Inspiration

வழியருகே வாழ்ந்தவர்கள்

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாம் இந்த உலகத்தில் இயேசுவுக்காக, கிறிஸ்துவுக்காக வாழ்கிற வாழóக்கை விலையேறப்பெற்றது. தேவன் இந்த பூமியில் மேன்மையான வாழ்க்கைக்கும், உன்னதமான வாழ்க்கைக்கும் தான் நம்மை அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டிய நாம் இன்றைக்கு எந்த ஒரு முன்னேற்றமும், வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே இருக்கிறோம், இன்றைக்குக் காரியம் நடந்தால் போதும், தேவைகள் சந்திக்கப்பட்டால் போதும் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். தேவன் நம்மை அவரோடு வாழவும், அவருக்குப் பிள்ளைகளாய் இருக்கவும், லூக்கா 15:31-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தையின்படி மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கும் என்ற வாழ்க்கைக்கு தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நாம் அதை சுதந்தரித்து, அவர் ஏற்படுத்திய ஆசீர்வாதத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக இன்னும் பரதேசிகளும், பிச்சைக்காரர்களுமாய் இருந்து அவருடைய வாக்குத்தத்தங்களுக்கும், ஆசீர்வதங்களுக்கும் அந்நியராயிருந்து அதை அனுபவிக்க முடியாமல் வெறுமையோடும், வேதனையோடும் இருக்கிறோம். இப்படியாகத்தான் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைத்தனமாய், வெறுமையாய் எவ்வளவு வேலை பார்த்தும் கூலி இல்லாமல், அடிமைத்தன வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் வழியருகே உள்ள மரம்போல போவார், வருவார் எல்லாரும் கல்லெறிந்து பாதிக்கப்பட்டு கனி கொடாத மரம்போல் இருந்தார்கள். இப்படி வழியருகே வாழ்ந்தவர்களை தோட்டத்தில் நாட்டவும், கொத்தி எருப்போடவும் ஆண்டவராகிய தேவன் அவர்களை நிலைநாட்டச் சித்தங்கொண்டார். இந்த வழியருகே உள்ள வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதற்கு முடிவு கட்டவும் தேவன் திருவுளம் கொண்டார். இதைத்தான் அப்போஸ்தலர் 3-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். 2 முதல் 7 வரையுள்ள வசனங்களில் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்து கொண்டு வந்து தேவாலயத்திலே பிரவேசிக்கிற, வருவோர், போவோர் எல்லாரிடமும் பிச்சை கேட்கும்படி நாடோறும் அலங்கார வாசலண்டையில் வைத்தார்கள். அவனுடைய வேலை தேவாலயத்திற்குச் சென்று தேவனை ஆராதிப்பதோ அல்லது தொழுதுகொள்வதோ அல்ல வாசல் அருகில், வழியருகே உட்கார்ந்து பிச்சை எடுப்பதும், பிச்சை கேட்பதும், அதைக் கொண்டு போய் தன் வீட்டிலே கொடுத்தால் தான் அவனுக்கு சாப்பாடும், தண்ணீரும், தங்க இடமும் உண்டு. இல்லை என்றால் அவன் நிலை பரிதாபம், ஒன்றும் கிடைக்காது. இதற்காகவே அவனை கடைத்தெருவிலோ அல்லது ஜனங்கள் கூடுகிற திருவிழாவிலோ கொண்டுப்போய் வைக்காமல் ஆலயத்தில் வாசலண்டையில், வழியருகே வைத்து உள்ளே போகிறவர்கள் கொஞ்சம் இரக்கப்பட்டு உதவி செய்து ஆதரிப்பார்கள், அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று தான் அங்கே கொண்டுப் போய் வைத்தார்கள். நடந்தது என்ன வழியருகே அமர்ந்து பிச்சை கேட்ட அவனைப் பேதுருவும், யோவானும் கண்டு அவனை உற்று நோக்கி இங்கே பார் வெள்ளியோ, பொன்னோ பணமோ, எங்களிடத்தில் இல்லை என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன் நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று சொல்லி வலது கையினால் அவனைப் படித்து தூக்கி விட்டார்கள். ஏறக்குறைய 40 வயது நிரம்பிய அவனது 40 வருட வழியருகே அமர்ந்திருந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அப் 4:22-ல் அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷனுக்கு வயது நாற்பது என்று வேதம் சொல்லுகிறது. நாற்பது வருஷம் பிச்சைவாழ்வுக்கு, வழியருகே வாழ்ந்த வாழ்க்கைக்கு, பிறர் உதவியை எதிர்பார்த்து, மற்றவர்களை சார்ந்தே வாழ்க்கை நடத்தின அவனுக்கு, வழியருகே வெயிலும், பனியும், குளிரும் நிறைந்த அந்த வாழ்க்கைக்கு, சில சமயங்களில் அவனை தூக்கி வந்தவர்கள் இறக்கி வைக்கும் போது எத்தனையோ முறை தவறுதலாய் கீழே சாய்த்து அதனால் பல பாதிப்புகள், காயங்கள் உண்டாயிருக்கலாம். அவன் நினைத்த நேரத்தில் வர முடியாமல், சில சமயம் ஆலய ஆராதனை எல்லாம் முடிந்து, எல்லாரும் போன பின்பு அவனை அங்கே உட்கார வைத்தால் என்ன வருமானம் கிடைக்கும் யார் பிச்சை போடுவார்கள். இப்படி பல சங்கடங்களை அனுபவித்திருப்பான். இப்படிப்பட்ட எல்லா வாழ்க்கைக்கும், நிலையற்ற வாழ்க்கைக்கும் தேவன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். வழியருகே உள்ள அவனைத் தேவாலயத்திற்குள்ளே போகும்படியாகவும், தேவனைத் தொழுது கொள்ளும்படியாகவும், ஆராதிக்கும்படியாகவும், வெளியே இருந்த வாழ்க்கையை உள்ளே அதாவது கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார்கள். வேதம் சொல்லுகிறது ஆதி 24:31-ல் அப்பொழுது அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும், நீர் வெளியே நிற்பானேன்? என்று ஈசாக்குக்கு பெண் பார்க்க ஆபிரகாம் எலியேசரை அனுப்பும் போது பெத்துவேல் சொன்னது போல, இதுவரை சப்பாணியாய், பிச்சைக்காரனாய், வழியருகே வாசலிலே வாழ்ந்தவனுக்கு இப்பொழுது ராஜ மேன்மையும், உயர்வும் ஒரே நாளில் வந்தது. இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று பேதுருவும், யோவானும் சொன்ன போது அவன் எழுந்து, துள்ளி குதித்து தேவனை மகிமைப்படுத்தி, தேவனைத் துதித்துக்கொண்டே அவர்களுடனே தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அப் 4:8-ல் அப்படிச் சொலலுகிறது. அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும் ஜனங்கள் எல்லாரும் கண்டு ஆச்சரியப்பட்டுத் தேவனை மகிமைப்படுத்தினார்கள். நாற்பது வருட பிச்சைக்கார வாழ்க்கைக்கு, வழியருகே வாசலில் காத்திருந்த வாழ்க்கைக்கு, ஒரே நாளில், ஒரே நிமிடத்தில் கனி கொடுக்கிற வாழ்க்கையாக, தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்ட மரமாக மாறியது. சங் 92:13-ல் கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள், எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள். இதுவரை தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்படாமல் பரதேசியாய், திக்கற்றவனாய் இருந்த அவனை, வழியருகே வாழ்ந்த அவனை ஆலயத்திற்கு உள்ளே தேவமகிமையிலே, தேவபிரசன்னத்திலே கொண்டுபோய் சேர்த்தார்கள். இன்றைக்கு யார் யார் எல்லாம் இந்த செய்தியை வாசித்து தன் வாழ்க்கையைத் தேவனுக்கு அர்ப்பணித்து, இதுவரை வழியருகே, தேவாலயத்திற்கு வெளியே, தேவ பிரசன்னத்திற்கு வெளியே வாழ்ந்து, என் வாழ்க்கையை நானே வீணடித்து, பிச்சைக்காரனைப் போல தேவனுடைய ராஜ்யத்தில் அந்நியனைப் போல வாழ்ந்து கொண்டு வந்தேன், என்னை மன்னிக்க வேண்டும் தேவனே, எனக்கு இரங்கும் என்கிறார்களோ அத்தனை பேருக்கும் தேவன் இரக்கம் காட்ட, தயவு காட்ட இன்றைக்கும் இரக்கமுள்ளவராக இருக்கிறார். இயேசு சொன்னார் யோவான் 10:16-ல் இந்த தொழுவத்திலுள்ளவைகளல்லாமல், வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும், கூட்டிச்சேர்க்க வேண்டும். தேவாலயத்திற்கு வெளியே தேவனை விட்டு, அவருடைய பிரசன்னத்தை விட்டு எத்தனை பேர் வாழ்கிறார்களோ அத்தனை பேரும் உள்ளே வரவும், நிலைநாட்டப்படவும், அவர் அலைச்சலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கவும் தேவன் கிருபையுள்ளவராக இருக்கிறார். 2 சாமு 7:10-ல் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன் போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் நியாயதிபதிகளைக் கட்டளையிட்ட நாள் வரையில் நடந்ததுபோலும் நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன் என்றார். நட்டு வைத்தேன் இனி அவர்கள் அலையாமல், பிச்சை எடுக்காமல், பணப் பற்றாக்குறையோடு வாழாமல், வழியருகே உள்ளவர்களாய் ஜீவிக்காமல் அவர்களை என் தொழுவத்திற்குள் கொண்டு வருவேன், பலனற்ற வாழ்க்கைக்கு, கனியில்லாத வாழ்க்கைக்கு, பிச்சை எடுக்கிற வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார். இனி தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்களாக, கனி கொடுக்கிறவர்களாக மாற்றி, உலர்ந்து போன, பட்டுப் போன வாழ்க்கையை தேவன் சரி செய்வார். இனி வழியருகே இருந்து விசாரிப்பற்ற மரமாக இல்லாமல், தானியமும், திராட்சைரசமும், களஞ்சியமும் நிரம்பி இருக்கும்படி தேவன் செய்வார். போகட்டும் யார் யார் எப்படி எல்லாம் வழியருகே இருந்து வாழ்ந்து, என்ன தோல்வி, வேதனை அனுபவித்தார்கள், தேவன் அவர்களை எப்படி மாற்றினார் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

 வழியருகே இருந்த அத்திமரம்

அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற்குப் போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல் இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார். உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று மத் 21:19. இயேசுவின் ஊழிய நாட்களில் கிராமங்கள் தோறும், பட்டணங்கள்தோறும் அலைந்து, நடந்து, நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். பிசாசின் வல்லமையில் அகப்பட்ட ஒவ்வொருவரையும் குணமாக்கி அற்புதங்களைச் செய்தார். இப்படிபட்ட வேளையில் அவருக்கு பசியுண்டாயிற்று, அப்பொழுது தான் அந்த அத்திமரத்தைப் பார்க்க நேர்ந்தது. அது பச்சையாகவும், பார்ப்பதற்க்கு கண்கொள்ளாத காட்சியாகவும் இருந்தது, நடந்தது என்ன தெரியுமா? மாற்கு 11:13-ல் அதில் ஏதாவது அகப்படுமா என்று பார்த்தார் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை, பசியைத் தீர்க்காத மரங்களும், தாகத்தைத் தனிக்காத நீறுற்றுகளுமாய் இருந்தது. வெளித் தோற்றத்திற்கு அழகாக, அருமையாக, பச்சையாக மற்றவர்கள் பார்வைக்கு உயிருள்ள மரமாகவோ, காஞ்ச மரமாகவோ, பட்ட மரமாகவோ காணப்படாமல் செழிப்பாய், உயர்வாய் காணப்பட்டது. தனக்கு தானே கனிக்கொடுக்கிறது போல, தன் பார்வைக்கு நல்ல மரமாக இருந்தது. ஓசியா: 10:1-ல் இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத் தானே கனிக்கொடுக்கிறது என்ற வார்த்தையின்படி தன் பார்வைக்கு நல்ல மரமாக கனிகொடுப்பதைப் போல் இருந்தாலும் மற்றவர்கள் பசியை போக்கவோ, மற்றவர்களுக்காக பரிதவிக்கவோ இல்லை. இயேசுவின் பசியைப் போக்காத, விருப்பத்தை, சித்தத்தை நிறைவேற்றாத அத்திமரமாயிருந்தது, அதனால் அது சபிக்கப்பட்டுப் போயிற்று. அது மட்டுமல்ல தேவன் அதை வைத்த இடத்தில் இல்லாமல், அது நகர்ந்து போய் தோட்டத்திற்குள் இல்லாமல், வழியருகே நின்று போவார், வருவார் எல்லாரும் தன்னைப் பார்க்கவும், தன்மேல் கல்லெறியவும், பிடுங்கவும், பறித்து கொள்கிற இடத்தில் இருந்தது. இன்றைக்கு வழியருகே உள்ள மரமும், வழியருகே விழுந்த விதையும் ஒரு நாளும் பலன் தராது ஏன் தெரியுமா? அதற்கு பாதுகாப்பு இல்லை, தண்ணீர் பாய்ச்ச முடியாது, கொத்தவோ, எருப் போடவோ முடியாது, பரிந்து பேசவோ, இன்னும் இந்த வருஷம் இருக்கட்டும் என்று சொல்லவோ முடியாத இடத்தில் இருந்தது. வேதம் சொல்லுகிறது எரேமியா 2:21-ல் நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச் செடியாக நாட்டினேன், நீ எனக்குக் காட்டுத் திராட்சச் செடியின் ஆகாதக் கொடிகளாய் மாறிப்போனது என்ன? என்றார். உயர்குல மக்களாக, பரிசுத்த ஜாதியாக, அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நம்மை அழைத்தார். ஆனால் ஆகாத காட்டுச்செடியாக கசப்பாகவும் மாறிவிட்டது. இதைப்பற்றி ஏசாயா 5:2-ல் அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதிலே ஆலையை உண்டு பண்ணி அது நல்ல திராட்சப் பழங்களைத் தருமென்று காத்திருந்தார். அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. அதாவது தேவனை ஏமாற்றி, அவர் விருப்பத்தை நிறைவேற்றாமல் போனதால் தேவன் துக்கமடைந்தார், அதைக் குறித்து வியாகுலப்பட்டார். ஏன்? நான் நாட்டின, வைத்த இடத்தை விட்டு போனது, ஏன்? என்னை விட்டு அகன்று, வழியருகே சென்றது அதை இதற்காகவா நாட்டினேன் என்றார். சங்கீதம்: 80:8,9-ல் நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியை கொண்டு வந்தீர், ஜாதிகளைத் துரத்தி விட்டு அதை நாட்டினீர் அதற்கு ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணினீர், அது வேரூன்றி தேசமெங்கும் பரவியது, படர்ந்தது. அப்படிப்பட்ட உயர்குலத் திராட்சை செடியாக இருக்கவும், கனி கொடுக்கவும், பசியை போக்கவும் உண்டாக்கப்பட்ட மரம் கனி கொடுக்காமல் போய்விட்டது. அது நகர்ந்து வழியருகே மிதிக்கப்படவும் மற்றவர்கள் பார்வையில் காணப்படவும் தன்னை மறைத்துக் கொள்ளாமல், தேவனுக்குள் ஒளித்துக் கொள்ளாமல் மறைந்து வாழாமல் தான் செய்கிறதை எல்லாம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆண்டவராகிய தேவன் ஆதாமையும், ஏவானையும் சிருஷ்டித்த போது தன்னுடைய இருப்பிடத்தில், தான் உலாவுகிற இடத்தில், ஏதேன் தோட்டத்தில் தான் அவர்களை வைத்தார், அதைக் காக்கவும், பண்படுத்தவும் அவர்களை ஏற்படுத்தினார் ஆதி 2:15-ல் அப்படி சொல்லுகிறது. ஆனால் அவர்களோ தேவன் வைத்த இடத்தில் இல்லாமல் தனக்குப் பிடித்தமான இடத்திற்கு நகர்ந்து, தேவனை விட்டுவிலகி நாடோடிகளாய், பரதேசிகளாய் வழியருகே நிற்கிற மரங்களாய் தோட்டத்திற்குள் உள்ளே இருந்த அவர்கள் வெளியே துரத்தப்பட்டு கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டார்கள். வழக்கம் போல் பகலின் குளிர்ச்சியான நேரத்தில் ஆண்டவர் வந்து தோட்டத்தில் பார்த்தபோது அவர்கள் இருவரையும் காணவில்லை. ஆதாமே எங்கே இருக்கிறாய் ஏன்? என்னை விட்டு அகன்று, விலகிப் போனாய். நான் உன்னை உயர்குல செடியாக என்னுடைய பாதுகாப்பிற்குள் வேலியடைத்து அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, சுத்தம் செய்து கொத்தி எருப்போட்டு, களையெடுத்து, கனி கொடுப்பாய் என்று மிகுந்த ஆவலோடு இருந்த எனக்கு இப்படி ஏமாற்றி துரோகம் செய்து விட்டாயே என்று அங்கலாய்த்தார். காரணம் அந்த அத்தி மரம் தோட்டத்திற்குள் இல்லை, தோட்டத்திற்கு வெளியே தண்ணீர் பாய்ச்ச முடியாத இடத்திலும், வழியருகே உள்ள மரமாக மாறிவிட்டது. வேலியை தகர்த்து பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்றுவிட்டது. அதனால் அந்த மரத்தை பாதுகாக்கவோ, பரிந்துபேசவோ முடியவில்லை. இதைத் தான் லூக்கா: 13:7-9 வசனங்களில் பார்க்கிறோம். இதோ மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன் ஒன்றையும் காணவில்லை இதை வெட்டிப்போடு, இது நிலத்தை ஏன் கெடுக்கிறது என்றார். அதற்கு தோட்டக்காரன் ஐயா இந்த வருஷமும் இருக்கட்டும் இதைச் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன் என்றார் ஏன் என்றால் அந்த அத்திமரம் தோட்டத்திற்குள் இரக்கத்தைப் பெறுகிற இடத்திற்குள், பரிந்துபேசி ஜெபிக்கிற இடத்திற்குள் இருந்தது. அதனால் அது தப்பி இந்த வருஷமும் இருக்கட்டும் என்று தண்ணீர் பாய்ச்சுகிற இடத்தில் கொத்தி எருப்போடுகிற இடத்தில் இருந்தது. அதனால் இன்னும் கனி தருவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மறுபடியும் தேவனுக்குள் மறைக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றது. அது சபிக்கப்படவோ, கெட்டுப்போவதற்கோ வாய்ப்பில்லாமல் இருந்தது. எபி 6:7 சொல்லுகிறது எப்படியெனில், தன் மேல் அடிக்கடிப் பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது: சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே நாம் எங்கே இருக்கிறோம்? கர்த்தருடைய தோட்;டத்திலா அல்லது இடம் மாறி, பெயர்ந்து வழியருகே நின்று கொண்டிருக்கிறோமா?, நாம் தண்ணீர்களுள்ள இடத்தில் இருக்கிறோமா நம்மைச் சுற்றிலும் வேலியடைக்கப்பட்டிருக்கிறா?, கொத்தி எருப்போடுகிற இடத்தில் இருக்கிறோமா? அல்லது உணர்வு இல்லாத இடத்தில் இருக்கிறோமா?, நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, இதுவரை நாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை இனி கனி கொடுக்கவும், பலன் கொடுக்கவும், தேவன் விரும்புகிறார். அவர் பசியைப் போக்கவும், தாகத்தை தனிக்கவும் விரும்புகிறார். மற்றவர்களுக்கு நீதிமானாக, நல்லவனாக, பட்டுப்போகாத இலை நிறைந்த மரமாக வாழ்ந்தது போதும் இனி கர்த்தருக்கு கனி கொடுக்கிறவர்களாக வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பர்த்திமேயு என்ற மனிதனைப் போல் பிச்சைக்கார வாழ்க்கைக்கும், குருட்டு வாழ்க்கைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து மாற்கு 10:46-52 முடிய உள்ள வாழ்க்கையைப் போல நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து நம்முடைய எஜமானுக்கு கனி கொடுக்கிறவர்களாகவும், அவருக்கு பலனை கொடுக்கிறவர்களாகவும் வாழ நம்மை அர்ப்பணிப்போம். கிருபையானது நம் அனைவரோடும் இருப்பதாக.