Inspiration
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பான சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நம் வீட்டில் சின்னப்பிள்ளைகள் அதிகக் குறும்பு செய்து கொண்டிருக்கும் போது இருக்கும் இடத்தில் இருந்து பெரியவர்கள் சத்தம் போடாதே! குறும்பு செய்யாதே என்று அதட்டிக் கொண்டிருப்பார்கள், ஆனால் அங்கு எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலை நீடித்தால் திடீரென்று இருக்கும் இடத்தை விட்டு எழுந்திருப்பார்கள், இதைப் பார்த்து சிறுவர்கள் அடி விழப் போகிறது என்று பயந்து, குறும்புத்தனம் செய்யாமல் அமைதியாகி விடுவார்கள் அல்லது அடிக்குத் தப்ப இடத்தை விட்டு ஓடிப்போவார்கள. அதேபோல் தான் தாவீது சங்கீதம் 68:1-ல் தேவன் எழுந்தருள்வார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள் என்று சொல்கிறதை நாம் பார்க்கிறோம். பக்தனாகிய மோசேயும் எண் 10:35-ல் தேவனுடைய வார்த்தைகள் வைக்கப்பட்ட பெட்டியானது புறப்படும்போது கர்த்தாவே! எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக, உம்மை பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். அதைக்கேட்டு தேவன் எழுந்தருள்வார். அப்படியே சத்துருக்கள் சிதறுண்டு ஓடிப்போவார்கள். இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே உங்கள் வாழ்விலும் தேவன் எழுந்தருள்வார். இதுவரை உங்களை முன்னேறவிடாமல் இடைமறித்து கொண்டிருந்த எல்லா சத்துருக்களும் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள், உங்களை பாழாக்கின அத்தனை சத்துருக்களும் அவருக்கு முன்பாக அழிந்து போகுவார், எதற்காக தேவன் எழுந்தருள்வார், அதற்கு யார் யார் என்ன செய்தார்கள், நாமும் என்ன செய்ய வேண்டும் என்பதை வேதத்திலிருந்து தெரிந்து கொள்வோமா?
எதற்காக எழுந்தருள்கிறார்
மோசே மரிக்கிறதற்கு முன்பு அவன் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த போது உபா 33:2-ல் கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார். பாரான் மலையிலிருந்து பிரகாசித்து பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார், அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது என்று, அவர் சீனாய் மலையில் எழுந்தருளி தம் ஜனத்திற்காக அக்கினிமயமான பிரமாணத்தை அவருடைய வலது கரத்தினால் எழுதிக்கொடுத்தார். அது அவர் கரத்திலிருந்து புறப்பட்டது என்கிறார். இன்னும் இந்த பிரமாணத்தை ஜனங்களோடே சொல்கிறபோது பயங்கரமான இடி முழக்கங்களை மின்னல்களை, எக்காள சத்தத்தை, மலை புகைகிறதை கண்ட ஜனங்கள், பின்வாங்கி தூரத்தில் நின்று மோசேயை நோக்கி நீர் எங்களோடே பேசும் நாங்கள் கேட்போம் தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக பேசினால் நாங்கள் செத்துப் போவோம் என்றார்கள். யாத் 20:20-ல் மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள் உங்களை சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு தம்மை பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும் தேவன் எழுந்தருளினார் என்றார். தேவன் எழுந்தருளின போது அக்கினமயமான பிரமாணம் நமக்கு தரப்பட்டது. நாம் பாவம் செய்யாதபடி அவரைப் பற்றின பயம் நமக்கு உண்டாகிறது. இந்நாட்களிலும் இந்த பிரமாணத்தை தேவன் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். நாம் இதைக் காணும் போது எதை செய்யக்கூடாது எதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்டாகிறதல்லவா. ஆபிரகாம் வாழ்க்கையில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கு பிறப்பதற்கு முன்பு மனைவி சாராளின் அனுமதியோடும், ஆலோசனையோடும் இஸ்மவேலைப் பெற்றான். வருஷங்கள் கடந்தது ஆண்டவர் சாராளை ஆசீர்வதித்து ஈசாக்கை கொடுப்பேன் என்றதும் இஸ்மவேலின் நிலை என்ன ஆகும் அவசரப்பட்டு விட்டேனே என்று கலங்கும் போது ஆண்டவர் அவனோடே பேசி இஸ்மவேலுக்காக நீ பண்ணின உன் விண்ணப்பத்தையும் கேட்டேன் அவனையும் ஆசீர்வதித்து பெரிய ஜாதியாக்குவேன். சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்று ஆதி 17:22-ல் தேவன் ஆபிரகாமோடே பேசி முடித்த பின்பு அவர் அவனை விட்டு எழுந்தருளினார். இன்றைக்கும் நம்மோடு பேசும்படி தேவன் எழுந்தருள்கிறார். நாம் கடந்து வருகிற பாதை எவ்வளவு கடினமானதாய் இருந்தாலும், இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக என்று ஆபிரகாமின் கதறல் ஆண்டவர் செவிகளில் ஏறியது அல்லவா. அது போல தேவன் நம்மோடும் பேசி எந்த இக்கட்டிலும் நம்மையும் நடத்துவார். ஆதி 35:13-ல் கூட தேவன் யாக்கோபோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனை விட்டு எழுந்தருளிப்போனார் என்று இருக்கிறது. இரவெல்லாம் ஆண்டவரோடு போராடி தான் யார் என்ற உண்மையை ஆண்டவரிடம் ஒத்துக்கொண்டு, யாக்கோபு இஸ்ரவேலாய் ஆசீர்வதிக்கப்பட்டான். 9ம் வசனம் தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி அவனை ஆசீர்வதித்து பலுகிப்பெருகி பற்பல ஜாதிகளும், இராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள், உனக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்று பேசி அவனை விட்டு எழுந்தருளி போனார். நம்மோடும் மறுபடியும் பேசுவார். நம் முற்பிதாக்களோடே பேசி அவர்களை வழி நடத்தின தேவன் நம்மோடும் பேச எழுந்தருள்கிறார். நம் மீது கண்னை வைத்து ஆலோசனை சொல்லி நடத்துகிறார் அதற்காக எழுந்தருள்கிறார்.
கர்த்தாவே எழுந்தருளும்
மோசே பிரமாணங்களைப் பெற்றான் என்றால் சாதாரணமாக அல்ல அவன் ஜெபிக்கிறவனாய் இருந்தான் யாத் 34:9-ல் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும். இந்த ஜனங்கள வணங்காக்கழுத்துள்ளவர்கள், நீரோ, எங்கள் அக்கிரமத்தையும், எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்று ஜெபித்தான். தனக்காக மாத்திரம் அல்ல தன்னோடு கூட இருக்கும், தம் ஜனத்தின் பாவத்தை ஆண்டவர் மன்னித்து அவர்களையும் ஆண்டவர் தம் சுதந்தரமாக, பிள்ளையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடினான். உபா 33:16-ல் யோசேப்பை ஆசீர்வதித்து முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும் தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின் மேலும் வருவதாக என்று கூறினான். கொலைகாரனாய் ஓடிப்போன தன்னை முட்செடியில் தோன்றி தயை செய்த தேவன் என்று நினைவு கூறுகிறான். சங் 9:19-ல் தாவீது எதிரிகள் போராட்டத்தின் நடுவில் எழுந்தருளும் கர்த்தாவே! மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும் என்று ஜெபிக்கிறான். மனிதர்களை அல்ல நான் உம்மை நம்பியிருக்கிறேன். மனுஷன் பெலன் கொள்ளவிடாதேயும் என்கிறான் 2நாளா 6:41-ல் சாலமோன் கர்த்தருக்கு ஒரு ஆலயத்தை கட்டி விட்டு தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும் என்று தேவ ஆலயத்தில் அவர் பிரசன்னம் வரவேண்டும் என்று ஜெபிக்கிறான். சங்கீதம் 74:3-ல் ஆசாப் என்னும் சங்கீதக்காரன் நெடுங்காலமாக பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும், பரிசுத்தஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான் என்று ஜெபிக்கிறான். சங் 44:23,26-ல் தாவீது ஆண்டவரே, விழித்துக்கொள்ளும் ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும் எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும். எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும், உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும் என்று தன்னுடைய இக்கட்டுகளை சொல்லி, இவைகளில் தேவன் எழுந்தருள ஜெபித்தான். சீஷர்கள் கூட படகில் பிரயாணமாய் போகையில் சுழல் காற்று வீசியதால் அவர்கள் மோசமடையத்தக்கதாய் படகு தண்ணீரினால் நிறைந்த போது லூக்கா 8:24-ல் இயேசுவிடம் வந்து ஐயரே! ஐயரே மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள், அவர் பிண்ணனியத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், அவர் எழுந்து காற்றையும், ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே அவைகள் நின்று போய் அமைதலுண்டாயிற்று. அவர்கள் ஜெபங்களை எல்லாம் கேட்டு அவர்கள் இக்கட்டுகளை மாற்றி அமைதல் உண்டாக செய்த தேவன் உங்களுக்கும் இரங்கி, அது பரிசுத்தமாக்குதலோ, பாடுகளை மாற்றுவதோ, பாழாய் இருப்பதை சீர்படுத்துவதோ, தமது பிரசன்னத்தை ஆலயத்தில் இறங்கச் செய்வதோ, புயல் காற்றை ஓயப் பண்ணுவதோ எதுவானாலும் தேவன் எழுந்தருள்வார். கர்த்தாவே எழுந்தருளும் என்று ஜெபிக்கிற நம் வாழ்வில் அவர் எழுந்தருளி நன்மை செய்வார்.
இப்பொழுது எழுந்தருளுவேன்
எழுந்தருளும் கர்த்தாவே! ஏவ்வளவு காலம் நான் இந்தப் பாதையில் போவேன், எப்போது எனக்கு இரங்கி நன்மை செய்யப் போகிறீர் என்று கலங்குகிற நம்மை பார்த்து தான் ஏசா 33:10-ல் இப்பொழுது எழுந்தருள்வேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப் படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். பார்வோனின் சேனை துரத்தி வரும் போது செங்கடல் முன்னால் செல்லும் போது வேறு வழியே இல்லை கர்த்தாவே என்று கூப்பிட்ட அல்லது பயத்தினால் செய்வதறியாது திகைத்த தம் ஜனத்துக்காக தேவன் இப்போது எழுந்தருளுவேன், உயருவேன், மேன்மைப்படுவேன் என்று செயல்படவில்லையா? உங்களது இந்த இக்கட்டிலும் அவர் எழுந்தருள்வார். பிரமிக்கத்தக்க அதியங்களை அவர் செய்வார் சங் 102:13-ல் தேவரீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது இதுவரை சத்துரு பலவிதங்களில் ஒடுக்கியிருக்கலாம், வீட்டின் மேல் தனித்திருக்கும் குருவியைப் போல நீங்கள் என்ன நடக்கப் போகிறதோ! எனக்கு யார் உண்டு நாதா! என்று கதறியிருக்கலாம். அந்த குரலைக் கேட்டு தேவன் எழுந்தருளி சீயோனாகிய நமக்குத் தயை செய்யப் போகிறார். அந்த காலமும், குறித்த நேரமும் வந்தது, இப்பொழுது எழுந்தருள்வேன் என்று நமக்காக எழுந்தருள்வார். ஒருவேளை ஆண்டவரை நாம் நம்பாமல், நினையாமல் மறந்து போய் இஷ்டம் போல் வாழ்ந்த வாழ்வின் நிமித்தம் இந்தப் பாடு வந்திருக்கிறதோ என்று நீங்கள் நினைக்கலாம். சங் 78-ல் நாம் வாசிக்கும் போது, இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்வு அப்படி இருந்ததின் நிமித்தம் ஆண்டவர் பல சிட்சைகள் வழியாய் நடத்தினார். ஆனால் சங் 78:65-ல் அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவர் போலவும் திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப் போலவும் விழித்து தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்தார். நித்திரை தெளிந்தவர் போல இப்பொழுது எழுந்தருள்வேன் என்று எழும்புவார். நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடாமல் காப்பாற்றுவார். அதற்குத்தான் தேவன் எழுந்தருள்கிறார். அவர் எழுந்தருளி நமக்கு தயை செய்யும் நேரத்தில், குறித்த காலத்தில் நாம் வந்திருக்கிறோம். தேவன் எழுந்தருளி நமக்கு இரங்குவார். தண்டனையும், அழிவும் நியமிக்கபட்டு விட்ட சூழ்நிலையில் எஸ்தர் ராஜ சமூகத்தில் தன் எதிராளியை பற்றி முறையிடும் போது ராஜா எழுந்தருளினது போல, துஷ்ட ஆமானை அழித்து, தம் ஜனத்தை கெம்பீரிக்கப் பண்ணினது போல தேவன் எழுந்தருளுவார். சத்துருக்களை சிதறடித்து ஜெயம் கொடுப்பார் எனவே மனம் கலங்காதிருங்கள், ஆண்டவரை பகைக்கிறவர்கள், நமக்கு விரோதமாய் எழும்பின சத்துருவை சிதறிப்போக பண்ணுவார் என் ஆண்டவர் தாமே இதை வாசிக்கிற ஒவ்வொருவர் வாழ்விலும் பெரியவராய் எழுந்தருளி ஜெயங்கொடுப்பாராக!
By Sis. Kala VincentRaj