Inspiration

விருந்தை ஆயத்தப்படுத்துவார்

சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப் படுத்துவார். ஏசாயா 25:6.

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது அல்லது அன்பு கூறும்போது அவர்களை வீட்டிற்கு அழைக்கிறோம், சாப்பாடு கொடுக்கிறோம். நமக்கு இன்னும் அதிக நெருக்கமானவர்கள் என்றால் அவர்களுக்கு விருந்து வைக்கின்றோம். நாம் அவர்கள் மேல் கொண்டி ருக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றோம். மனிதர்கள் மற்றவர்கள் மேல் வைக்கின்ற அன்பை வெளிப்படுத்துவதற்கு நாம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றோம். நமக்கு அன்பானவர்களுக்கு உணவோடு வெகுமதிகளையும், அன்பளிப்புகளையும் வாங்கிக் கொடுக்கின்றோம். நாம் சந்தோஷமாக இருக்கின்றோம், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துகின்றோம் என்பதின் அடையாளமாக இவைகளைச் செய்கிறோம். வேதத்தை வாசித்துப் பார்க்கும்போது ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கு பால்மறந்த நாளிலே பெரிய விருந்து வைத்து கர்த்தரை மகிமைப்படுத்தினார். ஆதி 21:8 அப்படிச் சொல்லுகிறது. ஈசாக்கின் வாழ்க்கையைப் பாருங்கள் அவன் விருத்தியடைகின்றதைக் கண்டு, அவன்மேல் பொறாமை கொண்டவர்கள் அவனுக்கு விரோதமாக ஈசாக்கு வெட்டின துரவுகளை எல்லாம் தூர்த்துப்போட்டு இடையூறு பண்ணினார்கள். ஆனால் தேவன் ஈசாக்கை கைவிடவில்லை. அவர் தீமையை நன்மையாக மாற்றுகிறவர், விரோதமாக இருப்பவர்களை பட்சமாக கொண்டு வருகிறவர், ஈசாக்குக்காக அபிமேலெக்கு என்ற ராஜாவை சந்தித்து, எச்சரித்து இருவரும் சமாதானமாக கர்த்தர் கிருபை செய்தார். அப்பொழுது ஈசாக்கு அவர்களுக்கு விருந்து வைத்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இன்றைக்கு ஒரு தேசத்தின் தலைவர் பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதி மற்றொரு தேசத்திற்கு செல்லும்போது, இன்றைய காலத்தில் அவர்களை வரவேற்க சிவப்பு கம்பளம் விரித்து, அவர்கள் விரும்புகிற உணவை பறிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இப்படி உலகத்தில் வாழும் நாம் மற்றவர்கள் மேல் உள்ள மதிப்பு, மரியாதையால் விருந்து கொடுப்பது உண்மை என்றால் பரலோகம் கொடுக்கும் விருந்து எவ்வளவு மேலானது. இன்னும் நாம் வேதத்தில் பார்க்கும் போது தேவமனிதர்கள் தேவதூதரையும் உபசரித்து விருந்து வைத்தார்கள். எபிரேயர் 13:2-ல் அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு என்று சொல்லப்பட்டுள்து. அப்படியாகத்தான் லோத்து தேவதூதருக்கு விருந்து வைத்தான். ஆபிரகாம் வாழ்க்கையைப் பாருங்கள். அவரும் தேவதூதருக்கு விருந்து வைத்து அவர்களை உபசரித்தார். ஆதி 18:1-8 வரையுள்ள வசனம் அப்படிச் சொல்லுகிறது. அப்படி விருந்து வைக்கும்போது தேவதூதர்களால் தேவனுடைய திட்டம் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்படடது. நியாய 13:15,16-லும் மனோவா அப்படிச் செய்வதை பார்க்கிறோம். இந்த பூமியிலே இப்படி உபசரிப்பும், விருந்தும் நடப்பது உண்மை என்றால் பரலோகத்தில் நடக்கும் விருந்து எவ்வளவு மேலானதாய் இருக்கும். வெளி 19:7-ல் நாம் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து அவருக்கு துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது. 9-ஆம் வசனத்தில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்று எழுது என்றார். பரலோகத்தில் நடக்கும் விருந்து உணவும், உடையும் அல்ல. காரணம் மாம்சமும் இரத்தமும் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. அங்கு நம்முடைய ஆத்துமா தான் தேவனோடு உலாவும். ஆகவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 14:17-ல் தேவனுடைய ராஜ்யம் புசிப்பும், குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்றார். பரலோகத்தில் தேவன் நமக்கு வைத்திருக்கும் விருந்து நம்முடைய அறிவுக்கும், புத்திக்கும் எட்டாதது. அதை நம்மால் விளங்கிக் கொள்ளவும், விவரிக்கவும் முடியாதது. பூமியில் மனிதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு, உலகத்தை வெறுத்து, இச்சைகளை வெறுத்து, பரிசுத்தத்தோடும், நீதியோடும் வாழ்ந்தவர்கள் அந்த விருந்திலே கலந்து கொள்வார்கள். மட்டுமல்ல பூமியிலே பட்டபாடுகள், நிந்தைகள், அவமானங்கள், கர்த்தருக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பிரயாசங்கள் எல்லாவற்றிற்கும் அங்கு ஆறுதலும், தேறுதலும் அடைவார்கள். இதைத்தான் லூக்கா 16-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். 25-ஆம் வசனத்தில் நீ பூமியில் உயிரோடிருக்கும் காலத்தில் நன்மைகளை அனுபவித்தாய் லாசருவும் அப்படியே தீமைகளை, வேதனைகளை, பாடுகளை அனுபவித்தான். அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், ஆறுதல் அடைகிறான், நீயோ வேதனைப்படுகிறாய் என்றார். இந்த பூமியிலே கர்த்தருக்காக வாழ்ந்து, பாடுபட்டு எல்லா உலக மேன்மைகளையும் இழந்தவர்கள் அங்கு தேவனால் தேற்றப்படுவார்கள். இதைத்தான் ஏசாயா 25:6-8 வரையுள்ள வசனம் சொல்லுகிறது. அவர் சகல ஜனங்கள் மேலுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும் இந்த மலையிலே அகற்றிப்போடுவார், அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார். கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிருந்து கண்ணீரைத் துடைத்து தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார். கர்த்தரே இதைச் சொன்னார் அவ்வளவு மகிமையும் பிரகாசமும் நிறைந்த விருந்து அது. இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவன், பங்கு பெறுகிறவன் பாக்கியவான். ஏசாயா 55:1-ல் ஓ! தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள், பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் வந்து பணமுமின்றி, விலையுமின்றி திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செயóயாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன். நீங்கள் கவனமாய் எனக்கு செவிõ கொடுத்து நலமானதை சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும் என்றார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே, லூக்கா 14:15-ல் தேவனுடைய ராஜ்யத்திலே போஜனம் பண்ணுகிறவன் பாக்கியவான் என்றார். இன்றைக்கு இப்படிப்பட்ட ஒரு மேன்மையான, உன்னதமான வாழ்க்கைக்கு தான் கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். அந்த விருந்திற்குப் போவதற்குத்தான் நாம் இந்த பூமியிலே இயேசுவை சொந்தரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், அவரை பின்பற்றுகிறோம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்கிறோம். அவருக்கு மகிமையாக வாழ ஊழியம் செய்கிறோம். ஆண்டவரே, இயேசுவே, இந்த பாக்கியதóதை எனக்குத் தாரும் என்று கேளுங்கள். அப்பொழுது தேவன் இந்த பூமியிலே நம்மைத் தகுதிப்படுத்தி, பரிசுத்தவான்கள் பந்தியிலே போஜனம் பண்ண உதவி செய்வார். அதற்கு நிழலாட்டமாகத்தான் இந்த பூமியிலே மனிதர்களுடைய விருந்து அமைந்திருக்கிறது. என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களுக்கு அப்படிப்பட்ட பாக்கியத்தைத் தருவாராக, தேற்றுவாராக, ஆறுதல்படுத்துவாராக!. போகட்டும், யாருக்கெல்லாம் விருந்து, எப்படிப்பட்டவர்களுக்கு விருந்து வைத்தி ருக்கிறார் என்பதைப் பார்ப்போம். மனம் திரும்பிய மகனுக்கு விருந்து அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டு வந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும், பாதரட்சைகளையும் போடுங்கள், கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள் நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம். லூக்கா 15:22,23. பரலோக நிழலாட்டமாய் யாருக்கு பூமியிலே தேவன் விருந்து வைக்கிறார்? மனம்திரும்பி அவருக்கு செவி கொடுப்பவர்களுக்குத்தான். மனம் திரும்பாமல், நம்முடைய துர்க்குணத்தை விடாமல், நம்முடைய பாவம் நமக்கு மன்னிக்கப்படாது. இன்றைக்கே நாம் மனம்திரும்பி அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற வேண்டும். பழையவைகள் ஒழிய வேண்டும். புதியவைகள் உண்டாக வேண்டும். இன்றைக்கு இருக்கின்ற இந்த வெளிப்படையான வாழ்வை வைத்துக் கொண்டு, பூரணமடையாத இந்த வாழ்வை வைத்துக்கொண்டு தேவனுக்காக நாம் எதையும் செய்ய முடியாது. நாம் மனம் உவந்து செவி கொடுக்க வேண்டும். ஏசாயா 1:15-20-ல் நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும் என் கண்களை உங்களை விட்டு மறைக்கிறேன். நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றி, தீமை செய்வதை விட்டு ஓயுங்கள், நன்மை செய்யப் படியுங்கள். நியாயத்தை தேடுங்கள். ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளைகளின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள், வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாக்கப்படும். நீங்கள் மனம் திரும்பி செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள், மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் கர்த்தரின் வாய் அதைச் சொல்லிற்று என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்திóல் (கடைசி காலத்தில்) நாம் நம்முடைய வேலைகளை விட்டு அவருடைய வேலைகளை கவனித்து, மனம்திரும்பி அவருக்காக வாழவும், அவரைப் பின்பற்றவும் தான், தேவன் நமகóகு இந்த ஜீவனை கொடுத்திருக்கிறார், உயிரைக் கொடுத்திருக்கிறார். ஒருவனும் கெட்டுப் போகாமல் வாழ வேண்டும் என்று தான் நம்மை பூமியிலே உயிரோடு விட்டு வைத்திருக்கிறார். 2 பேதுரு 3:9-ல் அவர் தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனம் திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். நாம் கெட்டுப்போகாமல் மனம் திரும்பி அவரிடத்தில் வந்து சேரும்போது அல்லது இணைந்து வாழும் போது தேவன் நமக்கு விருந்து வைக்கிறார். புதிய வஸ்திரம் அதுதான் இரட்சிப்பின் வஸ்திரம். நம் திருமணத்திற்கும், மற்றவர்கள் திருமணத்திற்கு போவதற்கென்றும் சில விலையுயர்ந்த ஆடைகளை வைத்திருப்போம். தேவனுடைய விருந்திலே கலந்து கொள்ள இந்த இரட்சிப்பின் வஸ்திரம இல்லாமல் யாரும் பங்கு பெற முடியாது. மத் 22:11,12-ல் பார்க்கும் போது விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரம் இல்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்? என்று கேட்டான் அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது ராஜா பணிவிடைக்காரரை நோக்கி, இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய் அழுகையும், பற்கடிப்பும் உண்டான புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். காரணம் தேவன் அவனுக்கு கொடுத்த அந்த இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக் கொள்ளாமல் அதைக் கறைப்படுத்தி அபாத்திரமாய்ப் போய் விட்டான். வெளி 16:15 சொல்லுகிறது இதோ, நான் திருடனைப் போல் வருகிறேன், தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நம்முடைய மனம் புதிதாகுகிறதினாலே, நாம் மனம் திரும்பினோம் என்பதற்கு அடையாளமாக நம்முடைய பழைய வாழ்க்கை ஒழிந்து புதிய மனிதனாக மாற வேண்டும். அப்பொழுது தான் அந்த இரட்சிப்பின் வஸ்திரம் கறைப்படாமல் அது நம்மை மூடிப்பாதுகாக்கும். அப்பொழுது தான் தேவன் ஆயத்தம் பண்ணிய விருந்தில் நாம் கலந்து கொள்ளமுடியும். இதைத்தான் அவர் லூக்கா 15-ஆம் அதிகாரம் முழுவதிலும் சொல்லியிருக்கிறார். இதைத்தான் அவர் இளைய மகனுக்கு, கெட்ட குமாரனுக்குச் செய்தார். அதற்குத்தான் இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம் பண்ணணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் என்றார். எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய இரட்சிப்பு. இந்த ஒரு உன்னதமான வாழ்க்கைக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசு சொன்னார் எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள் என்றார். லூக்கா 14:16-24 முடிய சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள் சாக்குப்போக்குச் சொல்லி அவரை அசட்டைப்பண்ணி, புறக்கணித்து அபாத்திரராய்ப் போனார்கள். ஆனால் தேவன் விடவில்லை, மீண்டும் கிருபையாய் இரங்கி அந்த வாய்ப்பை ஏழைகள் ஊனர்கள், பட்டணத்தின் வீதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்கள், குருடர், சப்பாணிகள் பெருவீதிகளில், வேலியேரமாய் இருக்கிற வர்களை அழைத்து வாருங்கள் என்றார். காரணம் அழைக்கப்பட்டவர்கள் அபாத்திரமாய் போய் விட்டார்கள். இன்றைக்கு மனம் திரும்பாமல், தகுதியற்றவர்களாக போகாமல், கர்த்தருடைய சந்நிதானத்தில் போஜனம்பண்ணி விருந்திலே கலந்து கொண்டு ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, பரலோகத்திற்குப் போகிறவர்களாக காணப்பட, மனம் திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து அந்த விருந்திலே கலந்து கொள்ளுவோம். இதைத்தான் அவர் கெட்ட குமாரனுக்கு செய்தார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் அனைவரையும் அவருடைய விருந்துக்கு, போஜனத்திற்கு பாத்திரவான்களாக மாற்றுவாராக. சத்துருக்களுக்கு முன்பாக விருந்து. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. சங் 23:5. தேவனுடைய விருந்திலே பங்கு கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றும், மனம் திரும்புகிறவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் விருந்து என்றும் பார்த்தோம். அடுத்ததாக சத்துருக்களுக்கு முன்பாக ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணுகிறார் என்பதைப் பார்க்கிறோம். என் சத்துருக்கள் என்னைக் காட்டிலும் பெருகியிருக்கிறார்கள் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். காரணமில்லாத சண்டைகள், காரணமில்லாத போராட்டங்கள், காரணமில்லாத பகைகள், நம்மை வெறுத்து சபித்து நம் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பாதவர்கள் நாள்தோறும் ஏதாவது ஒருவகையில் நமக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இதினிமித்தம் நம்மால் ஜெபிக்க முடியவில்லை, தேவனுடைய காரியங்களில் மனதை செலுத்த முடியாமல் போய் விடுகிறது. இதன் விளைவு நாம் நம்முடைய ஆத்துமாவில் பெலன் இல்லாமல் தொய்ந்து போய் விடுகிறோம். சங் 3:1, சங் 42:9, சங் 83:2 வார்த்தைகளில் எல்லாம் தாவீது அப்படிச் சொல்லுகிறார். காரணம் தாவீது எல்லா காரியங்களிலும் தன் கூட இருந்தவர்களாலும், வெளியே தனக்கு தூரமாய் இருந்தவர்களாலும் நெருக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருந்தார். இது எல்லாம் சாத்தான் உங்களுக்கு விரோதமாக, மறைமுகமாக தொடுக்கும் யுத்தம். சாத்தான் உங்கள் மேல் வைத்திருக்கிற கோபமும், எரிச்சலும், இப்படிப்பட்ட மறைமுக யுத்தத்தில் நீங்கள் ஒடுங்கி, தொய்ந்து போகாமல் இருக்க தேவன் அந்த சத்துருக்களுக்கு முன்பாக, உங்கள் எதிரிகளுக்கு முன்பாக ஒரு விருந்தை, பந்தியை ஆயத்தம்பண்ணி உங்களை தேற்றுகிறார். உங்கள் தலையை உயர்த்துகிறார். தாவீது சங்கீதம் 92:9-11 வரை கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள், உமது சத்துருக்கள் அழிந்தே போவார்கள். சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டு போவார்கள். என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீர். புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன். என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண்கள் காணும் என்றார். ஆண்டவராகிய தேவன் நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக விருந்தை எப்படி ஏற்பாடு செய்கிறார் தெரியுமா? கோழியோ, ஆடு மாடோ, மிருகங்களின் பலி இரத்தமோ அல்ல, நம்மை சரிசெய்து, சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவார். (1பேதுரு 5:8-10) பிசாசுக்கு எதிர்óத்து நில்லுங்கள் என்று சொல்கிறவர், நம்மை ஸ்திரப்படுத்தி, பெலப்படுத்தி அவனை மேற்கொள்ள பெலன் தருகிறார். பரிசுத்த ஆவியால் அளவில்லாமல் நிரப்புகிறார். பெலத்தால், ஞானத்தால் அளவில்லாமல் நம்மை நிரப்பி, சத்துருவின் சகல வல்லமையை மேற்கொள்ளவும், யாரும் நம்மை எதிர்த்து நிற்காமல் இருக்க, ஞானத்தின் ஆவியால் நிரப்பி, அவன் தலையை மிதிக்க, மேற்கொள்ள தேவன் உங்களுக்கு பெலன் தருகிறார். லூக்கா 10:19-லும், 21:15-லும் அப்படிச் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாகத்தான் ஸ்தேவான் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்து ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களைச் செய்து அடையாளங்களினால் தேவனை வெளிப்படுத்தி நிரூபித்தார். காரணம் தேவன் அவரை பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிரப்பியிருந்தார். அதனால் எவ்வளவு அடி, உபத்திரவம், பாடுகள் வந்தாலும் அது அவனுக்கு பெரியதாக தெரியவில்லை. அவர் ஆவியில் நிரம்பி இருந்தார். அப் 6:8,7, 55 அப்படிச் சொல்லுகிறது. இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அன்பு சகோதர, சகோதரிகளே, இதுவரை இல்லாத அளவுக்கு உங்கள் பாடுகளில், போராட்டங்களில் தேவன் உங்களைப் பெலத்தால் இடைக்கட்டுவார். வல்லமை, வரங்களால் நிரப்புவார். இதுதான் தேவன் நம்முடைய எதிரிக்கு முன்பாக நமக்கு வைக்கும் விருந்து. இப்படியாகத்தான் தாவீதுக்குச் செய்தார். 2 சாமு 3:1-ல் சவுலின் குடும்பத்திற்கும், தாவீதின் குடும்பத்திற்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவர பலத்தான், சவுலின் குடும்பத்தாரோ பலவீனப்பட்டுப் போனார்கள். ஏன் சவுலின் குடும்பத்தார் பலவீனப்பட்டுப் போனார்கள். அவர்கள் கர்த்தரையோ அவருடைய வல்லமையையோ, அறியவோ, பெறவோ இல்லை. அதனால் ஓய்ந்து போனார்கள், பெலவீனப்பட்டுப் போனார்கள். இன்றைக்கு ஆவியானவர் எங்கு இருக்கிறாரோ, யார் மேல் இருக்கிறாரோ அங்கே விடுதலை உண்டு, ஜெயம், வெற்றி உண்டு. நாம் பெலத்தின் மேல் பெலனடைந்து, தேவ சமூகத்தில் நிலை நிற்கிறவர்களாக தேவன் நம்மை மாற்றுவார். இந்தப் பூமியில் சாத்தானையும் அவன் கிரியைகளையும் அழித்தவர்கள், ஜெயித்தவர்கள் பரலோக விருந்திலே அனுமதிக்கப்படுவார்கள். மட்டுமல்ல நம்முடைய எதிரிகளுக்கு முன்பாக, சத்துருக்களுக்கு முன்பாக நமக்கு அற்புதங்களைச் செய்து கனம் பண்ணுகிறார். லாசருவை உயிரோடு எழுப்பி அவரை நிந்தித்த, பகைத்த அத்தனை பேருக்கு முன்பாக பந்தி விருந்தை வைத்தார். யோவான் 12:1 அப்படிச் சொல்லுகிறது. இன்றைக்கு அவருடைய பிள்ளையாய் வாழுகின்ற உன்னை தேவன் மறக்கவும் மாட்டார், கைவிடவும் மாட்டார். உன் வாழ்க்கையில் பலத்த அற்புதங்களைச் செய்து, அதிசயங்களைச் செய்து உன் குறைவுகளை நிறைவாக்கி சத்துருக்களுக்கு முன்பாக லாசருவை உயிரோடு எழுப்பி மார்த்தாள், மரியாளை கனம் பண்ணின தேவன், இன்றைக்கு உங்களுக்கும் அப்படிச் செய்வார். அவருடைய ராஜ்யத்தில் போஜனம் பண்ணுகிறவர்களாக, விருந்தில் கலந்து கொள்பவர்களாக உங்களை மாற்றி மகிமையாய்ப் பிரகாசிக்கப்பண்ணுவாராக. பலத்த அற்புதங்களைச் செய்து உங்களை ஆசீர்வதித்து நடத்துவாராக.