Inspiration
கர்த்தாவே! உமக்கு ஒப்பானவர் யார்?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!. நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு நிகரானவர் இந்த பூமியில் இல்லை. எரே 10:6,7-ல் கர்த்தாவே! உமக்கு ஒப்பானவர் இல்லை, நீரே பெரியவர்!, உமது நாமமே வல்லமையில் பெரியது. ஜாதிகளின் ராஜாவே! உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்?. தேவரீருக்கே பயப்பட வேண்டியது. ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவர் இல்லை என்று எரேமியா சொல்லுகிறதை வாசிக்கிறோம். உமது நாமமே வல்லமையில் பெரியது. அவர் ஜாதிகளின் ராஜா, எல்லா ஜாதிகளின் ஞானிகளைக் காட்டிலும், ராஜ்யத்தைக் காட்டிலும் நீரே பெரியவர். உமக்கு ஒப்பானவர் ஒருவருமே இல்லை என்கிறார். இன்றைக்கு நாம் பூமியிலே எத்தனையோ பெரியவர்களை அறிந்திருக்கிறோம். அவர்களைப் பற்றி கேட்டிருக்கலாம், பேசியிருக்கலாம் ஆனால் அவர்களில் ஒருவரோடும். ஒப்பிட முடியாதவர் நம் இயேசு. அவர் ராஜா! சங் 89:6-ல் ஆகாய மண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்?, பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? ஆகாய மண்டலத்திலும், பலவான்களின் புத்திரரிலும் கர்த்தருக்கு நிகரானவரும், ஒப்பானவரும் இல்லை.
வானம் எனது சிங்காசனம், பூமி எனது பாதபடி என்று சொன்ன கர்த்தரை எதற்கு ஒப்பிட முடியும், ஏசாயா 40:18-ல் தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?. எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? என்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலரை மோசேயைக் கொண்டு வெளியே கொண்டு வந்த தேவன் மோசேயைக் கொண்டு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். யாத் 20:4,5-ல் மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும், நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
ஆனால் யாத் 32:4-ல் ஆரோன் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள் இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துகó கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். எங்களை எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த மோசேக்கு என்ன நேர்ந்ததோ, எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ணும் என்று ஆரோனை ஜனங்கள் கேட்டபோது ஒரு கன்றுக்குட்டிக்கு தேவனை ஒப்பிட்டு, இது தான் உன்னை அழைத்து வந்த தெய்வம் என்று காண்பித்தான். ஏசாயா 46:5-ல் ஆண்டவர் யாருக்கு என்னைச் சாயலும், சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? என்கிறார். நாம் கூட எது ஒன்றிலும் ஒப்பிட முடியாத தேவனை, அவரது வல்லமையை மட்டுப்படுத்தி ஏதோ ஒரு சாயலை கனப்படுத்தி வாழ்வோம் என்றால் ஆண்டவரின் கட்டளையை மீறுகிறவர்களாக இருப்போம். ஆரோன் கன்றுக்குட்டிக்கு தேவனை ஒப்பிட்டு துக்கப்படுóதினான். நாமும் தேவனை, அவரó வல்லமையை எதிலாகிலும் ஒப்பிட்டு அவரை துக்கப்படுத்தாமல், ஒப்பிட முடியாத அவரை மகிமைப்படுத்தி கனம் பண்ணுவோம்.
கர்த்தாவே! உமக்கு ஒப்பானவர் இல்லை.
சாலமோன் தேவாலயத்தை கட்டி முடித்ததும், கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையாருக்கும் முன்பாக கைகளை விரித்து 2 நாளா 6:11-14-ல் இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே! வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை. தங்கள் முழுஇருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காத்து வருகிறீர் என்று ஜெபித்தான். இதையே 1 ராஜா 8:23-லும் இதை வாசிக்கிறோம். கர்த்தாவே! மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை என்று ஜெபம் பண்ணி தேவனை மகிமைப்படுத்துகிறான்.
மோசேயை அழைத்து தேவன், பார்வோனிடத்தில் அனுப்பிய போது ஜனங்களை அவன் விட மறுத்து கொண்டிருக்கிறான். வாதைகள் ஒவ்வொன்றாக வருகிறது. அதில் ஒன்று தவளைகள் எங்கும் சூழ்ந்தது. பார்வோனின் மந்திரவாதிகளும் தவளைகளை வரப்பண்ணினார்கள். ஆனாலும் தவளைகளை போகப் பண்ணவில்லை. பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைப்பித்து இந்த தவளைகள் என்னையும், என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள் என்றான். தவளைகளைப் போகப்பண்ண மோசே ஒப்பில்லாத தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டியிருந்தது. யாத் 8:10-ல் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது என்று சொல்லி கர்த்தரை நோக்கி கூப்பிட்டான். அப்படியே தவளைகள் செத்துப் போயிற்று. மோசேயின் கையினால் பலத்த அற்புதங்களை செய்து, ஆண்டவ்ர் தன்னை மகிமைப்படுத்தி, வெளிப்படுத்தினர். அவருக்கு ஒப்பானவர் ஒருவருமே இல்லை.
உமக்கு ஒப்பானவர் யார்?.
அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்கள் சந்தோஷமாய் புறப்பட்டு வரும்போது செங்கடலை எதிர் கொண்டார்கள். எந்த பக்கமும் வழியில்லை, எகிப்தை விட்டு வெகுதூரம் பிரயாணம் பண்ணியாயிற்று, இனித் திரும்பிப் போகவும் முடியாது என்ன செய்ய போகிறோம் என்று திகைக்கும் போது பின்னால் பார்வோனின் சேனை துரத்தி வருகிறது. பட்டகாலிவே படும் என்பார்களே அதைப் போல துன்பத்தின் மேல் துன்பம் பெருகினது. கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும் போது ஒரு சம்பவத்தைச் சொன்னார் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட சிரமங்கள் நடுவில், கடலில் நீந்திச் செல்கிறார்கள் இரண்டு பேர். அவரும், அவர் நண்பரும் போகின்றார்கள். முக்கால் பகுதி நீந்திச் சென்றதும் நண்பரால் நீந்த முடியவில்லை. தலைவா நாம் திரும்பி விடுவோம் என்றார். அதற்கு இவர் நாம் முக்கால் பகுதியை நீந்தி விட்டோம் நாம் இனி திரும்பி போனாலும் மரணம் தான், முடிந்த மட்டும் நீந்து கரையைத் தொட்டு விடலாம் என்று கரை சேர்ந்ததாகச் சொல்லுவார்.
இப்பொழுது இஸ்ரவேலருக்கு திரும்ப போகவும் முடியாது, செங்கடலை நீந்தி எங்கு போவது, எப்படிப் போவது, எத்தனை பேர் போவது? ஆளுக்கு ஆள் ஒருபுறம் சிதற நேரிடும். பிள்ளைகள், கைக்குழந்தைகள், ஆடு மாடுகள், உடைமைகள், பெண்கள், முதியவர், உயிர் பிழைக்க முடியுமா? கோபத்தோடு மோசேயோடே எதிர்த்தார்கள். எகிப்திலே கல்லறை இல்லை என்ற எங்களை வனாந்திரத்திலே கொண்டு வந்து மடியச் செய்கிறாய்? என்றார்கள். மோசேக்கும் என்ன செய்வதென்று தெரியாவிட்டாலும், தன்னை அழைத்த, அனுப்பின தேவனை நோக்கி பார்த்தான் கர்த்தர் தைரியப்படுத்தினார். செய்ய வேண்டியதை சொன்னார். நீ என்னை நோக்கி ஏன் முறையிடுகிறாய்? ஜனங்களை புறப்பட்டுóப போகச் சொல், உன் கையிலிருக்கிற கோலை நீட்டி சமுத்திரத்தை பிளந்து விடு, அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள் என்ற அதிகாரத்தை கொடுத்தார். அதன்படி மோசே செய்த போது செங்கடல் இரண்டாய் பிளந்தது. வெட்டாந்தரையில் நடந்து செல்வது போல மக்கள் நடந்து சென்றதும், அதைப் போல பார்வோனின் சேனை செங்கடலை கடக்க முயன்ற போது, கடல் அவர்களை மூடிப்போட்டதைக் கண்ட முழுஇஸ்ரவேலரும் மோசேயையும், கர்த்தரையும் புகழ்ந்து பாடுகிறார்கள்.
யாத் 15:11-ல் கர்த்தாவே! தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளõல் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? என்று கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள். நம் தேவன் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர், அவருடைய பரிசுத்தத்தில் அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவரைப் போல அற்புதங்களைச் செய்ய ஒருவராலும் முடியாது. அவர் துதிகளில் பயப்படத்தக்கவர். அவருக்கு ஒப்பானவர் இல்லை. உங்கள் வாழ்விலும், என் வாழ்விலும் என்ன செய்யப் போகிறேன் என்று திகைக்கிற நிலை இருக்கிறதா? எப்பக்கமும் நெருக்கப்படுகிறீர்களா? உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய இயேசுவால் முடியும். செங்கடல் போன்ற தடைகளை தகர்த்து, இந்த துன்பத்திலிருந்து கரை சேர்க்கும் தேவன் இயேசு உயிரோடு இருக்கிறார். நீங்களும் கர்த்தாவே உமக்கு ஒப்பானவர் இல்லை என்று சொல்லும் அதிசயங்களைக் காணச் செய்வார்.
அதுமட்டுமல்ல மீகா 7:18-ல் தமது சுதந்திரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருயை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறார். தமது ஜனங்களின் அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை. யார் ஒருவர் தம் பாவங்களுக்காக மனம் வருந்தி, இயேசுவே, என் அக்கிரமங்களைப் பொறுத்து, மீறுதலை மன்னியும், என் உள்ளத்தில் வாரும், என்னை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லுகிறோமோ அவர்கள் ஒவ்வொருவர் பாவத்தையும், மீறுதலையும் இயேசு சிலுவையின் மீது தமது சரீரத்தில் சுமந்தார். அதனால் பூமியிலே பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு. மீறுதலை மன்னிக்கிற அவருக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை.
உன்னதருக்கு ஒப்பாவேன்
இந்த வார்த்தை யார் சொன்னது? அதிகாலை மகனாகிய விடிவெள்ளியே என்று தன்னோடு செல்லமாய் வைத்திருந்த தூதர்களில் ஒருவன் லூசிபர். அவன் தான் இந்த வார்த்தையை தன் இருதயத்தில் சொன்னான். ஏசாயா 14:12-15 வரை வாசித்தால் நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன். வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும், நீ உன் இருதயத்தில் சொன்னாயே, ஆனாலும் நீ, அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டு போனாய் என்று லூசிபரைப் பார்த்துச் சொன்னார். மகன் தான் ஆனால் அவன் உன்னதமானவருக்கு ஒப்பாக முடியாது. அவன் தன் இருதயத்தில் சொன்னபோது அவன் கீழே தள்ளப்பட்டான். இன்றைக்கு நாம் கூட உன்னதமானவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறலாமே தவிர, நாம் உன்னதமானவராக முடியாது.
தேவனுக்கு சேர வேண்டிய கனத்தை, மகிமையை தனக்கு திருடிக் கொண்ட லூசிபர் கீழே விழுந்து, அநேகரை பெருமையில், அகந்தையில் நிரப்பி உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று கீழே நட்சத்திரங்களை தள்ளிக் கொண்டிருக்கிறான். மிகவும் ஜாக்கிரதையாய் ஓடி மகிமையை கர்த்தர் ஒருவருக்கே செலுத்தி பாதுகாக்கப்படுவோம். ஏரோது பிரசங்கிக்கும் போது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, தேவ சத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையை செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் அப் 12:22,23-ல் வாசிக்கிறோம். தேவனுக்குரிய மகிமையை தேவனுக்குச் செலுத்தி உன்னதமானவரை போற்றித் துதிப்போம்.
இஸ்ரவேலே….. உமக்கு ஒப்பானவர் யார்?
ஆண்டவர் நம்மைப் பார்த்து சொல்லுவது வேறு, நாமே நம்மைப் பார்த்து சொல்லிக் கொள்வது வேறு. உபா 33:29-ல் இஸóரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே, உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள். அவர்கள் மேடுகளை மிதிப்பாய் என்று மோசே சொல்லுகிறதை பார்க்கிறோம். கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவர் யார்?. இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், தன் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, இரத்தம் சிந்தினார் என்று விசுவாசிக்க வேண்டும், நான் இதை நம்பி ஏற்றால் அவரால் இரட்சிக்கப்படுகிறேன் என்கிற ஒவ்வொருவருக்கும் ஒப்பானவர் இல்லை.
கோடி கோடியாய் பணம் இருக்கலாம், ஆட்கள் பலம் பெரிதாய் இருக்கலாம், பெரிய மனிதர்களை தெரிந்து வைத்திருப்பதால் அல்ல, கர்த்தரால் இரட்சிக்கப்பட்டு, அவரை நமக்குள் வைத்திருப்பதே நம்மை ஒப்பிட முடியாதவர் என்ற பெயரைப் பெற்றுத் தருகிறது. ஒரே நாளில் பெற்ற இரட்சிப்பு அல்ல, அனுதினமும், முடிவுபரியந்தமும் இரட்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். நமது இரட்சிப்பை பாதிக்கும் பல காரியங்களை தினமும் நாம் சந்திக்கிறோம். அந்த பாதிப்பை மேற்கொண்டு, தினமும் நாம் ஜெயிக்கும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். மீட்பை இயேசுவால், அவருடைய வார்த்தை நம்மோடு இடைபடுவதால், பரிசுத்த ஆவியானவர் தரும் பெலத்தால் அந்த தீமையை ஜெயித்து வெற்றி பெறுகிறோம்.
மத் 7:24-26-ல் ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன் என்றும், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடுவோன் என்றும் ஆண்டவர் சொன்னார். கன்மலையின் மேல் கட்டினவனை புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிட்டும், மணலின் மேல் கட்டினவனை புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிட்டும் ஆண்டவர் சொல்லி, அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்று சொல்லுகிறார். நமக்கு ஒப்பானவர் ஒருவருமே இல்லை. ஆனால் கன்மலையின் மேல் வீட்டைக் கட்டினவர்களாய், எத்தனை பெரு வெள்ளம் மோதி அடித்தும் கீழே விழாமல் நிற்கிறவர்களாய், தேவன் எப்பொழுதும் நம்மை காத்துக் கொள்ள ஜெபிக்க வேண்டும். கர்த்தருக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை. அவரால் இரட்சிக்கப்பட்ட நமக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை. நாம் லூசிபரைப் போல உன்னதமானவருக்கு ஒப்பாக்கி, வேறு சாயலுக்கு ஒப்பாக்கி பாதிக்கப்படாதபடி ஆண்óடவர் நம் ஒவ்வொருவரையும் காப்பாராக!. இதை வாசிக்கிற ஒவ்வொருவரும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு ஒப்பில்லாத உயர்வை பெறுவார்களாக!
By Sis. Kala VincentRaj