Inspiration
உடனே அதை விரட்ட யோசியுங்கள்
நீங்கள் நியாப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:13.
கிறிஸ்துவில் அன்பான வாலிபதம்பி, தங்கைகளே, பாவத்தைப் போக்கும் பலியாக சிலுவையில் நமக்காக பலியான இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். குளிர் தாங்க முடியாத ஓர் இரவில் ஒட்டகத்தில் சென்ற ஒரு அராபியன், தன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூடாரத்திற்கு அருகேயே ஒட்டகத்தையும் நிறுத்தியிருந்தான். நள்ளிரவில் திடீரென்று சப்தம் கேட்டு கண் விழித்த அவன் ஒட்டகம் தன் மூக்கை கூடாரத்தின் வாயில் திரைக்குள்ளே நுழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே அதை விரட்ட யோசித்தான்.
ஆனாலும் ஒட்டகத்தின் ஒரு சிறிய பாகம் மட்டும் கூடாரத்திற்குள் நுழைந்திருந்ததால் பரவாயில்லை என்று விட்டு விட்டான். சற்று பின்னர் கண் விழித்துப் பார்த்த போது ஒட்டகம் தன் தலையையும், கழுத்தையும் கூட வைத்திருப்பதைக் கண்டான். எழுந்து அவன் அதை விரட்டும் போது ஒட்டகம் அவனிடம் என்னிடம் கோபப்படாதீங்க வெளியே குளிர் தாங்க முடியவில்லை, இதற்கு மேல் நான் உள்ளே வர மாட்டேன் என்றது. திரும்பவும் அவன் தூங்கி விட்டு மூன்றாம் தரம் விழித்துப் பார்த்த போது ஒட்டகத்தின் முன்னங்காலும், முதுகும் உள்ளே இருக்கிறதைக் கண்டான். எழுந்து அதை வெளியே விரட்டும்படி முயற்சிக்கையில் ஒட்டகம் ஐயா, இனி மேல் ஒரு அங்குலம் கூட உள்ளே வர மாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறேன், மேலும் நாம் இருவராக இருப்பதினால் உமக்கு சற்று அனலாயிருக்கும் என்றதாம். அராபியனுக்கு நல்ல தூக்கம் கொஞ்சம் மனபயம், ஆனால் ரொம்பவே சோம்பல் மீணóடும் தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்தில் ஐயோ என்று அலறினான். அந்த ஒட்டகம் அவன் மேலே படுத்து விட்டது. அப்பொழுது ஒட்டகம் உமக்கு இடம் வேண்டுமானால் வெளியே போய் விடும் அங்கு போதுமான இடம் இருக்கிறது என்றதாம்.
இந்த கதையில் வரும் ஒட்டகம் போல், உங்கள் சிந்தனை, உணர்ச்சியில் வரும் அது, அதுதான் அந்த பாவத்துக்கு கொஞ்சம் இடம் கொடுத்து, கொடுத்து இன்று அதினின்று எழுந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீதிமான் எத்தனை முறை விழுந்தாலும் எழுந்திருப்பான் என்றோ அல்லது பாவத்தை செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டுக்கலாம் என்றோ, அந்த தப்பை செய்யுற அவங்க நல்லாத்தானே இருக்காங்க. நான் இதை கொஞ்சம் செஞ்சா ஒன்னுமில்லை என்று உங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது இயேசு உன் பாவத்தை மன்னிக்கவே மாட்டார். இதை நீ விடுவதற்கு, நீ எடுக்கும் முயற்சியெல்லாம் வேஸ்ட், நீ இருக்கிறதே வேஸ்ட் என்ற சுயபரிதாபத்திலே, சோர்விலிருக்கிறீர்களா? நீங்கள் அதிலிருந்து விடுதலை பெற செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பார்ப்போம்.
இயேசுவைப் போல ஜெபியுங்கள்.
முழங்காற்படியிட்டு பிதாவே, உமக்குச் சித்தமானால், இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். செயóய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமலிருப்பதும், செய்யக்கூடாததை செய்வதும் பாவமாகும். மோசேயின் செய், செய்யாதே, பத்துக்கட்டளைகளை மீறினது பாவமாக இருந்த காலங்களில் பாவத்திலிருந்து விடுபட அவர்கள் செலுத்திய பலி, செய்த முயற்சி நிரந்தர விடுதலையைத் தர முடியவில்லை. தற்காலிகமான விடுதலையை பெற்று மீண்டும், மீண்டும் பாவம் செய்தனர். பவுலைப் போல விரும்புகிற நன்மையை, நல்லதை செய்யாமல் தீமையையே செய்து கொண்டிருந்தனர். என் விருப்பமல்ல, உங்கள் விருப்பம், சித்தம் என் வாழ்க்கையில் நடக்கட்டும் சிலுவை மரணம் மூலம் தான் மக்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்றால், என்னால் முடியலை, பிடிக்கவில்லைன்னாலும் உங்கள் சித்தத்தைச் செய்ய வருகிறேன். என் சித்தமல்ல, உங்க சித்தம் நடக்கட்டும் என்று ஜெபித்த இயேசுவைப் போல முதலாவது ஜெபியுங்கள், சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று என்னை இரட்சித்துக் கொள்ளும். மத் 6:13. நிச்சயமாக பாவ எண்ணங்கள், செயல்கள், அதன் தண்டனைகள், விளைவுகளிலிருந்து உங்களை விடுதலையாக்கும். ( எபி 10:7, ரோமர் 8:1 ) பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவசித்தம். 1 பேதுரு 4:5. அந்த சித்தத்தின்படி நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். எபி 7:10. கிருபையாகிய கிறிஸ்துவுக்கு கீழ் வந்த உங்களை பாவம் அடிமையாக்காது, நீங்கள் அதை ஜெயிப்பீர்கள். உடனே அதை விரட்ட இயேசுவைப் போல (தொடர்ந்து) ஜெபியுங்கள்.
இயேசுவைப் போல எதிர்த்து நில்லுங்கள்.
தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். யாக் 4:7. பறவை தலைக்கு மேல் பறக்கலாம் ஆனால் உங்க தலை மேல் கூடு கட்ட விடாதீங்க என்று பெரியோர் சொல்லுவதைப் போல என் வாழ்க்கையில், என் குடும்பத்தில் பாவத்தை அனுமதிக்கவே மாட்டேன். இயேசுவின் நாமத்தில் பாவத்தை, இந்த காலத்தில் இதெல்லாம் தப்பிóல்லை…..என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன் தப்பு தப்புதான் என்று இயேசுவின் நாமத்தில் பாவத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லுங்கள். சாத்தானும், அவன் போடும் தீய எண்ணங்களும் உங்களை விட்டு மட்டுமல்ல உங்கள் எல்லையிலிருந்தும் ஓடிவிடும்.
இயேசுவை வனாந்திரத்திலே சாத்தான் சோதித்த போது பாசியாயிருந்த நேரத்தில் பசிக்கும், உணர்ச்சிக்கும் அவர் இடம் கொடுக்கவில்லை, பெருமைக்கும் பொருளாசைக்கும் அவர் இடம் கொடுக்கவேயில்லை. சாத்தான் வேதத்தின் வார்த்தையைக் கொண்டு, நீர் தேவனுடைய குமாரன் தானே என்று சொல்லியே அவரை சோதித்தான், அவன் தந்திரங்களை அறிந்த ஆண்டவர் தேவனுடைய குமாரனாகிய தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பாவஞ்செய்வதற்கு துர்ப்பிரயோகம் செய்யாமல், பயன்படுத்தாமல் வார்த்தையைக் கொண்டு அவனை தோற்கடித்தார். அப்பாலே போ சாத்தானே என்று அவனைக் கடிந்து கொண்ட போது அவன் ஓடியே போனான். அவனை சிலுவையிலே முற்றிலுமாக ஜெயித்து, நமக்கும் பாவத்தின் மேல் ஜெயங்கொடுத்திருக்கிறார். இயேசப்பா என் பாவத்திற்காக மரிதóதவரே, என் பாவங்களை மன்னியும், எனக்காக உயிர்த்தெழுந்தவரே, இனி பாவம் என்னை ஆளக்கூடாது, நீரே என் ஆண்டவர் என்று இருதயத்தில் நம்பி உம்மிடம் சொல்கிறேன் என்று உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களை இரட்சிக்க, காப்பாற்ற, உங்களுக்கு உதவி செய்ய இருக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார். இனியும் நீங்கள் சோதனைகளில் சிக்கி தவிக்க வேண்டாம். பாவத்தோடு விளையாடாமல் எச்சரிக்கை யாயிருந்து பாவத்தை எதிர்த்து நில்லுங்கள். பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது. உங்கள் பேரில் இருந்த எல்லா கெட்ட பெயர்கள் மறைய உங்களுக்குள்ளிருந்த தீய சுபாவங்கள் வெளியேற, தொடர்ந்து வேதவாசிப்பு, ஜெபம் அவசியம் இவற்றை விட்டுவிடாதிருங்கள். பரிசுத்தர் இயேசு பாவத்தை மேற்கொள்ளும் பெலன் தந்து வழிநடத்துவாராக.
Youth Special - Sis. Prema David