Inspiration

என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நாம் கர்த்தரை மகிமைப்படுத்துவது எத்தனை பெரிய சிலாக்கியம். ஏசாயா 60:7-ல் என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனிதர்கள் கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில் தேவன் வாசம் பண்ணுகிறதில்லை. வெளி 21:3-ல் இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸóதலமிருக்கிறது, அவர்களிடத்தில் அவர் வாசமாயிருப்பார் என்று வாசிக்கிறோம். 1 கொரி 3:16,17-ல் நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம் என்று பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார். தேவனுடைய ஆலயமாயிருக்கிற நம்மை தேவன் மகிமைப்படுத்துவேன் என்கிறார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த ஆலயம் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அவர் நம்மை நினைத்திருக்கிற வண்ணமாய் நாம் இருக்கிறோமா? பரிசுத்தத்தில் நம்மை காத்துக் கொண்டவர்களாய் இருக்கிறோமா? என்று யோசித்துப் பார்த்தால் நம்மில் அநேகர் இல்லை. குறைவுபட்டிருக்கிறோம் என்று தான் சொல்லமுடியும். நாம் எல்லாரும் பூரணர் அல்ல, பூரணராகும்படி கடந்து போய் கொண்டிருக்கிறோம். மகிமைப்படுத்துவேன் நீ சிறுமை அடைவதில்லை நாம் பல்வேறு காரியங்களில் சிறுமை அடைகிறோம். வேதத்தில் தன்னை உயர்த்தின பரிசேயன் தாழ்த்தப்பட்டான். எனவே நாம் ஆண்டவருக்கு முன்பாகவும், மனிதர்களுக்கு முன்பாகவும் தாழ்மையாக நடக்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். தானி 4:37-ல் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று நேபுகாத்நேச்சர் எழுதி வைத்தான். நாம் நம்மை தாழ்த்தி, தாழ்மையாய் தேவனுடைய கட்டளைகளின்படி வாழாமல் மீறி நடக்கிற போது மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்த்தப்படடுப் போகிறோம். அப்படிப்பட்ட நமக்குத் தான் மகிமையைத் தந்து நம்மை மகிமைப்படுத்துகிறார். ஏசாயா 59:1,2-ல் இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்று ஏசாயா எழுதுகிறார். நாம் எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாய் போனோம் என்று ரோமர் 3:23-ல் வாசிக்கிறோம். தானி 5:20-ல் நேபுகாத்நேச்சார் இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார். அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்று போயிற்று. சாமுவேல் நாட்களில் ஏலி ஆசாரியனாயிருந்தான் 1 சாமு 3:1-ல் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாக கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம், வார்த்தை அபூர்வமாயிருந்தது. பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. ஊழியம் நடந்து கொண்டிருந்து, கர்த்தருடைய வசனம் அபூர்வமாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்தது. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கக்கூடாத நிலையும் இருந்திருக்கிறது. தரிசனம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதினிமித்தம் ஏலியின் கண்கள் இருளடைந்திருந்ததால் அவனால் பார்க்க முடியவில்லை. அவன் குமாரரோ துணிகர பாவச்செயலில் ஈடுபட்டார்கள். விபச்சாரம், வேசித்தனம், இச்சிக்கிறது, துணிவாய் நடந்தது, அதினிமித்தம் தேவகோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது. ஒரு யுத்தத்தில் ஏலியின் குமாரர் மரித்தார்கள். அதைக் கேட்ட ஏலியும் மரித்தார், தேவனுடைய பெட்டி பிடிபட்டு போயிற்று. அதனால் ஏலியின் மருமகள் பிரசவிக்கும் போது 1 சாமு 4:21,22-ல் அவள், மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்றாள். பாவம் தேவ மகிமையை இழக்கப்பண்ணுகிறது. யாக்கோபுடைய வாழ்க்கையைப் பாருங்கள் சொந்த சகோதரனை ஏமாற்றி அவனுடைய ஆசீர்வதத்தை அபகரித்து, மாமன் வீட்டிற்குப் போய் வேலை செய்தான். சாப்பாடு கிடைத்தது, மனைவிகள், பிள்ளைகள், வேலைக்காரிகள், ஆடு, மாடுகள் திரளான சொத்து, இரண்டு பரிவாரங்கள் நிரம்பின மனிதனாய் இருந்தாலும் தேவ மகிமையற்றவனாகவே இருந்தான். அவன் எப்பொழுது தனித்து தேவனைச் சந்தித்து தன் உண்மை நிலையை சொல்லி ஜெபித்தானோ அப்பொழுது தான் யாக்கோபு இஸ்ரவேலாய் மாறி மகிமைப்படுத்தப்பட்டான். அவனுக்கு எதிராய் வந்த அனைத்தும் சாதகமாய் மாறினது. இஸ்ரவேலாய் மாறின பிறகும் சில உபத்திரவங்கள் வழியாய் அவனுடைய மகிமை பாதிக்கப்பட்டது. நான் தான் இஸ்ரவேலாய் மாறிவிட்டேனே! எனக்கு ஏன் இந்த மகிமையில் பாதிப்பு! என் பெயரில் களங்கம் என்று கலங்கியிருப்பான், நாகூம் 2:2-ல் வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப் போட்டாலும் கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பி வரப்பண்ணுவது போல இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார் என்ற வார்த்தையின்படி அவன் வாழ்வில் இருந்த சின்னச் சின்னத் தவறுகளை நீக்கினார். இரண்டு மனைவிகளையும், அவர்கள் பிள்ளைகளையும் ஒரே மாதிரி நேசித்திருக்கவில்லை. ராகேலை தனித்துவமாய் நேசித்து, யோசேப்புக்கு விசேஷித்த அங்கியை செய்து கொடுத்திருந்தான், எகிப்துக்கு தானியம் வாங்க எல்லாரையும் அனுப்பியிருந்தாலும் பென்யமீனை அனுப்பவில்லை தன்னோடு வைத்துக் கொண்டான், தனிப்பாசம் அவன் மீது வைத்தான். இப்படி சிறுசிறு காரியங்களில் இருந்த தவறுகளை நீக்கி, காணாமற்ப் போன மகனைக் காணவும், பிரிவுகள் மாறவும், மகனோடு சேர்ந்து குறைவில்லாமல் போஷிக்கப்படவும், மகிமையாய் கடைசி மூச்சை விடவும், தேவன் இஸ்ரவேலின் மகிமையைத் திரும்பி வரச்செய்து யாக்கோபை, இஸ்ரவேலை மகிமைப்படுத்தினார். ஏசாயா 59:20-ல் மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். மீறுதல்களை விட்டு திரும்புகிறவர்களிடத்தில் மீட்பர் வருவார். இந்த அதிகாரத்தில் மேலே உள்ள வசனங்களை வாசிக்கிற போது எங்கள் மீறுதல் உமக்கு முன்பாக மிகுதியாயிருக்கிறது. எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய் சாட்சி சொல்கிறது. எங்கள் மீறுதல்கள் எங்களோடு இருக்கிறது. எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய் பொய்பேசி எங்கள் தேவனை விட்டுப் பின்வாங்கினோம். கொடுமையாகவும், கலகமாகவும் பேசினோம், கள்ள வார்த்தைகளை கர்ப்பம் தரித்து இருதயத்திலிருந்து பிறப்பிக்கப் பண்ணினோம் என்று ஒரு பாவ அறிக்கையை நாம் பார்க்கிறோம். கர்த்தருக்கு விரோதமாய் கலகமாகவும், கொடுமையாகவும் பொய்பேசி எங்கள் தேவனை விட்டுப் பின்வாங்கிப் போனோம். இந்த விதமான உண்மையான பாவ அறிக்கையும், மீறுதலை விட்டு திரும்புகிறதையும் கண்டு கர்த்தர் மனதுருகி சீயோனிடத்தில் வருவார். ஆகாயó 2:7-ல் சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். ஏசாயா வாழ்வில் இவ்விதமாய் குறைபாடு இருந்த போது ஏசாயா 6:1-8 வரை வாசிக்கும் போது ஒரு தரிசனத்தில் சிங்காசனத்தில் விற்றிருக்கும் தேவனைக் கண்டார். அவருடைய வஸ்திர தொங்களால் தேவாலயம் நிறைந்திருந்தது. கேரூபீன்கள், சேராபீன்கள் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள். அந்த இடம் மகிமையால் நிறைந்ததால் ஏசாயாவின் உதடுகளில் உள்ள அசுத்தத்தை உணர்ந்து ஐயோ! அதமானேன், அசுத்த உதடுகளுள்ள மனுஷன் நான், சேனைகளின் ராஜாவை என் கண்கள் கண்டதே என்றான். அக்கினி தழலை எடுத்துக் கொண்டு வந்து ஒரு தூதன் அவன் உதடுகளைத் தொட்டு உன் அக்கிரமம் நீங்கி உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். அதன் பிறகு இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்று சொல்லி தன்னை அர்ப்பணித்து மகிமையான பணியை செய்ததைப் பார்க்கிறோம். நீங்கள் கூட எதினிமித்தம் சிறுமையின் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள். எரே 30:19-ல் அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை என்று ஆண்டவர் சொல்கிற வார்த்தையின்படி சீயோன் விசாரிப்பற்றவள், தள்ளுண்டவள் என்று சொல்கிற உங்கள் வாழ்வின் காயங்களை ஆற்றி உங்களையும் ஆண்டவர் மகிமைப்படுத்துவார். நீங்கள் சிறுமைப்படுவதில்லை. கர்த்தர் கிருபையும் மகிமையும் அருளுவார். நமது தேவன் மகிமை நிறைந்தவர், மகிமையின் ராஜா, சேரக்கூடாத ஒளியில், மகிமையில் வாசம் பண்ணுகிறவர். சங் 84:11-ல் தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர். கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சங்கீதக்காரன் சொல்கிறார் நமக்கு அவர் கிருபையையும் மகிமையையும் அருளுவார் என்று. சங் 8:4,5-ல் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன், நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர். மகிமையினாலும், கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர் என்று சொல்கிறான். மனுஷர்களாகிய நம்மை தேவன் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டுகிறார். யாத் 33:18-ல் மோசே, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். அந்த மகிமையைப் பார்க்க வாஞ்சித்தான். யாத் 24:15-18 வரை வாசித்தால் மோசே மலையின் மேல் ஏறினபோது ஒரு மேகம் மலையை முழுவதும் மூடிற்று. கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் ஆறுநாள் மலையை மூடியிருந்தது. ஏழாம் நாளில் கர்த்தர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப் போல இருந்தது. இரவும் பகலும் நாற்பதுநாள் அந்த மகிமையின் மேகத்தில் இருந்தான் என்று வாசிக்கிறோம். அதே மகிமையின் தேவன் நமக்கும் அந்த மகிமையைத் தருகிறார். அது சூரியனின் மகிமையை விட பல மடங்கு மகிமை. இதை சாதாரண மனிதர்களாகிய நமக்குத் தருகிறாரே! எத்தனை மேன்மை. சங் 27:4-ல் தாவீது கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்óக்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செயய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் அவருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடினான். சாலமோனுக்கு ஆண்டவர் தரிசனமாகி நீ விரும்புவதைக் கேள் என்ற போது அவன் ஞானத்தைக் கேட்டான். 1 ராஜா 3:13-ல் ஆண்டவர் அந்த ஞானத்தைக் கொடுத்து, நீ கேளாத ஐஸ்வரியத்தையும், மகிமையையும் உனக்குத் தந்தேன் என்றார். இன்றைக்கு அவருடைய மகிமையினால் நம்மை அவர் மூடுவார். தம் மகிமையை நமக்கும் அருளுவார். மோசேயைப் போல தாவீதைப் போல இந்த மகிமையை எனக்கு காண்பியும், எனக்கும் தாரும் என்று கேளுங்கள். ஆதாமையும், ஏவாளையும் இந்த மகிமை மூடியிருந்தது. நாம் எந்த அளவு பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறோமோ, எந்த அளவு தேவனைத் தேடுகிறோமோ அந்த அளவு மகிமை நம்மையும் மூடும். சாலமோன் இந்த மகிமையை அவன் கேட்கவில்லை ஆனால் ஆண்டவர் அவன் கேளாத மகிமையைக் கொடுத்தார். 2 நாளா 7:1. சாலமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும், மற்றப்பலிகளையும் பட்சித்தது. கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று என்று வாசிக்கிறோம். இந்த மகிமையைத் தான் தேவன் நமக்கு கொடுத்து நம்மை மகிமைப்படுத்துவேன் என்கிறார். எத்தனை சந்தோஷம், நான் மகிமையினால் நிறைந்திருந்தேன், அவர் என்மேல் வைத்த மகிமையினால் என் கீர்த்தி பெரியதாயிருந்தது. ஆனால் இன்றைக்கு இந்த மகிமையை நான் இழந்துவிட்டேன் என்னால் அவர் மகிமையின் பிரசன்னத்தை உணர முடியவில்லை என்று சோர்ந்து போயிருக்கிறீர்களா? மனம் கலங்காதீர்கள். தானி 4:36,37-ல் நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு ஏறெடுத்த போது அவரது புத்தி அவருக்குத் திரும்ப வந்து, தேவனை உயர்த்தி புகழ்ந்து, ஸ்தோத்தரிக்க ஆரம்பித்த உடனே என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும், என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது. என் மகிமை எனக்கு திரும்பி வந்தது என்று சொல்கிறார் பாருங்கள். உங்களுக்கும் தேவனó இந்த மகிமையை திரும்பக் கொடுப்பார். உங்களைத் தாழ்த்தி தேவனை மகிமைப்படுத்தி ஸ்தோத்தரியுங்கள். திரும்ப தேவன் மகிமையினால், தமது பிரசன்னத்தால் நம்மை மூடுவார். எண் 14:21-ல் பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். பூமி முழுவதும் நிறைந்திருக்கிற மகிமை நம்மையும் நிரப்பும். எபே 1:17-ல் பவுல் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும், மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்றார். மகிமையின் பிதாவை, நம்மை மகிமைப்படுத்துகிறவரை நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஞானத்தையும், தெளிவையும் தர வேண்டுதல் செய்கிறார். இதுவரை நாம் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்துப் போட்டிருந்தாலும், வெறுமையாக்குகிறவர்கள் நம்மை வெறுமையாக்கி நம்மை கெடுத்துக் போட்டிருந்தாலும் ஆண்டவர் நம் மகிமையை திரும்பி வரப்பண்ணி தம் மகிமையின் ஆலயமாகிய நம்மைக் கொண்டு செய்ய நினைத்ததை செய்து நம்மை மகிமைப்படுத்துவார். எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது, கர்த்தரின்ó மகிமை உன்மேல் உதித்தது, அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் என்று ஏசாயா எழுதியது நம் வாழ்வில் நிறைவேறுவதாக.

By Sis. Kala VincentRaj