Inspiration

உமது சமூகத்தில் ஒரே நாள் நல்லது

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பான சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
சங்கீதக்காரன் தாவீது ஆண்டவரை முழு இருதயத்தோடு தேடினவன். சங்கீதம் 84 முழுவதும் அதை பார்க்கலாம். சேனைகளின் கர்த்தாவே உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள். என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது. என் இருதயமும், என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கி கெம்பீர சத்தமிடுகிறது. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்கு தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. உம்முடைய வீட்டில் வாசமாயிருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டிருப்பார்கள் என்று எவ்வளவாய் தேவசமூகத்தை, அவர் ஆலயத்தை வாஞ்சித்து கதறுகிறான். சங் 84:10-ல் ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன் என்கிறான். தாவீது வனாந்திரங்களில் தங்கினவன். ஆடுகளோடு ஆடாக படுத்துக்கிடந்தவன். பகலின் வெயில், இரவில் குளிர், கொடிய மிருகங்களின் அச்சுறுத்தல் இவைகளைக் கடந்தவன். பலவிதமான யுத்தங்களைச் சந்தித்தவன். அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவன் அரண்மனை வாழ்வில் களித்தவன். பல மனைவிகள், சேவகர்கள், கேதுரு மரத்திலான வீடு ஒரு குறையின்றி வாழ்ந்தவன். பல விதமான மேடு, பள்ளங்கள் எல்லாம் சந்தித்தவன். அவன் எத்தனையோ இடத்தில் நான் இருந்திருக்கிறேன். எத்தனையோ சூழலில் வாழ்ந்திருக்கிறேன். நான் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்ந்ததை விட, வாழ்வதைவிட உம் இல்லத்தில், உம் சமூகத்தில் இருக்கிற அந்த ஒரே நாள் நல்லது என்கிறான். தாவீது எவ்வளவாய் ஆண்டவரின் சமூகத்தையே தெரிந்து கொள்கிறான். அதனால் தான் அவனை ஆண்டவர், தாவீது என் இருதயத்துக்கு ஏற்றவன் என்கிறார் அப் 13:22 அப்படிச் சொல்கிறது. அவர் சமூகத்தை கிட்டிச் சேர்ந்த, நாடின ஒருவரையும் ஆண்டவர் பாராட்டத் தவறவில்லை. ஆயக்காரன் எப்படி தன்னைக் கிட்டி சேர்ந்தான் என்றும் இவன்தான் எனக்கு ஏற்றவனாய் இருக்கிறான் என்றார். பரிமளத் தைலத்தை உடைத்து ஊற்றிய மரியாள் ஆண்டவரின் பாதத்தை கிட்டிச்சேர்ந்த போது இவள் என்னிடத்தில் நற்கிரியையை செய்திருக்கிறாளே என்றார். அவர் பாதத்தில் உட்கார்ந்து வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மரியாளை இவள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்கிறார். இப்படி ஆண்டவரின் சமூகத்தை வாஞ்சித்த ஒவ்வொருவரையும் ஆண்டவர் மேன்மைப்படுத்தினார். இந்தச் செய்தியை வாசிக்கிற அன்பு சகோதரியே, நீங்களும் கூட ஒவ்வொரு நாளும் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம் சமூகத்தில் ஒரே நாள் இருப்பது மேலானது என்று அவர் சமூகத்தை தெரிந்துகொள்வீர்களா? அவர் சமூகத்தில் செல்லும் அந்த ஒரே நாளில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
* நான் வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்ந்ததை விட, வாழ்வதைவிட உம் இல்லத்தில், உம் சமூகத்தில் இருக்கிற அந்த ஒரே நாள் நல்லது என்கிறான். தாவீது எவ்வளவாய் ஆண்டவரின் சமூகத்தையே தெரிந்து கொள்கிறான். அதனால் தான் அவனை ஆண்டவர், தாவீது என் இருதயத்துக்கு ஏற்றவன் என்கிறார்
அக்கிரமம் நீக்கப்படுகிறது
கர்த்தர் சகரியா தீர்க்கதரிசிக்கு ஒரு காரியத்தை காண்பிக்கிறார். பிரதான ஆசாரியனாயிருந்த யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நிற்கிறார். சாத்தான் அவரை குற்றப்படுத்தும் பொருட்டு அவரது வலது பக்கத்திலே நிற்கிறான். அப்பொழுது கர்த்தர் சாத்தானைக் கடிந்து கொண்டு, அவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளியல்லவா? என்கிறார். அப்பொழுது யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அப்பொழுது அவனது அழுக்கு வஸ்திரங்களை களைந்துபோட்டு அவனை நோக்கி பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். தலையில் சுத்தமான பாகை வைக்கப்பட்டு சிறந்த வஸ்திரங்கள் தரிப்பிக்கப்பட்டு ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் பிரதான ஆசாரியன் தான் அவன்! ஆனால் அவனிடத்தில் அழுக்கு வஸ்திரம் காணப்பட்டது. யோபு 25:5-ல் நட்சத்திரங்களும் அவர் பார்வைக்கு சுத்தமானவைகளல்ல என்று வாசிக்கிறோம். பொல்லாத உலகத்தில் வாழ்கிற நாம், ஒவ்வொரு நாளும் கறையில்லாமல் வாழ, குறைகள் நிறைந்த நாம் அவர் சமூகத்தில் இந்த ஒரு நாள் நல்லது என்று அனுதினமும் சொல்ல வேண்டும். அப்போது யோசுவாவை சுத்திகரித்தவர் நம்மையும் சுத்திகரிப்பார். அக்கினியிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியைப் பாருங்கள்! எரிந்து கொண்டிருக்கும் அக்கினியில் இன்னும் கொஞ்ச நேரம் எரிந்துவிட்டால் சாம்பலாகிவிடும். ஆனால் சாம்பலாகும் முன்னே அக்கினிக்குள் இருந்து தூக்கியெடுக்கப்பட்ட கரிக்கட்டை கொள்ளியைப் போல நாமும் அழிந்து போவதற்கு முன்னே ஆண்டவர் தூக்கியெடுக்கிறார். சகரியா 3:9-ல் யோசுவாவுக்கு முன்பாக ஒரு கல் வைக்கப்படுகிறது. அந்த கல் கிறிஸ்துவே, அவர் இந்த தேசத்தின் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். நாம் கர்த்தருக்கு முன்பாக நின்றால், அவர் சமூகத்தில் இந்த ஒரே நாள் நல்லது என்று வாஞ்சித்தால் அந்த ஒரே நாளில் நம்முடைய அக்கிரமங்கள் நீக்கப்படுகிறது. நம் அக்கிரமங்கள் நீக்கப்பட்டு நாம் சுத்திகரிக்கப்பட்டால் சகரியா 3:7-ல் நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், இங்கே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்கு கட்டளையிடுவேன். என் ஆலயத்தில் என் பிரகாரத்தை காத்து, நியாயம் விசாரித்து இங்கே நீ என்னோடு சஞ்சரிக்கலாம் என்பதாக ஆண்டவர் சொல்கிறார். எத்தனை பாக்கியம் பாருங்கள்! தாவீது ஆண்டவரே, உமது பீடத்தில் குருவிகளுக்கு கூடும் இருக்கிறதே! எனக்கும் தாங்க என்று ஏங்கி ஜெபிக்கிறான். ஆண்டவர் உன் அக்கிரமத்தை நீக்கி என்னோடு உலாவ இடம் கட்டளையிடுவேன் என்கிறார். எப்போது? நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு சுத்திகரிக்கப் பட்டு, அவர் வழிகளில் நடக்க நம்மை அர்ப்பணித்து, சத்துரு நுழையாமல் நமது கண்ணை, வாயை, செவியை இருதயத்தை, சிந்தையை காத்தால் நாம் தேவனோடு உலாவ இடம் கட்டளையிடுவார். இன்றே நாம் ஆண்டவருக்கு முன்னால் அவரது சமூகத்தில் ஒரு நாள் வருவோமா?
2. கோல் துளிர்த்தது
நம் ஆண்டவர் பரிசுத்தர். தீமையை பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணன். ஒரு தீமை கூட இல்லாமல் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அவ்விதமாய் பரிசுத்தத்தைப் பற்றி பேசின போது சிலர் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து, சபையாரெல்லாம் பரிசுத்தமானவர்கள், நீங்கள் ஏன் சும்மா எப்பப்பார்த்தாலும் பரிசுத்தம், பரிசுத்தம் என்று பேசி கர்த்தருக்கு மேலாக உங்களை உயர்த்துகிறீர்கள். எங்கள்மேல் நீ துரைத்தனம் பண்ணுவாயோ? என்று ஆரோனுக்கும், மோசேக்கும் விரோதமாக எழும்பினார்கள். இதனால் கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் வந்தது. ஆரோன் தூபக்கலசத்தை எடுத்துக் கொண்டு போய் தேவனிடத்தில் மன்றாடினபோது அந்த வாதை நிறுத்தப்பட்டது. எண் 17:4,5-ல் நீ ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒரு தலைவனின் பெயரை எழுதிய கோலை ஆசரிப்பு கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப் பெட்டிக்கு முன்பாக வைக்கக்கடவாய் அப்பொழுது நான் தெரிந்து கொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும். முறுமுறுக்கிறவனுடைய முறுமுறுப்பை ஒழியப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார். அப்படியே எல்லாக் கோல்களும் தேவன் சந்திக்கும் ஸ்தானமாகிய அவர் சமூகத்தில் வைக்கப்பட்டது. 8ஆம் வசனம் சொல்கிறது மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது. அது துளிர்விட்டு பூப்பூத்து, வாதுமை பழங்களைக் கொடுத்தது. ஒரே நாளில் துளிர்க்கலாம். ஆனால் தேவன் தெரிந்து கொண்டவனின் கோல் துளிர்த்து, பூத்து பழங்களைக் கொண்டு வந்தது. இது முடியுமா? தேவனால் முடிந்ததே!. சகோதரியே, நீங்களும் ஆண்டவருக்கென்று பரிசுத்தமாய் வாழ உங்களை அர்ப்பணித்திருக்கும்போது அவர் சமூகத்தில் இருக்கிற உங்கள் வாழ்வை, பட்டமரம் போல, ஒரு கோலைப் போல இருக்கும் வாழ்வை ஒரே நாளில் துளிர்க்கவும், பூக்கவும், பழங்களைத் தரவும் தக்கதான ஆசீர்வாத வாழ்வை தேவன் காணச் செய்வார். முறுமுறுத்து, பரிசுத்தத்தை பகைக்கிற கூட்டத்தோடு அல்ல; தேவனோடு, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய அவர் சமூகத்தில் இந்த ஒரே நாள் நல்லது என்று உறுதியாய் நின்று கொள்ளுங்கள்.
3. அழிவு மாற்றப்படுகிறது
ஆமானுக்கு முன்பாக எழுந்திருக்காத, மரியாதை செய்யாத மொர்தெகாய் நிமித்தம் அவன் இனத்தையே அழிக்க ஆமான் திட்டமிடுகிறான். ராஜ அனுமதியும் பெற்று முழு யூத இனத்தையே ஆதார் மாதமான பன்னிரென்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியாகிய ஒரே நாளிலே சிறியோர், பெரியோர், குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும், அழித்து கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களை கொள்ளையிடவும் அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. எஸ்தர் 3:13 ஆனால் எஸ்தரோ இதை கேள்விப்பட்டு ராஜ சமூகத்தில் நின்றாள். என் ஜனம் அழியக்கூடாது. ராஜாவிடத்தில் பேசினபடியால் ராஜா இரங்கி, எஸ்தர் மேல் வைத்த தயவினால் உனக்கு இஷ்டமானபடி எழுதி ராஜாவின் நாமத்தினால், அவர் மோதிரத்தால் முத்திரை போட்டு அனுப்புங்கள். அதை செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் முடியாது என்றான். அப்படியே எஸ்தரும், மொர்தெகாயும் எந்ததெந்த நாடுகளுக்கு யூத இனம் அழிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே ஆமானால் அனுப்பப்பட்டிருந்ததோ அந்த எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரெண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே அந்தந்த பட்டணத் திலிருக்கிற யூதர் ஒன்றாய் சேர்ந்து தங்கள் பிராணனை காப்பாற்றவும், தங்கள் விரோதிகளை அழித்து கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளை கொள்ளையிடவும் ராஜா யூதருக்கு கட்டளையிட்டார் என்று எழுதி அனுப்பினார்கள். எந்த நாளில் அழியப்போகிறோம், அவ்வளவுதான் என்று நினைத்தார்களோ அதே நாளில் எதிரிகள் அழிந்தார்கள். இவர்களோ வாழ்ந்து சுகித்தார்கள். கலங்கின சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. காரணம் எஸ்தர் அவர் சமூகத்தில் நின்ற ஒரே நாள். தீர்ப்பை மாற்றி ஒரே நாளில் காரியம் மாறுதலாய் முடிந்தது. சகோதரியே தைரியமாய் கிருபாசனத்தண்டை சேருங்கள். ஆமான் எவ்வளவு கொட்டங்களை கொண்டு வந்தாலும் பயப்படாமல் ராஜ சமூகத்தில் போய் உம் சமூகத்தில் இந்த ஒரு நாள் நல்லது என்று நில்லுங்கள். அவர் சமூகத்தில் நீங்கள் ஏறெடுக்கும் ஜெபம் மேலானது, அழிவு நியமிக்கப்பட்ட ஒன்றாயிருந்தாலும், அந்த அழிவை, தீமையை, நிந்தையை, அவமானத்தை மாற்றக்கூடியது. அந்தபக்கம் எதிரிகள். இந்தப்பக்கம் யூதர்கள் ஒரே நாளில் அவர்கள் அழிப்பார்கள் என்றிருந்தபோது, யூதர்கள் அவர்களை அழித்து விட்டார்கள். 1 இரா 20:29-ல் இஸ்ரவேலரும், சீரியரும் ஏழுநாளளவும் ஒருவர் முகத்துக்கு எதிராய் முகமுகமாய் பாளயமிறங்கி இருந்தார்கள். கடைசியாய் யுத்தம் கலந்த இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளிலே சீரியரின் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள். சகோதரியே, உங்கள் முகத்திற்கு முன்பாக பாளயமிறங்கி இருக்கிற எதிரிகளுக்கு பயப்படாதிருங்கள். இயேசுவின் சமூகத்தில் உங்களை தாழ்த்தி நில்லுங்கள் நீங்கள் முறியடிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை முறியடிப்பீர்கள்.
4. எழுப்புதல் ஏற்படுகிறது
எசேக்கியேல் தீர்க்கதரிசி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்குகளில் நின்றபோது நம்பிக்கையே இல்லை. இது உயிரடையுமா? எனக்கு தெரியவில்லை தேவனே, நீர் அறிவீர். என்றார். ஆனால் பலமும் அல்ல; பராக்கிரமும் அல்ல; என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். சக 4:6-ன் படி ஆவியானவர் இறங்கி வருகிறபோது எல்லா எலும்புகளும் ஜீவன் பெற்று காலுன்றி நின்றது. இஸ்ரேல் பிரயாணம் சென்றபோது எகிப்தில் சீனாய் மலை அடிவாரத்தில் தங்கினோம். அப்போது நான் ஆண்டவரே, எகிப்தில் வறுமையில் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இஸ்ரேலில் நீர் வந்திருந்தும் அதை அறியாத மக்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எத்தனை நாடுகள், எத்தனை மக்கள் இருக்கிறார்கள். ஒரே நாளில் எல்லாரையும் நீர் சந்தித்து இரட்சிக்கலாமே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஏசா 66:8-ல் ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ? சீயோனோவெனில் ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரை பெற்றும் இருகிறது என்ற வசனத்தை ஆண்டவர் ஞாபகப்படுத்தினார். நான் ஒரே நாளில் இரட்சிக்க ஆயத்தம். ஆனால் பிரசவ வேதனைப்படத்தான் ஆளில்லை என்பதாக ஆண்டவர் பேசினார். ஆண்டவரே, என்னை ஜெப ஆவியால் ஆத்தும பாரத்தால் நிரப்பும். நான் வேதனைப்பட்டு குமாரர்களை, குமாரத்திகளை பிறப்பிக்கட்டும் என்று சொன்னேன். வரப்போகும் எழுப்புதல் ஆவியானவரால், சீயோனின் பிரசவ வேதனையினால் ஒருமிக்க ஒரே நாளில் தேசங்கள் பிறப்பிக்கப்போகிறது. மந்தை மந்தையாய், கூட்டங்கூட்டமாய் இயேசுவண்டை ஜனங்கள் ஓடி வரப்போகிறார்கள். அதற்கு நீங்களும் நானும் அவர் சமூகத்தில் இந்த ஒரேநாள் நல்லது என்று நின்று கொள்ள வேண்டும். வீணாய் எங்கு, எதில் நம் நேரம் போகிறதோ அதிலிருந்து நேரத்தை பிடுங்கி எடுத்து ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைக் காட்டிலும் என் தேவனுடைய ஆலயத்தில் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ள வேண்டும் சங்கீதக்காரன் சொன்னது போல அவரோடு இசைந்து கொள்ளுங்கள். அக்கிரமம் நீக்கப்படும், சுகவாழ்வு துளிர்க்கும், தேசங்கள் மாறும், மாபெரும் ஆசீர்வாதம் வரும், என் ஆண்டவரின் மாறாத பிரசன்னம் உங்களோடுக் கூடவே இருப்பதாக.

By Sis. Kala VincentRaj