Inspiration

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் சகோதரிகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள்! பலவிதமான கஷ்டங்களில் கடந்து போகும்போது என்ன ஆக்கினையோ! என்று சொல்வார்கள். செப் 3:15-ல் கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கை காணாதிருப்பாய் என்ற அற்புதமான வாக்குத்தத்தத்தை வாசிக்கிறோம். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நம் நடுவில் இருந்து, இது வரை நாம் அனுபவித்த எல்லா ஆக்கினைகளையும் அகற்றி, நமக்கு விரோதமாய் எழும்பின சத்துருக்களை விலக்குவார். இனி நாம் தீங்கைக் காண்பதில்லை. ஆக்கினை என்று சொல்லும் போது தண்டனை என்று நமக்குத் தெரியும். இயேசுவோடு சிலுவையில் இரண்டு கள்ளர்களை அறைந்தார்கள். ஒருவன் ஆண்டவரைத் தூஷிக்கிறான். நீ கிறிஸ்துவானால் உன்னையும், எங்களையும் காப்பாற்றலாமே! என்று இகழ்கிறான். அந்த நேரத்தில் மற்றொருவன் லூக் 24:40,41-ல் நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்கு தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனை கடிந்து கொள்கிறான். இந்த ஆக்கினை என்பது தண்டனையைக் குறிக்கிறது. இன்னும் யோசேப்பு பொய்குற்றம் சாட்டப்பட்டு, சிறைச்சாலையில் இருக்கும்போது, பார்வோனின் வேலைக்காரர்கள் தவறு செய்ததால் சிறைக்குள் இருந்தார்கள். ஆதி 40:19-ல் அவர்கள் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கும்போது பார்வோன் உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார் என்றான். எஸ்தரின் சரித்திரத்தில் ராஜாவை கொலைசெய்ய இரண்டு பேர் திட்டமிட்டுக் கொண்டிருந்ததை மொர்தெகாய் கவனித்து ராஜாவிடம் தெரியப்படுத்தும் போது, அதுஉண்மை தான் என்று உறுதி செய்யப்பட்டபோது எஸ்தர் 2:23-ல் அவர்கள் இரண்டு பேரும் தூக்கிலிடப்பட்டார்கள். பாவத்திற்கும், அக்கிரமத்திற்கும் வரும் தண்டனைக்கு பெயர்தான் ஆக்கினை. 2 பேதுரு 2:9-ல் பேதுரு, கர்த்தர் தேவ பக்தியுள்ளவர்களை சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். அக்கிரமக்காரருக்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டு என்று எழுதுகிறார். நாமெல்லாரும் பாவம் செய்து, அக்கிரமங்களை நடப்பித்தோம். நம் அக்கிரமங்களுக்கு ஏற்ற தண்டனை நமக்கு இருந்தது. ஆனால் இயேசு அக்கிரமக்காரரில் ஒருவராய் எண்ணப்பட்டு நமக்காக அந்த தண்டனைகளைச் சிலுவையின் மேல் சுமந்து, நம் ஆக்கினைகளை அகற்றினார். யார் மேல் இந்த ஆக்கினை இருக்கிறது. நாம் அந்தப் பட்டியலில் இருக்கிறோமா? இயேசு எப்படி அதை நீக்குகிறார் என்று பார்ப்போம். 1. மாம்சத்தின்படி நடந்தால் ஆக்கினை பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை என்கிறார். ரோமர் 8:1 அப்படியானால் மாம்சத்தின்படி நடந்தால் ஆக்கினை உண்டு. கலா 5:19-21 இந்த மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கிறது. விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூன்யம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள் சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று மாம்சத்தின் கிரியைகளை அடுக்குகிறார். மாம்சசிந்தை மரணம். மாம்சத்திற்குரியவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள். 2 கொரி 10:3-6 ல் நாம் மாம்சத்திலிருந்தாலும் மாம்சத்தின்படி போர் செய்கிறவர்கள் அல்ல. திருவிருந்தில் அப்பமும், ரசமும் நாம் எடுக்கும்போது இவ்விதமான எந்த குற்றமும் இல்லாமல் நாம் எடுக்க வேண்டும். 1 கொரி 11:29-ல் அபாத்திரமாய் அதாவது தகுதியில்லாமல் ஏதோ ஒரு மாம்ச கிரியையில் இருந்து கொண்டு, இயேசுவுக்கு முன்பாக அறிக்கை செய்யாமல், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படாமல், அப்பம் ரசம் எடுத்தால் நமக்கே நாம் ஆக்கினை உண்டு பண்ணிக் கொள்கிறோம் என்று எழுதுகிறார். அதனால் நாம் தவறுகளை ஆண்டவருக்கு முன்பாக அறிக்கையிட்டு அக்கிரமத்திற்கும், அசுத்தத்திற்கும் அடிமையாக ஒப்புக்கொடுத்த நம் அவயங்களை ஆவியின்படி நடக்க, பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தால் ஆக்கினைக்குத் தப்புவோம். மாம்சத்தின் கிரியைகளில் முதலாவது நீதி 28:20-ல் ஐசுவரியவானாவதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். நாம் உயிர்வாழ பணம் அவசியம் தேவை. பிள்ளைகளுக்கு பெற்றோர் தான் சேமிக்க வேண்டும். படிப்பு, வேலை, திருமணம், வீடு ஆஸ்தி தேவையானது தான். ஆனால் எந்நேரமும் சாப்பிடாமல், தூங்காமல், பணம், பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கிறவர்கள் ஆக்கினைக்குத் தப்புவதில்லை. லூக் 12:16-21 ஒரு மனிதனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. என் களஞ்சியத்தை இடித்து பெரிதாக்குவேன் என்ற அவனை, மதிகேடனே! இன்றைக்கு உன் ஆத்துமா உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது நீர் சேர்த்தவை யாருடையதாகும். உலகமெல்லாம் ஆதாயமாக்கினாலும் தன் ஆத்துமாவை கெடுத்து நஷ்டப்படுத்தினால் என்ன லாபம் என்றார். சரீரத்திற்காகவே ஓடி ஆத்துமாவைப் பற்றி கவலையில்லாமல் ஐசுவரியவானாக ஓடாதே! என்கிறார். ஆத்துமாவுக்கு ஏற்ற ஜெபம், வேத தியானம், பரிசுத்த ஆவியின் நிறைவு இதையெல்லாம் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு ஓடாமல், இந்த மாம்ச கிரியையை மேற்கொண்டால் நாம் ஜெயமெடுக்கலாம். அடுத்து ஒரு மாம்சகிரியையைப் பாருங்கள். நீதி 6:29 பிறருடைய மனைவியினிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிறவனும் ஆக்கினைக்குத் தப்பான். இந்தக் காரியம்தான் எங்கும் காணப்படுகிற பொல்லாத அக்கிரமமாயிருக்கிறது. வாலிபர்கள், கன்னிகைகள் ஏராளமாய் இந்த இச்சைகளில் விழுந்து கிடக்கிறார்கள். தனக்கு ஒரு மனைவி இருக்கும்போது இன்னுமொரு பெண்ணை, இன்னொருத்தருடைய மனைவியுடன் தொடர்பு வைப்பது, தனக்கு கணவன் இருக்கையில் இன்னொருவர் வாழ்க்கையில் பிரவேசித்து அந்த குடும்பத்தின் சமாதானத்தைக் குலைத்தால் சர்வ வல்லவர் அமைதியாய் இருப்பாரோ! அவன் (அவள்) ஆக்கினைக்குத் தப்பான் என்று ஆண்டவர் சொல்கிறார். சினிமாவில் நன்றாகப் பாடக்கூடிய, ஆண்டவரை அறியாத சகோதரி, ஒருவருடன் நட்புகொண்டு பிள்ளையும் பெற்றாள். ஒருநாள் ஆண்டவர் இயேசுவைக் கேள்விப்பட்டு தன் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்து இனி வேறு எந்தப்பாடலும் பாடுவதில்லை. இயேசுவுக்காக மட்டும் பாடுவேன் என்று வாழ்ந்தார்கள். ஒருநாள் தன்னோடு இருப்பவர் வேறொரு பெண்ணின் கணவர், இவரோடு நான் வாழ்வது தவறு என்று உணர்த்தப்பட்டு, தன்னுடைய பெண்ணோடு தனியாக வாழ உறுதி எடுத்து, அந்தத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். அந்த குடும்பம் என்னால் பாதிக்கப்பட்டதே! இனி ஒரு போதும் இந்தத் தவறை நான் செய்யமாட்டேன் என்று இயேசுவுக்காக தன் வாழ்வை கொடுத்து விட்டார்கள். அந்த சகோதரியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இயேசுவுக்காக அவர்கள் பாடும் பாடலில் அவ்வளவு இனிமையான கிருபை பாய்ந்தோடும், தாவீது உரியாவின் மனைவியை அபகரித்து, அவளை கர்ப்பமாக்கி பிள்ளைப் பிறந்தபோது கர்த்தர் அந்தப் பிள்ளையை அடித்தார். அது வியாதிப்பட்டு கேவலமாய் இருந்து மரித்தது என்று வேதம் சொல்கிறது. தவறான தொடர்புகள், இச்சைகள், தேவன் அருவருக்கும் ஒரு கொடிய மாம்சகிரியை அது, நமக்குள் யாருக்கும் இராதபடி மனம் திரும்பவேண்டும். அடுத்து, நீதி 12:2 துர்சிந்தையுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார். நல்ல சிந்தையும், நல்ல எண்ணங்களும் நம் வாழ்வில் உண்டாகணும். மற்றவர்கள் மேல் பொறாமை, தன்னைப் பற்றி மேட்டிமை, பெருமை, மற்றவர்களை மதிக்காமல் வாழ்கிற வாழ்வு இதெல்லாம் பிசாசினால் உண்டான சிந்தை. அப் 8:17-24 ஒரு சம்பவம் உள்ளது. அப்போஸ்தலர்கள் யார் மேலெல்லாம் கைகளை வைத்தார்களோ அவர்களெல்லாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதைப் பார்த்த சீமோன் என்பவன் பணத்தைக் கொண்டு வந்து நான் எவன் மேல் கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாய் எனக்கும் அந்த அதிகாரத்தை தரவேண்டும் என்றான். பேதுரு தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே பெறமுடியாது. நீ அப்படி நினைத்தபடியால் உன் பணம் உன்னோடே நாசமாகக்கடவது. உன் இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாய் இல்லை. நீ உன் துர்க்குணத்தை விட்டு மனம் திரும்பி தேவனை நோக்கி வேண்டிக்கொள். ஒரு வேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம் என்கிறான். நம் சிந்தையில், இருதயத்தின் எண்ணங்களில் நமக்குப் பரிசுத்த வேண்டும். நான் அப்படி சிந்திப்பது, நினைப்பது, எண்ணுவது பாவம் என்று உணர்ந்து மனம் திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக் கொண்டால் நாம் மன்னிப்பு பெறமுடியும். தங்களையே புத்திமான், நீதிமான் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அற்பமாய் நினைப்பது நம்மை விட்டு நீங்க வேண்டும். ஏன் இந்த சிந்தை நமக்குள் வருகிறதென்றால் ரோம 1:21-ல் தேவனை மகிமைப்படுத்தாமல், ஸ்தோத்தரியாமல் இருக்கும் போது இந்த சிந்தை வீணாகிறது. இருள் மூடுகிறது. தவறான துர்ச்சிந்தைகள் மேலோங்குகிறது. இதனால் வரும் ஆக்கினைக்கு நாம் தப்பவேண்டும். அடுத்து நீதி 19:5-ல் பொய் சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான். ஆண்டவர் கட்டளைகளில் ஒன்று பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக. எதற்கெடுத்தாலும் பொய் பேசுகிறவர்களுண்டு. இது ஒரு ஆவி. யோவான் 8:44-ல் அவன் பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான். அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான் என்றார். உண்மையாய் நேரில் பார்த்தது போலவே இப்படித்தான் இருக்கும் என்று மனதில் யூகித்துப் பேசுவது. யாக் 5:12-ல் நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்லக்கடவீர்கள் என்கிறார். அனனியா, சப்பீராள் என்ற தம்பதிகள் இடத்தை விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தார்கள். பேதுரு நிலத்தை இவ்வளவுக்குத்தான் விற்றீர்களா என்றபோது பாதிப்பணத்தை மறைத்து வைத்துவிட்டு ஆமாம்! இவ்வளவுதான் என்றார்கள். உடனே அங்கே அதே இடத்தில் மரணம். அவர்கள் ஆக்கினைக்கு தப்பவில்லை. அப் 5:3 பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன என்று பேதுரு கேட்கிறார். பொய்யைப் பேசி அந்த நேரம் தப்பித்துவிடலாம் என்று சாத்தான் இந்த மாம்சக் கிரியையை நம்மில் விதைக்கிறான். இல்லை, நம்முடைய தேவையற்ற பேச்சு, நமது பொய்நாவு இதற்கு தேவனிடத்தில் ஆக்கினை உண்டு. அதை விட்டு நாம் மனம் திரும்ப வேண்டும். அடுத்து, நீதி 19:19 கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான். கோபம் இல்லாத மனிதர்களை நாம் பார்க்க முடியாது. இது ஒரு ஜென்ம சுபாவம். வழி வழியாய் வருவது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை கோபம் யாரையும் விட்டு வைப்பதில்லை. எண் 20:10, 11-ல் தண்ணீர் இல்லாமல் இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்தபோது ஆண்டவர் மோசேயிடம் கன்மலையைப் பார்த்து பேசு என்றார். ஆனால் ஜனங்கள் மேல் கோபம் கொண்ட மோசே கன்மலையை இரண்டு தரம் அடித்தான். தண்ணீர் வந்தது. ஆனால் மோசே அந்த கானானுக்குள் நீ ஜனங்களை கொண்டு போவதில்லை. என்னை நீ விசுவாசித்து என் நாமத்தை பரிசுத்தம் பண்ணவில்லை, கடும் கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டாயே என்றார். எத்தனை வருட பிரயாசம் இந்த ஒரு சுபாவத்தினால் கானானுக்குள் போகும் பாக்கியத்தையே மோசே இழந்து விட்டான். ஆனால் தேவன் மோசே மீது வைத்த அன்பினால் அவனை நேபோ மலைகளில் ஒன்றில் அவரே அடக்கம் செய்தார். என்று வேதம் சொல்லுகிறது. ஒவ்வொரு முறையும் இஸ்ரேலுக்கு போகும்போது ஜோர்டானில் அந்த நேபோ மலையில் சகோதரர் சிறிய செய்தி கொடுத்து ஜெபிப்பார்கள். ஆண்டவரே! எங்களையும் உமது சாந்தமுள்ள ஆவியால் நிரப்பும் என்று அர்ப்பணிப்போம். இந்த மாம்சத்தின்படி நடவாமல் இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கிரியையை நாம் ஆவியினாலே அழித்தால் ஆக்கினைக்கு தப்பலாம். எபி 2:4-ல் இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப் போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம் என்று சொல்லப்பட்டுள்ளது. 2. விசுவாசிக்காவிட்டால் ஆக்கினை கிறிஸ்தவ வாழ்வு விசுவாசத்தில்தான் ஆரம்பிக்கிறது. மாற் 16:16-ல் விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ஒரு இந்துவாய் பிறந்தால் இந்துவாய் வாழலாம். இஸ்லாமியராய் பிறந்தால் இஸ்லாமியராய் இருந்து விடலாம் ஆனால் கிறிஸ்தவர்களாய் பிறந்து பரம்பரையாய் ஆலயத்திற்கு போய் வருவதால் மட்டும் நாம் கிறிஸ்தவர்களாய் இருக்க முடியாது. கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தான் தேவனுடைய பிள்ளைகள். அவர்கள் எந்த ஜாதி, எந்த மதம், என்ன மொழி என்ற வித்தியாசமே இல்லை. எபி 11:6-ல் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். மோசே கன்மலையைப் பார்த்து பேச வேண்டியதற்குப் பதிலாக கன்மலையை இரண்டு தரம் அடித்தான். தேவன் என்னை பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனீர்கள் என்றார். நாம் கூட பிரச்சனைகள் வந்த உடன் விசுவாசமாய் ஜெபம் பண்ணி, ஆண்டவரிடம் பேசுவதற்குப் பதிலாக எத்தனை ஆயிரக்கணக்கான முறை தேவனை சுயத்தினால் அடிக்கிறோம். யோவா 3:18, 5:24-லும் இயேசு சொல்கிறார். என்னை விசுவாசிக்காவிட்டால் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று சொன்னார். மாற் 3:29-ல் ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தூஷணம் சொல்வானாகில் அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்று இயேச சொன்னார். பரிசுத்த ஆவியானவரை நம்பாமல் அல்லேலூயா கூட்டம், பெந்தெகோஸ்தே கூட்டம் என்று ஆவியானவரை, அந்நியபாஷைகளை, தூஷிக்கிற, பரிகசிக்கிறவர்களுக்கு ஆக்கினை என்று வேதம் சொல்லுகிறது. தேவனை, அவரது வசனத்தை பரிசுத்த ஆவியை விசுவாசிக்காமல் இருந்தால், அவரை தூஷித்தால் ஆக்கினை என்று உணர்ந்து இயேசுவை, அவர் வசனத்தை விசுவாசிக்க நம்மை அர்ப்பணிப்போம். மத் 25:42-46-ல் பசியாயிருந்தேன் நீங்கள் எனக்கு போஜனம் கொடுக்கவில்லை, தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை, அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை, வஸ்திரம் இல்லாதிருந்தேன் நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை, வியாதியுள்ளவனாயும், காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன் நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்று நல்ல கிரியைகளை செய்யாதிருந்த அவர்கள் 46-ம் வசனத்தில் நித்திய ஆக்கினையை அடைவார்கள் என்று இயேசு சொன்னார். இந்த நல்ல கிரியைகள் நம்மிடம் உண்டா? நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்து ஆக்கினைக்குத் தப்புவோம். இந்தத் தண்டனைகள், ஆக்கினைகள் எல்லாம் நம்மேல் இருக்கும்போது நாம் என்ன செய்வது என்று பார்ப்போம். 3. ஆக்கினை இயேசுவின் மேல் வந்தது இதுவரை அறிந்தும், அறியாமலும் எத்தனையோ ஆக்கினைகளை நாம் சுமந்து, அனுபவித்து போய்க் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு நற்செய்தி ஏசா 53:5-ல் நம்முடைய மீறுதலுக்காய், இயேசு காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களுக்காய் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. என்னோட ஆக்கினைகளை எல்லாம் இயேசு சுமந்து விட்டார் என்று விசுவாசித்து அவரை நோக்கிப் பார்த்து ஜெபித்தால் இந்த எல்லா ஆக்கினையிலிருந்தும் நமக்கு விடுதலை உண்டு. இயேசு நமது பாவங்களையும், அதனால் வந்த தண்டனைகளையும் தான் சிலுவையில் சுமந்தார். ஏசா 26:16-ல் கர்த்தாவே நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள். உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள் என்ற வசனத்தின்படி தண்டனை என் மேலிருக்கிறது. நான் அதைச் சுமந்து களைத்து போயிருக்கிறேன் என்கிறீர்களா? தேவனை நோக்கி ஜெபம் பண்ணுங்கள். லேவி 26:41-ல் பிற்பகுதியில் அவர்கள் தங்களைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்கு கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால் என் உடன்படிக்கையை நினைப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார். யோவா 8:10,11-ல் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒருபெண் இயேசுவிடம் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டு வரப்பட்டபோது, ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க வில்லையா? நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ! இனிப்பாவம் செய்யாதே என்றார். இயேசுவின் முன்னால் நாம் நின்றுவிட்டால் மனிதர் முன்பாக நாம் நிற்க மாட்டோம். அவர் நம் ஆக்கினைகளை அகற்றும்படி சிலுவையின்மேல் நமது ஆக்கினைகளைச் சுமந்து தீர்த்தார். நம்மை நலமாக்கும் தண்டனை இயேசுவின் மேல் விழுந்தது. இயேசுவே! என் பாவங்கள், அக்கிரமங்களால் வந்த தண்டனையை எனக்காக நீர் சுமந்தீரே! எனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை உம்மேல் விழுந்ததே! என் ஆக்கினைகளை அகற்றி, சத்துருக்களை என்னை விட்டு விலக்கிவிடும் என்று ஜெபியுங்கள். உங்கள் மேல் தேவகிருபை இறங்குகிறது. இயேச எல்லாத் தண்டனைகளையும் சுமந்து கொண்டு உங்களை விடுவிக்கிறார். நம்புங்கள்! இயேசு உங்களைக் கைவிடமாட்டார், வெறுத்து விடமாட்டார், தமது சமாதானத்தை உங்களுக்குத் தருகிறார். இனி பாவம் செய்யாதே! என்கிறார். நம்மை அர்ப்பணிப்போம். செப் 3:13,14-ல் அவர்கள் அநியாயம் செய்வதில்லை, பொய்பேசுவதில்லை, வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதில்லை, சீயோன் குமாரத்தியே மகிழ்ந்து கெம்பீரித்திடு என்கிறார். என் ஆண்டவர் தாமே உங்கள் எல்லா ஆக்கினைகளையும், சாபங்களையும், நீக்குவாராக!

By Sis. Kala VincentRaj