்கு கட்டினது போல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன் என்றார். அவனோ கர்த்தரின் காரியத்தில் கவனம் செலுத்தவில்லை. கன்றுகுட்டிகளை செய்து, பண்டிகைகளைக் கொண்டாடி பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அதைப் போலத்தான் எகிப்திலே இருந்து அழைத்து வரப்பட்ட ஜனங்கள் கன்றுக்குட்டி ஒன்றை பொன்னாபரணங்களால் செய்து எங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தெய்வங்கள் இவைகளே என்றார்கள். தேவ கோபம் இறங்கியது. தேவன் இந்த ஜனத்தை அழித்து விடுவேன் என்றார். அப்பொழுது மோசே ஆண்டவருக்கு முன்பாக நின்று ஆண்டவரே இந்த ஜனத்தின் மீது பரிதாபம் கொள்ளும் என்று சொல்லி விட்டு யாத் 32:13-ல் உமது தாசராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும். உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றென்றைக்கும் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டு சொன்னீரே என்று கெஞ்சி பிராதித்தான். இன்றைக்கு நாமும் கூட ராஜ்யத்தை உனக்குத் தருவேன் என்று ஆண்டவர் சொல்லும் போது ஆண்டவரே! நீர் ராஜ்யத்தைத் தருவது இந்த காலமா? என்று ஏக்கத்தோடு கேட்கிறோமா? இல்லாவிட்டால் வழி விலகி வீணான காரியங்களில், வீணான நம்பிக்கைகளில் சிக்கி தேவ கோபத்திற்கு ஆளாக இருக்கிறோமா! ஆராய்ந்து பாருங்கள் ஏக்கத்தோடு கேட்டவர்கள் மேல்வீட்டறையில் ஏறி பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாய் இருந்தார்கள். ஆனால் தேவ கோபத்திற்கு ஆளானவர்கள் மோசேயின் ஜெபத்தினால் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஒருவேளை நான் வழிதவறி தேவனை ஏதோ ஒரு காரியத்தில் துக்கப்படுத்தி விட்டேன் அல்லது எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மேல் தேவகோபம் வருகிறதாய் இருக்கிறது, அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்று உணர்வீர்களானால் மோசேயைப் போல ஆண்டவரே! உமது ராஜ்யத்தை எங்களுக்கும், எங்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று ஆணையிட்டு இருக்கிறீரே! எங்கள் மேல் பரிதாபம் கொண்டு எங்களுக்கு இரங்கும் என்று கெஞ்சுங்கள். எங்களுக்கும், எங்கள் சந்ததிக்கும் உமது ராஜ்யம் வேண்டும் என்று கேளுங்கள். உமது ராஜ்யம் வருவதாக! என்று ஜெபிக்க கற்றுக் கொடுத்தீரே! எங்கள் வீட்டில் உமóமுடைய ராஜ்யம் வர வேணுமே! ஒவ்வொருவருமó அந்த ராஜ்யத்திற்கு உகந்தவர்களாய் மாற வேண்டும் என்று ஜெபியுங்கள். எசே 16:2-14 வரை எவ்வளவு பரிதாப நிலையில் இருந்த நம்மை தேவன் அருகில் வந்து சந்திக்கிறார். எப்படி நம்மை அலங்கரிக்கிறார். எப்படி போஷிக்கிறார், அவரது அன்பு எவ்வளவு பெரியது என்று நம்மால் அறிய முடியும். அதில் 13-ஆம் வசனத்தை வாசித்தால் இவ்விதமாய் பொன்னினாலும், வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய், உன் உடுப்பு மெல்லிய புடவையும், பட்டும், சித்திரதையலாடையுமாயிருந்தது. மெல்லிய மாவையும், தேனையும், நெய்யையும், நீ சாப்பிட்டாய், நீ மிகவும் அழகுள்ளவளாகி ராஜ்யத்தை சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய் என்று சொல்கிறார். அவர் நம்மேல் வைத்த அவருடைய மகிமையில் நாம் குறைவற்றவர்களாய், அவருடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றோம், எத்தனை மேன்மை!.
3.யார் இந்த ராஜ்யத்தை சுதந்தரிப்பார்.
ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளைகூட இல்லாதிருக்கும் போது பூமி முழுவதையும், உலகத்தையும் சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தைப் பெற்றான். ஆபிரகாம் அதை விசுவாசத்தினாலே பெற்றுக் கொண்டான். ரோமர் 4:13-ல் வாசிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இதை நாம் சுதந்தரிப்போம். இப்பொழுது நம் நிலை ஒன்றுமில்லாத போல இருக்கலாம். ஒரு பிள்ளைகூட இல்லையோ எப்படி பூமி முழுவதும், சந்ததி வரும் என்ற எண்ணம் எழலாம், ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து என் நிலைமை இப்பொழுது எப்படி இருந்தாலும் இதை ஆசீர்வாதமாய் மாற்ற உம்மாலே கூடும் என்று விசுவாசியுங்கள். நீங்கள் ராஜ்யத்தை சுதந்தரிப்பீர்கள். ஆண்டவர் சில வழிகளை நமக்குச் சொல்லியிருக்கிறார். அவரை விசுவாசித்து ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நம்மை, நம் கடந்த கால பாவத்தை கழுவ வேண்டும். எசே 16:9-ல் நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம்பண்ணுவித்து உன பாதரட்சையை தரித்து என்கிறார் பாருங்கள்.
யோவான் 3:5-ல் இயேசு பிரதியுத்திரமாக ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார். இது ஒரு சபைக்கு சொந்தமான உபதேசம் அல்ல. இயேசு நிக்கோதேமு என்ற இஸ்ரவேலில் போதகனாயிருந்தவரிடம் சொல்லுகிறார். வசனம் 3-ல் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன் என்றார். இந்த தேவனுடைய வார்த்தைக்கு நாம் கீழ்படிந்து வாழும் போது ஆசீர்வதிக்கப்படுவோம். நமக்கு அவர் எண்ணெய் பூசி, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிரப்பி, சித்திரம் தீர்த்த பாதரட்சைகளை நமக்குப் போடுகிறார். வேதத்தின் ரகசியங்களை அறியச் செய்து நம்மை அலங்கரிக்கிறார். மெல்லிய மாவு, எண்ணெய், திராட்சைரசம், நெய் எவ்வளவு விதமான உணவுகள். வேதத்தை அனுதினமும் வாசித்து, தியானித்து அவர் முகத்தை தேடி அவரைத் துதித்து, புகழ்ந்து வாழும் போது அவரது ராஜ்யத்தை நோக்கி முன்னேறிப் போய் கொண்டிருப்போம், சுதந்தரிப்போம்.
அதுமட்டுமல்ல அவரது சித்தம் என்ன என்று நாம் அறியணும். மத்7:21-ல் பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தை செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று இயேசு சொன்னார். மத் 21:28-31 வரை வாசிக்கும் போது ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். மூத்தவனிடத்தில் வந்து நீ போய் இன்றைக்கு திராட்சை தோட்டத்தில் வேலை செய் என்றார். அவன் மாட்டேன் அதில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு பின்பு மனஸ்தாபப்பட்டு போய் செய்தான். இளையவனிடம் சொன்ன போது போகிறேன் என்று சொல்லி விட்டு போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனின் சித்தத்தைச் செய்தவன் என்று கேட்டார் மூத்தவன் என்றார்கள். ஆண்டவருக்காக நமக்கு இத்தனை நன்மைகள் செய்தவருக்காக வேலை செய்ய வேண்டும், முழுநேரமாகத் தான் வர வேண்டும் என்று அல்ல. பக்கத்து வீட்டில் பேசும் போது, உறவுகள், நண்பர்களிடம் பேசும் போது இயேசுவை சொல்லலாம். உங்கள் தாலந்துகளை இயேசுவுக்காக பயன்படுத்தலாம். தேசங்களில் வேலை இழப்புகள் வரும் போது இயேசுவின் திராட்சை தோட்டத்தில் மட்டும் எல்லாருக்கும் வேலை இருக்கிறது. அவர் ஒருவரையும் சும்மா விடமாட்டார். அவர்கள் வேலையை கவனித்துக் கொண்டே இருப்பார். அதற்கேற்ற கூலி, ஆசீர்வாதத்தைத் தருவார். எங்கள் ஊழியத்தில் சோஸியல் மீடியாவில் சின்ன உதவி கனடாவில் இருந்து ஒரு தங்கை செய்து கொண்டிருந்தால், தானாக முன்வந்து இதை நான் செய்கிறேன் என்று செய்து கொண்டிருந்தால் வெகு விரைவில் அந்த தேசத்தில் அரசாங்க வேலை கிடைத்தது. அதையும் செய்து கொண்டே உறுதுணையாக இருக்கிறாள். உங்கள் வீட்டிலும் படித்த வாலிப பிள்ளைகள் மதுரையிலோ, திண்டுக்கல்லிலோ அருகாமையில் இருக்கிற பிள்ளைகள், இயன்ற பெரியவர்கள் எங்களோடு இணைந்து உங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி ஊழியம் செய்யலாம். எங்களோடு தொலைபேசியிலோ, கடிதத்திலோ தொடர்பு கொள்ளுங்கள். ஆண்டவருக்குப் பயப்படுகிற பயம் இருந்தால் என்ன ஊழியம் செய்ய முடியுமோ செய்ய முன்வரலாம். மத் 5:20-ல் பரிசேயர், சதுசேயரை விட நம்முடைய நீதி சிறந்திருக்க வேண்டும். மத் 18:3-ல் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல மாற வேண்டும். மாற்கு 10:24-ன் பின்பகுதியில் பிள்ளைகளே ஐஸ்வரியத்தில் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது அரிதாயிருக்கிறது என்றார். ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிராமல் என்னிடம் பணம் இருக்கிறது இதைசó செய்து விடுவேன் என்றில்லாமல், அதை நமக்குத் தந்த தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அநேக உபத்திரவங்கள் வழியாகத்தான் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நாம் பிரவேசிக்க முடியும் என்பதை அறிந்து பாடுகளைக் கண்டு மனம் மடிந்து விடாமல் இந்த உபத்திரவம் தான் அந்த ராஜ்யத்திற்குள் என்னைக் கொண்டு போகிறது என்று உற்சாகமாய் முன்னேறுங்கள். தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் ஒரு கொம்பு பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து மேற்கொண்டது. தானி 7:18,27 வசனங்களில் ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைப் பெற்று என்றெனóறைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள். வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும், ஆளுகையும், மகத்துவமும், உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்கு கொடுக்கப்படும். அந்த ராஜ்யமே நித்திய ராஜ்யம். இந்த ராஜ்யத்தை தேவன் நமக்கு கொடுக்கிறார். அதை அவர் நமக்கு கொடுக்கப் பிரியமாயிருக்கிறார். எவ்வளவு போராட்டம், சத்துரு போராடி மேற்கொண்டு விட்டேன் என்று எண்ணினாலும், நீங்கள் கூட அவ்வளவு தான் இனி நான் எழும்ப முடியாது என்று நினைத்துவிட்டாலும் திரும்ப எழும்புங்கள், சத்துருவை முறியடிக்க தேவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் ராஜ்யத்தை சுதந்தரிப்பீர்கள். ஆண்டவர் இயேசு தாமே துணை செய்து தமது ராஜ்யத்தை நமக்கு கொடுப்பாராக!.
By Sis. Kala VincentRaj