Inspiration

தேவனை விற்றுப்போட்டவர்கள்

தேவனை விற்றுப்போட்டவர்கள்

லூக்கா 17:28.

லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும், ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கன், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லூக்கா 17:28.

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கர்த்தர் தாமே இந்த செய்தியின் மூலமாக உங்களோடு இடைபடுவாராக. நாம் வாழும் இந்த கடைசி காலத்தில் நம்பிக்கையற்ற மனிதனுடைய கட்டுப்பாட்டை இழந்த, ஊசலாடிக் கொண்டிருக்கிற இந்த உலகில், தேவனுடைய வார்த்தை  மாத்திரமே நமக்கு ஆறுதல். வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை என்று இயேசு சொன்னார். அப்படிச் சொன்ன இந்த வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து அதிலே நடக்க, நாம் செவி கொடுத்தால் நிச்சயமாக நாம் பிழைப்போம், வாழ்வோம். ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது பல போதனைகள், பிரசங்கங்களைச் செய்தார். நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை, இனி நடக்கப்போகின்ற, சம்பவிக்கப் போகின்ற காரியங்களை நமக்கு பிரசங்கித்தார். அப்படி பிரசங்கித்தப் போதனைகளில் ஒன்று தான் லோத்தின் நாட்கள். லோத்தின் நாட்கள் செல்வ செழிப்பாய் வாழ்ந்த நாட்கள். காரணம் அவன் ஆபிரகாமை விட்டு பிரிந்து போனபோது பொன் விளையும் பூமியையும், வசதி வாய்ப்பு உள்ள இடங்களையும் தெரிந்துகொண்டார். ஜனங்கள் சுகபோக பிரியர்களாய் வசதி வாய்ப்புகளை தங்களுக்கு என்று பெருக்கிக் கொண்டார்கள். உண்டார்கள், குடித்தார்கள், புசித்தார்கள், வாங்கினார்கள், விற்றார்கள், கட்டினார்கள். செல்வ செழிப்பாய் வாழ்ந்த நகரம் ஒரே நாளில் தேவனுடைய கோபத்திற்கு உள்ளாகி, பாவத்தின் கொடூரம் கட்டுப்படுத்த முடியாமல் போனபடியால் தேவகோபம் அவர்கள் மேல் இறங்கியது. நடந்தது என்ன? வானத்திலிருந்து கந்தகமும், நெருப்பும் இறங்கி அந்த சோதோம் கொமோரா பட்டணங்களை அழித்துப்போட்டது. மனிதனுடைய பல நாள், பல வருஷங்களின் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது. அதில் தப்பிய ஒரே ஒரு குடும்பம் லோத்துவும், அவனுடைய இரண்டு மகள்களும் தான். தன் மனைவியை கூட காப்பாற்ற முடியாமல் போனான். காரணம் உன் ஜீவன் தப்ப ஓடு திரும்பி பார்க்காதே என்று தேவன் எச்சரித்தார். ஆனால் லோத்தின் மனைவியோ அதை அசட்டைபண்ணி திரும்பிப் பார்த்து உப்பு தூணாய் மாறிவிட்டாள். தன் ஜீவனை இழந்து போனாள். 

இயேசு சொன்னார் லூக்கா 17:31-ல் அந்த நாளிலே வீட்டின் மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டு போக இறங்காமல் இருக்கக்கடவன், அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன் என்றார். இன்றைக்கு அதே அக்கினி கந்தகம் நிறைந்த உலகில் தான் நாம் வாழ்கிறோம். 2 பேதுரு 3:7-ல் இப்பொழுது இருக்கிற வானங்களும், பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. லோத்தின் நாட்களில் எச்சரிக்கப்பட்டது போலவே இன்றைக்கும் முழு உலகத்தையும் தேவன் எச்சரிóத்தும், தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி தேவனைத் தேடவும், அவருடைய இரக்கத்தை பெறவும் கட்டளையிடுகிறார். ஆனால் ஜனங்கள் கேட்கவோ, மனந்திரும்பவோ இல்லை. தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனம் திரும்பாமல் உண்ணவும், குடிக்கவும், சம்பாதிக்கவும், விற்கவும், வாங்கவும், என்ன படிக்கலாம், என்ன சம்பாதிக்கலாம் என்று இதிலே சிந்தனையாய் இருந்து அழிவின் ஆபத்தை உணராமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 2 இராஜா 5:26-ல் எலிசா தன் உடன் ஊழியக்காரன் கேயாசியைப் பார்த்து பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத்தோப்புகளையும், திராட்சத் தோட்டங்களையும் ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? என்றான்.

என் இருதயத்தில் இந்த செய்தியை எழுதும்படி தூண்டிய வார்த்தை இது தான். இது வாங்குகிறதற்கும், விற்கிறதற்கும் உண்டான காலம் அல்ல. உள்ளது போதும் அதாவது இருக்கிறதே போதும் என்று, நாம் உலகத்தின் மேல் கவனம் வைக்காமல் தேவனைப் பார்த்து ஓட நம்மை அர்ப்பணிக்க வேண்டும், வாழப்பழக வேண்டும். இதைத்தான் புதிய ஏற்பாட்டிலே யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட ஆயக்காரர், ஜனங்கள் மற்றும் போர் சேவகர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும், இந்த இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை அடைய, அநுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்றபோது லூக்கா 3:10 முதல் 15 முடிய உள்ள வசனத்தில் நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும், பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும் உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். காரணம் இனி உங்கள் காலம் குறுகியது. 1 கொரி 7:29 முதல் 31 வரை உள்ள வசனத்தில் இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே என்றார். ஆகவே இனியும் நாம் காலத்தை வீணடிக்காமல் தேவன் நமக்கு தந்த ஜீவனை, நம்மை உயிரோடே பிழைக்க வைத்த, வாழவைத்த ஆண்டவராகிய இயேசுவுக்காக வாழவும், ஜீவிக்கவும் நம்மை அர்ப்பணித்து, நம் ஜீவனை இரட்சிக்கவும், வரும் கோபாக்கினைக்கு நாம் தப்புவிக்கப்பட நமக்கு கிருபையாய் கொடுக்கப்பட்ட காலங்களையும், நேரங்களையும் சரியாய் பயன்படுத்தி, தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல், உள்ளது போதும் என்ற மனநிறைவோடு தேவனைப் பின்பற்றி, இது வாங்குகிறதற்கும் விற்கிறதற்கும் காலம் அல்ல என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். அதைத்தான் இயேசு லூக்கா 17:28-ல் லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் நடக்கும். ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள் நட்டார்கள், கட்டினார்கள் என்றார். இது விற்கிற காலம் அல்ல, வாங்குகிற காலமும் அல்ல. கடன்வாங்கி மாதம் மாதம் தவணை கட்டுவதற்காக இரவும், பகலும் உழைத்து, பிள்ளைகளை மறந்து, குடும்பத்தை மறந்து நாடு விட்டு நாடு போய் சரியான சாப்பாடு இல்லாமல் தங்கள் பெலத்தை வீணடித்து விசனப்படுகிற காலமும் அல்ல. ஒன்றும் இல்லாத இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் நாற்பது வருஷம் அற்புதமாய் வழி நடத்திய தேவன் உன்னை நடத்தப் போதுமானவராய் இருக்கிறார். அவர் உன் தேவைகளை சந்திப்பார். உனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார். அவர் உன்னை அற்புதமாய் நடத்துவார். ஆச்சரியமான காரியங்களைச் செய்வார். போகட்டும் எதையெல்லாம் ஜனங்கள் விற்றார்கள், யாரை எல்லாம் தேவன் விற்றுப்போட்டார், நாம் இன்றைக்கு எதை வாங்க வேண்டும் என்பதை பார்க்கப் போகிறோம்.

தேவன் ஜனங்களை விற்றுப்போட்டார்.

    அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில்  அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். நியாயதி 2:14. மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப் போட்டார். நியா 3:8, 4:2, 10:7-ல் பெலிஸ்தரின் கையில் விற்றுப் போட்டார். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிற போது அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார் 1 சாமு 12:9. மேற்சொன்ன வசனங்களில் எல்லாம் தேவகோபம் ஜனங்களின் மேல் வரும்போது எல்லாம், ஜனங்கள் தேவகோபத்திற்கு ஆளானபோது எல்லாம், தேவன் அவருடைய ஜனங்களை பகைஞரின் கையிலும், கொள்ளைக்காரர் கையிலும், பெலிஸ்தரின் கையிலும் உக்கிரமான ராஜாக்கள் கையிலும் விற்றுப்போட்டார். அவர்கள் ஜனங்களை அடிமைப்படுத்தி, நாடுகடத்தி, அவர்களுடைய உடமைகளை அபகரித்து, சித்தரவதை செய்து வேதனைப்படுத்தினார்கள். ஜனங்கள் எவ்வளவு சம்பாதித்தும், உழைத்தும் முன்னேற முடியாமல் கசக்கி பிழியப்பட்டார்கள். காரணம் ஜனங்கள் கர்த்தரைத் தேடாமல், அவர் நியமித்த வழிகளில் வாழாமல் முரட்டாட்டமாய், இருதயக்கடினத்தோடு உலகத்தை அநுபவிக்க வேண்டும், நாகரீகத்தை அனுபவிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு வாசல்களை, நகைகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று இரவும் பகலும் இம்மைக்குறியவைகளையே சிந்தித்து தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதனுக்கு ஏற்றவைகளையே சிந்தித்து, மாம்ச சிந்தையினாலே தேவனுக்கு பகைவராக, சத்துருவாக மாறிவிட்டார்கள். 

எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாக மாறிவிட்டார்கள். அதனால் தேவ கோபம் உண்டாகி தேவன் அவர்களை சீர்கேடுகளுக்கும், உலகத்தின் காரியங்களைச் செய்ய விற்றுப் போட்டார், மறந்துபோனார். அதனால் தான் இந்த ஜனங்கள் மேல் தேவகோபம் எழும்பி இருகóகிறது. யோவான் 3:36-ல் தேவனுடைய கோபம் அவர்கள் மேல் நிலை நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏன் வேசித்தனங்கள், ஏன் விபச்சாரங்கள், ஏன் குடிவெறிகள், ஏன் தாறுமாறான வாழ்க்கைகள் நீதிமொழி 22:14-ல் பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி, கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். அதினால் தான் அநேகர் வேசித்தனத்தில் விழுந்து தங்கள் சரீரங்களை, தேவனுடைய ஆலயத்தை, மகிமையின் ஆலயத்தை விற்றுப்போடுகிறார்கள். 

இன்றைக்கு அவர்களுடைய இருதயம், உள்ளம், சரீரம் கள்வர் குகையாக மாறி ஜெபிக்க முடியாமல், துதிக்க முடியாமல், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்க முடியாமல், தேவ சமூகத்திலிருந்து துரத்தப்பட்டு, ஆதாம் ஏவாளைப் போல் மகிமையை சாத்தானுக்கு விற்றுப் போட்டார்கள். சொல்லப்போனால் தேவன் மனிதர்களை விற்பதற்கு முன்னதாக ஜனங்கள் தங்களை சாத்தானுக்கு விற்றுப்போட்டார்கள், அடிமையானார்கள். இதனால் தான் உலகம் தேவகோபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கொடிய கொள்ளை நோய்களும், காட்டுத் தீக்களும், பூமி அதிர்ச்சிகளும் உண்டாயிருக்கிறது. இவ்வளவு நடந்தும், அடிவாங்கியும் யாரும் தங்களைத் தாழ்த்தி, தேவனை தேடுவதிலோ, பொல்லாத வழிகளை விடுவதிலோ ஆர்வம் இல்லை. அதினால் தேவன் துன்மார்க்கரின் கையிலும், கொள்ளைக்காரர்கள் கையிலும் அவர்களை விற்றுப்போட்டார். எங்கே உன் விஞ்ஞானம், எங்கே உன் அணுஆயுதம், எங்கே உன் படிப்பு மீண்டு வா பார்ப்போம். அவைகள் உன்னை தப்புவிக்குமா? பார்ப்போம் என்று காத்திருக்கிறார். இந்த நிலையில் யார் ஒருவர் தன்னைத்தாழ்த்தி தேவனைத்தேடி, அவர் இரக்கத்திற்காக கெஞ்சுகிறானோ அவன் மீட்கப்படுவான், திரும்ப நிலைநாட்டப்படுவான். இயேசு சொன்னார் மத்தேயு 13:44 முதல் 46-ல் அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் கண்டு மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். ஒருவன் விலையுயர்ந்த முத்தைக் கண்டு போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகிறான் என்றார். தனக்கு லாபமாய் இருந்த, தனக்கு வசதியாய், மேன்மையாய் இருந்த எல்லாவற்றையும், படிப்பு, அந்தஸ்து, வசதிவாய்ப்பு சொத்து, பதவி எல்லாவற்றையும்  அப்போஸ்தலனாகிய பவுல் நஷ்டமென்று எண்ணி ஒப்பற்ற செல்வமாகிய பொக்கிஷத்தை, இயேசுவை, விலையேறப் பெற்றவரை பின்பற்றினான். தனக்கு லாபமாயிருந்த அனைத்தையும் நஷ்டமென்று எண்ணினான். தனக்கு உண்டான ஆஸ்தி, ஐசுவரியம் எல்லாவற்றையும் விற்று இயேசுவை அவன் வாங்கிக்கொண்டான், சம்பாதித்தான், பொக்கிஷத்தைப் பெற்றுக்கொண்டான். இதைத்தான் ஆண்டவராகிய இயேசு அந்த பணக்கார வாலிபனுக்கு சொன்னார்,  மாற்கு 10:21,22 லூக்கா 18:22,23-ல் உனக்கு உண்டான எல்லா மேன்மைகளையும்,  வசதிவாய்ப்புகளையும் விட்டுவிட்டு, இழந்து பின்னிட்டுப் பார்க்காமல், உனக்கு லாபமாயிருந்த அனைத்தையும் எனக்காக விட்டுவிடுவாயா? என்றார். அவனோ முக வாட்டத்தோடே திரும்பிப் போய்விட்டான். காரணம் அவனுக்கு அவ்வளவு ஆஸ்தி, சொத்துக்கள் இருந்தது. அவன் அதை விட முடியவில்லை. தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று பரலோகராஜ்யத்தை சுதந்தரிக்க முடியவில்லை. தன்னை இந்த மாயைக்கும், இம்மைக்கும் விற்றுப்போட்டான். இன்றைக்கு நாம் தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும் பெற்றது உண்மையானால் நம்மை விற்று, இழந்து தேவனுடைய இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கப்பட்டு விடுவோம். இதை நிறைவேற்றச் செய்யத்தான் ஆண்டவராகிய இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்தார். நீங்கள் பணமுமின்றி விலையுமின்றி மீட்கப்படுவீர்கள் என்றார் ஏசாயா 55:1, 1 பேதுரு 1:18,19-ல் உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும், பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்றார். இன்றைக்கு மனம் திரும்பி உங்களை தாழ்த்தினால் மீட்கப்படுவீர்கள். தேவனுடைய இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கப்பெறுவீர்கள். பரலோகராஜ்யத்தின் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படுவீர்கள். நீங்கள் இழந்து போன, நீங்கள் விற்றுப்போட்ட சகல ஆசீர்வாதங்களையும் தேவன் உங்களுக்கு திரும்பக்கொடுத்து, உன்னிலும் பலத்தவனுடைய கைகளுக்கு உங்களை மீட்டுக் காத்துக்கொள்வார், தப்புவிப்பார். அடுத்ததாக ஜனங்கள் எதை, யாரை விற்றார்கள்? என்பதைப் பார்ப்போம்

  இயேசுவை விற்ற யூதாஸ்

நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். மத்தேயு 26:15. யோசேப்பை அவன் சகோதரர்கள், அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள், நமது கை அவன்மேல் படாதிருப்பதாக என்று சொல்லி. அவர்கள் யோசேப்பை அநóதக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். ஆதி 37:27,28. தேவன் ஜனங்களை விற்றுப்போட்டார் என்பதைப் பார்த்தோம். ஆனால் அவரால் உண்டாக்கப்பட்ட, சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் அவரையே விற்று, தொலைத்து விட்டார்கள். சிலர் தங்க நகைகளை ஆசைப்பட்டு வாங்கி, வீட்டிலே அதை குறித்து பெருமையாய் பேசிக்கொள்வார்கள். ஆனால் திடீரென பணத்தேவை வந்து அல்லது எதிர்பாராத செலவுகள் வந்தால் கொண்டு போய் அடகுக்கடையில் அடகு வைத்து விடுவார்கள். சில காலம் வட்டி கட்டுவார்கள். அதன் பிறகு அதையும் விட்டு விடுவார்கள். பிறகு என்ன ஆகும்? அது ஏலம் போய் விற்கப்பட்டு விடும். அதை இழந்ததுதான் மிச்சம். இன்றைக்கு அதைப்போல் சிலர் விலையேறப்பெற்ற இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள்,             பின்பற்றுகிறார்கள். பிரச்சனை, சோதனை என்று வந்தால், உலகம், பணஆசை என்று வந்தால் இயேசுவை மறந்து வேலை வேலை என்று ஓடி பணம் பணம் என்று அலைந்து தங்கள் வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றிக் கொள்ளுகிறார்கள். 

இப்படியாகத்தான் யூதாஸ் இருந்தான். உலகத்தின் பின்னால் ஓடின அவனை இயேசு தெரிந்து கொண்டு தம்மோடு இருக்கவும், பிசாசுகளை துரத்தவும், வியாதிகளை சுகமாக்கவும், தனக்குப்பின் அவருடைய ஊழியத்தை செய்யவும் ஏற்படுத்தினார். ஆனால் பணப்பிரியனாய் இருந்தான். அவன் கையில் இருந்த பணத்தை அடிக்கடி திருடிவிடுவான். அடிக்கடி ஆண்டவராகிய இயேசுவின் மேல் எரிச்சலடைந்து, முறுமுறுத்து குற்றம் கண்டுபிடிக்கிற ஆவியோடு அலைந்தான். முடிவு என்ன?, இயேசுவை பகைத்த யூதகுருக்களோடு சேர்ந்து கட்சிமாறி 30 வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஆடுமாடுகளையும் வாங்கி சுகபோகமாய் வாழலாம் என்று தன் மனச்சாட்சியை விற்றுப்போட்டான். 

பண ஆசைக்காக இயேசுவை காட்டிக்கொடுத்தான், விற்றுப்போட்டான். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. எவ்வளவோ கற்பனை பண்ணி உலகத்தில் ஐசுவரியவானாய் திகழலாம், முப்பது வெள்ளிக்காசு என்பது இன்றைக்கு 30 கோடிக்கு சமம். அதை வைத்து உலகத்தை அநுபவிக்கலாம் என்று நினைத்ததால் அவன் மனச்சாட்சியே அவனை வாதித்தது. தற்கொலை செய்யும்படி தூண்டிற்று. பரிசுத்தத்தை, கிருபையை, மகிமையை, வார்த்தையானவரை அவன் விற்றுப்போட்டான். உணவுக்காக, உடைக்காக, உலகத்தில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இயேசுவை விற்றுப்போட்டான். அதே போலத்தான் யாக்கோப்பின் பிள்ளைகள் பத்துபேர் யோசேப்பின் மேல் பொறாமை கொண்டு எங்கள் தகப்பன் எங்களை காட்டிலும் யோசேப்பை அதிகமாய் நேசிக்கிறார், அது மாத்திரமல்ல நாங்கள் செய்கிற சின்ன சின்ன தவறுகளைக் கூட தகப்பனிடத்தில் சொல்லி விடுகிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சொப்பனங்கண்டு சூரியனும், சந்திரனும் தன்னை வணங்கும் என்றும், நாங்கள் அவனுக்கு அடிமைகள் என்று சொல்லுகிறானே இவனை ஒரு வழி பண்ணவேண்டும் என்று இயேசுவைப் போல் யோசேப்பையும் அவர்கள் இஸ்மவேலருக்கு இருபது வெள்ளிக்காசுக்கு விற்றார்கள். யோசேப்பு கைமாறி அடிக்கடி மாற்றப்பட்டு விற்கப்பட்டான். 

உண்மையில் அவர்கள் விற்றது யோசேப்பை அல்ல. அவன் தேவனுக்கு பயப்படுகிறவன் என்ற தெய்வபயத்தை விற்றார்கள். போத்திபாரின் மனைவி தவறான உறவுக்கு அழைத்த போது தேவனுக்கு விரோதமாக நான் பாவம் செய்வது எப்படி என்ற சுபாவத்தை விற்றார்கள், கர்த்தர் தன்னோடு இருந்தால் எந்த ஒரு தவறையும் செய்ய முடியாது என்ற தேவ பிரசன்னத்தைத் தான் விற்றார்கள். இன்றைக்கு பாவத்திற்காக, மாயைக்காக தேவன் கொடுத்த மகிமை, கிருபை, நேரம், வாழóக்கை எல்லாம் விற்றுபோட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். 1 இராஜா 21:25-ல் தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாப்பைப் போல ஒருவனுமில்லை என்று வேதம் சொல்லுகிறது. 

இன்றைக்கு பொல்லாப்பு செய்ய துணிகரமாய் தாங்கள் சுயநலத்திற்காக தங்களை விற்றுப்போடுகிற ஜனங்கள் பூமியில் பெருகிவிட்டார்கள். அப்புறம் தேவகோபம் வராமல் என்ன வரும். அதனால்தான் தேசம் தண்டிக்கப்படுகிறது. அடுத்ததாக பாருங்கள் எபி 12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்  போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கை யாயிருங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தன் மூத்த உரிமையை, சேஷ்டபுத்திரத்தை உணவுக்காக விற்றுப்போட்டான். பிற்பாடு அது தவறு என்று கண்ணீரோடு கதறியும் மனம் மாறுதலை காணாமல் போனான். தேவனுடைய இராஜ்யம் என்பது உணவும், உடையும் அல்ல, அது நீதி, பரிசுத்த ஆவியினால் உண்டாகும் மகிழ்ச்சி. நாம் இயேசுவுக்கு பிள்ளைகளாகும்படிக்கு, அவர் நாமத்தின் மேல் விசுவாசம் வைத்த அத்தனை பேர்களுக்கும் பிள்ளைகளாகும் அதிகாரத்தை, உரிமையை கொடுத்திருக்கிறார் யோவான் 1;12-ல் சொல்லப்பட்டுள்ளது. மட்டுமல்ல நாம் அவரை அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்று ரோமர் 8;15-ல் சொல்லப்பட்டுள்ளது. 

நாம் அவருடைய பிள்ளைகள், அவருடைய பிள்ளைகளாய் வாழ இயேசு நமக்காக இரத்தம் சிந்தி நம்மை மீட்டு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். மட்டுமல்ல அவருடைய பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்பி, நிரப்பி அப்பா பிதாவே என்று உறவாடவும், அவரை கூப்பிடவும் அவருக்கு முதற்பேறானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நம்மை அழைத்திருக்கிறார். இதைத்தான் அவர் கெட்டக்குமாரனுடைய உவமையில் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த இளையமகனோ சொத்தை எல்லாம் திரட்டிக்கொண்டு, ஊதாரியாய் வாழ்ந்து, எல்லாவற்றையும் செலவழித்து, பிள்ளை என்ற அதிகாரத்தை இழந்து, அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற உரிமையை இழந்து, நாடோடியாய் அலைந்து, தேவசமூகத்தை இழந்து தவித்தான். 

ஆனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட தருணத்தை சரியாய் பயன்படுத்தி, புத்திதெளிந்து, தன் தகப்பனிடத்தில் திரும்பவும் வந்து, தன் பாவத்தை அறிக்கைச் செய்து, மீண்டும் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவ பிரசன்னத்தோடு இணைக்கப்பட்டு, விற்றுப்போட்ட, இழந்துபோன அந்த உறவை திரும்ப ஏற்படுத்திக் கொண்டான். இன்றைக்கு இப்படிப்பட்ட சரி செய்தலைத்தான், மனம் திரும்புதலைத்தான் தேவன் விரும்புகிறார், எதிர்பார்க்கிறார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியே இனியும் உங்களை பாவத்துக்கும், உலக மாயைக்கும் விற்றுப்போடாமல், நமக்குள் இருக்கும் இயேசுவை உலக இன்பத்திற்காக, பொல்லாப்பு செய்ய விற்றுப்போடாமல், அவரை பரிசுத்தம்பண்ணி, கனம்பண்ணி, விலையேறப் பெற்ற மகனாக, மகளாக வாழுவோம். இப்படிப்பட்ட வாழ்க்கைக்குத்தான், இந்த மேன்மையான வாழóக்கைக்குத்தான் கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை சத்தியத்தை வாங்குகிறவர்களாக, விற்கிறவர்களாக அல்ல தேவவசனத்தைப் பெற்றுக் கொள்கிறவர்களாக மாற்றுவாராக. அவருக்கு மகிமையாக வாழ உங்களை விலையேறப் பெற்றவர்களாக மாற்றுவாராக!.