Inspiration

இயேசுவே தேவனுடைய குமாரன் – நான் சாட்சி

அந்தபடியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன். யோவான் 1:34 கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்றும், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமான (ரோமர் 1:5) நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இஸ்ரவேல் ஜனங்களை கொடுமையாய் ஆண்ட ரோமர் கையினின்று மீட்டு, காப்பாற்றும், இரட்சிக்கும் பிரபுவாகிய மேசியா வருவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஜனங்களின் நடுவே சகரியா என்ற ஆசாரியனுக்கு தேவதூதன் தோன்றி உனக்கு ஒரு குமாரன் பிறப்பான். அவன் பேர் யோவான், அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அநேகரை தேவனாகிய கர்த்தரிடத்தில் திருப்புவான். கர்த்தருக்கு வழியை, ஜனங்களை ஆயத்தப்படுத்தும்படி அவருக்கு முன்னாக நடந்து போவான் என்று சொன்னான். இதற்குப்பின்பு மிகவும் வயதான சகரியாவின் மனைவி கர்ப்பவதியாகி ஐந்து மாதமும் யாருக்கும் சொல்லாமல், வெளிக்காட்டாமல் இருந்தார்கள். (லூக்கா 1:5-80) அந்த நாட்களிலே தேவதூதன் மரியாளிடத்திலும் தோன்றி நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார். உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் லூக்கா (1:31-36) என்றான். ஆண்டவர் எலிசபெத்துக்குச் செய்த அதிசயத்தைக் காணவும், தனக்குச் சொல்லப்பட்ட தேவ வார்த்தையை அவர்களுக்குச் சொல்லவும் மரியாள் அவர்களிடத்திற்கு சென்றார். எலிசபெத்தைச் சந்தித்து மரியாள் வாழ்த்தினவுடனே எலிசபெத் வயிற்றிலுள்ள பிள்ளை துள்ளிற்று என்கிறார். எலிசபெத் என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதிளால் கிடைத்தது என்று ஆச்சரியமாய் கூறுகிறதைப் பார்க்கிறோம். பிறக்கப்போகிற தேவனுடைய குமாரனாகிய இயேசுவுக்கு முன்னோடியான தீர்க்கதரிசி தன் மகன் என்பதை திட்டமாய் அறிந்த சகரியா–எலிசபெத் அந்த நம்பிக்கையை, ஊழியத்தை நோக்கி யோவான்ஸ்நானகனை வளர்த்திருப்பார்கள். பரிசுத்த ஆவியில் பலங்கொண்டு இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன் வரும்வரை வனாந்திரங்களிலே அவர் வாழ்ந்திருக்கிறார். அதன்பின் தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பிதாவாகிய ஆண்டவர், ஆவியானவர் மூலம் வெளிப்படுத்தினதை ஜனங்கள் முன் சாட்சியாக கூறினதைத் தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக நல்ல விஷயங்கள் அல்லது சண்டை, வழக்கு, வாதங்களைப் பற்றி நேரில் கண்ட ஒருவர் மற்றவரிடத்தில் அதைச் சொல்லும் போது அதற்கு நான் சாட்சி என்பார்கள். அதே போல தான் தனக்கு ஆவியானவர் வெளிப்படுத்தின சத்தியத்தைக் குறித்து சாட்சியாகச் சொன்ன யோவானைப் பார்த்து ஆண்டவர் இயேசு சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான் என்கிறார். யோவான் 5:33. தேவகுமாரனும் சத்தியமுமாகிய இயேசுவை யோவான் ஸ்நானகன் எப்படி சாட்சி சொல்லி வெளிப்படுத்தினார் என்று பார்ப்போமா? இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வரக்கண்டு இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி, இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். யோவான் 1:29,36 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று யோவான் பிரசங்கம் செய்ததை கேட்ட மக்கள் நீர் யார்? என்றார்கள் நான் கிறிஸ்து அல்ல என்றான். பின்னே யார்? எலியாவா? தீர்க்கதரிசியா? என்று கேட்ட பொழுது கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்த ஒரு மனிதன் தான் நான். ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் நானே. நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்பதை (ஏசாயயா 9:6) உங்களுக்கு கூறும் சாட்சியாக சொல்ல வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தமாய் நானிருக்கிறேன். நான் சிறுகவும், அவர் பெருகவும் வேண்டும், அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கக்கூட எனக்கு தகுதியில்லை என்று தன்னைத் தாழ்த்தி தேவனுடைய குமாரனை மேன்மைப்படுத்தி பேசினார். அதுமட்டுமல்ல சர்வலோகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி இவரே. தேவனுடைய குமாரனாக உயிர்த்தெழப் போகிறவர் என்பதை வாயினால் அறிக்கையிட்டு சாட்சி சொன்னார். அதைக் கேட்ட அவருடைய சீஷர்கள் இயேசுவுக்குப் பின் சென்றார்கள். அவர்களைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் பின் சென்றார்கள். இயேசு தான் என் இரட்சகர், என்னை பாவத்திலிருந்து காப்பாற்ற வல்லவர் என்பதை இருதயத்திலே நம்பி இயேசுவே என் உள்ளத்திலே வாங்கப்பா பாவத்திலிருந்து விடுதலை பெற முயற்சி பண்ணுகிறேன் ஆனால் என்னால் முடியலை எனக்கு உதவி செய்யுங்க உங்களை என் தகப்பனாக, இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன் என்று வாயினாலே அறிக்கையிட்டு நீங்கள் சொன்னால் இரட்சிக்கப்படுவீர்கள்.( ரோமர் 10:10) அவருடைய நாமத்தை ஏற்றுக்கொண்ட நீங்கள் அவருடைய பிள்ளையாக மாறுவீர்கள்.(யோவான் 1:12) அப்பாவை மகிமைப்படுத்தி உங்களை வாலிப நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் இயேசு நல்லவர், உங்களை நேசிக்கிறார், உங்களுக்கு உதவி செய்வார் அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர். அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சாட்சி சொல்லுங்கள். ஆண்டவர் உங்களுக்கு செய்த நன்மைகளை நீங்கள் பெற்ற விடுதலையை வெட்கப்படாமல் தைரியத்தோடு சாட்சியாகச் சொல்லுங்கள். யோவான் ஸ்நானகனை சாட்சியாக நிறுத்தினவர், பயன்படுத்தினவர், உங்களையும் பயன்படுத்துவார். அநேகரை நீதிக்குப்படுத்துகிற நீங்கள் நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பீர்கள். நீதி 11:30, தானி 12:31. நீங்கள் சாட்சி சொல்வதைக் கேட்டு நிச்சயம் அநேகர் இயேசப்பாவை பின்பற்றுவார்கள். பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுக்கிறவர். நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர். ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். யோவான் 1:33. யோவான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்த போது இயேசு தம்மிடத்தில் வருவதைக் கண்டு தடைசெய்த யோவானைப் பார்த்து (தேவனுடைய நீதியை) தேவனுடைய குமாரனாகிய நானும் நிறைவேற்றுவதே சரியானது, நல்லது என்றார். அப்படியே யோவானும் ஞானஸ்நானம் கொடுத்தபோது ஆவியானவர் இயேசுவின் மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவரே என்னுடைய நேசகுமாரன் என்று உரைத்ததை கண்ணாரக் கண்டவராகிய யோவான் கூறுகிறார், இவர் தான் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறவர் என்று சாட்சியாக அறிவித்தார். இயேசு என் பாவங்களை அவர் இரத்தத்தால் கழுவினார், இயேசுவே ஆண்டவர் தேவனுடைய குமாரன் என்ற ஞானத்தைப் பெற்ற பிறகு நானும் இயேசுவைப் போலவே பாவத்திற்கு மரித்து, நீதிக்குப் பிழைக்கிறேன் என்பதற்காக நாம் பெறும் ஸ்நானமே ஞானஸ்நானம். இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றால் சாட்சி சொல்வதோடும், பிசாசின் கிரியைகளை அழித்து (1யோவான்3:7) சாட்சியாக வாழ்வதற்கும், தேவகுமாரன் இயேசு பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறார். அதை அவசியம் நீங்கள் பெற வேண்டும் என்பதைத் தான் யோவான் சொல்கிறார். யோவான் ஜலத்தினால் ஞனாஸ்நானம் கொடுத்தான், நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறப்போகிறீர்கள். அதற்காக எருசலேமில் காத்திருங்கள். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள். (அப் 1:8) என்று இயேசு மரித்து உயிர்தெழுந்த பின்பு தம்முடைய சீஷர்களைப் பார்த்து சொன்னபடி (அப் 2:1-13) தமது பரிசுத்த ஆவியில் நிறைந்திருக்கிற அந்த ஞானஸ்நானத்தைக் கொடுத்தார். அதனால் அவர்கள் சாட்சி இயேசுவே. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள். அப் 9:33. உலகமெங்கிலும் நற்செய்தி பரவினது. இயேசு பிரதியுத்தரமாக ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 3:3. இந்த கடைசி காலங்களில் வாழுகின்ற நானும், நீங்களும் கர்த்தரின் கட்டளைபடி தண்ணீரால் மட்டுமல்ல பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெற வேண்டும். நாம் தாகத்தோடு கேட்கும் போது அவர் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?. கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்றாரே. பரிசுத்த ஆவியின் பெலனால் மட்டுமே நாம் பாவத்தையும், பிசாசின் தந்திரங்களையும் ஜெயிக்க முடியும். தாகத்தோடு கேட்டு ஆவியானவரை பெற்றுக்கொண்டு உங்கள் வீடு, ஊர், உலகத்திலும் சாட்சிகளாய் வாழ கர்த்தர் தாமே உதவி செய்வாராக.

Youth Special - Sis. Prema David