Inspiration

வேதனை நீங்கி சுகமாயிரு...

அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். மாற்கு 5:34

மாற்கு 5:34 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். 12 வருட பெரும்பாடுள்ள பெண்தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்தும் மருத்துவர்களால் அவளை சுகப்படுத்த முடியவில்லை. மிகுந்த மனவேதனையில் இருந்தபோது இயேசுவிடத்தில் போனால், அற்புதம் நடக்கும் என்று கேள்விப்பட்ட அந்த பெண் இயேசுவின் உடையை, வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் போதும் என்று விசுவாசத்தோடு வந்தால், அவரைத் தொட்டாள் அற்புதம் நடந்தது. இயேசு அந்த பெண்ணைப் பார்த்துச் சொன்னார் மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி சுகமாய் இரு என்றார்.

பல வருடங்களுக்கு முன்பாக நாங்கள் பெங்களூர் பட்டணத்திற்கு ஊழியத்திற்காகபோய்க் கொண்டிருந்தபோது புதுசத்திரம் என்ற இடத்தில் போகும்போது எதிராக வந்த மணல் லாரி எங்கள் காரில் மோதி விட்டது, நாங்கள் தூக்கி எறியப்பட்டோம்.எனக்கு பலமான அடி கழுத்து எலும்பு உடைந்தது. அந்த வலி தாங்க முடியாமல் நான் மயக்கம் அடைந்தேன், சுயநினைவை இழந்தேன். சரீரத்தில் ஒரு சின்ன வலி, வேதனை வந்தாலே மனிதன் சுயநினைவை இழந்து விடுகிறான். ஆபóரேஷனுக்கு ஏன் மயக்க மருந்து கொடுக்கிறார்கள் வலி தெரியாமல் இருக்கத்தானே. ஆனால் தற்போது (பெயின் கில்லர்)வலி மாத்திரைகள் எடுத்தால், சாப்பிட்டால் கிட்னி பாதிப்படைகிறது என்று சொல்லுகிறார்கள். நம் சரீரத்தில் வலி வந்தால் எவ்வளவு வேதனையாக உள்ளது. ஆனால் இந்த உலகத்தில் அநேகர் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் வியாதி தீர்ந்த பாடு இல்லை, வலி வேதனை நீங்கவும் இல்லை என்று வேதனையில் துடிக்கிறார்கள்.

ஒரு சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள், இவர்கள் படிப்பு, எதிர்கால வாழ்க்கைக்காக வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்.ஆனால் இரண்டாவது மகள், அவள் விருப்பம் போல திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அந்த தகப்பன் மனம் உடைந்து போனார் இவர்களுக்காகத் தானே நான் வெளிநாட்டில் கஷ்டப்படுகிறேன். இவள் இப்படி செய்து விட்டாளே என்று வேதனையில் துடித்தார். ஆம் நாமும் பிள்ளைகளைக் குறித்து ஒரு விருப்பம், திட்டம்வைத்திருப்போம்.ஆனால் அவர்கள் சுயமாய் முடிவெடுக்கிறார்கள்.வேதனை நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இயேசு சொன்னார் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று. நான் ஜெபித்து என்னத்தை கண்டேன், எதற்கு ஆண்டவரை நேசிக்க வேண்டும் என்று சாத்தான் ஒவ்வொருவரையும்திசை திருப்புகிறான், இருளுக்குள் நடத்துகிறான், வேதனையை பெருகப் பண்ணுகிறான். கர்த்தர் மேல் நம்பிக்கையை இழக்கச் செய்கிறான். என் அன்பு சகோதரனே, சகோதரியே நீங்கள் வேதனைப்படுவது தேவனுடைய விருப்பம் அல்ல. அவர் தாமே நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, துக்கங்களை, வேதனைகளையும்அவர் சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். எனவே நம்முடைய வலி வேதனைகள் அவருக்குத் தெரியும்.எவ்வளவு உழைத்தும்குடும்பத்தை முன்னேற்ற முடியவில்லை, பொருளாதாரப் பிரச்சனை, பற்றாக்குறை உள்ளது, கடன் நெருக்கடி, சஞ்சலம் தான் என் வாழ்க்கையில் உள்ளது என்று நினைக்கிறீர்களா? கலங்காதீர்கள் தேவன் உங்கள் நிலையை மாற்றுவார். உங்கள் வலி வேதனை முற்றிலும் மாறும்.

யாத் 3:7-ல் அப்பொழுது கர்த்தர், எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.இஸ்ரவேல் ஜனங்கள் 430 வருஷம் எகிப்திலே மிகவும் வேதனைப்பட்டார்கள். நல்ல சாப்பாடு கிடையாது,சம்பளம் கிடையாது, செங்கல் அறுக்க வேண்டும். மிகவும் நெருக்கப்பட்டார்கள் அவர்களுக்கு வாழ்க்கையே கசப்பானது. ஏன் வாழ வேண்டும் என்று நினைத்தார்கள். பார்வோனால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஒரு வேதனை என்றால் ஒருவரோடு முடியவில்லை, அவர்கள் தலைமுறையே சேர்ந்து கஷ்டப்பட்டார்கள். இவர்களுடைய வேதனையை அறிந்த,பார்த்து விடுதலை தந்த தேவன், உங்களுடைய சரீர வலியா? மனவலியா? ஆத்துமா வலியா? எதுவாயிருந்தாலும் அதிலிருந்து உங்களை விடுதலையாக்குவார்.கர்த்தர் உபத்திரவபடுத்துகிறவர்களின் நிமித்தம், வட்டி வாங்குகிறவர்களின் நிமித்தம், ஒடுக்குகிறவர்களின் நிமித்தம் நீங்கள் இடுகிற கூக்குரலை கேட்டேன், நீங்கள் படுகிற வேதனையை அறிந்திருக்கிறேன் என்கிறார்.

நீங்கள் நினைக்கலாம் என் வேதனை யாருக்கும் தெரியலேயே, ஒரு மருத்துவர் வந்துமாத்திரைக்கு பதிலாக என் வேதனையை, வலியை சுமந்தால் நன்றாக இருக்கும் என்கிறீர்களா.யோபு 17:3-ல் அவர் சொல்லுகிறார் தேவரீர் என் காரியத்தை மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக, வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?தேவரீர் எனக்காக பிணைக்கப்படுவீராக என்றும், எனக்கு உண்மை விட்டால் வேறு யாரும் இல்லை, நான் ஒரு அனாதை, நாடோடி, இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை.கொப்பளங்கள் வெடித்து சிதறுகிறது. நீர் எனக்காகபிணைப்படுவீராக என்று யோபு கண்ணீரோடு ஜெபிக்கிறார். ஆண்டவர் அவர் வேதனையை மாற்றி, சிறையிருப்பை மாற்றினார். இன்றைக்கு அந்த தேவன் உங்கள் வேதனையை மாற்றுவார். உங்கள் வேதனை என்ன? ஏன் தூங்க முடியவில்லை, ஏன் இழப்பு, யாரை நம்பி இருக்கிறீர்கள். அவர்கள் உங்களை கைவிட்டு விட்டார்களா? சங்கீதக்காரன் சொல்லுகிறார் வேதனைப்பட்டேன் ஒடுங்கிப்போனேன் துக்கத்தோடு நாள்முழுவதும் திரிகிறேன் என்று சொல்லுகிறார். நம்முடைய வேதனைகளை, வலிகளை அவர் பார்த்துக்கிட்டேதான் இருக்கிறார். வேதனைப்படுகிறதற்கு ஒரு காலம் வந்தால், அந்த வேதனையை மறக்க ஒரு காலம் உண்டு.

1. மனிதர்களால் வேதனை

யோசேப்பு வாழ்க்கையை பாருங்கள் அவன் நாடு கடத்தப்பட்டான்.உடன் பிறந்தவர்களால் 20 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான் சில சகோதரர்கள் இருக்கிறார்கள்எப்படியெல்லாம் சகோதரன் சொத்தை அபகரிப்பது, தங்கள் பெயருக்கு மாற்றுவது என்று திட்டமிடுவார்கள். யோசேப்பு, ஏன் என்னை குழியில் தள்ளுகிறீர்கள் என்றுஅழுது இருப்பான். அதில் ஒருவன் இரக்கப்பட்டு தூக்கி எடுத்தான். எகிப்திலே போய் போத்திப்பார் வீட்டில்இரவும் பகலும் வேலை செய்தான். அங்கும் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன். சிறையில் இருந்தாலும் தேவனை சார்ந்து நின்று ஜெபித்தான், தேவன் அவனோடு இருந்தார். இந்த ஒரு மனிதனை உயர்த்தும்படி பார்வோனுக்கு சொப்பனத்தைவர வைத்தார்.ஏழு வருடம் செழிப்பாகவும், ஏழு வருடம் பஞ்சத்தைக் கொடுத்து அந்த தேசத்தில் யோசேப்பை உயர்த்தினார். நான் சஞ்சலப்பட்ட தேசத்தில் என் வருத்தங்கள், என் சஞ்சலங்கள், என் துக்கங்கள் எல்லாம் தேவன் மறக்கும்படி எனக்கு மனாசே என்ற பிள்ளையைக் கொடுத்தார்.மனாசே என்றால் என் சஞ்சலத்தை மாற்றுகிறவர் என்று அர்த்தம். அந்த தேவன் இன்றைக்கு நீங்கள், நாம் போகும் பாதையை, அலைச்சல்களை அறிந்திருக்கிறார். நம் கண்ணீரைத் துருத்தியில் வைத்திருக்கிறார். நம் பாடுகள், வேதனைகள், போராட்டங்கள் அவருக்கு தெரியும். அவர் நம்முடைய சஞ்சலத்தை மாற்றுவார்.

அன்னாளின் வாழ்க்கையை பாருங்கள் பிள்ளை இல்லை என்ற வேதனை. அன்னாளின் சகோதரி அவளுக்கு பிள்ளை இல்லை என்று வேதனைப்படுத்தினால், இன்றைக்கு நம்மை பார்த்து மற்றவர்கள் சொந்த வீடு இருக்கா? நிரந்தரமான வருமானம் இருக்கா? சொத்து இருக்கா?சொந்ததொழில் இருக்கா? உன் பிள்ளைக்கு எவ்வளவு நகை போடுவாய் என்று கேட்கிறார்கள். அவர்கள் கண்கள் முன்பாக தேவன் நம்முடைய சஞ்சலத்தை மாற்றுவார். ஒரு அற்புதத்தை செய்வார், வேதனையை நீக்குவார். உங்கள் வேதனை அவருக்கு தெரியும், வலிகள் அவருக்கு தெரியும்,நீங்கள், உங்கள் பிள்ளைகளை கரை சேர்ப்பததைக் காட்டிலும், அவர் உங்கள் பிள்ளைகளை மேன்மையாக கரை சேர்த்திடுவார். நீதி 10:22-ல் கர்த்தரின் ஆசீர்வாதமே ஜசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார். கர்த்தர் ஆசீர்வதித்தால் அதில் வேதனை இல்லை. நமக்காக பணம் சேர்த்தால், அதற்காகவே ஓடி ஓடி உழைத்தால், அலைந்தால் நமக்கு வேதனை வரும்.

2. அந்நிய தேவர்களைப் பின்பற்றினால் வேதனை

சங்கீதம் 16:4-ல் அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். தேவனை மறந்து மற்றவைகள் மேல் நம்பிக்கை வைக்கும் போது நமக்கு வேதனை வரும். நாம் ஆராதிக்கும் தேவன்முட்டை, பால் கேட்பவர் அல்ல. நம் இருதயத்தை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி அவரிடம் இருதயத்தை கொடுக்கும்போது நம் வாழ்வில் சமாதானத்தை கொடுப்பார். உங்கள் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றுவார்,கள்ள உறவுகளிலிருந்து விடுதலை ஆக்குவார். நம்முடைய சுபாவத்தைமாற்றுவார். சிலருக்கு பணம்தான் செல்வமாக இருக்கும்.எப்பொழுதும் பணம் பணம் என்று அலைவார்கள். குடும்பத்தை நேசிக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு வேதனை பெருகும் என்று வேதம் சொல்லுகிறது.

நாம் ஒருப்ளான் போட்டு வைத்துக்கொண்டு ஆண்டவரே எனக்கு இதை நிறைவேற்றி தாங்க என்று கேட்கக் கூடாது. உன் வழிகள் என் வழிகள் அல்ல, உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்று வேதம் சொல்லுகிறது. உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி, அவரே காரியத்தை வாய்க்கச் செய்வார். கர்த்தருடைய சித்தத்தை, திட்டத்தை விட்டு மனம் போன போக்கில் போகிற யாராக இருந்தாலும் அவர்களுக்கு வேதனைகள் பெருகும். ஆரோனை போல நீயாக ஒரு தெய்வத்தை உண்டு பண்ணி கொள்ள கூடாது, அவைகளை நாடி தேடி போகக் கூடாது. நாம் தேவனை அனுதினமும் நோக்கி பார்க்க வேண்டும். அதுதான் நாம் தேவன் மேல் வைக்கும் அன்பு.

சங்கீதம் 32:10-ல் துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.தேவனை நம்பாமல் அவருடைய வசனத்தை கைக்கொள்ளாமல்புறக்கணிக்கிறவர்களுக்கு அநேக வேதனைகள் உண்டு. கர்த்தரை நம்புகிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். நமக்கு ஆபத்து வராதபடிக்கு அவருடைய தூதனை அனுப்பி நம்மை பாதுகாப்பார், தப்புவிப்பார். நாம் வேதனைகளுக்கு, வலிகளுக்குஇடம் கொடுக்கக் கூடாது. சங்கீதம் 139:24-ல்வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று வாசிக்கிறோம். எப்படி சாத்தான் நம் வாழ்வில் வருகிறான், பிரச்சனைக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேதனை உண்டாக்குகிற வழிகளை நம்மை விட்டு அகற்ற வேண்டும்.தாவீது வேதனை உண்டாக்கும் வழியை தன்னை விட்டு அகற்றி கர்த்தருக்கு நேராக தன் இருதயத்தை திருப்பினான். அதனால்தான் அவருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக அவன் இருந்தான். நாமும் நம்முடைய இருதயத்தை கர்த்தருக்கு நேராக்கினால் வேதனை உண்டாக்கும் வழியை எல்லாம் நம்மை விட்டுஅகற்றுவார். நாம் நல்ல சுகத்தோடு,பெலத்தோடு இருப்பதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார்.

3. பிசாசினால் வேதனை

மத்தேயு 15:22-ல் அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி, அவரிடத்தில் வந்து ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள் என்று சொல்லப்பட்டுள்ளது என் மகள், மகன், கணவன், உறவினர்கள்பிசாசினால் வேதனைப்படுகிறார்கள் என்று கலங்குகிறீர்களா? பிசாசுகளுக்கு தண்டனையின் இடம் தான் பாதாளம். அதனால்தான் அவைகள் இயேசுவை பார்த்து எங்களை வேதனைப்படுத்தவா வந்தீர் நீர் எங்களை பாதாளத்திற்குள் அனுப்பாதையும் இந்த பன்றி கூட்டத்துக்குள் போக எங்களுக்கு உத்தரவு கொடும் என்று கெஞ்சியது. கொடிய வேதனை நிறைந்த இடம்தான் பாதாளம். சாத்தானுக்கு நியமிக்கப்பட்ட வேதனை நிறைந்த இடம்தான் நரகம். ஐசுவரியவான்சொல்லுகிறான் நான் இந்த பாதாளத்தில் வேதனைப்படுகிறேன், எனக்கு லாசரு தன் விரலின் நுனியில் ஒரு சொட்டு தண்ணீரினால் என் நாவை குளிரச் செய்யட்டும், நான் மிகவும் வேதனை உள்ள இடத்தில் கிடக்கிறேன் என்றான். நம் வாழ்விலும் வேதனையை கொண்டு வருவது பிசாசு, பிசாசுக்கு நம் வாழ்வில் இடம் கொடுக்கக் கூடாது.

எப்பொழுதும் நம் சிந்தை, சரீரத்தை இயேசுவால் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தூக்க மாத்திரை, வலி மாத்திரைகளுக்கு நாம் அடிமையாகக் கூடாது. நம்முடையநாட்களுக்குத் தக்க பெலத்தை தேவன் தருவார். மோசேக்கு 120 வயதிலும்கண் பார்வை மங்கவில்லை, நடை தள்ளாட வில்லை என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.என் மகள் பிசாசினால் வேதனைப்படுகிறாள் ஆண்டவரே, எனக்கு இரங்கும் என்று இயேசுவை நோக்கி கூப்பிடுகிறாள். பிசாசினால் வருகிற வேதனைகளுக்கு மருத்துவம் கிடையாது. ஆனால்இயேசு கிறிஸ்து இருக்கிறார், சகல வியாதிகளையும் சுகமாக்குவார். இவரால் சுகமாக்க முடியாத வியாதி என்று ஒன்றுமே இருந்ததில்லை. இவர் அல்பா ஒமேகா,இவர் தொடக்கம் முடிவு. இவர் எல்லாமே இலவசமாக தருவார். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்.

நாம் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்,நம் சரீரம் தேவனுடைய ஆலயம், இதை நாம் சரியாக பராமரிக்க வேண்டும். இருதயத்தில் பிசாசுக்கு இடம் கொடுக்கக் கூடாது, தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கு கொடுக்க வேண்டும். ஆவியில் நிரம்பி ஜெபிக்க வேண்டும், உபவாசிக்க வேண்டும். அதனால்தான் இயேசு இந்த ஜாதி பிசாசு உபவாசத்தினாலும் ஜெபத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் போகாது என்றார்.குடும்பமாக சேர்ந்து ஜெபிக்க வேண்டும். ஜெபிக்கும் போது தேவன் காரியத்தை கைகூடி வரச் செய்வார்என்ற நம்பிக்கை நம்மில் வரும். இன்றைக்கு உங்களை வேதனைப்படுத்துகிற காரியத்தை தேவனிடம் சொல்லுங்கள்.

கானானிய பெண் தன் மகளுக்கு எல்லா வைத்தியங்களும் பார்த்து குணமாகவில்லை, கடைசியில் பிசாசினால் வேதனைப்படுகிறாள் என்று அறிந்து இயேசு கிறிஸ்துவிடம் வருகிறாள் அவர் சுகமாக்கினார். இன்றைக்கு உங்கள் வாழ்விலும் ஒரு அற்புதம் நடக்கப் போகிறது. உங்கள் கணவரை,பிள்ளைகளை சுற்றுகிற ஆவி ஓடப்போகிறது. உங்களை ஒடுக்குகிறவன் இல்லாமல் போகப் பண்ணுவார். எந்தெந்த காரியத்தில் நீங்கள் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டிருக்கிறீர்களோ தேவன் அதை எல்லாம்மாற்றி உங்களை உயர்த்துவார்.

4. சுவிசேஷம் அறிவிக்காவிட்டால் வேதனை

கலாத்தியர் 4:19-ல்என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார். நாம் தேவனுடைய வார்த்தையை, வல்லமையை சுமக்க வேண்டும். அவருடைய அற்புதங்களை அனுபவிக்க வேண்டும். நம் தேசம் முழுவதும் எழுப்புதல் வரவேண்டும். என் பிள்ளைக்கு அந்த இடத்தை வாங்கி கொடுக்கிறேன், இந்த தொழில ஆரம்பிக்கிறேன் என்கிறோம்.ஆனால் நித்தியத்திற்கான வழியை சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?தேவக் கிருபையை சம்பாதிக்கிறவர்களாக இருக்கிறார்களா? இங்கு கண் மூடினால் நித்தியத்தில் தேவனோடு இருப்பார்களா? அந்த நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும். இந்த பூமியில்நான் மாத்திரம் நீதிமானாக வாழ்ந்து விட்டு மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்க கூடாது.ஆனால் பவுல் அப்போஸ்தலன் அப்படி இருக்கவில்லை எல்லாருக்காகவும் கர்ப்ப வேதனைப்படுகிறேன் என்றார்.

நம் தேசத்தில் எழுப்புதல் வர வேண்டும், கால் மிதிக்கும் இடமெல்லாம் அக்கினியாக மாற வேண்டும், தேவ வல்லமை நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும். அசுத்த ஆவிகள் அலறி ஓட வேண்டும். ஜெப வீடுகள் எழும்ப வேண்டும் இயேசுவை சொல்ல வெட்கப்படக் கூடாது. நமக்கு ஆயுசு நாட்களை தேவன் கூட்டி கொடுத்ததற்கு காரணம் அவரை பற்றி சொல்லத்தான். பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார் என் சிறுபிள்ளைகளே கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக நான் கர்ப்ப வேதனைப்படுகிறேன் என்றார். இதுபோல நாமும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட பாரத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும்.. நம்மை தேவன் இரட்சித்ததற்கு நோக்கம் உண்டு, நாம் புசித்து குடித்து விளையாட அல்ல, அவரைப் பற்றி ஜனங்களுக்கு சொல்ல வேண்டும். பிழைப்புகடுத்த அலுவல்களில் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது. பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாக இருக்கிறது.பிள்ளைப்பேரு நோக்கி இருக்கிறது. பெறவோ பெலன் இல்லை என்பது போலஇரட்சிக்கப்பட்டுவிட்டேன் ஆனால் சுவிசேஷம் அறிவிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது. சுவிசேஷம் அறிவிக்காதவர்கள் கண் சொறுகிப்போன குருடர்கள்.

2 பேதுரு 1:7-ல் தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் அன்போடு வர வேண்டுமா பிரம்போடு வர வேண்டுமா என்று பவுல் கேட்கிறார். தேவனுடைய ராஜ்யம் பேச்சில் அல்ல,பெலத்தில் அடங்கி இருக்கிறது. நாம் பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், உறவினர்களின் இரட்சிப்புக்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். ஒரு சகோதரி பக்தி உள்ள ஜெபிக்கிற மகள்.ஆனால் அவருடைய கணவர் திருடனாக இருந்தார்.தேங்காய் திருடுகிறவராக இருந்தார் இந்த சகோதரி எவ்வளவோ சொல்லியும் அவர் மனம் திரும்பவில்லைஇரவில் சென்று தோப்புகளில் தேங்காய் திருடி விற்று பணம் கொண்டு வருவார். ஒரு நாள் தேங்காய் திருடும்போது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவும் போது தவறி கீழே விழப்போனார். அப்பொழுது என் மனைவி ஆராதிக்கின்ற தெய்வமே என்னை காப்பாற்றும் என்று சொல்லிக் கூப்பிட்டார். அந்த மரணதருவாயில் இருந்து அவர் தப்புவிக்கப்பட்டார். இதை கேட்ட தோப்பு ஓனர் அவர் கீழே இறங்கி வந்தவுடன் யாரையா? அந்த உன் மனைவி ஆராதிக்கின்ற தெய்வம், நீ கூப்பிட்டவுடன் அவர் உன்னை தப்புவித்தாரே என்று கேட்டார். அதெல்லாம் எனக்கு தெரியாது வாரும் என் மனைவியிடம் உம்மை அழைத்துச் செல்கிறேன் என்று அழைத்துச் சென்றார். இரண்டு பேருக்கும் அந்த சகோதரி சுவிசேஷத்தை அறிவித்தார்கள். இப்பொழுது இரண்டு பேரும் ஊழியக்காரர்களாய் மாறி இருக்கிறார்கள். இன்றைக்கு நாம் தேவனுக்காக என்ன செய்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம்.

அந்த காலத்தில் சுவிசேஷம் அறிவிப்பதற்காகஉணவுப் பொருட்களை கொடுத்தார்கள். பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுத்தார்கள். உலகப் பொருள்களின் மூலம் தேவனுடைய அன்பை ஜனங்களுக்கு சொல்லி மக்களை இரட்சிப்புகள் நடத்தினார்கள். நாம் இரட்சிக்கப்பட அவர்கள் பிரசவ வேதனைப்பட்டார்கள். நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லி உட்கார்ந்திருந்தால் நம்முடைய இரட்சிப்பு எப்படிப்பட்டது?.நம் ஆவி எப்படிப்பட்டது? என்று நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிராமங்கள் சந்திக்கப்பட வேண்டும், எழுப்புதல் வர வேண்டும், இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செயல்பட வேண்டும். அப்பொழுது ஒரு குறைவில்லாமல் நம்மை தேவன் நடத்துவார். முதிர் வயதாகிறது நான் இனி எப்படி சுவிசேஷத்தை அறிவிப்பேன் என்று சொல்லக்கூடாது. முதிர் வயதிலும் எலிசபெத் பிரசவ வேதனைப்பட்டு யோவானைப் பெற்றார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஒன்று முதிர் வயதில் பிரசவ வேதனைப்பட்டு ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் நடத்த வேண்டும், இல்லையென்றால் யோவான்களாக மாற வேண்டும். பவுல் அப்போஸ்தலன் போல கர்ப்ப வேதனைப்பட்டு ஆத்துமாக்களை கிறிஸ்துவினிடத்தில் நடத்த வேண்டும். அப்பொழுது நமக்கு பரலோகத்தில் பலன் மிகுதியாக இருக்கும். ஆண்டவராகிய தேவன் தாமே உங்களுடைய வேதனைகளை மாற்றி, எல்லா கட்டுகளிலிருந்து உங்களை விடுதலையாக்கி, அவருடைய சித்தத்தை, விருப்பத்தைச் செய்ய கிருபை செய்வாராக.