Inspiration
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். தேவனுடைமய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் ரோமர் 12:11 என்று பவுல் சொல்லுகிறார். ஆண்டவர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் நம்மை இரட்சித்து, நமக்காய் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த ஆண்டவருக்காக ஏதாவது செய்யணும். இந்த வசனத்தை ஏதோ ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களுக்கு மட்டும் பவுல் எழுதவில்லை. இதை வாசிக்கிற அத்தனை பேரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். பழைய ஏற்பாட்டின் நாட்களில் ஆசாரியர்கள், லேவியர்கள், ராஜாக்கள், தீர்க்கதரிசிகள் ஆண்டவருடைய வேலையைப், பணிவிடையை, ஊழியத்தை செய்தார்கள். புதிய ஏற்பாட்டில் சிலரை அப்போஸ்தலர்களாக, மேய்ப்பர்களாக, தீர்க்கதரிசிகளாக, போதகர்களாக, சுவிசேஷகர்களாக ஆண்டவர் ஏற்படுத்தினார். அவர்கள் எப்படியெல்லாம் ஊழியம் செய்தார்கள். நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
தேவனுக்கும், ஜனத்துக்கும் ஊழியம்
யோசியா ராஜா எருசலேமிலே பஸ்காவை ஆசரிக்கிறபோது 2 நாளா 35:3-ல் லேவியரை நோக்கி பரிசுத்த பெட்டியை சாலமோன் கட்டிய ஆலயத்தில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம் செய்யுங்கள் என்று சொல்கிறதை வாசிக்கிறோம். அப் 13:36-ல் தாவீது ராஜா தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்த பின்பு மரித்தான். தானும் கர்த்தரை துதித்தான், துதிக்கிறவர்களை எழும்பப்பண்ணினான், யுத்தம் செய்தான், ஆலயம் கட்ட தேவையான பொருட்களை சவதரித்து வைத்தான் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப் 6:4-ல் நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும், தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். ஜனங்களுக்கு மனம்திரும்புதல், பாவமன்னிப்பு, சரீரசுகம், விடுதலை இவைகளைப் பிரசங்கிக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் இதை நாம் செய்ய வேண்டும். லூக்கா 24:47-ல் அன்றியும், மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது என்று இயேசு தம் சீஷரிடம் சொன்னார். கொலோ 1:28-ல் எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணி தேவனுக்கு நாம் ஊழியம் செய்யணும் என்று பவுல் சொல்கிறதை நாம் பார்க்கிறோம். அன்று ஜனங்கள் தம் பாவபாரத்திற்காக பலியைக் கொண்டு வந்து செலுத்தினது போல இன்று அவர்களுக்காக நாம் பரிந்துபேசி விடுதலை, சுகம்பெற ஜெபித்து உதவணும் இது நாம் ஜனங்களுக்கு செய்யும் ஊழியம். அப் 6:2,3-ஆம் வசனத்தில் பந்தி விசாரணைக்காக பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்த, நற்சாட்சி பெற்றிருக்கிற சிலரை தெரிந்தெடுத்தார்கள் பந்திவிசாரிப்பு செய்வது, சமையல் செய்வது இதுவும் ஊழியம் தான். 1 நாளா 23:4,5-ல் அவர்களில் இருபத்துநாலாயிரம் பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆயிரம்பேர் தலைவரும், மணியக்காரருமாயிருக்க வேண்டும் என்றும், நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்க வேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணிவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்க வேண்டும், கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்க, வாசல்காக்க (வாட்ச்மேன்), துதிசெய்ய, பாட்டுப்பாட, மேற்பார்வை செய்ய தலைவர்கள், மணியக்காரர் என்று தாவீது ஏற்படுத்தினான் இதுவும் ஊழியம் தான். இயேசுவுக்கு பெண்களும் ஊழியம் செய்தார்கள் என்று மத் 27:55-ல் மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அநேகம் பெண்கள் உதாரணமாக மரியாள், மார்த்தாள் இயேசு பெத்தானியாவுக்கு வரும்போதெல்லாம் வீட்டில் ஏற்றுக்கொண்டு உணவு சமைத்து உதவியாய் ஊழியம் செய்தார்கள். லூக்கா 8:3-ல் ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டுவந்த அநேகம் ஸ்திரிகளும் அவருடனே இருந்தார்கள். தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாய் இருந்த போது பெரிய விருந்து பண்ணின நாபால் வீட்டிற்கு ஆள் அனுப்பும் போது அபிகாயில் 1 சாமு 25:18-ல் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் கழுதைகள் மேல் ஏற்றிக்கொண்டு போனாள் இதுவும் ஊழியம் தான். 1 நாளா 29-ஆம் அதிகாரத்தில் தாவீதும், ஜனங்களும் மனஉற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்து ஊழியம் செய்தார்கள். கொடுப்பதும் ஒரு ஊழியம். செருபாபேல் ஆலயத்தைக் கட்டினான். நெகேமியா அலங்கத்தைக் கட்டினான். இரண்டுமே தேவனுடைய வேலை தான். சபைக்கு, கூட்டங்களுக்கு புதிதாக ஆட்களை அழைத்து வருவதும்ó ஊழியம் தான். ஏதாவது நாம் தேவனுக்கும் மனிதருக்கும் செய்யவேண்டும்.
பரிசுத்தவான்களுக்கு ஊழியம்
பவுல் 1 கொரி 16:15-ல் சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே முதற்பலனானவர் களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்கள் என்கிறார். 1 ராஜா 19:21-ல் எலிசா இரட்டிப்பான வரம் பெற்று ஊழியம் செய்வதற்கு முன்பு அவன் எலியாவுக்குப் பின் சென்று அவனுக்கு ஊழியம் செய்தான். மோசே சீனாய் மலையில் இருக்கும்போது (யாத் 33:11-ல்) அவனுக்கு பணிவிடைக்காரனாய் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். தீமோத்தேயுவைப் பற்றி எழுதும் போது பவுல் பிலி 2:22-ல் தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வது போல, அவன் என்னுடனே கூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தம குணத்தை அறிந்திருக்கிறீர்கள் என்று பவுல் சொல்கிறார். எபி 6:10-ல் உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே என்பது போல நாம் பரிசுத்தவான்களுக்கு உறுதுணையாய் நிற்கும் போது அதுவும் கனமான ஊழியம்.
உதவிக்கார ஊழியம்
பவுல் அப்போஸ்தலன் 1 தீமோத் 3:11,12,13-ல் அந்தப்படியே ஸ்திரிகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்க வேண்டும். 13-ஆம் வசனத்தின்படி இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள் என்று சொல்கிறதைப் பார்க்கிறோம். கலா 5:13-ன்படி அன்பினால் குடும்பத்தில் கூட ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஊழியம் செய்யலாம். கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், மாமியார், மருமகள், சகோதர, சகோதரி உறவுகளுக்குள் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருந்து மனுஷருக்கென்று செய்யாமல் தேவனுக்கென்று மனப்பூர்வமாய் செய்யலாம். எபே 6:6,8-ல் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல் கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். இயேசு என்ன செய்தார்?. மத் 20:26,27,28-ல் இயேசு உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனா யிருக்கக்கடவன், உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊரியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல் ஊழியஞ்செய்ய, அநேகரை, மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். இயேசுவே ஊழியம் செய்ய வந்தாரென்றால் நாம் ஊழியம் செய்யணும். சீஷர்களை பந்தியில் அமர்த்தி அவர்களுடைய பாதங்களைக் கழுவினார். கர்த்தருக்கு ஊழியஞ்செய்ய வேண்டிய யாக்கோபு (ஓசி 12:12,13-ல்) சீரியா தேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். ஆதி 31:6-ல் என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்றான். இன்றைக்கு தேவன் உங்களை எகிப்திலிருந்து, உலகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிற இடத்திலிருந்து புறப்படச் செய்வார். ரோமர் 6:6.-ன்படி நாம் இனிப் பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடி புறப்படுவோம். அதனால் தான் மத் 6:24-ல் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு,மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது என்றார்.
கர்த்தருக்கு ஊழõயம் செய்தால் என்ன செய்வார்.
நாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்போது யோவான் 12:26-ன் பிற்பகுதியில் ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார். நாம் கர்த்தருக்கு மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்யும் போது மனிதர்கள் நம்மைக் கனம்பண்ணுகிறார்களோ இல்லையோ ஆண்டவர் நம்மைக் கனம்பண்ணுவார். பிரச்சனை என்னவென்றால் நாம் ஆண்டவரின் கனத்தை விட மனிதர்களால் வரும் கனத்தையே அதிகம் விரும்புகிறோம். அது இல்லாத பட்சத்தில் சோர்ந்து போகிறோம். அது மட்டுமல்ல எரே 33:22-ல் நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும், எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்கிறார். நாம் ஆண்டவருக்கு ஊழியஞ்செய்தால் நம்மை வர்த்திக்கச் செய்வார். நாம் தேவனுக்கென்று ஊழியம் செய்யாதபடி உலகத்துக்கும், மாமிசத்துக்கும், பணத்துக்கும், வயிற்றுக்கும் வேலை செய்தால் நாம் பாதிக்கப்பட்டு விடுவோம். எனவே நம்மைத் தாழ்த்தி இதுவரை எப்படி வாழ்ந்திருந்தாலும் இனி நம்மை, நம் வாழ்வை, நம் நோக்கத்தை சீர்ப்படுத்தி கர்த்தருக்கே ஊழியஞ்செய்ய அர்ப்பணிப்போம். லூக்கா 1:71-ல் உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊரியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று ஆண்டவர் சொல்கிறார். எபி 9:14-ன்படி நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியை செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், நித்திய ஆவியினாலே பழுதற்ற பலியாக நம் மனச்சாட்சியை செத்த கிரியைகள் அகல, நம்மை சுத்திகரிக்கிறது. நம்மை தேவனுக்கு ஊழியஞ்செய்ய தகுதிப்படுத்துகிறது. இயேசுவே என்னை மன்னியும், உம் இரத்தத்தால் என்னைக் கழுவும். உலகத்தின் பின்னே, உலகம் காட்டும் மாதிரிகளில் போய் விட்டேன் என்னை மன்னித்து சுத்திகரித்து ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வோம். தேவனுக்கும், ஜனங்களுக்கும், பரிசுத்தவான்களுக்கும், உதவிக்காரருடைய ஊழியத்திலும் நம் அன்றாடப் பணிகளிலும் மனுஷருக்கென்று செய்யாமல், தேவனுக்கே சகலத்தையும் செய்ய, ஆண்டவர் நமக்கு உதவி செய்யும்படி அர்ப்பணித்து ஜெபிப்போம். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆண்டவர் உதவி செய்வாராக. ஆமென்.
By Sis. Kala VincentRaj