Inspiration

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெபங்கள் தள்ளப்பட்ட ஜெபங்கள்

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெபங்கள் தள்ளப்பட்ட ஜெபங்கள்

 சங் 65:2

ஜெபத்தைக் கேட்பவரே! சங் 65:2 ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் மூலமாக உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய உலகில் வாழும் மனிதர்களில் அதிகமான பேர் பக்தியுள்ளவர்கள், தேவ நம்பிக்கையுள்ளவர்கள். தேவன் யார் என்று தெரியாவிட்டாலும் பிராத்தனை, ஜெபம்பண்ண வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், நாட்டை ஆள்பவர்கள். ஏதாவது ஒரு அசம்பாவிதம் அல்லது இழப்பு, மரணம் ஏற்பட்டால் பிராத்தனை செய்கிறோம் என்பார்கள். செய்கிறார்களோ இல்லையோ சொல்லி விடுவார்கள். யாரிடத்தில் ஜெபிக்க வேண்டும்?, எங்கே ஜெபிக்க வேண்டும்?, எந்த ஜெபம் கேட்கப்படும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. சிலர் அறிந்த ஆண்டவரிடத்தில் ஜெபிப்பார்கள். அவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவர் பதில் கொடுப்பாரா? இல்லையா? தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அநேக தேவர்களும், அநேக கடவுள்களும் வானத்திலும், பூமியிலும் உண்டு, கடவுளுக்குப் பஞ்சமில்லாத பூமி. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் 1 கொரி 8:5-ல் வானத்திலேயும், பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு. இப்படி அநேக தேவர்களும், அநேக கர்த்தாக்களும் உண்டு என்றார். சிருஷ்டித்தவரைத் தொழாமல், சிருஷ்டியைத் தொழுகிறார்கள், படைத்தவரை மறந்து படைப்புகளைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். பிலி 3:19-ல் அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி அறியாமல், தெரியாமல் தொழுது கொள்கிற எல்லா ஜெபங்களும், எல்லா பிராத்தனைகளும் காற்றோடு போய் விடும். அது ஆகாயத்தில் காற்றோடு பறந்து விடும். 1 கொரி 9:26-ல் ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன் என்று சொல்லப்பட்டுள்ள, அர்த்தமற்ற ஜெபங்கள், கடமைக்கான ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை. தேவ சமூகத்தில் எட்டுவதில்லை. ஜெபம் என்பது நேரத்தை போக்குவது அல்ல அது அர்த்தமுள்ளது. இயேசு சொன்னார் யோவான் 4:22-ல் நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள், நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம் என்றார். ஒருவரிடத்தில் நாம் கோரிக்கை, விண்ணப்பம் வைக்கிற போது ஒன்று அவர் உயர்ந்த அதிகாரியாக இருப்பார் அல்லது நமக்குத் தெரிந்த, உதவி செய்கிற நபராக இருப்பார். அப்படிப்பட்டவர்களிடத்தில் தான் நாம் கேட்க முடியும், மன்றாட முடியும், ஜெபிக்க முடியும். ஏனென்றால் அறியப்படாத தேவன் என்று எழுதப்பட்டுள்ளது. அப் 17:23-ல் எப்படியென்றால் நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார். ஆகவே நாம் ஏறெடுக்கிற ஜெபங்களும், பிராத்தனைகளும் அர்த்தமுள்ளவைகளாக நம்மை தேவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறதாக, பரலோகத்தை ஊடுருவுகிற ஜெபமாகவே இருக்க வேண்டும். அதைத்தான் வேதாகமத்தில் தேவன் பல இடத்தில் சொல்லியிருக்கிறார் மத் 23:13,14-ல் இயேசு சொன்னார் மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களை பிரவேசிக்க விடுகிறதுமில்லை. பார்வைக்காக நீண்ட ஜெபம் பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள் என்றார். நீங்கள் ஒன்றும் அறியாமல் நான் அந்த பலி செலுத்துகிறேன், இந்த பலி செலுத்துகிறேன், இந்த உதவி செய்கிறேன், அந்த உதவி செய்கிறேன் என்று சொல்லி, நம்மை நாமே திருப்திபடுத்தி ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். சங் 50:12-ல் நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன், பூமியும், அதன் நிறைவும் என்னுடையவைகளே என்றார். இன்றைக்கு நாமó தேவனை உள்ளும், புறமும் நன்றாக அறிந்து, அவர் யார்?, எப்படிப்பட்டவர்?, நம்மிடத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கையை எதிர்பார்க்கிறார், நாம் அவரை எப்படி பணிந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். தாவீது சொல்லுகிறார் சங் 51:16,17-ல் பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன், தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல, தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே நொறுங்குண்டதும், நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் என்றார். ஆம் இந்த பூமியில் தேவனை அறிந்து, இரட்சகர் யார் என்பதை தெரிந்து, அவருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி கூப்பிடுகிற ஒவ்வொருவரின் ஜெபத்தை அவர் கேட்கிறார். ஆகவே இனி நாம் ஏறெடுக்கிற ஜெபங்கள் சரியான நபரிடத்தில், சரியான விதத்தில் சென்றடைந்து, அதின் பலனை நாம் அனுபவிக்க வேண்டும். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் ஜெபங்களை சரி செய்து, அர்த்தமுள்ளதாக மாற்றி, அந்த ஜெபத்திற்குரிய பிரதிபலனை நீங்கள் காண, அனுபவிக்க கிருபை செய்வாராக. போகட்டும் யாருடைய ஜெபங்கள் கேட்கப்படவில்லை, யாருடைய ஜெபங்கள் கேட்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். 1.கேட்கப்படாத ஜெபங்கள். புலம்பல் 3:8,44-ல் நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப் போட்டார். ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக் கொண்டீர். இந்த வசனங்களில் கேட்கப்படாத ஜெபங்களைப் பற்றி நாம் பார்க்கிறோம். என் ஜெபம் தேவ சமூகத்தில் உட்பிரவேசிக்கக்கூடாபடிக்கு மூடிக்கொண்டீர் அல்லது அடைத்துப் போட்டீர் என்று சொல்லப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கூப்பிடலாம், தேவ உதவியை நாடலாம். ஆனால் எல்லாருக்கும் உதவி கிடைப்பதில்லை, எல்லாருடைய ஜெபமும் கேட்கப்படுவதில்லை. எலியாவின் நாட்களில், ஆகாப் ராஜா அரசாண்ட காலத்தில் 400 பாகால்களின் தீர்க்கதரிசிகள், போலி சாமியார்கள் தேவனுடைய நாமத்திலே, டூப்ளிக் கேட்டாக செயல்பட்டு ராஜாவையும் ஜனங்களையும் ஏமாற்றி வைத்திருந்தார்கள். உண்மையைப் பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி ஆதிக்கம் செலுத்தினார்கள். ஜனங்கள் எல்லாரும், ராஜா முதற்கொண்டு இவர்கள் தான் பக்திமான்கள், நடமாடும் சாமியார்கள் என்று மரியாதை கொடுத்து அவர்களை நமஸ்கரித்தார்கள். அவர்கள் சொன்னது தான் வேத வாக்காக இருந்தது. அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருந்தது. தேசத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி, தேவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி ஜனங்களை வஞ்சித்து வைத்திருந்தார்கள். இதைக் கண்ட எலியாவுக்கு மனவேதனை உண்டாகி மழை பெய்யாதபடிக்கு ஜெபம் செய்து வானத்தை அடைத்து, பஞ்சத்திலே தேசத்தை தள்ளினார். அப்பொழுது தான் யார் தேவன்? யார் தெய்வம்? பாகால் அல்லது வானத்தையும், பூமியையும் படைத்தவரா?, யார் ஜெபம் கேட்கப்படும், எது உண்மை, எது ஏமாற்று வேலை, தேசமும், தேசத்தின் ஜனங்களும் பார்க்க வேண்டும் என்று ராஜாவை நிறுத்தி சவால் விட்டார். ராஜாவும் சவாலுக்கு அடிபணிந்து, நீர் சொல்லுகிறபடியே நடக்கட்டும், ஆகட்டும் என்றார். அவர்கள் 400 பேர், எலியா ஒருவர் மட்டும். போட்டி ஆரம்பித்துவிட்டது, முதலாவது 400 பேர் கூப்பிடட்டும் என்று எலியா சவால் விட்டு, வானத்திலிருந்து அக்கினி இறங்க வேண்டும் அது தான் உண்மையான ஜெபம், அது தான் உண்மையான தேவன் என்று சவால் விட்டார். 1 இராஜா 18:24-29 வரை வாசித்தால் அதற்கு ஜனங்கள் எல்லாரும் நல்ல காரியம், நல்ல வார்த்தை என்றார்கள். 26 ஆம் வசனத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி அதை ஆயத்தம் பண்ணி, பாகாலே, எங்களுக்கு உத்தரவு கொடு, உத்தரவு அருளும் என்று காலை தொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை. மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம் பண்ணி உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள், அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான் அல்லது அலுவலாயிருப்பான் அல்லது பிரயாணம் போயிருப்பான் அல்லது தூங்கினாலும் தூங்குவான், அவனை எழுப்ப வேண்டியதாயிருக்கும் என்று பரியாசம் பண்ணினார். காரணம் அவருக்கு தெரியும் அது தேவனல்ல, தெய்வமுமல்ல என்று. சங் 135:15-17 வசனங்களில் அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும், பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. óஅவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே தான் அவர்கள் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். பதில் இல்லை, உத்தரவும் இல்லை, அவர்கள் கத்தியதிலே பதில் இல்லாதபடியினால் 1 இராஜா 18:28-ல் அவர்கள் உரத்த சத்தமாய் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள் மேல் வடியுமட்டும் கத்திகளாலும், ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக் கொண்டார்கள். ஒரு பதிலும் இல்லை, ஒரு அற்புதமும் நடக்கவில்லை. முதலாவது நீங்கள் ஜெபம் பண்ண போகும் போது. உங்கள் தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர், அவர் உயிருள்ளவரா?, ஜீவிக்கிறவரா? என்பதை தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது ஜெபிக்கிற நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?, தேவனுடைய பிள்ளைகளா? அல்லது அந்நிய புத்திரரா? என்பதை அறிந்தõருக்க வேண்டும். நீதி 15:8-ல் துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது. செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். துன்மார்க்கனுக்கு கர்த்தர் தூரமாயிருக்கிறார். நீதிமான்களின் ஜெபத்தை அவர் கேட்கிறார். எப்படி வேண்டுமானாலும் நான் வாழ்ந்து விட்டு, நான் ஜெபம் பண்ணுவேன் அவர் என் ஜெபத்தைக் கேட்பார் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நீதி 28:9-ல் வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. ஆம் எல்லாருடைய ஜெபத்தையும் தேவன் கேட்பதுமில்லை, அதற்கு அவர் செவி கொடுóப்பதுமில்லை. அது காற்றிலே கலந்து காணாமல் போய்விடும் அல்லது உங்களுக்கே அது திருப்பி வந்து விடும். சில சமயம் கடிதம், கொரியர் வாங்க ஆள் இல்லை என்றால் அது உங்களுக்கே திருப்பி வந்து விடும். சங் 35:13-ல் நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன், என் ஜெபமும் என் மடியிலே திரும்ப வந்தது என்றார். தள்ளப்பட்ட ஜெபம், புறக்கணிக்கப்பட்ட ஜெபம், திருப்பி அனுப்பப்பட்ட ஜெபம், கேட்கப்படாத ஜெபம். இயேசு சொன்னார் மத் 7:21-ல் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதிலó பிரவேசிப்பதில்லை என்றார். இன்றைக்கு நம் வாழ்க்கை மாற வேண்டும், கிரியைகள் மாற வேண்டும். நம் மனம் புதிதாக வேண்டும், பொல்லாத வழிகளை விட வேண்டும். அவருடைய இரக்கத்தையும், தயவையும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் ஜெபம் கேட்கப்படும். இயேசு சொன்னார் யோவான் 9:31-ல் பாவிகளுக்குத் தேவன் செவி கொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார் என்றார். இன்றைக்கு உங்கள் ஜெபம் கேட்கப்படுகிறதா? பதில் வருகிறதா? எத்தனை மாதங்கள், எத்தனை வருஷங்கள் காலதாமதமாகி, உங்களைச் சோர்வுக்குள்ளாக்கி இருக்கிறது. பிலேயாம் என்ற ஒரு மதிகெட்ட தீர்க்கதரிசி இருந்தான். தேவனுடைய கிருபையையும், வரங்களையும் பெற்ற அவன், உலக ஆசை பிடித்து, பணத்திற்கு ஆசைப்பட்டு, கூலிக்காக, சம்பளத்திற்காக ஆசீர்வதிக்க ஊழியம் செய்யப் போனான். தேவன் அவனை எச்சரித்து, நீ அங்கு போக வேண்டாம், அவர்களை சபிக்க வேண்டாம், நான் வெறுக்காதவர்களை, நீ வெறுப்பது எப்படி? நான் நேசிக்கிறவனை நீ பகைப்பது எப்படி? என்றார். ஆனால் அவனோ விடவில்லை, எனக்கு கூலி தருகிறேன், பணம் தருகிறேன் என்கிறார்கள் என்று எண் 23 ஆம் அதிகாரத்தில் திரும்பத் திரும்ப பலிபீடத்தைக் கட்டி எத்தனை முறை ஜெபித்தாலும் கர்த்தர் அவன் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, செவி சாய்க்கவுமில்லை. கடைசியில் தேவ தூதரால் எச்சரிக்கப்பட்டு, உயிர் பிழைத்ததே பெரிய காரியமாகிவிட்டது. துன்மார்க்கருடைய ஜெபம் அருவருப்பானது. லூக்கா 18:11,12-ல் பரிசேயன் நின்று, தேவனே நான் பறிகாரக்காரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்று தன்னைப் பற்றி, தன்னுடைய கிரியைகளைப் பற்றி புகழ்ந்து பெருமைப் பட்டுக் கொண்டு, பெருமையாய், அகந்தையாய் ஜெபித்தான். அந்த ஜெபம் கேட்கப்படவில்லை. ஆயக்காரனுடைய ஜெபமே கேட்கப்பட்டது. இன்றைக்கு கேட்கப்படாத ஜெபங்களும், திருப்பி அனுப்பப்பட்ட ஜெபங்களும் அதிகமாகிறது. நாம் இனி அப்படிப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்காதபடிக்கு தேவனே! என் மேல் கிருபையாயிரும் என்று நம்மை தாழ்த்தி அவருடைய இரக்கத்தை பெறுவோம். மட்டுமல்ல லூக்கா 16:24–ல் அப்பொழுது அவன், தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும், இந்த அக்கினி ஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு தேவன் இல்லை, மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்கும் காலத்தில் உன நன்மைகளை அனுபவித்தாய், சுகபோகமாய் வாழ்ந்தாய், உலகத்தின் பலனை எல்லாம் அனுபவித்தாய், இப்பொழுது நீ விதைத்ததை அறுக்கிறாய். நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் என்றார். அவன் ஜெபத்திற்கு தேவன் இரங்கவுமில்லை, கேட்கவுமில்லை. பூமியில் அவனுக்கு தேவனைத் தேடவோ, ஜெபிக்கவோ நேரமில்லை. இப்பொழுது பாதாளத்தில் வேதனைப்படும் போது தேவனை நோக்கிக் கதறுகிறான். அதை கேட்பார் இல்லை, அதை கவனிப்பார் இல்லை. பதில் கொடுப்பாரில்லை, பரிதாபமாக தள்ளப்பட்டான். அவன் ஜெபம் திருப்பி அனுப்பப்பட்டது. திரும்ப அவன் மடிக்கே வந்தது. இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதரனே, சகோதரியே நம்முடைய ஜெபம் தேவனுடைய சமூகத்தை, தேவனை எட்டுவதாகவும், அவருடைய இரக்கத்தைப் பெறுவதாகவும், அற்புதங்களைச் செய்வதாகவும் இருக்க வேண்டும். அதற்குத்தான் வேதத்தில் இவ்வளவு சம்பவங்களைப் பார்த்தோம். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்களுக்கு இரங்குவாராக, ஜெபத்தை கேட்பாராக!. 2.கேட்கப்பட்ட ஜெபம் லூக்கா 1:13-ல் சகரியாவே, பயப்படாதே!, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது என்றார். நீதிமானுடைய கூப்பிடுதலுக்கு அவர் செவிகொடுக்கிறார். அவர்கள் ஜெபத்தை தேவன் கேட்கிறார். ஒரு பக்கம் தேவன் சிலருடைய ஜெபத்தை கேட்பதில்லை, ஆனால் பலருக்கு இரங்கி, அவர்கள் ஜெபத்தைக் கேட்கிறார். பல வருஷம் பிளóளை இல்லாமல், வயதான நிலையில் தனிமையாய், கைவிடப்பட்ட சகரியா, எலிசபெத்துக்கு தேவன் அற்புதமாய் இரங்கி, எத்தனையோ வருஷத்திற்கு முன் ஏறெடுத்த இந்த ஜெபங்களுக்கு பதில் கொடுத்தார். அதே போல் யோவான்ஸ்நானகனைக் கொடுத்து கிறிஸ்துவுக்கு முன்னோடியாக வழியை ஆயத்தம் பண்ண கிருபை செய்தார். அவமானப்படுத்தப்பட்டு, பிள்ளை இல்லாமல் கதறி அழுத அன்னாளுக்குத் தேவன் இரங்கினார், ஜெபத்தைக் கேட்டார். சாமுவேல் தீர்க்கதரிசியைக் கொடுத்து, இஸ்ரவேல் ஜனங்கள் தேவப்பாதையில் நடக்கவும், தேவனால் நடத்தப்படவும் அவனை வெளிச்சமாக வைத்தார். எங்கெல்லாம் தாமதமாக அல்லது அற்புதமாக பிள்ளை பெற்றார்களோ, குழந்தை பெற்றார்களோ அவர்கள் எல்லாம் அற்புதத்தின் பிள்ளையாக அல்லது தேவனுடைய தீர்க்கதரிசியாக வாழ்கிறார்கள். இன்றைக்கு அந்த தேவன் எப்பேர்ப் பட்டவர்களாக இருந்தாலும் அவருடைய வழியில், அவருடைய பாதையில் நடக்கிற, அவருடைய பிள்ளைகளுக்கு ஜெபத்தைக் கேட்டு நன்மை செய்கிறார். தேவ பிள்ளைகளுக்கு, நீதிமான்களுக்கு தேவன் ஜெபத்தைக் கேட்கிறவராய் இருக்கிறார். ஆகவே தான் சங்கீதக்காரன் ஜெபத்தைக் கேட்பவரே!, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் என்றார். அது மட்டுமல்ல சங் 34:15-ல் கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது என்றார். நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிற கர்த்தர், அவர்கள் கூப்பிடுதலை, ஜெபத்தைக் கேட்கிறார். விண்ணப்பத்திற்கு இரங்குகிறார், பதில் அளிக்கிறார். அற்புதம் செய்கிறார், மட்டுமல்ல ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுக்கிறார். எசேக்கியா என்ற ராஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள. அவனைக் கொல்லும் கொடிய வியாதி ஒன்று அவனைத் தாக்கின போது தேவனை நோக்கி அபயமிட்டான், கதறினான். காரணம் ஆண்டவராகிய தேவன் சொல்லி விட்டார், உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்கு படுத்து நீ சாகப்போகிறாய் என்று. அவர் சுவர் புறமாய் திரும்பி ஏராளமாய் கண்ணீர் விட்டு அழுதார், கதறினார். எப்படி கதறி அழுதாராம் 2 ராஜா 20:3-ல் ஆ கர்த்தாவே!, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான், ஏராளமாய் கண்ணீóர் விட்டான், அழுதான். உடனே தேவன் இரங்கி, மனதுருகி உன் கண்ணீரைக் கண்டேன், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், ஜெபத்தைக் கேட்டேன் என்றார். ஜெபத்தைக் கேட்ட தேவன் என்ன செய்தார், 15 வருஷம் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். அது மட்டுமல்ல, அதுவரை பிள்ளையில்லாத அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்து மகிழ்ந்திருக்கப் பண்ணினார். அசீரியா ராஜா அவனுக்கு விரோதமாய் கிரியை செய்து, பயமுறுத்திக் கொண்டிருந்தான். அந்த அசீரியா ராஜாவை அழித்து எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்து அவன் தலையை நிமிரச் செய்தார். ஆம் நீதிமானுடைய கூப்பிடுதலின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். இன்னும் வேதத்தை வாசித்துப் பாருங்கள் அப்போஸ்தலர் 10:2,3-ல் இத்தாலியா பட்டாளத்தில் நூற்றுக்கு அதிபதியாய் இருந்த கொர்நேலியு என்ற மனிதன் இயேசு என்றாலே யார் என்று தெரியாதவன், கேள்விப்படாதவன். ஆனால் தேவன் ஒருவர் இருக்கிறார், அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் அறிந்திருந்தார். அப்படி அவர் தானதர்மம் பண்ணி, ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் ஒரு தூதனை அனுப்பி உன் ஜெபங்களும், உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில், அவர் சந்நிதியில் வந்து எட்டியது என்றார். நடந்தது என்ன அவரையும், அவர் குடும்பத்தையும் தேவன் இரட்சித்து, அபிஷேகித்து, இந்த பூமியிலே அவருக்கு மகிமையாக தெரிந்து கொண்டார். ஆம் நம் தேவன் ஜெபத்தைக் கேட்பது மட்டுமல்ல உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவர், உயர்த்துகிறவர். கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கு தெரிந்த குடும்பத்தில் திடீரென ஒரு சகோதரனுக்கு பக்கவாத நோய் (ஸ்டேக்) ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இங்கெல்லாம் இவரை வைத்துப் பார்க்க முடியாது, இவருக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு விட்டது, இனி பிழைப்பது கடினம் என்றார்கள். இரவு இரண்டு மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்து எப்படியாவது ஜெபியுங்கள் தேவன் இரங்கட்டும் என்றார்கள். கண்ணீரோடு ஜெபித்தேன் ஏறக்குறைய 70 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார், இப்பொழுது தேவன் மனம் இரங்கி பரிபூரண சுகத்தைக் கொடுத்துவிட்டார். நான் அவரை சந்திக்க அவர் வீட்டிற்குப் போயிருந்தேன். படுத்த படுக்கையாய் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அவர் எழுந்து சைக்கிள் ஓட்டுகிறார். இன்றைக்குப் பரிபூரண சுகத்தோடு இருக்கிறார். இனி நான் கர்த்தருக்காகத் தான் வாழ்வேன் என்றார். எவ்வளவு அருமையான தேவன் நம்முடைய தேவன். ஆகவே தான் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர், அவர்கள் கூப்பிடுதலுக்கு இரங்குகிறவர் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே தேவன் அவருடைய பிள்ளைகளின், நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவன் உங்கள் ஜெபத்தை தள்ளாமலும், தம்முடைய கிருபையை நம்மை விட்டு விலக்காமலும் இருக்கிற தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டு, உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி, உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கட்டாயம் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு அற்புதம் செய்து நடத்துவார். என் தேவன் தாமே இந்த செய்தியை வாசிக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக!.