Inspiration

நான் குருடனுக்குக் கண்ணும் சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு உலகம் முழுவதும், எங்கு பார்த்தாலும் கண்தானம்,இரத்த தானம் பண்ணுகிறார்கள். மூளைச்சாவு ஏற்பட்டவர்களுடைய கிட்னியை அல்லது இருதயத்தை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்துகிறார்கள். இப்படி ஒருவருடைய உறுப்பை எடுத்து எத்தனை பேருக்கு பொருத்தி வாழ வைக்க முடியும், உயிர் கொடுக்க முடியும். யாரோ ஒருவருக்குத் தான் அதைச் செய்ய முடியும். ஒரு மாற்று உறுப்பைப் பொருத்த முடியும். ஆனால் இன்றைக்கு நீங்களும், நானும் பின்பற்றுகிற ஆண்டவராகிய இயேசுவோ நமக்காக தம் ஜீவனையே கொடுத்து, நம்மை வாழவைக்க அவர் சிலுவையில் பலியானார். யோவான் 15:13-ல் ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்றார். தானத்திலே பெரிய தானம் செய்தவர் இயேசு ஒருவர் மாத்திரமே. அதை உணர்ந்த யோபு பக்தன் ஆண்டவராகிய தேவனைப் பார்த்து இப்படியாகத் துதித்தான். யோபு 29:15-ல் நான் குருடனுக்குக் கண்ணாயிருந்தேன், முடவனுக்குக் காலுமாயிருந்தேன். எளியவனுக்குத் தகப்பனாயிருந்தேன், விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப் பண்ணினேன் என்றார். இன்றைக்கு கண் தெரிகிறது என்று சொல்லுகிற அநேகர் குருடராக தடவித்திரிகிறார்கள். யோவான் 9:39-ல் இயேசு சொன்னார் காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். இன்றைக்குப் பார்வை தெரிகிறது, கண் நன்றாய் இருக்கிறது,என்பவர்களால் தான் பல பிரச்சனைகள் வருகிறது. உலகத்தில் சாலைகளில், ரோடுகளில் பல விபத்துக்கள், ஏன் விமான விபத்துக்கள், இரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது, ஆபத்துக்கள் நேரிடுகிறது. யாரால் கண் தெரிகிறது என்பவர்களால் தான். ஏன்? எனக்குத் தெரியும் என்றும், நான் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன், எது வந்தாலும் சமாளிக்களாம் என்கிற ஒரு துணிவு. ஆனால் கண் தெரியாது என்று சொல்லுகிற மனிதர்களைப் பாருங்கள். என்னால் நடக்க முடியாது, என்னால் தனியாக எதையும் செய்ய முடியாது, எனக்கு வழிகாட்ட, உதவி செய்ய, துணையாக மற்றொருவர் வேண்டும்.இல்லையென்றால் ஏதாவது ஆபத்திலோ,விபத்திலோ சிக்கி விடுவேன். என்னால் பலருக்கு பிரச்சனை வரும் என்று மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இதைத்தான் யோபு தன் ஆகமத்தில் சொல்லுகிறார் குருடனுக்குக் கண்ணாக இருந்தேன், முடவனுக்குக் காலாக இருந்தேன், வழிப்போக்கனுக்கு ஆதரவாய் இருந்தேன் என்கிறார். இன்றைக்கு நமக்கு கண் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான். அவர் இல்லாமல் எந்த ஒரு ஆசீர்வாதத்தையும்,பரலோகக் காரியங்களையும் நாம்மால் பார்க்க முடியாது. சுற்றி சுற்றி பூமியை மாத்திரம் தான் பார்க்க முடியும். சங் 32:8-ல் உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனைச் சொல்லுவேன் என்கிறார். இன்றைக்கு அவருடைய கண்கள் நாம். சகரியா 2:8-ல் உன்னைத் தொடுகிறவன், அவருடைய கண்மணியைத் தொடுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. லூக்கா 11:34,36-ல் கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும், உன் கண்கெட்டதாயிருந்தால் 

உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறது போல, உன் சரீரமுழுவதும்வெளிச்சமாயிருக்கும் என்றார். அவர் நமக்கு கண்ணுக்கு கண்ணாக, பல்லுக்குப் பல்லாக இருக்கிறார். குருட்டாட்டமான இந்த மாய உலகத்தில் அவர் நமக்கு கண்ணாக இருந்து, பார்வையாக இருந்து தெளிவோடு, வழிவிலகாமல், சரியான வழியில் நடக்கவும், போக வேண்டிய பாதையில் போகவும் நம்மை நடத்துகிறார்.

அப் 9:17-ல் அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள் பிரவேசித்து, அவன் மேல் கையை வைத்து, சகோதரனான சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது எங்கள் குடும்பத்தில் என் தாயாருக்கு திடிரென ஓர் இரவு படுத்து எழுந்திருக்கும் போது இரண்டு கண்களும் தெரியாமல் போய் விட்டது. அந்த நாட்களில் சரியான மருத்துவ வசதி இல்லாததினால் பல நாட்டு மருந்துகள் எல்லாம் எடுத்துப் பார்த்தும் சரியாகவில்லை. அதன் பிறகு அவர்கள் ஏறக்குறைய 30 வருடங்கள் அதே நிலையில் தான் இருந்து மரித்தார்கள். இது என் வாழ்க்கையை மிகவும் பாதித்தக் காரியம். சில சமயங்களில் மழை உண்டானால், இடி இடித்தால், மின்னல் உண்டானால் பார்வை பறி போய்விடுகிறது. பார்வையில்லாதவர்களுடைய வாழ்க்கை பரிதாபமானது. அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையில் இப்படித்தான் பார்வை பறிபோனது. ஏன? ஒரு நாள் நண்பகல் வேளையிலே, அன்றைக்கு இருந்த அரசாங்கத்திலே ஒரு அனுமதி கடிதத்தை வாங்கிக்கொண்டு அங்கிருக்கிற கிறிஸ்தவர்களை,ஜெபிக்கின்றவர்களை சிறைப்படுத்தவும், துன்பப்படுத்óதவும் தமஸ்கு என்ற பட்டணத்தை நோக்கி பிரயாணப்பட்டான். காரணம் மதவெறியனாக, முரடனாக இருந்தான். ஆனால் இன்றைக்கு பாருங்கள் மதவெறியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். 

மாற் 5:4,5-ல் அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும், சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்துப்போடுவான், விலங்குகளைத்தகர்த்துப்போடுவான்.அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும், பகலும் மலைகளிலும், கல்லறைகளிலும் இருந்து கூக்குரலிட்டு கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான். சவுல் பவுலாக மாறுவதற்கு முன்பாக இப்படித்தான் இருந்தான். தான் செய்வதுதான் சரி, தான் சொல்லுவது தான் சரி, என்னை கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இப்படித்தான் வாழ்வேன், இருப்பேன் இதுவும் ஒரு ஊழியம் தான் என்று தன் உள்ளத்திலே ஒரு அகந்தை, பெருமை. அந்த தலைகனத்தினாலே அவன் தமஸ்குவுக்கு போகிறபோது, தானó குதிரைப்படையோடு போனபோது திடிரென சூரியனிலும் அதிக பிரகாசமுள்ள ஒரு வெளிச்சம் அந்த இடத்தில் தோன்றியது. அந்த வெளிச்சத்தின் மிகுதியினால் பார்வை பறிபோனது. அதே இடத்தில் அவன் நிலை குலைந்து பார்வை பறிபோக குருடனாக மாறிப்போனான். சிலருக்குப் பார்வை பறிபோனது, சிலருக்குப் பார்வை மங்கிப்போய்விட்டது. தேவனை எதிர்த்தலோ, அல்லது அவருடைய வழியைவிட்டு விலகினாலோ பார்வையை இழந்து விடுவோம். இதைத்தான் பவுலுடைய வாழ்க்கையில் பார்க்கிறோம். பிலேயாம் என்ற தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் அவர் சொன்ன வார்த்தை குறிதப்பாது என்று ஜனங்கள் எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். காரணம் வேறுயாரும் அப்போது தீர்க்கதரிசியாக இல்லை.அவர் சபித்தால் சபித்ததுதான், அவர் ஆசீர்வதித்தால் ஆசீர்வாதம் தான். அப்படிப்பட்ட அந்த தீர்க்கதரிசிக்கு தேவனையோ, தேவதூதர்களையோ பார்க்க கண் தெரியாமல் போய்விட்டது. பெரிய பெரிய தொழில் அதிபர்கள், ராஜாக்கள் இவர்களைப் பார்க்க கண் தெளிவாய் தெரிந்தது, தேவனைப் பார்க்க தெரியவில்லை.

காரணம் 2 பேதுரு 1:9-ல் வாசித்துப் பார்க்கும்போது இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகிப்போன குருடனாயிருக்கிறான். கண் சொருகி அந்தி, இரவு நேரங்களில் பார்க்க முடியாமல், பார்வை குறைந்து, தன்னிடம் உள்ள வெளிச்சம் குறைந்து மங்கிப்போனான்.இதைத்தான் பிலேயாம் செய்தான். 

எண் 22:22-ல் அவன் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கப் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது. கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான். கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியில்  நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று. அதனால் பிலேயாமுக்கு கோபம் வந்து கழுதையைப் போட்டு அடித்தான் கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது ஏன் வழியைவிட்டு விலகிப்போனது என்பதற்கான காரணத்தை சொல்லிற்று. கழுதைக்குத் தெரிந்தவழி, கழுதைக்குக் கிடைத்த வெளிச்சம் பிலேயாமுக்கு இல்லை. காரணம் பணஆசை, உலக ஆசை, சொத்து ஆசை எப்படியாவது இந்தப் பணத்தை வாங்கி விடவேண்டும், காணிக்கையைப் பெற்று விடவேண்டும் என்று அலை மோதினான்.. காரணம் கண் சொருகிப்போன, குருட்டாட்டம் பிடித்துக் கொண்டது. பூனைப்பால் குடிக்கும்போது, அதாவது சமையல் அறையில் இருக்கும் பாலை திருட்டுத்தனமாய் குடிக்கும்போது உலகமே இருளாயிருக்கும் என்று நினைத்துக் குடிக்குமாம். அப்படித்தான் பிலேயாமும் தவறு செய்யும் போது யாருக்குமே தெரியாது, தேவனுக்கும் கூட தெரியாது என்று நினைத்தான். ஆனால் ஆண்டவர் அவன் குருட்டாட்டத்தை மாற்றி, கண் சொருகிப்போனதை மாற்றி அவன் கண்களைத் திறந்தார் எண் 22:31 அப்படிச் சொல்லுகிறது. இன்றைக்கு அநேக தேவபிள்ளைகள், தேவ மனிதர்கள் தேவனுடைய பாதையை விட்டு, தேவனுடைய சித்தத்தை விட்டு தவறும் போது, வழிவலகும் போது கண் சொருகி குருடர்களாக போய் விடுகிறார்கள். தேவனுடைய வழி நமக்கு மறைக்கப்படுகிறது. ஆகவேதான் இதை உணர்ந்த, இந்த தவறை கண்டுபடித்த ஏசாயா தீர்க்கதரிசி ஏசா 59:10-ல் நாங்கள் குருடரைபோல் தடவுகிறோம். இரவில் இடறுகிறது போலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம். செத்தவர்களைப் போல் பாழிடங்களில் இருக்கிறோம் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அந்த குருடாட்டத்தை, கண் சொருகிப்போன வாழ்க்கையை சரி செய்து கொண்டார். ஆனால் ஏலி என்ற தீர்க்கதரிசியைப் பாருங்கள்

1 சாமு 3:2-ல் ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்,அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. ஆனால் அதே நேரத்தில் மோசேயின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவருக்கு 120 வயது.

உபா 34:7 சொல்லுகிறது மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான், மோசே கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. காரணம் தேவனுடைய திட்டத்திலே, சித்தத்திலே, அவருடைய வழிகளிலே நின்று, அவரை விட்டு பின்வாங்காமல், வழி விலகாமல் இருந்தான். அதனால் அவன் பார்வை மங்காமல், அவன் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மங்காத ஒரு வாழ்க்கையாக, பிரகாசிக்கிற ஒரு வாழ்க்கையாக இருந்தது. ஆனால் ஏலி தேவனுடைய வழியை விட்டுவிலகி அவர் சித்தத்தைச் செய்யாமல், தேவனுடைய கோபத்திற்கு உள்ளாகி கண்மங்கி, சொருகிப் போனான்.

1 சாமு 2:33-ல் என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள் என்றார். இதுதான் இன்றைக்கு தேவனைவிட்டு வழிவிலகுகிற அநேகருடைய வாழ்க்கையில் நடக்கிறது. கண் சொருகிப்போய், குருட்டாட்டம் பிடித்து, தேவனுடைய வழியில் நடக்காமல, அவர் சித்தத்தை செய்யாமல், கண் பார்வை இழந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த இழந்த கண் பார்வை நமக்குத் திரும்ப கிடைக்க வேண்டுமானால் வெளி 3:18-ல் ஆண்டவராகிய தேவன் நமக்குச் சொன்ன ஆலோசனையின்படி நீ பார்வையடையும்படிக்கு, உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். இன்றைக்கு அவருடைய இரத்தத்தால், அவருடைய வார்த்தையால் கழுவப்பட வேண்டும், சுத்திகரிக்கப்பட வேண்டும், பரிசுத்த ஆவியானவரைப் பெற வேண்டும். அவருடைய அபிஷேகத்தால் நிரம்ப வேண்டும். இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஆண்டவராகிய தேவன் செய்தார். அவரைப்பிடித்திருந்த செதில்கள், திரைகள் விலகும்படி அனனியா என்ற தேவமனிதனை அனுப்பி பார்வையடைவாயாக, பார்வை பெறுவாயாக என்று கண்களை திறந்தார். இன்றைக்கு அந்த தேவன் யார் யார் எல்லாம் எனக்கும் தேவனுடைய பார்வை வேண்டும், தேவனுடைய வழியில் நடக்க வேண்டுமென்று தன்னைத் தாழ்த்துகிற அத்தனை பேருக்கும் தேவன் தயவாய் இரங்கி ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டு, மங்காத வாழ்க்கையை, பிரகாசிக்கிற ஒரு வாழ்க்கையை தந்து ஆசீர்வதித்து நடத்துவார். என் தேவன் தாமே நீங்கள் பார்வை அடையும்படி கண்களைத் திறப்பாராக. அதற்கு அவர்கள், ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வையடைந்து அவருக்குப் பின்சென்றார்கள்.

மத் 20:33,34. இரண்டு குருடர்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆண்டவரே நாங்கள் பார்வை பெறவேண்டும், கண் இருந்தும் காணாதவர்களாய் இருக்கிறோம். பார்வை இருந்தும் தெளிவு இல்லை. மாற் 8:24-ல் சொல்லும் போது நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கிறோம் என்றார்கள். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் இப்படித்தான் பார்வை இருக்கிறது, தெளிவானப் பார்வையில்லை. கண் தெரிகிறது ஆனால் குருட்டாட்டமாய் காணப்படுகிறது. தேவனுடைய காரியங்களை, தேவனுடைய திட்டங்களை நம்மால் தெளிவாய் அறிந்து கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. திறை மறைப்பது போல மறைக்கப்படுகிறது. 

2 கொரி 4:4-ல் தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு,இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். மனக்கண்ணைக் குருடாக்கி, தடவி திரிகிறதுபோல ஆக்கிவிட்டான். இன்றைக்கும் இந்த இருதயக் கண்களை, மனக்கண்களை திறக்க உலகத்தாலும், யாராலும் முடியாது. ஆண்டவராகிய இயேசுவால் மட்டுமே முடியும். அதனால் தான் அவர் பலமுறை எருசலேமின் குடிகளைப் பார்த்து மக்களைப் பார்த்து அழுதார். லூக்கா 19:42-ல் இப்பொழுதோ, அவைகள் உன கண்களுக்கு மறைவாயிருக்கிறது, உனக்கு வரப்போகிற தீமைகள், ஆபத்துக்கள் தெரியாமல் நீ மேலோட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.. உன் கண் திறக்கப்படுவது அவசியமாயிருக்கிறது என்றார். பழைய ஏற்பாட்டில் ஆகார் என்ற பெண் தாகத்தோடு தண்ணீர் இல்லையே என்று அழுதபோது, கதறியபோது ஆண்டவர் குளத்தையோ, ஆறுகளையோ காட்டவில்லை. உடனே அவள் கண்களைத்தான் திறந்தார். ஆதி 21:19 அப்படிச் சொல்லுகிறது. அதுவரை தேவன் ஆகாருக்கு ஆயத்தம் பண்ணின ஆசீர்வாதத்தை பார்க்க முடியாதபடி கண்கள் மங்கி, குருட்டாட்டமாக இருந்தது. இன்றைக்கும் இதனால் தான் வேதம் சொல்லுகிறது பார்வை பெற வேண்டும், கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று. சீஷர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் இயேசு அவர்களோடு சேர்ந்துதான் வழிநடந்து போகிறார் என்று லூக்கா 24:16 சொல்லுகிறது ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.இயேசுவோடு வாழ்ந்தவர்கள், பழகினவர்கள், அவர் சத்தத்தைக் கேட்டவர்கள் ஆனால் இப்பொழுது அவரை காண முடியாதபடிக்கு அவர்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது. இதை அறிந்த இயேசு லூக்கா 24:30,31-ல் இயேசு அவர்களோடே பந்தி இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள், தெரிய வேண்டிய விதத்திவ் அவரை தெரிந்து கொண்டார்கள். 45-ஆம் வசனத்தில் திரும்ப அவர்களுடைய மனதை அவர் திறந்தார், மந்த நிலையை மாற்றினார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதரனே, சகோதரியே நாம் பார்வை பெறவும், கண்கள் திறக்கப்படவும் தேவன் விரும்புகிறார். நம்முடைய குருட்டாட்டம் மாறவும், மங்கிபóபோன பார்வை பிரகாசிக்கவும் விரும்புகிறார். இன்றைக்கு அந்த இயேசுவைப் பார்த்து ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும், பரலோகத்தைப் பார்க்கவும், உம்மைத் தரிசிக்கவும், உமக்குப் பிரியமாய் வாழவும் என் கண்களைத் திறந்தருளும் என்று வேண்டிக் கொள்ளுங்கள், கேளுங்கள். கேட்கிற எவனும் பெறுகிறான் என்ற வார்த்தையின்படி என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களைப் பார்வையுள்ளவர்களாக மாற்றுவாராக.

எபேசியர் 1:19 ல் சொல்லப்பட்ட வார்த்தையின்படி பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுப்பாராக. உங்களை கண் திறக்கப்பட்டவர்களாக மாற்றுவாராக ஆமென்.

பிள்ளைகளே எனக்கு
செவிகொடுங்கள்

ஏன் தான்
எனக்கு இந்த பாடோ ?

அரசன்
கொடுத்த டாஸ்க்