Inspiration

எப்பிராயீமே! உன்னை நான் எப்படிக் கைவிடுவேன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் சகோதரிகளுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் வாழ்கிற இந்த கடைசி நாட்களில் எல்லாவற்றிலும் நாம் கைவிடப்படுகிறதைக் கேள்விப்படுகிறோம். பெரிய பெரிய நிறுவனங்கள் வேலையாட்களை கைவிடுகிறது. பெரிய வேலையிழப்புகள் நேரிடுகிறது. கணவனால் மனைவி கைவிடப்படுகிறாள். தாய் அல்லது தந்தையின் தவறான நடக்கையால் பிள்ளைகள் கைவிடப்பட்டு அனாதையாகிறார்கள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்து, நல்ல திருமணம் முடித்து. நமக்கு உதவுவார்கள் என்றால் பெற்றோறைக் கைவிட்டு மறந்து போகிறார்கள். இந்நிலையில் நம்மை மறக்காமலும், கைவிடாமலும் ஒருவர் நமக்கு உண்டானால் அவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். அவர் நம்மைப் பார்த்து எப்பிராயீமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன், இஸ்ரவேலே! நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?, நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன், உன்னை எப்படி செபோயீமைப் போல வைப்பேன்?, என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய் பொங்குகிறது. ஓசியா 11:8-ல் ஆண்டவர் சொல்லுகிறார் என் மகளே! உன்னை எப்படிக் கைவிடுவேன்?, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மா, செபோயீமைப் போலாக்குவேன் என்கிறார். இந்த அத்மா, செபோயீம் என்றால் சோதோம், கொமோராவைப் போல ஒன்று. உபா 29:23-ல் கர்த்தர் தமது கோபத்திலும், தமது உக்கிரத்திலும் சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப் போட்டார் என்று பார்க்கிறோம். அதுபோல் நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன் என் பரிதாபங்கள் உன்மேல் ஏகமாய் பொங்குகிறது என்கிறார். ஆண்டவர் இயேசுவின் அன்பு எத்தனை பெரியது. எப்படிப்பட்ட நிலையில் ஆண்டவர் சொல்கிறார். இந்த அதிகாரத்தின் மேற்பகுதியில் நான் தங்களைக் குணமாக்குகிறவர் என்று அறியாமல் போனார்கள். என்னை விட்டு விலகுகிற மாறுபாட்டை கொண்டிருந்து, அவர்களை என்னிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை என்ற நிலையில் இருக்கும், நம்மைப் பார்த்து உன்னை எப்படிக் கைவிடுவேன் என்கிறாரே! எத்தனை அன்பு நம்மேல், எத்தனை பாசம் நம்மேல் அவர் வைத்திருக்கிறார். இந்த எப்பிராயீம் யார்? என்று பார்த்தால் ஆதி 41:52-ல் யோசேப்பு எகிப்தில் இருக்கையில் தனக்குப் பிறந்த இளையமகனுக்கு நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்துக்கு யாக்கோபு அழைத்து வரப்பட்ட போது யோசேப்பின் குமாரரை ஆசீர்வதித்து, என் பேரும் ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது, பூமியில் இவர்கள் மிகுதியாய் பெருகக்கடவர்கள் எனóறும், அதிலும் எப்பிராயீம் அதிகமாய் பெருகுவான், அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். ஆதியாகமம் 48 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம் இவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டு பெருகவும், பலுகவும் வேண்டிய அவன் வாழ்வு எப்படிப்பட்டதாய் இருந்தது என்று பார்ப்போம். 1.எப்பிராயீமுக்கு விரோதமாய் பேசினேன் ஆண்டவர் எப்பிராயீமை எப்படி கைவிடுவேன் என்றார். எரேமியா 31:20-ல் எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ?, அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக் கொண்டே இருக்கிறேன், ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது, அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு பெயர் வைக்கும் போதே பலுகவும், பெருகவும் வாக்கைப் பெற்றவன், ஆனால் அவன் அதற்கு தகுதியானவனாய் இருந்தானா? என்றால் பலகுறைகள் அவனில் இருந்தது. அதில் சிலவற்றைப் பார்ப்போம். ஆண்டவர் எப்பிராயீமுக்கு விரோதமாய் பேசினேன் என்பதற்கு என்ன காரணம்?, நியாயாதிபதிகள் 1:29-ல் எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள். எகிப்திலிருந்து ஜனங்களை அழைத்து வரும் போது யாத் 23:31-33 வரை வாசித்தால் சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம் வரைக்கும், வனாந்தரம் தொடஙóகி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன். நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன், நீ அவர்களை உன் முன்னின்று துரத்தி விட்டு, அவர்களோடே உடன்படிக்கை பண்ணாமல், அவர்கள் உன்னை பாவம் செய்யப் பண்ணாதபடி அங்கு குடியிருக்க வேண்டாம். அது உனக்கு கண்ணியாய் இருக்கும் என்றார். அதை எப்பிராயீமர் கேட்காமல், செய்யாமல், கானானியரை துரத்தி விடாமல், அவர்களுடனே அல்லது இவர்களுடனே தங்க அனுமதித்திருந்தார்கள். அப்படித் தானே நாமும் ஆண்டவர் விரும்பாதவற்றை நம்மை விட்டு அகற்றாமல் நம்மோடே வைத்து அல்லது அதற்கு நம்மில் இடமளித்து வாழ்கிறோம். இந்த லெந்து நாட்கள், தபசு காலங்களை கடைபிடிக்கிற நாம் எதை நம்மை விட்டு அப்புறப்படுத்தாமல் வாழ்கிறோம் என்று ஆராய்ந்து பார்த்து சீர்படுத்திக் கொள்ள நம்மை அர்ப்பணிப்போமா?. அது மட்டுமல்ல நியாயதி 8:1-ல் எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி, நீ மீதியானியர் மேல் யுத்தம் பண்ணப் போகிறபோது எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள். கிதியோன் மீதியானியரோடே யுத்தம் பண்ணப் போகிறபோது கர்த்தர் அதிக கூட்டம் வேண்டாம், முந்நூறு பேரை மாத்திரம் அழைத்துக் கொண்டு போ, மீதியானியரை முறியடித்து இஸ்ரவேலரை இரட்சிப்பாய் என்றார். அதன்படி அவன் செய்தான். ஆனால் இதை அறிந்த எப்பிராயீமர் அவனோடே பலத்த வாக்குவாதம் செய்து, எங்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்டு பிரச்சனை பண்ணுகிற, சுபாவம் உடையவர்களாய் இருந்தார்கள். நியாயாதி 12:1-லும் கர்த்தர் யெப்தாவைக் கொண்டு எதிரிகளை வீழ்த்தும் போதும், நீ எங்களை உன்னோடே கூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ணப் போனதென்ன? உன் வீட்டையும், உன்னையும் கூட அக்கினியால் சுட்டுப் போடுவோம் என்றார்கள். உன்னை மாத்திரம் அல்ல, உன் வீட்டையும் சுட்டுப் போடுவோம் என்று மூர்க்கத்தினாலும், கோபத்தினாலும் கூக்குரலிட்டிருப்பார்கள். சண்டை பண்ணுகிற, வாக்குவாதம் பண்ணுகிற சுபாவம் அவர்களிடத்தில் இருந்தது. நம்மிடம் அப்படி இருக்கிறதா? தீத்து 3:2-ல் ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய், எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு என்று பவுல் எழுதுகிறார். 1 கொரி 6:7-ல் நீங்கள் ஒருவரோடுடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது, அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுகிறதில்லை. ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறதில்லை? என்கிறார். இன்றைக்கு வீடுகளில் கூட இந்த சகிப்புத்தன்மையும், பொருமையும் இல்லாமல் இருக்கிறதல்லவா? வாக்குவாதம், சண்டைகள், பிரிவினைகள், பகைகள், வெறுப்பு, கசப்புகள், வைராக்கியங்கள் இருக்கிறதே! பழிவாங்குதல், பதிலுக்குப் பதில் செய்தல், கோபங்கள், மூர்க்கம் இவைகள் நமக்குள் காணும் போது எப்பிராயீமாகிய நமக்கு விரோதமாய் தேவன் பேசினது நியாயமல்லவா?. ஏசாயா 9:21–ல் மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள். மனாசேயும், எப்பிராயீமும்ó உடன்பிறந்த சகோதரர்கள். ஆனால் பாருங்கள் உடன்பிறந்தவர்களோடு சமாதானமாய் இருக்க முடியாத ஒரு சுபாவம், மனநிலை இருந்தது. ஏசாயா 11:13-ல் எப்பிராயீமின் பொறாமையைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பவுல் ரோமருக்கு எழுதும் போது ரோமர் 13:13-ல் களியாட்டும், வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம் என்று சொல்லுகிறார். பொறாமை ஒரு எலும்புறுக்கி என்று வேதம் சொல்லுகிறது. பொறாமை என்ற குணம் இல்லாமல் மற்றவர்கள் நலனில் மகிழ்ச்சியடைவோம். இன்னும் ஓசியாவின் புத்தகத்தில் அநேக காரியங்களைப் பார்க்கிறோம். ஓசியா 4:17-ல் எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எப்பிராயீம் எவ்வளவு பெரிய தவறைச் செய்கிறான், விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். என்னையன்றி வேறே தெய்வம் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம் என்று ஆண்டவர் சொன்னாரே!, ஆனால் அவனோ விக்கிரகங்களோடு இணைந்திருந்தான். 1 கொரி 10:7-ல் பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார் எனக்குப் பிரியமானவர்களே! விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள் என்றும், கொலோ 3:5-ல் விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள் என்கிறார். அழிப்பதற்குப் பதிலாக இணைந்திருக்கிறார். ஓசியா 5:13-ல் தனக்கு வியாதி ஏற்பட்ட போது அசீரியணன்டைக்குப் போனான். இஸ்ரவேலின் ராஜா அகசியா மேல் வீட்டிலிருந்து தவறி விழுந்து வியாதிப்பட்ட போது, தான் வியாதி நீங்கிப் பிழைப்பேனா? என்று எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூலிடத்தில் விசாரிக்க அனுப்புகிறான். இதை அறிந்த எலியா எதிர்கொண்டு போய் இஸ்ரவேலிலே தேவன் இல்லை என்ற நீங்கள் பாகாலிடம் போகிறீர்கள் என்று கடிந்து கொண்டான் என்று 2 ராஜா 1:2,3-ல் வாசிக்கிறோம். இன்றைக்கு கர்த்தரை விட மிக முக்கியமாக நாம் எண்ணுகிற காரியங்கள் என்ன? ஆபிரகாமிடம் என்னை விட நீ அதிகமாய் நேசிக்கிற உன் ஏக புத்திரனை இந்த மலையில் பலியிட வேண்டும் என்றார். இன்றைக்கு நம் வாழ்வில் இருக்கும் விக்கிரகம் என்ன? யாரை நாடிப் போகிறோம். யாரிடத்தில் அதிகம் இணைந்திருக்கிறோம். நம் வேதம், நம் தேவனாயிருக்கிற வார்த்தை நம்மில் இணைந்திருக்கிறதா? இல்லாவிட்டால் செல்போன் நம்மை ஆக்கிரமித்து அதில் நாம் இணைந்திருக்கிறோமா?. அதில் உள்ள வேண்டாத ஆபாசங்கள், பொழுது போக்குகள், நமது நேரத்தை திருடுகிறதா? அவசியமானதை மட்டும் நாம் உபயோகிக்க கற்றிருக்கிறோமா? எதில் நாம் இணைந்திருக்கிறோம்? ஓசியா 7:8-ல் எப்பிராயீம் அந்நிய ஜனங்களோடே கலந்திருக்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம், 11-ஆம் வசனத்தில் எப்பிராயீம் பேதையான புறாவைப் போல இருக்கிறான். அவனுக்குப் புத்தியில்லை என்று வாசிக்கிறோம். பலவிதமான அந்நிய காரியங்கள் நம்மில் கலந்து விட்டது. இதிலிருந்து வேறு பிரிக்கப்பட்டவர்கள் வாழ்வில் கூட திரும்ப இவைகள் தலை தூக்கியிருக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஞானம், அறிவு, புத்தியில்லை. பேதையான புறாவைப் போல தத்தளிக்கிறோமே! நாம் இதை இப்படியே விட்டு விடலாமா? கூடாது. இன்னும் ஓசியா 12:8-ல் எப்பிராயீம் நான் ஐசுவரியவானானேன், நான் பொருளைச் சம்பாதித்தேன். நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்று சொல்லுகிறான். ஆகாரத்திரட்சி, பொருளை சம்பாதித்த திருப்தி, நல்ல வருமானம், நான் செய்தேன், எனக்குத் தெரியும், அதினால் உண்டான பெருமிதம், பெருமை நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்ற துணிகரமான நடக்கைகள் இருக்கிறது. நான் சம்பாதிக்கிறேன், அனுபவிக்கிறேன். யார் என்னைக் கேட்பது, யாருக்கு நான் கணக்குச் சொல்ல வேண்டும். என் இஷ்டம் என்று வாழ்கிற வாழ்க்கை இருக்கிறது. ஓசியா 11:12-ல் எப்பிராயீமர் பொய்களினாலும், வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார். உண்மையற்ற வாழ்க்கை செய்கிறேன் என்று சொல்வது, ஆனால் செய்வதில்லை இதுவும் எப்பிராயீமரிடம் உண்டு. யோசுவா 17:14-18 வரை வாசிக்கும் போது யோசேப்பின் புத்திரராகிய இவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து வந்ததினால் நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம். எங்களுக்கு இடம் போதவில்லை என்று யோசுவாவிடம் வந்து கேட்கிறார்கள். அதற்கு யோசுவா உங்களுக்கு இடம் நெருக்கமாயிருந்தால் காட்டு தேசத்துக்குப் போய் உங்களுக்கு இóடம் உண்டாக்கிக் கொள்ளுங்கள் என்கிறான். ஆனால் அவர்கள் அங்கே இருக்கிற கானானியரிடத்தில் இருப்பு ரதங்கள் உண்டு என்கிறார்கள். யோசுவா நீங்கள் ஜனம் பெருத்தவர்கள், மகா பராக்கிரமமும் உங்களுக்கு உண்டு. நீங்கள் செயல்பட்டால் மலை தேசம் உங்களுடையதாகும். அது இப்பொழுது காடாய் இருக்கிறபடியால் அதை வெட்டித் திருத்துங்கள். அது கடையாந்திரம் வரை உங்களுடையதாகும். கானானியரிடத்தில் இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களைத் துரத்துவீர்கள் என்றான். இன்றைக்கு அநேகருக்கு ஆசீர்வாதம் வேண்டும் செயல்பட விருப்பமில்லை. ஜெபமா அது பார்க்கலாம். நான் தான் இன்னொருவரை ஜெபிக்க சொல்லி விட்டேனே. சுவிசேஷம் அறிவிக்கனுமா? அதற்குத் தான் ஊழியக்காரர்கள் இருக்கிறார்களே! நான் பணம் வேண்டுமானால் கொடுத்து விடுகிறேன் என்பது உண்மையில் எங்களால் எதுவும் செய்ய இயலாது. அதனால் இதைக் கொடுத்தாவது நான் செயல்படுகிறேன் என்பவர்கள் பரவாயில்லை. ஆனால் செயல்படத் தெரிந்தும், முடிந்தும் செய்யாமல், சோம்பேறிகளாக இருந்து கொண்டு எங்களுக்கு ஆசீர்வாதமó வேண்டும் என்று சொல்லுகிறவர்களாக நாம் இருக்கக் கூடாது. உங்கள் கண் முன்னே இருக்கும் ஆத்துமாக்களைக் கிறிஸ்துவண்டைக்கு நடத்தும் பாரம் நம்மிடம் உண்டா? அவர்களுக்காக ஜெபிக்கவாவது செய்கிறோமா? இத்தனை குறைபாடுகள் நிறைந்த எப்பிராயீமராகிய நம்மை தேவன் நேசிக்க முடியுமா? ஒரு சின்னக் காரியத்தில் நாம் விரும்புகிறபடி செய்யாவிட்டால் அல்லது நாம் விரும்பாத ஏதோ ஒன்றை ஒருவர் செய்து விட்டால் நாம் பொறுத்துக் கொள்வோமா?. ஆனால் தேவன் அவர் நமக்கு உருக்கமாய் இரங்குவேன் என்கிறார். எப்பிராயீமே! நீ எனக்கு அருமையான குமாரனல்லவா?, பிரியமான பிள்ளையல்லவா?. நான் உனக்கு விரோதமாய் பேசினேன், ஆனால் என் உள்ளம் உனக்காக பொங்குகிறது. 2.இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன? எப்பிராயீம் இரக்கம பெற என்ன செய்தானó. ஓசியா 14:8-ல் இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான். நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன் மேல் நோக்கமாயிருந்தேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இதுவரை இப்படி வாழ்ந்து விட்டேன். இனி அதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று துண்டித்துக் கொண்டான். தான் வாழ்ந்த விதத்திற்காக மனஸ்தாபப்பட்டு அழுதான். எரே 31:9,18,19 வசனங்களில் அழுகையோடும், விண்ணப்பங்களோடும் வருவார்கள், அவர்களை வழி நடத்துவேன். அவர்களைத் தண்ணீருள்ள இடறாத செம்மையான வழியிலே நடக்கப் பண்ணுவேன். இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான் என்கிறார். என் பிள்ளை நீ, எப்பிராயீம் உன்னை நான் எப்படிக் கைவிடுவேன். நீ நடந்து கொண்ட சில காரியங்களுக்காக நான் உன்னை சிட்சிக்க வேண்டியதாயிருந்தது. உனக்கு இந்த தண்டனை தரும் போது, உனக்கு விரோதமாய் பேசுகிற போது என் உள்ளம óஉன்னை நினைத்துக் கொண்டேயிருக்கிறது. நீ வருந்தமாட்டாயா? என்னிடத்தில் திரும்பமாட்டாயா? என்று ஏங்கினேன் என்கிறார் எப்பிராயீம் தன்னைத் தாழ்த்துகிறான். ஆண்டவரே! நீர் என்னைத் தண்டித்தீர், இல்லையென்றால் நான் பணியாத மாடு போல, என் இஷ்டம் போல அலைந்திருப்பேன். என்னை மன்னியும், என்னைத் திருப்பும், நான் திரும்புவேன். நீரே என் தேவனாகிய கர்த்தர், நான் மனஸ்தாபப்படுகிறேன். என்னை என் தவறை அறிந்து என் விலாவில், என் மார்பில் அடித்துக் கொண்டு இப்படி நடந்து விட்டேனே என்று வெட்கி நாணிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வந்த நிந்தை, அவமானம், சிறுமை எல்லாம் உம்மால் வந்தல்ல, என்னால் வந்தது. நான்தான் அதற்குக் காரணம் என்று புலம்புகிறான். ஆண்டவர் அதை நிச்சயமாய் கேட்டேன் என்று சொல்லித் தான் எப்பிராயீம்! நீ எனக்கு அருமையான குமாரன் அல்லவா? எனக்குப் பிரியமான பிள்ளையல்லவா? உனக்கு உருக்கமாய் இரங்குவேன் என்கிறார். 3.எப்பிராயீமே நான் உன்னை அழிக்கமாட்டேன் நம் இயேசு நல்லவர், மிகுந்த கிருபையும் இரக்கமுமுள்ளவர். இவ்வளவு தீமைகள் நிறைந்தவர்களாகிய நம்மை அவர் நேசிக்கிறார். அதனால் தான் இயேசு சிலுவையில் மரித்தார். இவர்கள் மேல் உள்ள தண்டனைகளை நான் சுமக்கட்டும் என்று பொன்னினாலும், வெள்ளியினாலும் நம்மை மீட்காமல், குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸóதுவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்களென்று 1 பேதுரு 1:18,19-ல் பேதுரு எழுதுகிறார். இயேசு எனக்காக இரத்தம் சிந்தி மரித்தார். அவரது சிலுவை மரணத்தினால் எனக்கு மீட்பு உண்டாயிருக்கிறது என்று விசுவாசியுங்கள். ஓசியா 11:9-ல் என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன். எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன், ஏனென்றால் நான் மனுஷனல்ல தேவனாயிருக்கிறேன். நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர். ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன். நான் உன்னை கைபிடித்து நடத்தி, உன்னை குணமாக்க விரும்புகிறேன் என்று சொல்லுகிறார். இன்றே இயேசுவிடம் நம்மை அர்ப்பணிப்போமா? எப்பிராயீமே உன்னை நான் எப்படி கைவிடுவேன், என்னிடம் வா! நான் உன்னை வாழ வைப்பேன். நீ ஏன் சாக வேண்டும், நீ ஏன் அழிந்து ஆக்கினை அடைய வேண்டும். நான் உன்னை மன்னித்து, நான் உன்னை வாழ வைப்பேன் என்று அழைக்கிறார். இயேசுவின் கரங்களில் நம்மைக் கொடுப்போம். என் ஆண்டவர் தாமே இதை வாசிக்கிற ஒவ்வொருவரையும் தம் அன்பின் கயிறுகளால் கட்டி அணைத்துக் கொள்வாராக!.

By Sis. Kala VincentRaj