Inspiration

உயிர்த்தெழுந்த உன்னதர் இயேசு உன்னருகே தான் இருக்கிறார்...

கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி தங்கைகளே, மரித்து உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடு நம் அருகே இருக்கின்ற நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
“”தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” – சங்கீதம் 145:18

தடைகளை நீக்க உன்னருகே இருக்கிறார்.

இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்த மூன்றாம் நாளிலே (வாரத்தின் முதல் நாளிலே) இயேசு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். ஆனால் இதை அறியாத சில பெண்கள் யூதர்களின் வழக்கப்படி வாசனைத் திரவியங்களை எடுத்துக்கொண்டு, இயேசுவைப் பார்க்கும்படி வந்தார்கள் (மத்.28:1, லூக்.24:1). அப்படி வரும் போது கல்லறையின் வாசலிலிருந்த கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் (மாற்கு16:3) என்று அங்கலாய்த்துப் பேசிக் கொண்டே சென்றார்கள். ஏனென்றால் அந்தக் கல் மிகவும் பெரிதான கல்லாயிருந்தது. மேலும் அந்த கல்லுக்கு முத்திரை போட்டு (சீல் வைத்து) யூதர்கள் கல்லறைக்கு காவல் வைத்து பத்திரப்படுத்தியிருந்தார்கள் (மத்.27:64-66) தான் உயிரோடிருந்த போது மட்டுமல்ல தான் மரித்தபின்பும் தன்னை பார்க்கும்படி, இருட்டுக்குப் பயப்படாமல் ஆர்வத்தோடும், துணிவோடும் வந்த அந்த பெண்களுக்கு கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி அந்தக் கல்லை புரட்டித் தள்ளினார். அந்த நேரத்தில் பூமி அதிர்ந்தது, காவலாளர் செத்தவர்களைப் போல் விழுந்தார்கள். இயேசு மரித்து விட்டார் அவ்வளவு தான் என்று இயேசுவை விட்டுவிடாமல் அவர் மரித்திருந்தால் என்ன அவரே எங்கள் இரட்சகர் அவர் எங்களுக்கு வேண்டும் என்று தேடின பெண்களுக்காக ஆண்டவர் பூமியை அதிரப்பண்ணி, தடுத்த கல்லைப் புரட்டி போட்டாரென்றால், உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடு உங்களருகே இருக்கின்ற ஆண்டவர் உங்களுக்காக எத்தனை அற்புதங்களை செய்வார். தடைகள் விலகும் இயற்கைக்கு அப்பாற்பட்டதும், நீங்கள் நினைத்ததற்கும் மேலான காரியங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும்! அரசாங்கமோ, மனிதர்களோ, சாத்தானோ உங்களுடைய ஆசீர்வாதத்தை தடுக்க முடியாது. இயேசு உயிர்த்தெழாதிருந்தால் உங்கள் நம்பிக்கை வீணாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இயேசு மரித்ததோடு அவருடைய சரித்திரம் முடிந்து போக வில்லை. அவர் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் (வெளி 1:18) என்று அவர் உயிரோடு எழும்பினது தான், நமது நம்பிக்கைக்கு தொடக்கப்புள்ளி. அவரை நம்புகிற,, தேடுகிற, கூப்பிடுகிற உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்க, உங்கள் வாஞ்சைகளை நிறைவேற்ற உங்கள் அருகிலேயே நிற்கிறார்.

கண்ணீரைத் துடைக்க உன்னருகே இருக்கிறார்.

தேவ தூதர்கள் அவளை நோக்கி. ஸ்திரியே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவரை வைத்த இடம் எனக்கு தெரியவில்லை. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.- யோவான் 20:13,14.
தன்னை வேதனைப்படுத்திய ஏழு பிசாசுகளை ஆண்டவர் இயேசு துரத்தி விடுதலையாக்கினதை நன்றியோடு நினைத்து ஆண்டவரைப் பின்பற்றியவள் மகதலேனா மரியாள் (லூக்கா 8:2). எல்லா பெண்களும், சீஷர்களும் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு காலியாக இருந்த கல்லறையைப் பார்த்த பின் இயேசு உயிர்த்துவிட்டார் என்று தூதர்கள் சொல்லியதை நம்பி சென்று விட்டனர். ஆனால் இந்த மகதலேனா மரியாள் மட்டும் இயேசுவை பார்க்காமல் இங்கிருந்து போவதில்லை என்ற எண்ணத்தோடு அங்கேயே நின்று அழுது கொண்டிருந்தாள். தேவதூதர்கள், அவளை நோக்கி “ஸ்திரீயே! ஏன் அழுகிறாய்” என்று கேட்டாலும் அவள் அழுகை ஓயவில்லை, அவள் கண்ணீர் நிற்கவில்லை. இயேசுவை! என் ஆண்டவரை! யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் அவரை எங்கு வைத்தார்களோ என்று ஆண்டவர் மேல் வைத்த அன்பினால் தேவனுக்கேற்ற துக்கமுடையவளாய் அழுது கொண்டிருந்ததை, அதற்குப் பின்னும் ஆண்டவரால் பொறுக்க முடியவில்லை. அவர் அவளருகே சென்று நின்றார். அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்று கேட்டார். ஆனால் அவள் அவரை தோட்டக்காரன் என்று நினைத்து, ஐயா, நீர் அவரை எடுத்து எங்கேயாவது வைத்திருந்தால் எனக்குச் சொல்லும், நான் சென்று எடுத்துக் கொள்ளுவேன் என்றாள். இயேசு தாம் அவளருகே நிற்பதையும், தான் யார் என்று இன்னும் அவள் அறிந்து கொள்ளவில்லையே, என்று அறிந்து “மரியாளே என்றார்” அப்பொழுது இது நான் கேட்டு கேட்டுப் பழகின என் ஆண்டவரின் சத்தமல்லவா? இவ்வளவு நேரம் அவர் என்னருகே நின்றிருக்கிறார் என்று பணிந்து கொண்ட போது, “நான் உயிர்த்தெழுந்ததை சீஷர்களுக்குச் சொல்” என்று ஆண்டவர் அவளிடம் சொன்னார். இப்படியாக உயிர்த்தெழுந்த ஆண்டவர் தன்னோடே இருந்த சீஷர்களுக்கு அல்ல, தன்னை அதிகாலையிலும், ஆர்வமாய் பார்க்காமல் போகமாட்டேன் என்று நீதியின் மேல் பசிதாகத்தோடிருந்த, நன்றியோடு தன்னைப் பின்பற்றின மகதலேனா மரியாளுக்குத் தான் முதன் முதல் தரிசனமானார் (மாற்கு 16:9) என் ஆசீர்வாதங்களை, நன்மைகளை, அதாவது என்னுடையவைகளை அல்ல, என்னை, நான் தான் வேண்டும் என்று என்னைத் தேடி வந்த மகதலேனா மரியாளே உனக்காக உன் கண்ணீரைத் துடைக்க உன்னருகே இருக்கிறேன் என்று உயிர்த்தெழுந்த அந்த காலையிலே பிதாவினிடம், பரலோகம் செல்லுமுன் மரியாளுக்கு தரிசனமானார். இதை வாசிக்கிற நீங்களும் மகதலேனா மரியாள் போல் ஆண்டவர் மேல் அன்பு வைத்து அவரைத் தேடுங்கள். முதலாவது, அவரைத் தேடுங்கள், அதிகாலையில் தேடுங்கள், நிச்சயம் அவரை கண்டடைவீர்கள் (நீதி.8:17). வேதத்தை தேடி வாசியுங்கள், அவர் சத்தம் கேட்டுப் பழகுங்கள். அவரும் உங்கள் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அந்த பெண்களும் மகதலேனா மரியாளும், இருளின் நடுவிலும், காலியான கல்லறை, அரசாங்கம், மக்களின் எதிர்ப்பின் மத்திலும் ஆண்டவரைத் தேடின போது தடைகள் விலகினது, கண்ணீர் துடைக்கப்பட்டது, பயங்கள் நீங்கினது. உங்களுக்கும் உதவி செய்ய ஆண்டவர் ஆவலோடிருக்கிறார். எனவே எதைக் குறித்தும் கலங்கவும், பயப்படவும் வேண்டாம். ஏனென்றால் நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்துவிட்டார். நீங்களும் வெற்றி பெறுவீர்கள். உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு தாமே தமது வல்லமையால் உங்கள் தடைகளை நீக்கி, கண்ணீரைத் துடைத்து, தம் ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்புவாராக.

Youth Special - Sis. Prema David