Inspiration
முந்தினதைப் பார்க்கிலும் பிந்தினது சிறந்தது...
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.யோவான் 2:10
யோவான் 2:10-ல் எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
இந்த சம்பவம் இயேசு கானாவூர் கலியாண வீட்டில் செய்த முதல் அற்புதம். நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள் பந்திக்கு முந்தி வரவேண்டும், படைக்குப் பிந்தி வரவேண்டும் என்று. சிலர் கலியாண வீட்டிற்கு கடைசியாக போனால் சாப்பாடு, கூட்டு, குழம்பு குறைந்துவிடும் என்றும் நன்றாக சாப்பிட முடியாது என்றும் வேகமாக முந்தி சாப்பிட்டுவிடுவார்கள். சிலர் பிந்தி கடைசியாக வருவார்கள், அவர்களுக்கு ஏதாவது ஒன்று குறைவாக தான் கிடைக்கும். ஆனால் இந்த கலியாண வீட்டிற்கு கடைசியாக வந்தவர்களுக்கு திராட்ச ரசம் இல்லை தீர்ந்துவிட்டது. கடைசி நிலையில், கடைசிஸ்தானத்தில் இருப்பவர்களை தேவன் கைவிடமாட்டார்.
இவர்கள் யார் என்றால் மணமகனை முதலாவது பார்த்துவிட வேண்டும், அவரை மனதார வாழ்த்தி விட வேண்டும், நான் கலியாணத்திற்கு வந்திருக்கிறேன், நானும் உம்முடைய சந்தோஷத்தில் பங்கு எடுக்கிறேன், எனக்கு சாப்பாடு முக்கியம் இல்லை, இந்த மணமகன், மாப்பிள்ளை தான்முக்கியம் என்று நினைப்பவர்கள். மணவாளனோடு கொஞ்ச நேரம் இருந்து சந்தோஷப்பட்டு களிகூர்ந்து வருவதற்குள் திராட்சரசம் தீர்ந்து போய்விட்டது. ரசம் தீர்ந்து போய்விட்டது என்று போய்விடவில்லை. அந்த கல்யாண வீட்டில் இயேசுவும் இருந்தார், அவர் தண்ணீரை ரசமாக மாற்றினார். இவ்வளவு அருமையான ரசத்தை எங்கே வைத்திருந்தீர்கள் என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு பிந்தின ரசம் ருசியுள்ளதாக இருந்தது. இயேசு அந்த வற்றிப்போகாத, பெருகுகிற, முன்னேறுகிற ஒரு ஆசீர்வாதத்தை அங்கே வைத்தார்.எனக்கு இது முடிந்து விட்டது, அடுத்த வேலை, அடுத்த நாள் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
ஒவ்வொரு நெருக்கங்களும், பாடுகளும் மனிதனுக்கு வேதனையை, பயத்தை கொண்டு வருகிறது. நமது பக்தியினாலோ, பலத்தினாலோ ஒன்று நடக்காது எல்லாம் அவருடைய கிருபை தான். நமக்கு முன்னால் நிறைய பேர் கிறிஸ்துவுக்காக ஓடினார்கள், உழைத்தார்கள்.ஆனால் நமக்குப் பின்னால் உள்ள சந்ததி இயேசுவுக்காக பாரம் எடுப்பார்களா? என்பது சந்தேகம்.ஆனால் இப்போ நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், கடைசி காலத்தில், கடைசி சந்ததிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கடைசி சந்ததிக்கு என்று தேவன் ஒரு ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார்,எழுப்புதலுக்கு என்று பின்மாரி மழையை வைத்திருக்கிறார்.
இதைப் போலத்தான் கானாவூர் கலியாணத்திற்கு கடைசியில் வந்தவர்களுக்கு, எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்தவர்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதமும், ருசியுள்ள திராட்சரசமும் கிடைத்தது. இன்றைக்கு அந்த தேவன் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார். இது கடைசி மாதம் நான் பணி ஓய்வு பெறப் போகிறேன், கடைசி நாட்கள், எனக்கு சரீரத்தில் மிகுந்த பலவீனம் இருக்கிறது, எனக்கு பிள்ளைகள் இல்லை, என்னை ஆதரிக்க ஒருவரும் இல்லை என்று நீங்கள் கலக்கம், பயம் அடையலாம். ஆண்டவர் சொல்லுகிறார் நீ முதலில் வராவிட்டாலும் பரவாயில்லை, கடைசியாவதுவந்ததால் அதற்கு கூட உனக்கு ஒரு ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறேன் என்கிறார்.
1. பிந்தினவர்களுக்கு சிறந்தது
மத்தேயு 20:12-14வரை பிந்தி வந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள், பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு, இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக, சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ் செய்யவில்லை, நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.பிந்தி வந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரம்தான் வேலை செய்தார்கள் நாங்கள் முன்னாடி வந்தவர்கள் நிறைய கஷ்டப்பட்டோம், உழைத்தோம் என்றார்கள். இன்றைக்கு அநேகர் நகையை வீட்டை விற்று பெற்றபிள்ளைகளைப் படிக்க வைகóகிறார்கள். வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள்.வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை தாங்கள் அனுபவிக்கிறார்கள், பிள்ளைகள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று. இப்படி கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள் பின்நாட்களில் எப்படி இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று கூட கேட்பது இல்லை.எவ்வளவு வேதனையானகாலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.முதலில் வந்தவர்கள் கடைசியில் வந்தவர்களை விளங்கிக் கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவில்லை. பகலின் கஷ்டத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் அனுபவிக்காத இவர்களை எங்களுக்குச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காத இவர்களுக்கு, எங்களுக்கு என்ன ஆசீர்வாதமோ, எங்களுக்கு என்ன உயர்வோ அதையே இவர்களுக்கும் கொடுக்கிறீரே இது நியாயமா என்று ஆண்டவரிடம் கேட்டார்கள். ஆண்டவர் நான் தயாளன், நான் இரக்கமுள்ளவர், உனக்கு இரங்கினது போல உன் உடன் ஊழியனுக்கு நான் இரங்க வேண்டாமா என்றார். ஆண்டவர் கடைசியில் வந்த அவர்களுக்கும் இரங்கினார். இந்த கடைசி மணி நேரத்தில்ஆண்டவருக்காக செயல்படுகிற ஒரு கூட்ட மக்களுக்குத் தான் இதுவரை இல்லாத வல்லமையை அனுப்பப் போகிறார். இதுவரை இல்லாத கிருபையை, மேன்மையை தேவன் அனுப்பி நீங்கள் மனதார கர்த்தரை நேசித்து, அவரை பின்பற்றஉங்களை ஆசீர்வதிக்கப் போகிறார். இதுவரை குறைந்த ரசம் எல்லாம், பத்தாமல் போன ஆசீர்வாதம் எல்லாம் நிரம்பி வழிகிற ரசமாக, ஆசீர்வாதமாக மாற்றப் போகிறார். இதை இதுவரை எங்கே வைத்திருந்தீர்கள் என்று மற்றவர்கள்கேட்கும் அளவுக்கு தேவன் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார்.
2. கீழ்ப்படிதல் சிறந்தது
பேதுருவின் படவில் நின்று இயேசு பிரசங்கம் பண்ணி முடித்த பின்பு வலது பக்கமாக வலையை போட சொன்னார். பகலில் வலையை போட மீனவர்களுக்கு நன்றாக தெரியும். மீனின் கண்கள் மிகவும்கூர்மையானது. வலையைப் போடும்போதே தப்பி ஓடிவிடும்.ஆனால் பேதுரு, இயேசு சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலையைப் போட்டபோது ஏராளமான மீன்களைப் பிடித்தான். கடைசியாக ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லி வலையை அலசின போது தான் பேதுருவுக்கு ஆச்சரியமான அற்புதத்தை செய்தார். அவன் வலைகள் கிழியத்தக்க மீன்களை பிடித்தான்.என் காலம் முடிகிறது, நேரம் முடிகிறது, எனக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் எல்லாம் முடிகிறது இனி நான் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தஅந்த கடைசி மணி நேரத்தில் இயேசு அவன் வீட்டிற்கு வந்தார், அவன் உள்ளத்திற்குள் வந்தார், ஒரு வார்த்தை சொன்னார்ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போடு என்றார்.
இயேசுவின் வார்த்தைக்குகு கீழ்ப்படிந்து வலையைப் போட்டவுடனே ஏராளமான மீன்கள் கிடைத்தது. உடனே மற்ற படகில் உள்ளவர்களுக்கு சைகை காட்டி உதவி செய்யுமாறு அழைத்தான். அன்றைக்கே தீர்மானம் எடுத்தான், இனி எனக்கு இந்த மீன் பிடிக்கிற வேலையே வேண்டாம், நான் என் வாழ்க்கையைஇயேசுவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லி மனிதர்களைப் பிடிக்கிறவனாக மாறி விட்டான். உங்களுக்கு இருக்கிற வியாதி, பலவீனம், தோல்வியான நிலையில் இயேசு கிறிஸ்து அற்புதம் செய்து உங்களை விடுதலை ஆக்கிவிடுவார். விடுதலையானவுடன் இந்த கடைசி வாழ்க்கை யாருக்கென்று தெரியுமா? என்று உங்கள் மனசு சொல்லும் போது நீங்கள் இனி இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன் என்று உங்களை அர்ப்பணியுங்கள். இவ்வளவு நேரம் இந்த ருசியுள்ள ரசத்தை எங்கே வைத்திருந்தீர்கள் என்று அந்த மணவாளனைப் பார்த்து கேட்டார்கள். அதேபோலத்தான் இந்த கடைசி நேரத்தில், கடைசி மணித்துளிகளில் வாழ்கிற உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பத்தை நல்ல ரசமாக, ருசியுள்ள ரசமாக, ஆசீர்வாதமுள்ளவர்களாக மாற்றப் போகிறார்.
3. பிந்தின நற்குணம் சிறந்தது
ரூத் 3:10-ல் அதற்கு அவன், மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக, நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இந்த ரூத்தைப் பற்றி நம் எல்லாருக்கும் நன்றாக தெரியும். கணவன் மரித்துப் போய் விட்டான். மூத்த மருமகள் ஓர்பாள் தன் சொந்த ஜனத்தாரிடத்திற்கு போய்விட்டாள். ஆனால் ரூத் மட்டும் தன் மாமியாரை கைவிடாமல், விட்டு விலகாமல் அவள் எங்கு போனாலும் பின்பற்றி வந்தாள். உன்னுடைய தேவன் என் தேவன் என்று சொன்னாள். நகோமியை ஒருதாயைப் போல நேசித்து அவளைப் பின்பற்றி வருகிறாள்.நகோமி தன் மருமகளுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லி போவாஸ் என்பவரின் நிலத்தில் போய் அவர் பாதத்தில் விழச் செய்தாள். அப்பொழுது போவாஸ் நீ என்னை சார்ந்து கொண்டபடியால் உனக்கு நான் நன்மை செய்வேன் என்றார். அப்பொழுது போவாஸ் ரூத்தை பார்த்து சொல்லிய வார்த்தை தான் இது. உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது என்றான். இந்த போவாஸ் இயேசுவுக்கு நிழலாட்டமாய் இருக்கிறார்கள்.
இதுவரை உங்கள் வீட்டில்நீங்கள் நல்ல பெயர் வாங்கவில்லை, உங்கள் கணவர் உங்களைப் பாராட்டவில்லை, எதுக்கு வம்பு என்றுஉங்களைப் பார்த்தாலே விலகிப் போகிறார் என்றால் இனி இருக்கிறபிந்தின நற்குணம், இனி இருக்கிற பிந்தின வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொடுத்து,முன்னேற்றத்தைக் கொடுத்து உங்களை ஆசீர்வதிக்க போகிறார். உங்கள் கணவர் கேட்பார் இதுவரை இந்த நல்ல குணத்தை எங்கே வைத்திருந்தாய், இதுவரை இந்த சுபாவம் எங்கே இருந்தது என்று. அன்பு, ஜெபம், இரக்கம், மன்றாட்டு ஆவி உனக்குள்எங்கே ஒழித்து வைத்திருந்தாய் என்று. உன்னுடைய முந்தின நற்குணத்தைக் காட்டிலும், உன் பிந்தின நற்குணம் மேலானதாய் இருக்கப் போகிறது என்று ஆண்டவர் சொல்லுகிறார். இதுவரைஎலியும் பூனையுமாக வாழ்ந்த உங்களை இனி சமாதானமாக கர்த்தர் இணைத்து நடத்தப் போகிறார்.உங்களை ஒடுக்குகிறவன்இல்லாமலே போகப் போகிறான், கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவார். கானாவூர் கலியாணத்திற்கு பிந்தி வந்த, கடைசியாக வந்த அத்தனை பேருக்கும் ருசியுள்ள, மேன்மையுள்ள ஆசீர்வாதங்களை தேவன் கொடுத்தார். அந்த ஆண்டவர்இன்றைக்கு உங்களை இந்த கடைசி மணி நேரத்திலேயும்ஒரு ருசியுள்ள, ஆசீர்வாதமுள்ள பாத்திரமாக மாற்றப் போகிறார்.
இதுவரை என் பெயர் கெட்டுப் போயிற்று. வாங்கின இடத்தில் சொன்னபடிநான் நடந்து கொள்ள முடியவில்லை, கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் நொடிந்து போன நிலையில் இருக்கிறேன் என்கிறீர்களா?. இன்றைக்கு உங்கள் சிறையிருப்பை தேவன் மாற்றப் போகிறார், உங்களுக்கு ஒரு வழியை திறப்பார். கற்சாடி வெறுமையாக இருந்தாலும், ரசம் தீர்ந்து போனாலும், தண்ணீரை ரசமாக மாற்றுகிற தேவன் இன்றைக்கு உயிரோடு இருக்கிறார். அந்த தேவன் உங்கள் குடும்பத்தில் ஒரு அற்புதம் செய்யப் போகிறார். உங்கள் சிறையிருப்பை மாற்றி கண்ணீரைத் துடைக்கபோகிறார். இதுவரை அடங்காமல் உங்கள் பெயரை கெடுத்து,முள்ளாக இருந்த உங்கள் பிள்ளைகளை
4. பின்சந்ததி சிறந்தது
இதுவரை அடங்காமல் உங்கள் பெயரை கெடுத்து, முள்ளாக இருந்த உங்கள் பிள்ளைகளைஇனி தேவன் ஒலிவமரக் கன்றுகளாய் மாற்றுவார்.ஜெபத்தை அற்பமாய் நினைத்து, நீ வேண்டுமானால் ஜெபம்பண்ணு என்று சொல்லி, உங்களை கேவலமாக நினைத்த உங்கள் பிள்ளைகளை தேவன் மாற்றுவார் தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவது போல உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை தேவன் திருப்பி விடுவார். எல்லா முரட்டாட்டங்களையும் மாற்றிவிட்டுஇவனா! இந்த பையனா! இந்தப் பிள்ளையா! என்று எல்லாரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாற்றத்தைபிள்ளைகள் வாழ்வில் தேவன் செய்யப் போகிறார். மதுரை பட்டணத்தில் நாங்கள் நடத்துகிற எழுப்புதல் உபவாச ஜெபத்திற்கு காலையில் சீக்கிரமாக நான் வந்து விட்டேன் அப்பொழுது ஒரு தம்பி தன் தாயுடன் வந்திருந்தார். சீக்கிரமே வந்து ஆவியில் நிறைந்து ஜெபித்தார். பிறகு சேர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையாக போட்டார். இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த காலத்திலும் ஆவியில் நிரம்பி ஜெபிக்கிற பிள்ளையா! என்று சந்தோஷப்பட்டேன். இப்படி உங்கள் பிள்ளைகளையும் தேவன் மாற்றுவார்.
இந்த கடைசிமணித்துளிக்காக, ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கிற பிள்ளைகளுக்கு ஒரு ருசியுள்ள ரசத்தை, ஒரு மேன்மையான ரசத்தை, ஒரு ஆசீர்வாதமுள்ள ரசத்தை, வாழ்க்கையை ஆண்டவர் பிள்ளைகளுக்குத் தந்து அவர்களை வழிநடத்துவார். எங்கேயோ மாயை தேடி ஓடிக் கொண்டிருக்கிறவர்களை தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவது போல அவர்களை தேவன் திருப்ப போகிறார். அவர்கள் ஜெபத்திற்கு தூரமாக விலகி இருந்தாலும், பாளையத்திற்குப் புறம்பே இருந்த இரண்டு வாலிபர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினது போல, யார் யார் இந்த தேவ பிரசன்னத்தை விட்டு விலகி இருக்கிறார்களோ அத்தனை பேர் மேலும் தேவ மகிமை, வல்லமை இந்த கடைசி நாட்களில் இறங்கப் போகிறது. அவர்களும் ஆசீர்வதிக்கப்பட போகிறார்கள். கடைசியாக வந்த, கடைசி மணி நேரத்தில் வந்த, ரசம் குறைந்துபோன நிலையில்இருந்த அவர்களுக்கு ஆசீர்வாதத்தை,ரசத்தை வைத்திருந்த தேவன், இன்றைக்கு உங்களுக்கும் வைத்திருக்கிறார். உங்கள் வேதனை, புலம்பல், வேண்டுதல், அங்கலாய்ப்பு எல்லாவற்றையும் மாற்றுவார்.ஜெபத்தில் குறைவு பட்டுவிட்டேன், வேதம் வாசிக்கிறதில், உம்மை தேடுவதில் குறைந்துவிட்டேன். ஊழியம் செய்வதில் குறைந்து விட்டேன். என் பிரச்சனையை நினைத்து நினைத்து நீங்க கொடுத்த தரிசனத்தை இழந்து விட்டேன். ரசம் இல்லாமல் வெறுமையான கற்சாடியாக இருக்கிறேன் என்கிற உங்களை தமது மகிமையால், பிரசன்னத்தினால், நிரம்பி வழிகிற ஆசீர்வாதத்தினால் நிரப்பி வழிநடத்துவாராக!