Inspiration

ஜீவனாயிருக்கிறார்

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

நீங்களும் நானும் பின்பற்றுகிற தெய்வம், அவர் கல்லோ. மண்ணோ, மரமோ அல்ல அவர் ஜீவனுள்ள தேவன், அவர் உயிரோடு இருக்கிறார். இந்த பூமியில் மனிதனாகபிறந்து, நமக்காக, நமமுடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. யோபு என்ற மனுஷனைப் பற்றி உங்களுக்கு தெரியும். எவ்வளவோ பாடுகள், உபத்திரவங்கள், பிள்ளைகளை பறிகொடுத்த மனுஷன், சொத்துக்களை இழந்தவர் கொடியபுண் ஒன்று அவரைத் தாக்கிவிட்டது. பிழைப்பாரா என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட அந்த நிலையில் தான் அவர் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி விட்டு யோபு 10:12-ல் எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர் உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது என்று கண்ணீரோட அவர் சொல்லுகிறார், மனைவியை பார்த்து, மூன்று நண்பர்களை பார்த்து சொல்லுகிறார் அவர் எனக்கு ஜீவனை தந்ததும் அல்லாமல் தயவு பாராட்டினார் என்று. இன்றைக்கு உங்களுக்கு ஊழியத்தை கொடுத்தார், பிள்ளைகளை கொடுத்தார், வேலையை கொடுத்தார். வருமானத்தை கொடுத்தார். இவ்வளவு செய்த தேவனுக்கு முதுகுகாட்டி, எனக்கு ஜெபம் பண்ண நேரமில்லை, ஜெபத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறீர்கள். வாழ்விலும் தாழ்விலும் அவர்தான் உங்களுடன் இருக்கிறவர். ஆபத்து காலத்தில் நான் உன்னோடு இருப்பேன் என்று சொன்ன ஆண்டவருக்கு யோபு நன்றியாய் இருந்தார்.

1. என் ஜீவன் உம் கரத்தில்

சங் 31:15-ல் என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது. என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் என்று சொல்லப்பட்டுள்ளது. என் காலங்கள். என் ஜீவன் மனிதனுடைய கையில் அல்ல, வியாதியின் கையில் அல்ல என்னை படைத்த, சிருஷ்டித்த, என்னை உண்டாக்கின தேவனுடைய கையில் இருக்கிறது என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.இயேசு கிறிஸ்து பூமியிலே வாழ்ந்த போது லூக்கா 13 அதிகாரத்தில் அவரை விரோதித்தவர்கள். பரிசேயர்கள் சொல்லுகிறார்கள் நீர் இந்த ஊரை விட்டுப் போய் விடும் ஏரோது உம்மை கொலை செய்ய தேடுகிறான் என்றார்கள். அவர்களிடம் இயேசு சொன்னார் நீங்கள் போய் அந்த நரிக்கு சொல்லுங்கள் அவன் என்னைத் தொட முடியாது. கொல்ல முடியாது ஏனென்றால் இன்றைக்கும் நாளைக்கும் நான் பிசாசுகளைத் துரத்தப் போகிறேன் என்றார்.

இன்றைக்கு எவ்வளவோ பிசாசு பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அனுதினமும் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள். மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எட்டு லட்சம் ரூபாய் செலவழித்து ஆப்ரேஷன் பண்ணி அரை மணி நேரத்தில் அந்த மனுஷன் இறந்து போனார். உங்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ் கொடுக்கும். ஒரு வேளை என்னமாவது ஆகிவிட்டால் உங்களை பாதுகாக்கும் என்றெல்லாம் உலக மனிதர்கள் சொல்லுவார்கள். நீங்களும் நானும் தேடுகின்ற தெய்வம் ஆண்டவராகிய இயேசு அவர் ஜீவனோடு இருக்கிறார். மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உங்களுக்கு ஒளியாய் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள இருளை அது விரட்டி விடும். குடும்பத்தில் காணப்படுகிற சண்டைகளை அகற்றி போடும், எந்தெந்த உறுப்புகள் செயல்பட முடியாமல், கண்ணு காது. உடம்பெல்லாம் வீங்கி, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, இரத்த கொதிப்பு அதிகமாகி, ஐயா மருத்துவத்துக்கே செலவழிக்க முடியவில்லை என்று கண்ணீர் வடிக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் இயேசு ஜீவனாய் இருக்கிறார். மரித்தவர்களும் மெளனத்தில் இறங்குகிறவர்களும் ஜீவன் இல்லாதவர்கள். ஆனால் இயேசு உயிரோடு, ஜீவனோடு இருக்கிறார். இந்த நபரால் என் உயிர் போகுது, இந்த பிள்ளைகளால் என் உயிர் போகுது. குடும்பத்தில் ஒரே வேதனை. நான் ஒரு நடைபிணம், செத்து மடிகின்ற என்று சொல்கிற உலகத்துக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட இந்த உலகத்தில் தான் கர்த்தர் நமக்கு ஜீவனாய் இருக்கிறார். நமக்கு வெளிச்சம், ஜீவன் அவர் தான்.

2. வழியும் ஜீவனுமானவர்

யோவான் 14:6-ல் அதற்கு இயேசு. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் தான் உனக்கு வழி. உன் குடும்பத்துக்கு வழி, உன் பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு வழி, தொழிலுக்கு வழி என்கிறார். நான் ஒரு அனாதை, கணவனை இழந்தவள், மனைவியை இழந்தவன். உறவுகள் யாரும் இல்லை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அவர் சொல்லுகிறார் நானே உனக்கு வழியாய். சத்தியமாய், ஜீவனாய் இருப்பேன் என்று. இந்த ஜீவனுக்கு இன்னொரு பெயர் உயிர். நாம் எல்லாரும் ஒரு களிமண்ணாய் அசைவற்று கிடந்தோம். இந்த களிமண்ணை பிசைந்த ஆண்டவர் தன்னுடைய மூச்சை. தன்னுடைய சுவாசத்தை நமக்குள் அனுப்பி, நீ பிழைத்திரு என்றார். மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக கிடந்த உங்களைப் பார்த்து, தொப்புள் கொடி அறுந்து போகும் நிலையில் நீங்கள் கழுவப்டவும் இல்லை சுத்திகரிக்கப்படவும் இல்லை மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக கிடந்த உங்களை எசே 16:5-ல் சொல்லப்பட்டுள்ளபடி உன்கிட்ட வந்து நீ கழுவி, சுத்திகரிக்கப்பட்டு பிழைத்திரு. நீ வாழ்ந்திரு என்று சொல்லி உங்களுக்காக ஜீவனை கொடுத்திருக்கிறார்.

இன்றைக்கு நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். உங்கள் கண் நல்ல இருக்கிறதுக்கு நீங்கள் எடுத்த சாப்பாடு காரணம் அல்ல. நீங்கள் பல நாள் உயிரோடு இருக்கிறதுக்கு உங்கள் பக்தி ஒரு காரணம் இல்லை. என் ஜீவனையே உனக்கு நான் கொடுத்து. நான் ஜீவபலியாக வார்க்கப்பட்டேன் என்று சொல்லுகிறார். நீங்கள் என்னால் முடியவில்லை. பணநெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. வியாதி ஒரு பக்கம். செத்து மடிகிறேன். மனிதர்கள் என்னை ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் பண்ணி விட்டார்கள். என் பொருளை இழந்து, என் சொத்தை இழந்து, கண்ணீர் வடிக்கிறேன் என்கிறீர்களா! உங்களுக்காக ஒரு தெய்வம் தன் உயிரையே கொடுத்து வாழ்க்கைக்கு வழியையும் திறந்திருக்கிறார் அவர் இயேசு.

3. ஜீவனைக் கொடுத்த அன்பு

யோவான் 15:13-ல் ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. ஒரு மனிதன் தன் நண்பனுக்காக கொடுக்கிற ஜீவனிலும் மேலான அன்பு ஒருவனிடத்தில் இல்லை. உனக்காக என் உயிரையே நான் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள் நல்ல இருக்கிறதுக்காக அவர் கை, கால்களில் ஆணி அடிக்கப்பட்டும். அவர் தலையிலே முள்முடி வைக்கப்பட்டும் நம் ஒவ்வொருவருக்காக மரணத்தை அவர் ருசி பார்த்தார். இதுதான் அவருடைய அன்பு, இயேசு தெய்வம் நமக்கு வர வேண்டிய ஆக்கினைகளை. தண்டனைகளை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார். ஒரு மனிதனின் செயல் எதற்காக, நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதிலும் மேலான அன்பு இல்லை என்பதை நிருபிக்க நமக்காக ஜீவனையே கொடுத்திருக்கிறார். ஜீவனையே கொடுத்த தேவன் குடியிருக்க ஒரு வீடு கொடுக்க மாட்டாரா?. திருமணமாகி பல வருஷம் குழந்தை இல்லை என்று எண்ணி இரத்தக்கண்ணீர் வடிக்கலாம். நிந்தைக்குள்ளாய் இருக்கலாம். நல்ல காரியங்களுக்கும், எந்த திருமண நிகழ்ச்சிக்கும் என்னால் போக முடியவில்லை. உறவுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை, அவர்கள் கேட்கிற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று நீங்கள் கண்ணீர் வடிக்கலாம். ஆண்டவர் சொல்லுகிறார் உனக்கு நான் ஜீவனாய் இருப்பேன். உன் கர்ப்பத்தில் ஒரு ஜீவனை நான் அனுப்ப போகிறேன் என்கிறார்.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளபடி வேலை இல்லாமல் இருப்பவர்கள். பலவீனப்பட்டு இருப்பவர்கள் அத்தனை பேருக்கும். கிட்னியில பிரச்சனை, வால்வு அடைப்பில பிரச்சனை, இரத்த கொதிப்புகளோடு போராடுகிற, இரத்த நாளங்களில் அடைப்புகள் எல்லாவற்றிற்கும் எந்த பைபாஸ் சர்ஜரியும் தேவையில்லை. எந்த ஆண்டிபயாடிக்கும் தேவையில்லை இயேசுவின் ஜீவன் உள்ள இரத்தம் இன்றைக்கு ஒரு அற்புதத்தை உங்களுக்குச் செய்யப்போகிறது. அவர் எனக்கும் உங்களுக்கும் ஜீவனாய் இருக்கிறார். அந்த இயேசுவை பார்த்து சொல்ல வேண்டும் இன்றைக்கு நான் உயிரோடு இருப்பது உங்களால் தான் என்று. ரோம் 8:32-ல் தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் நமக்காக மற்றவைகளை கொடுக்காதிருப்பாரா? வேலை இல்லையா வேலை கொடுப்பார். வருமானம் இல்லையா வருமானத்துக்கு ஒரு வழி திறப்பார். வீடு இல்லையா வீட்டுக்கு ஒரு வழியை திறப்பார் எந்த இடத்தில் அவமானம் அடைந்தீர்களோ அதே இடத்தில் உங்களுக்கு அவர் ஜீவனாய் இருந்து உங்கள் தலையை உயர்த்துவார்.

4. நித்திய ஜீவனைதருபவர்

யோவான் 17:4-ல் பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன் நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.இந்த ஜீவன் நீங்கள் நினைக்கிற மாதிரி இம்மைக்காக வாழ்வதற்கு, கை கால் நன்றாக இருப்பதற்கு, சாப்பிடுவதற்கு, வீடுகளை, தோட்டங்களை வாங்கி வசதி வாய்ப்பாக வாழ்வதற்கு மட்டும் அல்ல. தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து நித்திய ஜீவனைப் பெற வேண்டும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3. கர்த்தரை அறிவது நித்திய ஜீவன். இந்த பூமியில் கண்ணை மூடினால் ஒரு நிமிஷத்தில் நீங்கள் நித்தியத்துக்குள்ளே போயிருப்பீர்கள். என் பிள்ளை என்று அவர் உங்களைச் சொல்லுவார். அங்கே நம்முடைய இந்த சரீரம் போகாது. நம் ஆத்துமா மட்டும் தான் போகும். இந்த உலகத்தில் சரீரத்திற்காக வாழ்ந்து தேவனை துக்கப்படுத்தாதீர்கள். உங்களை பரலோகம் கொண்டு போய் சேர்க்க, நித்திய ஜீவனை தரவே நான் இந்த பூமிக்கு இறங்கி வந்தேன் என்கிறார்.

கேட்டிற்கு போகிற வழி விசாலமான வழி. நித்திய ஜீவனுக்கு போகிற வழி ஒடுக்கமும் சுருக்கமான வழி. ஒருவன் தன்னுடைய ஆத்மாவை கெடுத்து நஷ்டப்படுத்தினால் நித்திய ஜீவனை இழந்து போவான். மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?நீ நித்திய ஜீவனுக்கு போக உனக்காக நான் மரித்தேன். உனக்கு வேலையை கொடுத்தேன் எத்தனை விபத்து, ஆபத்தில், மரண கண்ணியில் உன்னை காப்பாற்றினேன் எனக்காக நீ என்ன செய்தாய்? செய்வாய்? ஆண்டவரேஉங்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் சொல்லுவது என் கணவருக்கு அல்லது என் மனைவிக்கு இது பிடிக்காது என்று சாக்கு போக்கு சொல்வாயானால் தேவ மகிமைக்கு முன்னால் உங்களால் நிற்க முடியாது.

இன்றைக்கு உனக்காக தன் ஜீவனை கொடுத்த இயேசு உன் ஆத்துமாவிலே, உன் இருதயத்திலே. உங்கள் குடும்பத்தில் இருந்தால் தான் நீங்கள் தினமும் ஜெபிப்பீர்கள். ஒவ்வொரு மனுஷனுடைய உயிர் அவர்களுடைய இரத்தத்தில் தான் இருக்கிறது. நமக்கு நம்முடைய இரத்தத்தைக் காட்டிலும் இயேசுவின் இரத்தம் பரிசுத்தமான இரத்தம், ஜீவனுள்ள இரத்தம். அந்த இரத்தத்தினால் தான் நானும்,நீங்களும் வாழ்கிறோம். இந்த இயேசுவை சொல்வதற்கும், ஜெபம் பண்ணுவதற்கும் நாங்கள் வெட்கப்பட்டது கிடையாது. மறுதலித்தது கிடையாது. நீங்களும் உங்களுக்கு நித்திய ஜீவனைத் தருபவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வெட்கப்படக் கூடாது.

5. ஜீவன் இல்லாதவன்

1 யோவான் 5:12-ல் குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். பிதா யெகோவா தேவன். குமாரன் இயேசு கிறிஸ்து. இயேசுவை சொல்லும்போதே சாத்தான் அலற வேண்டும். இயேசு என்ற நாமம் தான் என்னை இன்றைக்கு ஜீவனோடு வைத்திருக்கிறது.

கோழி அடை காத்து முட்டைகளை பொறிக்கும் போது சில முட்டைகளை பொறிக்கும். சில முட்டைகளை பொறிக்காது. ஒன்பது முட்டையில் ஏழு பொரித்து விட்டது. மீதம் முட்டையை வைத்து விடும். அதை இன்றைக்கு அல்லது நாளைக்கு பொறித்து விடும் என்று எதிர்பார்த்தால் பொறிக்கவில்லை. அந்த கோழிக்கு தெரியுது இதற்குள்ளே ஜீவன் இல்லை. அவை கூமுட்டை என்று வைத்துவிட்டது. நீங்கள் இதுபோல ஜீவன் இல்லாதவர்களாய் இருக்க கூடாது. சவுல் ராஜா சொல்லுகிறார் தாவீக்கு முன்பாக நின்று உன் உயிரைப் பனையம் வைத்து, ஜீவனுள்ள தேவனை நிந்திக்கிறான் என்று சொன்னபோது நீ துணிந்து போய் கோலியாத்தை கொன்றாய், நான் பயந்தேன். வெட்கப்பட்டேன். உன் பின்னால் ஜனங்கள் எல்லாரும் போயிருவாங்கன்னு நினைத்தேன். உன்னை கொலை செய்ய இன்றைக்கு ஒரு அகதியைப் போல நாடோடியாய் காடுகளில் அலைகிறேன், மதியற்றவனாய் நடந்தேன் என்றான்.

சங்கீதம் 27:1-ல் கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர். யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என்று சொல்லப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்களை பாருங்கள் எல்லாருக்கும் தேவன் ஒருவர் தான் அப்படி இருந்தும், அவர்கள் கோலியாததைப் பார்த்து பயந்து ஓடி ஒழிஞ்சிட்டு இருந்தார்கள். ஆனால் தாவீதுக்கு மட்டும் கர்த்தர் எப்படி இருந்தார், கர்த்தர் என் வெளிச்சம், என் இரட்சிப்புமானவர் யாருக்கு பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? என்கிறார். நம்முடைய ஆண்டவர் நமக்கு பெலன் ஜீவன்.ஜீவனுள்ள தேவனை நிந்திக்க கூடாது என்று தாவீது சொல்லுகிறார். இந்த ஜீவனுள்ள தேவன் என் ஜீவனுக்கு பெலனாக இருந்தால் தான் கரடியின் கைக்கும் சிங்கத்தின் கைக்கும் தப்புவித்தார்.எனக்கு ஜீவனாய் இருக்கிறார் என்று சொல்லுகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவனாயிருந்து வழிநடத்துவாராக..