Inspiration

தேவன் ஒளியாயிருக்கிறார்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இருள் சூழ்ந்த இவ்வுலகத்திற்கு ஆண்டவர் இயேசு ஒளியாக வந்தார். எப்படி இருள் சூழ்ந்த உலகம் என்று சொல்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் இருள் வந்தும், காலை ஒளி வந்து விடுகிறதே, பகலெல்லாம் வெளிச்சத்தில் தானே இருக்கிறோம் என்றால் பகலில் வாழ்ந்தாலும் இருளின் கிரியைகள், அந்தகாரத்தின் கிரியைகள் ஒவ்வொருவரையும் சுற்றி சூழ்ந்திருக்கிறது. அதன் நடுவில் 1 யோவான் 1:5-ல் தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது என்று வேதத்தில் வாசிக்கிறோம். நம்முடைய தேவன் ஒளியாயிருக்கிறார் யோவான் 1:1-5 வரை வாசித்தால் ஆதியிலே இருந்த தேவன் அவர்தான், சகலத்தையும் வார்த்தையாலே உண்டாக்கினார். அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. 9-ஆம் வசனத்தில் உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி, அவர் இயேசுவே. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார், அப்பொழுது ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். எரேமியா 4:23-ல் பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்தது. வானங்களைபó பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது என்று பார்த்து ஒளியில்லாதிருக்கிற பூமியில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று வெளிச்சத்தை, ஒளியை ஆண்டவர் சிருஷ்டித்தார். இயேசு பிறந்த போது யூதேயா நாட்டிலுள்ள மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருக்கும் போது கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. இயேசுவை ஆலயத்தில் பெயர் வைக்க எடுத்துச் செல்லும் போது சிமியோன் தேவ ஆவியின் ஏவுதலால் ஆலயத்தில் வந்து குழந்தையைக் கையில் ஏந்தி லூக்கா 2:30-ல் புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கு முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றான். இயேசு இந்த உலகிற்கு ஒளியாய் வந்திருக்கிறார் என்று அறிவித்தான். இயேசு கலிலேயா கடலேரமாய் நடந்து வருகிற போது இருளிலó இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று மத் 4:15-ல் வாசிக்கிறோம். இயேசு தமது சீடர்களோடு தனித்திருக்கும்படி மலையின் மீது ஏறினபோது அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானார், அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று. மத் 17:5-ல் ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்கு செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. யோவான்ஸ்நானகன் யோவான் 1:7,8-ல் கிறிஸ்துவுக்கு முன் தேவனால் அனுப்பப்பட்டு வந்தவன். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான் என்று யோவான் எழுதுகிறார். யோவான்ஸ்நானகனிடத்தில் இயேசுவைக் குறித்து சிலர் கேட்கிறார்கள் அப்பொழுது யோவான் 3:28-ல் நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன் அனுப்பப்பட்டவன் என்று சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். இயேசு தான் அந்த ஒளி, நான் அல்ல. நான் அந்த ஒளியைக் குறித்து சாட்சி சொல்ல அனுப்பப்பட்டவன் என்றான். இயேசு ஒளியாயிருக்கிறார் அவரில் எவ்வளவேனும் இருளில்லை. யோவான் 8:12-ல் இயேசு ஜனங்களை நோக்கி நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார். நானே உலகத்தின் ஒளி, என்னைப் பின்பற்றி சென்றால் அவன் இருளில் நடக்கமாட்டான் ஜீவ ஒளியைப் பெறுவான் என்று சொன்னார் இயேசு. ஒளியினிடத்தில் வாருங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு ஒளியாக வந்திருந்தும், பூமிமுழுவதும் இருளும், இருளின் கிரியைகளும் சூழ்ந்திருக்கிறதே, யோவான் 3:19-21 வரை வாசித்தால் ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால், அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை தீர்ப்புக்கு காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்திற்கு வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்கு முன்பாக செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு ஒளியினிடத்தில் வருகிறான் என்று இயேசு சொன்னார். மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருப்பதால், பொல்லாங்கு செய்கிற எந்த மனுஷனும் ஒளியிடம் வராதிருக்கிறான். ஒரு பணக்கார வாலிபன் இயேசுவிடம் வந்து நான் நித்தியஜீவனை அடைவதற்கு எந்த நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டபோது ஆண்டவர் கற்பனைகளை கைக்கொள் என்றார். நான் சிறுவயது முதல் அதைக் கைக்கொள்கிறேன், இன்னும் என்னிடத்தில் என்ன குறைவு இருக்கிறது என்றான். உன்னிடத்தில் உள்ளதை தரித்திரருக்கு கொடு என்ற போது அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவனாயிருந்தபடியினால் துக்கத்தோடே போய் விட்டான். ஒரு பார்பர் ஷாப்பில் முடி வெட்டும்படி ஒரு தேவமனிதன் போய் இருந்தார். முடிவெட்டும் மனிதன் கடவுளை நம்பாத நாத்திகனாய் இருந்தான். கடவுள் என்பவர் இல்லை, இருந்தால் ஏன் இந்த பூமியில் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். ஏழை, பணக்காரன், ஏற்றதாழ்வு இதெல்லாம் கடவுள் இருந்தா இருக்குமா? என்று காரசாரமாய் பேசிக் கொண்டிருந்தான். இந்த தேவ மனிதருக்கு கடவுள் இருக்கிறார் என்று எப்படி சொல்வதென்று புரியவில்லை. மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருந்தார், வேலை முடிந்தது வெளியே போக கதவை திறந்தார். அங்கே கண்ணாடிக் கதவுக்கு வெளியே ஒரு மனிதன் மனநõலை பாதிக்கப்பட்டவனாய் தலைமுடி நீளமாய் வளர்ந்திருந்தது, காலில் பிய்ந்து போன செருப்பு அணிந்து தாறுமாறாய் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் இவருக்குள் பளிச்சென்று ஒரு ஒளி, திரும்பி வந்து முடிவெட்டுகிற அந்த மனிதனைப் பார்த்து இந்த உலகத்தில் முடி வெட்டுகிறவன் இல்லை. இல்லவே இல்லை என்று சத்தமாய் சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்பு தான் என் முன்னால் அமர்ந்து முடி வெட்டி சென்றார். இப்போது முடிவெட்டுகிறவன் உலகத்திலேயே இல்லை என்கிறாரே! என்ன ஆயிற்று இவருக்கு என்று விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் கதவுக்கு வெளியே முடி நீளமாய் வளர்ந்து சென்று கொண்டிருந்த மனிதனைக் கண்டுபிடித்து முடிவெட்டுகிறவன் இந்த உலகத்தில் இருந்தால் ஏன் இந்த மனிதன் நீளமான முடியுடன் நடமாடுகிறான் என்றார். அதற்கு அவன் இதென்னயா! ரோட்டில் போகிற, வருகிறவனுக்கெல்லாம் நான் முடிவெட்ட முடியுமா? யார் என்னிடம் வந்து அமர்ந்து, என்னைப் பார்த்து முடிவெட்டி விடுங்களó என்று சொல்லுகிறார்களோ அவர்களுக்குத் தான், நான் உதவ முடியும் என்றான். உடனே அந்த தேவ மனிதர் அப்படித்தான் இந்த உலகில் தேவன் இருக்கிறார். யார் அவரிடம் வந்து, அவரை விசுவாசித்து, அவர் உதவியை நாடுகிறோமோ அவர்களை அவர் கைவிடுவதில்லை. இந்த உலகத்தில் உள்ள எந்த மனுஷனையும் பிரகாசிக்கப்பண்ணுகிற மெய்யான ஒளி இயேசு என்று அவர் அறிவித்து சந்தோஷமாய் சென்றார். உண்மையாய் சத்தியத்தின்படி செய்கிறவன் ஒவ்வொன்றிலும் தேவனுக்குப் பிரியமாய் நடக்க ஒளியினிடத்தில் வருகிறான். தன் தவறை, தவறான வாழ்வை உணர்ந்த இளையமகன், கெட்டகுமாரன் தன் தகப்பனிடத்தில் தன்னைத் தாழ்த்தி வந்துவிட்டான். தகப்பன் அவனைத் தள்ளவில்லை, அவனைத் தண்டனைக்குள்ளாக்கவில்லை. ஆக்கினையிலிருந்து அவனை விடுவித்தார். அந்த தேவன் இன்றைக்கு அவரிடம், ஒளியிடம் வருகிற ஒவ்வொருவரையும் பிரகாசிக்கச் செய்வார். எனவே இயேசுவாகிய ஒளியினிடத்தில் வாருங்கள். ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள். விசுவாசம் தான் நம்முடைய வாழ்வில் பலத்த நன்மைகளை கொண்டு வருகிறது. விசுவாசம் இல்லாமல் நாம் எந்த நன்மைகளையும் பெற முடியாது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாய் இருப்பது கூடாத காரியம். யோவான் 12:36-ல் ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்று இயேசு சொன்னார். யோவான் 12:46-ல் என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். நாம் ஒளியின் பிள்ளையாகும்படி அவரிடம் விசுவாசமாயிருக்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நாம் அவரிடம் விசுவாசமாயிருக்கும் போது அவருடைய பிள்ளையாகிறோம். நாம் விசுவாசிக்கும் போது இருளில் இருப்பதில்லை. காரணம் நமக்கு ஒளியாக அவர் வந்தார். இருள் போன்ற பாவங்கள், துன்பங்கள், சோதனைகள் நமக்கு எதிரிட்டு வரும்போது அவர் நமது ஒளியாயிருந்து நம்மைக் காப்பாற்றி, அந்த சூழ்நிலைகளுக்கு நம்மைத் தப்புவிப்பார். யோவான் 3:18-ல் அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் அவன் ஆக்கினை தீர்ப்புக்குட்பட்டாயிற்று. நினிவே ஜனங்களின் பாவம் பெருகின போது அவர்களுக்கு ஒரு ஆக்கினை, ஒரு தண்டனை நியமிக்கப்பட்டது. ஆனால் கர்த்தர் யோனாவை அனுப்பி இந்த செய்தியை சொன்ன போது யோனா 3:5-ல் அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படி கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் வரை இரட்டுடுத்திக் கொண்டார்கள். ராஜாவும், ஜனங்களும் தேவனை விசுவாசித்து, தங்களைத் தாழ்த்தி, இரக்கத்தை பெற்று விட்டார்கள். அழிவா? அது வரும் போது பார்க்கலாம் என்று மெத்தனமாக இருக்கவில்லை தேவனை விசுவாசித்தார்கள். இந்த அழிவுக்கும், தண்டனைக்கும், ஆக்கினைக்கும் அவர் நம்மை விடுவித்துக் காப்பார் என்று விசுவாசித்து நன்மையைப் பெற்றார்கள். எனவே தேவனை விசுவாசியுங்கள். ரோமர் 13:12-14 வரை வாசித்தால் இரவு சென்று போயிற்று பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை தரித்து கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும, வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல் பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுங்கள் என்று பவுல் எழுதுகிறார். இரவில், இருளில் இருப்பவர்கள் அநேக தவறுகளை செய்வார்கள். ஆனால் பகலில் யாரும் பார்த்து விடுவார்கள் என்று சற்று கவனமாய் நடப்பார்கள். அதனால் தான் பவுல் பகலிலே நடக்கிறவர்களைப் போல சீராய் நடக்கக்கடவோம் என்கிறார். நாம் பகலின் பிள்ளைகள், ஒளியின் பிள்ளைகள் இருள் நம்மை சூழ்வது போல வரலாம், அந்த நேரம் இயேசுவை விசுவாசித்து ஜெபம் பண்ணுங்கள். இந்த அந்தகாரம் என்னைச் சூழக்கூடாது, என் கண்களில் இந்த ஒளி, செவிகளில், இருதயத்தில், வாயின் வார்த்தைகள், கிரியைகள் எல்லாவற்றிலும் ஒளியின் ஆயுதங்கள் என்னில் வெளிப்படட்டும். இருளின் ஆயுதங்கள் என்னை விட்டு விலகி அழிந்து போகட்டும் என்று ஜெபியுங்கள். சங் 4:6-ல் கர்த்தாவே! உம்முடைய சமூகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும் என்றான். 2 கொரி 4:6-ல் இருளில் இருந்து வெளிசத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகதóதிலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். அதற்கு முன்பாக மேலே 2 கொரி 4:4-ல் தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்றான். பிசாசு நம்மை, நம் மனதை இருளாக்கி குருடாக்குகிறான். ஆனால் கிறிஸ்துவின் மகிமையான தேவனுடைய சாயலாயிருக்கிற சுவிசேஷ ஒளி, வேதவசனமாகிய ஒளி நம் இருதயங்களில் பிரகாசிக்கிறது. வேத தியானத்தில் உறுதியாய் இருந்து தேவனை விசுவாசியுங்கள். ஒளியை அறிவியுங்கள். உயிர்த்தெழுந்த இயேசு மகதலேனா மரியாளிடம் நீ போய் சகோதரரிடம் நான் தேவனிடத்திற்கு ஏறிப் போகிறேன் என்று சொல் என்றார். மாற்கு 16:15-ல் நீங்கள் உலகம் எங்கும் போய் சரóவ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று இயேசு சொன்னார். 1 பேதுரு 2:9-ல் நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரிய கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறார்கள் என்று பேதுரு சொல்கிறார். இயேசுவை, ஒளியை அறிவிப்பது நமது பணி. அதற்காக நாம் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். சவுல் இயேசுவின் ஜனங்களை துன்பப்படுத்தி, அவருக்கு எதிர்த்து நடந்தவன். அப் 9:3-ல் அப்படி அவன் பிரயாணப்பட்டு போகிற போது சடுதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றி பிரகாசித்தது. அதை அவன் விவரித்து சொல்லும் போது அப் 22:11-ல் அந்த ஒளியின் மகிமையõனாலே நான் பார்வை அற்றுப்போனபடியினால் என்னோடு இருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன் என்றான். அனனியா தேவனால் அனுப்பப்பட்டு ஜெபம் பண்ணின போது அவன் கண்கள் திறந்தது. இயேசுவுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தான். அப் 9:20-ல் தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று ஆலயங்களில் பிரசங்கித்தான். அப் 26:18-ல் புறஜாதியார், அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக அவர்கள் இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களை திறக்கும் பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்று பவுலை ஒளியை அறிவிக்க அனுப்பினார். நம்மையும் அதற்கு தான் தேவன் அழைத்திருக்கிறார். எழும்பி பிரகாசி, உன் ஒளி வந்தது. இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும். ஆனாலும், உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் என்று ஏசாயா 60:1,2-ல் வாசிக்கிறோம். ஏசாயா 49:6-ல் யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது. நீர் பூமியின் கடைசி பரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைப்பேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். புறஜாதிகளுக்கும், இஸ்ரவேலுக்கும், பூமியின் கடைசி பரியந்தமும், என்னுடைய இரட்சிப்பை அறிவிக்க ஜாதிகளுக்கு, கோத்திரங்களுக்கு தேவன் நம்மை ஒளியாக பயன்படுத்த விரும்புகிறார். இந்த ஒளியை அறிவியுங்கள். இயேசுவை சொல்லுங்கள். ஒளியாய் இருக்கிற தேவன் தாமே இதை வாசிக்கிற ஒவ்வொரு உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒளியாய் பிரகாசித்து இருளை நீக்கி ஆசீர்வதிப்பாராக!.

By Sis. Kala VincentRaj