Inspiration

எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட திராட்சக் கொடி

நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. சங் 80:8-11.

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. சங் 80:8-11. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காமல், அவர் மீது நம்பிக்கை வைக்காமல் முரட்டாட்டமாக வாழ்ந்த ஜனங்களை துரத்திவிட்டு அவர்கள் இருந்த இடத்தில் நம்மை நாட்டினார். கர்த்தரை அறியாத ஜனங்களை துரத்திவிட்டுகர்த்தரை அறிந்த நம்மை அங்கேநாட்டினார் என்று சொல்லப்பட்டுள்ளது. பாவத்திலும், சாபத்திலும், அக்கிரமத்திலும் கிடந்த நம்மை, எகிப்தின் அடிமைத்தனத்தில் கிடந்த நம்மை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் ரத்தம் சிந்தி, ஜீவனை கொடுத்து நம்மை மீட்டெடுத்திருக்கிறார். எங்கேயோ இருந்த, வாழ்ந்த நம்மை, எகிப்திலிருந்து கொண்டு வந்து ஜாதிகளை துரத்தி விட்டுநம்மை அங்கு நாட்டினார். உன் கையில் அழகாய் கொடுக்கப்பட்ட இந்த பூமியை நீ நாசப்படுத்திகெடுத்துவிட்டாய் எனவே நீ இங்கு இருக்க முடியாது என்று சொல்லி அவர்களைதுரத்திவிட்டார்.

உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான். இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் என்று வேதம் சொல்லுகிறதுமத் 25:29.ஜாதிகளை துரத்தி விட்டு அந்த இடத்தில் ஆண்டவர் நம்மை கனி தரும் திராட்சக் கொடியாக நாட்டினார். நீங்கள் எந்த இடத்தில் அவமானம் அடைந்து எல்லாவற்றையும் இழந்து நின்றீர்களோ அதே இடத்தில் தேவன் அனைத்தையும் உங்களுக்குத் திருப்பித் தந்து, உங்களை நிலை நாட்டுவார். யோபுவை நிலைநாட்டினதேவன்உங்களையும் நிலை நாட்டுவார். எகிப்தில் இருந்து ஒரு திராட்சக் கொடியை தேவன் கொண்டு வந்து ஜாதிகளை துரத்திவிட்டுஅதை நிலை நாட்டினவர் இன்றைக்கு நம்மையும் நிலை நாட்டுவார். நீங்கள் கர்த்தருடைய தோட்டத்தில்நிலைநாட்டப்படுவீர்கள், நிலைத்திருப்பீர்கள். ஆண்டவராகிய தேவன் உங்களை ஆசீர்வதித்து உயர்த்தப் போகிறார், உங்களை அற்புதமாய் ஆச்சரியமாய் வழிநடத்தப் போகிறார். நீங்கள் எகிப்து என்ற பாதாளத்திலிருந்து, அடிமைத்தனத்திலிருந்து கானான் என்ற இடத்திற்கு அழைக்கப்பட்டவர்கள். உங்கள் வாழ்க்கை இந்த பூமியிலேயே முடியப்போவதில்லை,உங்களை பரலோகம் என்ற கானானுக்கு, நித்தியத்திற்கு அழைத்துச் சொல்வார். இந்த பூமியில் நாம் வாழப்போகும் நாட்கள் 70 வருஷம்,பெலத்தின் மிகுதியினால் 80 வருஷம்இருப்போம்என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

1. வேரூன்றி படர்ந்தது

தேவன் உங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தினார் என்று ஒன்பதாவது வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு ஒரு நிலையான இடத்தை தரப்போகிறார். நல்ல ஒரு வேலையை தரப் போகிறார். வருமானத்திற்கு ஒரு வழியை தரப் போகிறார். தொழிலில் ஆசீர்வாதத்தைத் தரப் போகிறார், ஊழியத்திற்கு ஒரு வாசலை திறக்கப் போகிறார், ஆத்தும அறுவடைக்கு ஒரு வழியை திறக்கப் போகிறார். சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்ஏசா 60:22-ல் சொல்லப்பட்ட இந்த வசனத்தின்படி தேவன் இந்த வருடத்தில் உங்களை ஆயிரமாக பழுகிப் பெருகப்பண்ணுவார், திராட்சக் கொடி வேர் ஊன்றி தேசம் எங்கும் படர்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் அவருக்குள் வேரூன்றி வளர போகிறீர்கள். வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும் என்று வேதத்தில் ரோமர் 11 16-ல் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவர் மற்ற நபர்களுக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்கள், நன்மைகள், வாய்ப்புகள் அனைத்தையும் தேவன் உங்களுக்கு இந்த வருடத்தில் தந்துவிட்டார். எனக்குத் தெரிந்த ஒரு சகோதரன் வேலைக்காக இன்டர்வியூக்கு சென்ற போதுஆயிரம் பேர் அங்கு வந்திருந்தார்கள்.ஆனால் வேலைவாய்ப்பு 10 பேருக்கு மாத்திரம் தான்இருந்தது. இவ்வளவு பேரில் எப்படி எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்று யோசித்து ஜெபித்தபோது தேவன் அவருக்கு முதல் சீட்டு கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பொழுது தேவனுக்கு மகிமையாக அந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். லஞ்சம் வாங்குவதில்லை, உண்மையும் நேர்மையுமாய் தன் பணியை செய்கிறார். மற்ற நேரங்களில் கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறார். இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு நிறைய நல்ல வாய்ப்புகளை கொடுத்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். அந்தச் கொடி வேரூன்றி தேசமெங்கும் படர்ந்தது, இதே போல தேவன் உங்களையும் வேரூன்றி படரச் செய்வார். ஒரு கொடி என்றால் அது படர வேண்டும். கர்த்தருடைய நேசக்கொடி உங்கள் மேல் படர்கிறது, நீங்கள் படரப் போகிறீர்கள். வெற்றிலைக் கொடியை பாருங்கள் அது படருகிற இடம் முழுவதும் வேர்களாக மாறிவிடும்.

நீங்கள் தேவன் உங்களை நாட்டின இடத்தில் மாத்திரம் இருக்க மாட்டீர்கள் அவருக்காக நீங்கள் கிளைகளாக தேசமெங்கும் படருவீர்கள். எனக்கு ஜெபிக்க தெரியாது சுவிசேஷம் அறிவிக்க தெரியாது, நான் சொன்னால் யார் கேட்பார் என்று சொல்லக்கூடாது, நீங்கள் தேவனுக்காக படருகிறவர்களாக, கனி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் உங்களை சுற்றிலும் ஆயிரம் ஆயிரமாக ஜனங்களை வைத்திருக்கிறார், அவர்களுக்கு நீங்கள் சுவிசேஷத்தை சொல்ல வேண்டும். இந்த வருடத்தில் அநேக ஜனங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்ல வேண்டும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது முதன் முதலில் மரியாளுக்கு தரிசனமாகி தான் உயிருள்ளவராக இருக்கிறதை காண்பித்தார். மரியாள் மற்ற அனைவருக்கும் அதை அறிவித்தார். இந்த உலகத்தில் எல்லா துறையிலும் பெண்களுக்கு வேலை இருந்தாலும் ஃபயர் சர்வீஸ் துறையில் மாத்திரம் பெண்களுக்கு வேலை இல்லை.ஆனால் அதைக் காட்டிலும் தேவன் பெண்களுக்கு ஒரு மேலான பணியை வைத்திருக்கிறார், சுவிசேஷம் அறிவிக்கக்கூடிய ஒரு பணியை வைத்திருக்கிறார். இந்த உலகத்தில் பெண்களுக்கு எங்கு வேலை இல்லாவிட்டாலும் பரலோக தேவனுடைய பணியை செய்யக்கூடிய ஒரு மேலான வேலையை தேவன் அவர்களுக்காக வைத்திருக்கிறார். இந்த பூமியிலே அக்கினியை போட வந்தேன் அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொன்ன தேவன் இன்றைக்கு உங்கள் மத்தியில் ஒரு அக்கினியை போட்டு, அது அவருக்காக பற்றி எரியும்படியாகவும், சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாகச் செய்யப் போகிறார்.

தேவன் உங்கள் மீது ஒரு அக்கினியை போடும்போது நீங்கள் வேர் விட்டு அவருக்காக தேசம் முழுவதும் பரவப் போகிறீர்கள். நீங்கள் நினைக்கலாம் நான் வேலை இல்லாதவன், சம்பளம் இல்லாதவன், படிக்காதவன் நான் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் உங்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களை செய்யப் போகிறார். உங்கள் வாழ்க்கையில் வருகின்ற பிரச்சனைகள், போராட்டங்கள், பாடுகள் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு கர்த்தருக்காக நீங்கள் இந்த வருடத்தில் அதிகமாக செயல்பட வேண்டும். பவுல் அப்போஸ்தலன் வாழ்க்கையில் பாருங்கள் நாடு கடத்தப்பட்டு ஒரு தீவில் அவர் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்த போது அங்கு ஒரு விஷப்பூச்சி அவருடையகையை கவ்விக்கொண்டது அதை அவர் உதறி போட்டுவிட்டு, ஒரு சேதமும் அடையாமல் இருந்தார் என்று அப்போஸ்தலர் 28:1-5-ல் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையிலும் பிரச்சனை வரும்போது, போராட்டங்கள் வரும்போது, விஷம் போன்ற கசப்பான காரியங்கள் நேரிடும்போது, விரியம் பாம்பு போன்ற சூழ்நிலைகள் வரும்போது அதையெல்லாம் உதறி தள்ளிவிட வேண்டும். அவை ஒன்றும் உங்களை சேதப்படுத்த முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு சகோதரரை மருத்துவர்கள் இன்னும் பத்து நாளில் இவர் இறந்து விடுவார், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது இவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று சொன்னார்கள் ஆனால் இப்பொழுது ஐந்து மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் நல்ல சுகத்தோடு பெலத்தோடு இருக்கிறார். கர்த்தர் அவருக்கு சுகம் தந்து இருக்கிறார். நாம் ஆராதிக்கின்ற தேவன் மருத்துவ அறிக்கைகளை மாற்றி, அவர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு நமக்கு சுகத்தைதருவார். நீங்கள் உங்களைப் பற்றியும், உங்கள் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவதை விட்டுவிட்டுவிடுதலை தருகின்ற, சுகத்தை தருகின்ற, அற்புதம் செய்கின்ற இயேசுவைப் பற்றியே பேசுங்கள். உங்களை அழைத்த தேவன்உண்மையுள்ளவர், அவர் உங்களுக்குச் சொன்னதை செய்யுமளவும் உங்களை விட்டு விலகுவதுமில்லை உங்களைக் கைவிடுவதுமில்லை.

2. அநேகருக்கு நிழலாய் மாறினது

எகிப்தில் இருந்து கொண்டு வந்த திராட்சக் கொடிவேர் பற்றி, படர்ந்து தேச முழுவதும் பலன் கொடுத்தது போல இன்று முதல் தேவன் உங்கள் மூலமாக அவருடைய நாமத்தை தேச முழுவதும் பரவச் செய்வார். அந்த திராட்சக் கொடி வேர்விட்டது, படர்ந்தது இப்போது அது அநேகருக்கு நிழலாய் மாறிவிட்டது. இந்தவருடம் கர்த்தருடைய நிழல் உங்கள் மேல் வரப்போகிறது. உன்னதமானவருடைய மகிமை உங்கள் மேல் நிழலிடப்போகிறது. தேவன் உங்களுக்கு நிழலாய் இருப்பார். ஒரு மரம் படர்ந்தால் நூறு அடி நீளம் வரைபரவும், ஆலமரம் கொஞ்சம் அதிகமாகபடரும், ஆனால் இந்த வசனம் சொல்லுகிறது அதின் நிழல் தேச முழுவதும்படர்ந்தது. சாத்தான் உங்களுடைய பெயரை கேவலப்படுத்தி உங்களை கீழாக்குவான்.ஆனால் கர்த்தரிடத்தில் நீங்கள் வந்தீர்கள் என்றால் உங்கள் பெயரை நாடு முழுவதும் தேவன் பரவச் செய்வார். உத்தமனுக்கு கர்த்தர் துணை, எந்த இடத்தில் நீங்கள் அவமானப்பட்டீர்களோஅதே இடத்தில் தேவன் உங்கள் தலையை உயர்த்துவார். உங்கள் குடும்பத்தில் உள்ள வாக்குவாதங்கள், சண்டைகள், பிரிவினைகள், போராட்டங்கள் அனைத்தையும் தேவன் மாற்றுவார்.

இயேசு என்ற நாமத்திற்கு எல்லாம் முழங்கால்களும் முடங்கும், எல்லா நாவுகளும் அறிக்கையிடும். இருக்கின்ற மரங்களிலேயே கேதுரு மரம் தான் அதிக உயரமாக வளரும். அந்த கேதுரு மரமே இந்த திராட்சக்கொடியின் நிழலால் மூடப்படுமாம். தன்னிடத்தில் உள்ள மரங்கள் நன்றாக வளர்ந்து கனி கொடுக்கும்படியாக அதனுடைய எஜமான்அதற்குகிளைகளை நறுக்கி அவைகளை சுத்தம் செய்வான். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். யோவான் 15:2இந்த வசனத்தின்படி நாம் போன வருடத்தில் 50 கனிகளை கொடுத்தால் இந்த வருடத்தில் 500 கனிகளை கொடுக்க வேண்டும். அதேபோல கடந்த வருடத்தில் நாம் 50 பேருக்கு சுவிசேஷத்தை சொல்லி இருப்போமானால் இந்த வருடத்தில் 500 பேர், 5000 பேர் என்று சுவிசேஷத்தை அறிவிக்கும் நம்முடைய எண்ணிக்கை அதிகமாக வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஊழியம் செய்வதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் வளர்ந்து விட்டோம் என்று பெருமைப்படக்கூடாது, மற்றவர்களும் வளர்வதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். நாம் வளர்ந்தால் மாத்திரம் போதாது.

3. கிளைகள் சுத்தம் பண்ணப்பட்டது

தானியேல் நான்காம் அதிகாரத்தில் நேபுகாத் நேச்சர் என்ற ராஜாவை பற்றி சொல்லப்பட்டுள்ளது இந்த பூமியில் பெரிய வல்லரசாக வாழ்ந்தவர், இருந்தவர். இது நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று தனக்குள் பெருமையாக இருந்தார். தேவன் அவருடைய கிளைகள் அனைத்தையும் நறுக்கி வேரை மாத்திரம் விட்டு வைத்தார். நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது தானி 4:20-22.நமக்குள் பெருமை மேட்டிமைகள் வரும்போது நம்மிடம் இருக்கும் கிளைகள் நறுக்கப்பட்டு போய்விடும். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை போராட்டம் வந்தால்அடுத்தவர்களை குறை சொல்வதை நிறுத்திவிட்டு உங்களை சரி செய்ய ஆரம்பியுங்கள். இன்றைக்கு கிளை நறுக்கப்படாத மரம் எல்லாம் வேரோடு பற்றுப் போய்விடும். ஆண்டவர் நேபுகாத்நேச்சார் உடைய மேட்டிமையை, பெருமையை தாழ்த்திப் போட்டார். வேதத்தில் வசனம் இப்படியாக சொல்லுகிறது பலவான்களுடைய ஆசனங்களை அவர் கவிழ்த்து போடுகிறார் என்று. பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். நீங்கள் கிளை நறுக்கப்படவில்லை என்றால் நேராக வானளவுக்கு உயரலாம் ஆனால் ஒரு காற்று அடித்தால் அது முறிந்து விழுந்து ஒன்றுமில்லாமல்போய்விடும். அப்படி அல்ல நீங்கள் கிளைகள் நறுக்கப்பட்டால்தான் வலது புறத்திலும் இடது புறத்திலும் இடம் கொண்டு பெருக முடியும்.

நம் தமிழ்நாட்டில் கஜா புயல் வந்த போது அரசாங்கம் மக்களுக்கு எச்சரிப்பு கொடுத்தது. ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வரும் என்று சொன்னபோதுஒரு விவசாயி தன் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகஅந்த மரங்களின் கிளைகள் அனைத்தையும் வெட்டிவிட்டார். புயல் வந்த போது கிளைகள் நறுக்கப்படாமல் இருந்த மரங்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது.ஆனால் கிளைகள் நறுக்கப்பட்ட இந்த மரங்கள் இன்றும் உயிருடன் இருந்து பலன் கொடுக்கிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவ சமூகத்திற்கு அதிகாலையில் செல்லும்போது எந்தெந்த காரியங்களை உங்களை விட்டு அகற்ற வேண்டும் என்பதை தேவன் உணர்த்துவார். ஆராய்ந்து பார்த்து நீங்கள் விடவேண்டிய காரியங்களை விட்டு விட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் இறங்கி, உங்களில் எந்தெந்த கிளைகளை நறுக்க வேண்டும் என்று உங்களை சுத்தம் பண்ணி மிகுந்த கனிகளை கொடுக்கும்படி செய்வார். உங்கள் வாழ்க்கையில் தரித்திரம், போராட்டம், பாடு, கஷ்டம் ஏழ்மைஎல்லாம் வரும், சிலுவை வரும்இவைகள் எல்லாம் உங்களைப் பழுகிப் பெருகச் செய்யப் போகிறது. நீங்கள் வேர் விட்டு படர்ந்து கனி கொடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கிளை நறுக்கப்பட்டு இருப்பீர்களானால் புயல் வந்தாலும், எந்தப் பக்கமும் சேதம் அடையாமல் நிலை நிற்பீர்கள். நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப் போலிருக்கிறேன் என்று சங்கீதக்காரர் சொல்கிறாôó. தேவ கிருபையைப் பெற்று நிற்கிறேன்என்று சொல்லுவீர்கள். அவர் உங்களை காலைதோறும் எழுப்பி கிளை நறுக்கி கொத்தி எருப் போட்டு மிகுந்த கனிகளை கொடுக்க கூடியவர்களாய் மாற்றுகிறார்.

4. மிகுந்த கனிகளை கொடுத்தது

வாழைமரம் ஒன்று வைத்தால் போதும் அதிலிருந்து நிறைய சின்ன சின்ன மரங்கள் முளைக்க ஆரம்பிக்கும். நல்ல விவசாயி அவைகளை எடுத்து பத்தடி தூரத்திற்கு ஒவ்வொன்றாக வைத்து அதிகமான பலனை பெறுவான். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படியாகத்தான் தேவன் உங்களை கிளை நறுக்கிசுத்தம் செய்கிறார். அதனால் தான் ஊழியத்தில் சில பாடுகள், ஜெபிக்கிறவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வருகிறது. இதைக் கண்டு நாம் மலைத்துப் போய் நின்று விடக்கூடாது. ஏசாயா 50:4,5-ல் இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார், நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.அதிகாலையில் எழுந்து நாம் தேவ சமூகத்தில் அமரும்போது தேவ சத்தத்தை நாம் கேட்க முடியும், தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றுக்கொண்டு அந்த நாள்முழுவதும் நாமó தேவ ஆசீர்வாதத்தில் நடக்க முடியும். இந்த உலகத்தில் மிகவும் சிறியது கடுகு, கொஞ்சம் கடுகு, உங்கள் கைகளில் வைத்து மின்விசிறி முன்பாக நிற்பீர்களானால்ஒன்று கூட இல்லாமல் எல்லாம் பறந்து போய்விடும் அவ்வளவு சிறியது.ஆனால் இந்த கடுகை வைத்து ஒரு உலகத்தையே தேவனால் உண்டாக்க முடியும், வளர வைக்க முடியும். இந்த வருடத்தில் கிறிஸ்தவம் வளரனும், ஜெப வாழ்க்கையில் வளரனும், தொழில் வளரனும், வேலை வாய்ப்புகள் வளர வேண்டும். இந்த ஆண்டு தேவப்பிள்ளைகள் வளர்கின்ற ஆண்டாக இருக்க வேண்டும்.

லுக்கா 13:18,19-ல் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது. நம்முடைய விசுவாச தகப்பன் ஆபிரகாம் கண்ணுக்குத் தெரியாத கடுகு விதை அளவு இருந்தவர். குழந்தை இல்லாமல் அந்நிய தேசத்தில் பரதேசியாய் வந்த ஒரு சின்ன கடுகை போல வாழ்ந்தவர். அவரைக் கொண்டு தேவன் ஜாதிகளை பழுகவும் பெருகவும் பண்ணினார். ஆபிரகாமை ஆசீர்வதித்த தேவன் இன்று உங்களை, அவருடைய நாமத்தை அறிந்த, சொல்லுகின்ற உங்களை அவர் கைவிட்டு விடுவாரா? கடுகு விதையை எடுத்து அதை ஒரு மனுஷன் தன் தோட்டத்தில் போட்டான், இன்றைக்கு நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் சிந்தையில் போட வேண்டும். கடுகு விதை ஆனது வளர்ந்து அது பெரிய மரமாயிற்று, ஆகாயத்து பறவைகள் வந்து அதின் கிளைகளில் அடைந்தது. ஏசாயா 27:6-ல் யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

கர்த்தருடைய வார்த்தை நம்முடைய இருதயத்தில் இருக்க வேண்டும், சிந்தையில் இருக்க வேண்டும் நாம் கர்த்தருக்காக பலன் கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். ஆண்டவர் உங்களை கிளை நறுக்கி கொத்தி எருப் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டார். நீங்கள்இனிமிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும். நீங்கள் இடப்பக்கமும் வலப்பக்கமும் பெருகும்படிக்குதேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார். நீங்கள் கர்த்தருடைய தோட்டமாக மாறுவீர்கள். இதற்கு மேல் நான் உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் கேட்கிறார். நீங்கள் செய்யும் ஜெபத்தினால் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், உங்கள் தெருவில் உள்ளவர்கள் பிழைக்கப் போகிறார்கள். உங்கள் வீட்டிற்கு அநேகர் வந்து ஆறுதல் அடைய போகிறார்கள். உங்களை விரோதித்தவர்கள் உங்கள் நிழலில் வந்து தங்கப் போகிறார்கள். ஆறுதல் அடையப்போகிறார்கள். நீங்கள் கனி கொடுப்பீர்கள்.தேவனுக்காக மிகுந்த பலனைகொடுப்பீர்கள். ஆபிரகாம் கடுகு விதை அளவு உள்ளவர்தான், குழந்தை இல்லாதவர்தான்சாராள் பிள்ளை பெறுவதற்கு வாய்ப்பே இல்லாதவள் தான்.ஆனால் அப்படிப்பட்ட அவர்களுக்கு தேவன் அற்புதம் செய்தவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார், உங்களுக்கும் ஒரு அற்புதத்தைச் செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் வளர்ச்சியை விரும்புகிறீர்களோ இல்லையோ ஆனால் ஆண்டவர் உங்களை இந்த வருஷத்தில் வளரச் செய்யப் போகிறார். உங்கள் வேலையில், தொழிலில், ஊழியத்தில், ஜெபத்தில், ஆசீர்வாதத்தில் உங்களை உயர்த்த விரும்புகிறார். நீங்கள் வேர் பற்றி பூத்து காய்த்து ஆழங்களுக்குள் சென்று அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவீர்கள்.

எந்த புயல் வந்தாலும் நீங்கள் கீழே விழாதபடிக்கு தேவன் உங்களை நிலை நிற்கச் செய்வார். நீங்கள் பூத்து காய்த்து வேர் விட்டுபடரும்போது உங்கள் நிழலில் அநேகர் வந்துதங்கப் போகிறார்கள். இந்த பூமியில் நீங்கள் வாழ்கின்ற ஒரே வாழ்க்கை இயேசுவுக்காக வாழ வேண்டும். அவருடைய கிளைகளாக நீங்கள் படர வேண்டும். அவரே மெய்யான திராட்ச செடி, நாம் எல்லாரும் அவரோடு ஒட்ட வைக்கப்பட்டவர்கள், அவரோடு இணைக்கப்பட்டவர்கள். மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படி நாம் அவருடன் ஒட்ட வைக்கப்பட்டு இருக்கிறோம். வெறுமை ஆக்குகிறவனை உங்களை விட்டு தேவன் துரத்திவிட்டு,உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்களை ஆசீர்வதித்து உயர்த்தப் போகிறார். இயேசுவை நோக்கி நீங்கள் கூப்பிட்டீர்கள் என்றால் வளருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற கஷ்டங்கள், வேதனைகள், வியாதிகள், வருத்தங்கள் எல்லாம் நீக்கி, தேவன் உங்களை ஆசீர்வதிக்க போகிறார். உங்கள் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள், தேவனை உயர்த்துகின்ற வார்த்தைகள் புறப்பட செய்யுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு கூட தெரியாத உங்கள் வாழ்க்கையை தேவன் மாற்றி அநேகருக்கு ஆறுதல் கொடுக்கக் கூடியவர்களாக நிழல் கொடுக்கக் கூடியவர்களாக தேவன் மாற்றுகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து, அவருக்காக கனிகொடுக்கிறவர்களாக மாற்றுவாராக.