Inspiration

நான் வாழ மரித்தீரே, எனக்காக உயிர்த்தீரே….... உமக்காகவே வாழ்வேன்

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும், இப்படியாயிற்று. கலா 3:13,14. கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே நாம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாம் வாழ்வதற்காக, நமக்காக சாபமாகிய சிலுவையில் மரித்தவரும், நமக்காகவே, உயிர்த்தவருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். நம்முடைய குடும்பங்களில் நாம் பல்வேறு கஷ்டங்களின் வழியாகத் தான் வந்து கொண்டிருக்கிறோம். அவைகளில் பெரும்பாலும் சாபங்களே. விக்கிரகங்களுக்கும், வீணான காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேவனை அசட்டை பண்ணும் போது தேவனால் நமக்கு சாபம் வருகிறது. அதே சமயம் அவருக்குக் கீழ்படிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம் 100./. உறுதி. இன்றைய நாட்களில் உங்களில் அநேகர், நீங்களும் கூட அதிகமான மன அழுத்தம், திரும்பத் திரும்ப தவறுகளை ( பெற்றோருக்குத் தெரியாமல்) செய்து குற்ற உணர்வுகளினால் பிடிக்கப்பட்டு ஒன்னுமே செய்ய பிடிக்கலை, நான் எதற்கு உயிரோடு வாழனும், இருந்து என்ன பிரயோஜனம்? இருக்கிறதற்கு சாகலாம் என்று உங்களுக்குள்ளே நீங்கள் விரக்தியடைந்து, சாவைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து தான் ஆண்டவர் சொல்லுகிறார், நீ வாழத்தான் நான் மரித்தேன். உன்னைப் பின் தொடர்ந்த சாபத்தினால் தான் நீ வேதனைப்பட்டாய், உன்னை விடுவிக்கவே நான் மரித்தேன். சாபத்தையே சுமந்து திரிந்த நீ இனி ஆசீர்வாதமாய் வாழ முடியும் என்று ஆண்டவர் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், உங்கள் நலத்தையும், உயர்வையும் பிடிக்காதவர்கள் சொன்ன அனைத்து சாப வார்த்தைகளையும் சிலுவையிலே ஆண்டவர் முறித்துப் போட்டபடியினாலே இனி நீங்கள் விடுதலையாய் வாழ முடியும். நான் ஒரு கிறிஸ்தவ பிள்ளை தான் நானும் சாபத்தின் சின்னம் போல கஷ்டப்பட்டுத்தான் இருக்கிறேன் என்கிறீர்களா? நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம். 1.நம்முடைய பாவங்களை நாம் இயேசுவிடம் அறிக்கை செய்ய வேண்டும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9. நாம், நம் பெற்றோர் செய்த பாவங்களே, நம்மேல் சாபங்களாய் வருவதினால் பாவத்தை மன்னித்து நம்மை வாழவைப்பதற்கும், ஆண்டவர் இயேசுவிடம் என் பெற்றோரும், நானும் செய்தது பாவம், தவறு, நான் பாவி என்று உம்மிடம் ஒத்துக் கொள்கிறேன். இயேசுவே உம் இரத்தத்தால் என்னைக் கழுவும். உம்முடைய பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும். நான் பாவம் செய்வதற்கு காரணமான நபர்கள், தீய பொருட்கள், சாத்தானோடு தொடர்புடைய அனைத்தையும் விட்டு விடுகிறேன் என்று சொல்லுங்கள். இனம் புரியாத தெய்வீக சமாதானம் உங்களை நிரப்பும். பாவ சாபங்களிலிருந்து விடுதலையாவீர்கள். 2.இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்ததை விசுவாசித்து அறிக்கை செய்ய வேண்டும். கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர் 10:9,10. இயேசு கிறிஸ்து நமக்காக, உங்களுகóகாக, உனக்காக சிலுவையில் மரித்ததை, அவர் உயிரோடு எழுந்ததை, இருதயத்தில் விசுவாசித்து, நம்பி உங்கள் வாயினாலே நீங்கள் அறிக்கையிட்டாலே போதும் நீங்கள் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுதலையாவீர்கள். இயேசு தான் தேவனுடைய குமாரன், அவராலேயன்றி வேறே எந்த வழியும், நம்பிக்கையுமேயில்லை. உலகத்திலுள்ள எத்தனையோ கோடி மக்கள் இந்த உண்மையை விசுவாசித்து அறிக்கையிட்டு, இயேசுவே என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டு விடுதலையாய் வாழும் போது நீங்கள் ஏன் மரிக்கிறீர்கள். நீங்கள் ஏன் இயேசுவே நீர் எனக்கு வேண்டும், நீரே என் இரட்சகர் என்று சொல்லக்கூடாது?. எனக்காக மரித்தீரே, எனக்காக உயிர்த்தீரே இயேசுவே என் ஆண்டவர் என்று விசுவாசத்தோடு சொல்லி தொடர்ந்து இயேசுவுக்காய் வாழுங்கள். விடுதலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். 3.நமக்கு விரோதமாக தீமைகளையும், தவறுகளையும் செய்தவர்களை மன்னிக்கிறேன் என சொல்ல வேண்டும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும், நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே. லூக்கா 11:4. இயேசு கிறிஸ்து நம் பாவங்களை மன்னித்தது போல, பிறர் நமக்குச் செய்த தீமைகளை, தவறுகளை மன்னிப்பது சாதாரண காரியமல்ல. நாம் மன்னிக்கிறோம் என்று சொன்னாலும், அவர்கள் பேசின வார்த்தைகள் பேசின விதங்கள் நம்மை அதினின்று விடுதலை பெற விடாமல் தடை செய்யும். ஆனால் நல்ல சமாரியனாம் நம்முடைய ஆண்டவர், பரிசுத்த ஆவியானவர் பிறரை மன்னிக்கவும், மறக்கவும் நமக்கு உதவி செய்வார். உங்களை வேதனைப்டுத்தினவர்களின் பெயரைச் சொல்லி ஆண்டவரே! அவர்களை மன்னிக்கிறேன் என்று சொல்லுங்கள். இது உங்களால், நம்மால் முடியாத காரியமாய் இருக்கலாம் ஆனால் ஆவியானவர் இந்த நல்ல தீர்மானத்திற்கு உங்களுக்கு உதவி செய்து, பாவ சாபங்களில் இருந்து உங்களை விடுதலையாக்குவார். கர்த்தரே ஆவியானவர், ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு 2 கொரி 3:17. விடுதலை நாயகனாம் ஆண்டவர் இயேசு தாமே பாவ சாப வியாதி, சாத்தானிடமிருந்தும் விடுவித்து உங்களை வாழ வைப்பாராக!.

Youth Special - Sis. Prema David