Inspiration

உங்களுக்கான கர்த்தரின் திட்டம்.

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறை வேற்றுவார். யோபு 23:14

கிறிஸ்துவின் அன்பான வாலிபத்தம்பி தங்கைகளே, நாம் நினைக்கிறதற்கும், வேண்டிக் கொள்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்யும் வல்லவராகிய (எபே 3:20) நம் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கல்லூரியிலிருந்து போனதுக்கப்புறம் என்ன செய்யப்போகிறாய்? என்று ஐடாவிடம் தோழிகள் கேட்டபோது அவள் திரும்பத் திரும்ப சொன்ன பதில், அம்மா அப்பா மாதிரி இந்தியாவில் மிஷினெரியா ஊழியம் செய்யனும்னு ஆசை எனக்கில்லை. நிச்சயமாக அது நடக்காது. நெவர்.. நெவர்… நெவர்.. என்றாள். தீடீரென்று அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தந்தி வந்த காரணத்தினால் அம்மாவுக்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மிகுந்த உதவியாக இருந்தாள். ஒருநாள் உயர்குல பிராமணர் ஒருவர் கண்ணீரோடு ஓடோடி வந்தார். என் மனைவி 14 வயது தான், பிரசவ வலியில் தவிக்கிற அவளை காப்பாத்த மருத்துவச்சியால் முடியல, நீங்க அமெரிக்காவிலிருந்து வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம். எப்படியாவது நீங்க வந்து என் மனைவியைக் காப்பாத்துங்க அம்மா என்றார். சாரிங்க எங்க அப்பாதான் டாக்டர் நானில்லை. அதனால் அவர்தான் உதவி செய்யமுடியும் என்றாள் . என்னது உங்க அப்பாவா? ஒரு ஆம்பளையான அவரை கூட்டிட்டு போகக்கூடாது அபிஷ்டம் அவ செத்தாலும் சாகறா என்று வேதனையோடு சென்றார். அதே நாளில் மேலும் இருவர் இதே மாதிரி வந்து திரும்பிச் சென்றனர். ஐடா அப்பாவிடம் என்ன டேடி இப்படி? ஏன்? என்றாள். இங்குள்ள சம்பிராதாயம், ஜாதி மத சட்டம் அந்த மாதிரி, அத மீறி யாரும் ஒன்னுஞ்செய்ய முடியாது. அதனால இதை மறந்துரு என்றார். எப்படி இத மறக்கமுடியும் என்றாள் ஐடா. பிரச்சனைக்கான தீர்வை உன்னால் கொடுக்க முடியலன்னா, நீ செய்ய வேண்டிய நல்ல காரியத்தை செய்ய முடியலைன்னா மறந்திட வேண்டியது தான். இதுதான் நான் இங்க வந்து கத்துக்கிட்ட பாடம் என்று அப்பா பொறுமையாகத் தன் அனுபவத்தைக் கூறினார். உன்னால் ஒன்னும் செய்ய முடியாதா? மனச்சாட்சி ஐடாவிடம் பேசினது. நோ நோ நோ.. என்னால் முடியாது என்றாள் ஐடா. ஐடா உனக்கு புரியலையா? ஆண்டவராகிய நான் தான் உன்னிடம் கேட்கிறேன். அந்த இரவு முழுவதும் ஆண்டவரின் அழைப்போடு, தனக்கென்று அவள் வகுத்திருந்த பாதையோடும் போராட்டம்தான். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் ஒரு பணியாளை அனுப்பி அந்த பெண்களின் நிலைமையை விசாரித்து வரச் சொன்னாள். அந்த மூன்று பெண்களும் மரித்துப் போன செய்தியைக் கேட்டு பல மணி நேரம் அழுதாள். அதன்பின் ஒரு தீர்மானத்தோடு அவள் அம்மா, அப்பாவின் அறைக்குச் சென்று நான் அமெரிக்கா சென்று டாக்டருக்குப் படிக்கப் போகிறேன். பின்பு இங்கு வந்து இங்குள்ள பெண்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்றாள். அமெரிக்கா சென்றவள் டாக்டர் பட்டம் பெற்று, பணத்தையும் திரட்டிக் கொண்டு தன் தோழியுடன் வந்தாள். அவளது அயராத உழைப்பு தியாகம், கரிசனை, ஆண்டவர் மீது கொண்ட அன்பு இவற்றால் உருவானது தான் உலகின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான வேலூர் சி.எம்.சி மருத்துவமனை. டாக்டர்.ஐடா ஸ்கடரின் அயராதப் பணியை காந்தியடிகள் நேரில் பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இவர் நினைவாக இந்தியா தபால்தலை வெளியிட்டுள்ளது. ஐடாவுக்கு டாக்டராக விருப்பமுமில்லை, அவளின் பெற்றோர் டாக்டராக கட்டாயப்படுத்தவோ, வழிகாட்டவோ இல்லை. ஆனால் கர்த்தரின் சித்தம் அதுவாகவேயிருந்தது. அதற்கு அவள் தன்னை ஒப்புக்கொடுத்ததைப்போல நீங்களும் உங்களுக்கென்று ஒரு ஹண்ம், ஹம்க்ஷண்ற்ண்ர்ய், ஞ்ர்ஹப் வைத்திருக்கலாம் அல்லது உங்கள் பெற்றோர் உங்களை டாக்டராக்கிப் பார்க்கனும், அதுமட்டுமல்ல நம் குடும்பத்தில ஒருத்தர் இன்ஜினியராகனும்… ஒருத்தர் டீச்சராகனும் என்ற விருப்பமுடையவர்களாயிருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக உங்களைப் படைத்த ஆண்டவர் உங்களுக்கென்று ஒரு திட்டம் வகுத்துள்ளார். அது உங்கள் வாழ்வில் நிறைவேற நீங்கள் விரும்பி அதை செய்ய முயற்சி மட்டும் செய்யுங்கள். மீதமெல்லாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார். கர்த்தரின் திட்டம் உங்கள் வாழ்வில் நிறைவேறும் போது அவர் மகிழ்ச்சியடைவார். மகிமையடைவார். உங்களையும் ஆசீர்வதித்து உங்கள் எதிர்காலத்தை நீங்கள், உங்கள் பெற்றோர் நினைத்ததைவிட உயர்வுள்ளதாய், பிரகாசமுள்ளதாய் ஆக்குவார். அதற்கு உங்கள் தியாகம், உழைப்பு, ஆண்டவர் மீது அன்பு அவசியம்.

தாவீதின் சகோதரர்களெல்லாரும் இராணுவத்திலிருக்கிறார்கள். தாவீதுக்கும் இராணுவம் செல்ல ஆசை இருந்திருக்கும் போல…. ஆனால் அவனை தகப்பன் வனாந்திரத்தில் ஆடு மேய்க்கும்படியாக அனுப்பிவைத்திருந்தார். ஒருமுறை சகோதரர்களுக்கு உணவு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் யுத்தம் நடக்கும் இடமல்லவா என்று கூட பயப்படாமல் ஆசையோடு அந்த வேலையை செய்ய ஓடி வந்தார். தாவீதின் விருப்பத்தை விட ஆண்டவரின் திட்டம் இன்னும் மேலானதாய், உயர்வானதாயிருந்தது. ஆடு மேய்த்தவனை ஆண்டவர் அரசனாக்கினார். பெரிய, பெரிய சவால்கள் அனைத்தையும் சந்தித்து வெற்றி பெற்றார் தாவீது. (1சாமுவேல் 16,17 அதிகாரங்கள்) எஸ்தரைப் பாருங்கள்! தாயுமில்லை, தந்தையுமில்லை. தன் பெரியப்பா மகன் தன்னை வளர்த்த போது அவள் என்ன படித்திருந்தாளோ? இல்லையோ தெரியவில்லை அரசியாக வேண்டும் என்ற எண்ணம் கூட அவள் நினைவில் வந்திருக்காது ஏனென்றால் அவள் ஒரு யூதப்பெண். ஆனால் பெர்சிய அரசன் அகாஸ்வேருக்காக, பெண் தேடி அழகிய பெண்களை அவன் அழைத்து வரச்சொல்லும் போது எஸ்தரும் கட்டாயமாக அங்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவள் வளர்ப்புத் தந்தை மொர்தெகாய் அதற்கு மறுப்புச்சொல்லவில்லை, அவளை அரசனிடமிருந்து மீட்டு வரவும் அவரால் முடியாவில்லை. உன் குலத்தை, பூர்வத்தை மட்டும் அறிவிக்காதே என்று சொல்லியனுப்புகிறார். யூத குலம் என்று தெரிந்தால் அவளால் அரசியாக முடியாமல் போய் விடுமோ என்ற பயம் ஒரு புறம், இவளுக்கு அந்த ராஜமேன்மை கிடைத்தால் சிறுபான்மை ஜனமான நமக்குப் பாதுகாப்பு கிடைக்குமே என்ற ஆசை மறுபுறம். எனவேதான் மொர்தெகாய் அப்படி கூறினார். ஏகப்பட்ட போட்டிகளின் நடுவிலே எஸ்தரை அரசன் அரசியாகத் தெரிந்தெடுத்தான். இதற்கும் மேலாக தேவனின் திட்டமும் அதுவாகவே இருந்தது. யூதர்களைக் காப்பாற்றும் ஒரு பெரிய பொறுப்பை தேவன் அவளுக்குக் கொடுத்திருந்தார். எஸ்தரும் அதை நிறைவேற்றி தேவனை மகிமைப்படுத்தினாள். இதை வாசிக்கிற உங்கள் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்பட வேண்டுமா? தாவீதைப் போல ஆண்டவரை நம்பி, தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து கஷ்டங்கள், இடைஞ்சல்களை பொறுமையாய் கடந்து செல்லுங்கள். மொர்தெகாய் சொல் தட்டாத எஸ்தரைப் போல நீங்களும் ஆண்டவருடைய வார்த்தை, பெற்றோர், பெரியோரின் ஆலோசனைப்படி நடக்கும் போது அழகு, பணம் அல்ல, உங்கள் கீழ்ப்படிதலும், பரிசுத்தமும் அங்கீகரிக்கப்பட்டு உங்களுக்கு உயர்வைக் கொண்டுவரும். அநேக உயிர்களை காப்பாற்றும். ஒருவேளை உங்களுக்கு பணமோ, அழகோ, அறிவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பத்துக்காக, சமுதாயத்துக்காக, ஆண்டவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதல்லவா?. பேதையை ஞானியாக்குகிற, தாழ்ந்தோரை உயர்த்துகிற ஆண்டவரை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளும்போது அவர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். படிப்போ, வேலையோ, திருமணமோ எதிலும் அவரால், அவரால் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும். சாத்தான் தேவதிட்டம் உங்களில் நிறை வேறக்கூடாது என்பதற்காக பல தடைகளை, இச்சைகளை, சோர்வுகளை கொண்டு வந்தாலும் ஒத்தாசை தரும் பர்வதமாகிய இயேசுவை நோக்கி நீங்கள் தொடர்ந்து பார்க்கும்போது நீங்கள் தோற்றுப் போவதில்லை நிச்சயம் வெற்றிப்பாதையில் செல்வீர்கள். எனவே நம்பிக்கையாயிருங்கள். “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா 55:9) என்று மனதார ஆசீர்வதித்து உயர்த்தும் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

Youth Special - Sis. Prema David