Inspiration

தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை நிறைவாக்குவார்.

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் இயேசு வாழ்கிறார் ஊழியத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை உங்களை பராமரித்து, பாதுகாத்து குறைவில்லாமல் நடத்தினதை காட்டிலும்,இந்த புதிய வருஷத்தில் அதிகமாக உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவார். இந்த வருஷம் உங்களுக்கு மேன்மையும், சிறந்ததும், உயர்வானதாகவும் இருக்கட்டும். தேவன் நமக்கு கொடுக்கிற வார்த்தை வாக்குத்தத்தம் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் அவருடைய மகிமையிலே நிறைவாக்குவார், பூர்த்தி செய்வார், நிறைவேற்றுவார் என்று சொல்லுகிறார். அவரிடத்தில் திரளான பொக்கிஷங்கள் உண்டு, புதையல்கள் உண்டு. ஏசாயா 45:4-ல் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன் என்றார். அவரை நாடுகின்ற, பற்றிக் கொள்ளுகின்ற, தேடுகிறவர்களுக்கு என்று தேவன் சகல மேன்மைகளையும், உயர்வையும், ஆசீர்வாதத்தையும் வைத்திருக்கிறார். எல்லாருக்கும் அல்ல, அவரை தேடாதவர்களுக்கு அல்ல, அவரை நம்பாதவர்களுக்கு அல்ல, அவரை பின்பற்றாதவர்களுக்கு அல்ல, ரோமர் 10:12-ல் யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. இந்த வருஷத்தில் அவரைத் தேடி, நாடி பற்றிக் கொண்டு, பின்பற்றுகின்ற யாவரையும் தேவன் வானத்தின் பலகனிகளைத் திறந்து இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வதிப்பார். இதைத்தான் தேவன் நமக்கு வாக்குப்பண்ணிஇருக்கிறார். இப்போது மட்டுமல்ல எப்போதும் நமக்கு வாக்குபண்ணி இருக்கிறார். நேற்றைக்கும், இன்றைக்கும்,நாளைக்கும் வாக்குப்பண்ணியிருக்கிறார். உபாகமம் 28:12-ல் வாசித்து பாருங்கள் ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்றார்.

இன்றைய மனிதர்கள் குறைவில்லாமல் வாழவும், பற்றாக்குறை இல்லாமல் ஜீவிக்கவும் தான் தேவன் அவர்களைப் பூமியிலே ஏற்படுத்தினார். ஆனால் மனிதர்கள் குறைவுபட்டு போகிறார்கள், பற்றாக்குறையோடு போராடுகிறார்கள், தேவைகளோடு தத்தளிக்கிறார்கள்.ஏசாயா 40:26-ல் உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது என்றார். அந்த தேவன் இந்த புதிய வருஷத்திலே உங்களை சகல காரியங்களிலும் விருத்தியாக்குவார், முன்னேறும்படி செய்வார்.வேதத்தை வாசித்து பாருங்கள்ஏழையாய் இருந்தவனை செல்வந்தனாக உயர்த்தினார். செல்வந்தர்களை ஏழைகளாக மாற்றினார். ஆதியாகமம் 26:13-ல் அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். ஈசாக்கு ஐசுவரியவானாக வர வர விருத்தி அடைந்து மகா பெரியவனானான். ஆம் அவர் எளியவனை குப்பையில் இருந்து உயர்த்துகிறார். ஆடு மேய்த்த தாவீதை, காடுகளில் வாழ்ந்த, வனாந்தரத்தில் அலைந்து திரிந்தவனை ராஜாவாக்கி ஐசுவரியவானாக்கி மேன்மைப்படுத்தினார். ஆபிரகாமை சீமானாக்கி, செல்வந்தர் ஆக்கி மேன்மைப்படுத்தி உயர்த்தினார். அந்த தேவன் இந்த வருஷத்திலே உங்கள் வாழ்க்கைக்கும் ஒரு திருப்பு முனையை கொண்டு வருவார், ஒரு மேன்மையை கொண்டு வருவார், உங்களை உயர்த்துவார். அவர்தன்னைத் தாழ்த்தி இறங்கினார். இன்றைக்கு ஐசுவரியமும் கனமும் நம்முடைய திறமையினாலேயோ, படிப்பு, பட்டத்தாலையோ வராது. அது தேவனால் மாத்திரமே வரும். அதுதான் நிலைத்து நிற்கும். தாவீது ராஜா சொல்லுகிறார் 1 நாளாகமம் 29:12-ல் ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும் என்றார். தேவனால் வருகிறது தான் நிலை நிற்கும், சமாதானத்தை தரும், ஆகவேதான் சாலொமோன் ஞானியும் சொல்லுகிறார் நீதிமொழிகள் 10:22-ல் கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்என்றார்.

இன்றைக்கு இந்த மாத இதழை படிக்கின்ற என் அன்பு சகோதர சகோதரிகளே இந்த புதிய வருஷத்திலே, வரும் நாட்களிலே, மாதங்களிலே தேவன் உங்களுக்கு ஒரு மேன்மையும், உயர்வையும் தருவார். வேலையில்லாத உங்களுக்கு, தொழில் இல்லாத உங்களுக்கு, வீடு இல்லாத உங்களுக்கு தேவன் புதிய காரியங்களை செய்வார். உபாகமம் 8:18-ல் உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தம்முடைய ஐசுவரிய பொக்கிஷ சாலையைத் திறந்து உங்களை ஆசீர்வதித்து, குறைவில்லாமல் சகல நன்மைகளினாலும் இந்த புதிய வருஷம் உங்களை திருப்தியாக்கி நடத்துவார். நீதிமொழிகள் 8:18-ல் ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு என்றார். இப்படி நம்மை உயர்த்த, மேன்மைப்படுத்த தான் இயேசு இந்த பூமிக்கு இறங்கி வந்து நம்முடைய தரித்திரத்தின் சாபத்தை, ஏழ்மையின் சாபத்தை உடைத்து நம்மை ஆசீர்வதித்தார். 2 கொரிந்தியர் 8:9-ல் வேதம் சொல்லுகிறது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே, ஏழை ஆனாரே என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே வானமும் பூமியும் ஒழிந்தாலும்என் வார்த்தை ஒழியாது என்ற வார்த்தையின்படி இந்த நாளிலே இதை வாசிக்கின்ற, நம்புகின்ற உங்களுக்கு தேவன் மகிமையான காரியங்களைச் செய்து ஆசீர்வதித்துவழிநடத்த போகிறார். போகட்டும் எந்த ஐசுவரியம் யாரால் வரும், ஐசுவரியம் எதற்கு நமக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

1. தேவனிடத்தில் ஐசுவரியவான்களாயிருங்கள்

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார் லுக்கா 12:21. இன்றைக்கு ஐசுவரியம் என்று மனிதர்கள் நினைப்பது உலகப்பிரகாரமான வசதிகளான கார், பங்களா, சுகபோக வாழ்க்கை என்பது தான். இது இருந்தால் போதும் என்னுடைய பார்வையிலும், மற்றவர்கள் பார்வையிலும் நான் விலையேறப் பெற்றவன், மதிப்பிற்குரியவன், கனத்திற்குரியவன் என்று நினைக்கிறோம் அது அல்ல, தேவனுக்கு முன்பாக ஐசுவரியவானாக இருக்க வேண்டும். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகில்லை, பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகில்லை என்பார்கள். ஆம் அருளும் வேண்டும், பொருளும் வேண்டும் இதைக் குறித்து ஆண்டவராகிய இயேசுசொல்லியிருக்கிறார்லூக்கா 12:33,34-ல் உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என்றார். பரலோக ராஜ்யம் ஒரு தேவப்பிள்ளைக்கு ரொம்ப முக்கியம். உங்கள் உழைப்பால், உங்கள் பிரயாசத்தினால் தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட வேண்டும். தேவனை அறியாத ஜனங்கள் உங்கள் மூலமாய் கர்த்தரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் கர்த்தர் நம்மை இரட்சித்து, அபிஷேகித்திற்கிறார். ஆனால் நாமோ வேலை வேலை, பணம் பணம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.நாம்வளமாய், செழிப்பாய் பூமிக்குரிய காரியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேவனுக்கு முன்பாக தரித்திரராக, ஜெபிக்க தெரியாதவர்களாக, ஊழியம் பண்ணி ஆத்துமா அறுவடை செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுக்கு முன்பாக குறைவுள்ளவர்களாக, தராசிலே நிறுக்கப்பட்டால் லேசானவர்களாககாணப்படுகிறோம். அதனால் தான் தேவன் அவ்வப்போது நம்முடைய ஆவிகளைநிறுத்துப் பார்க்கிறார் என்று நீதிமொழிகள் 16:2-ல் மனுஷனுடைய வழிகள் எல்லாம் அவனுடைய பார்வைக்கு சுத்தமானவைகள் கர்த்தரோ ஆவிகளை நிறுத்திப் பார்க்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.

நாம் தேவனுக்கு முன்பாக பலன் உள்ளவர்களாக, அவருக்கு முன்பாக ஐசுவரியம் உள்ளவர்களாக வாழ வேண்டும். இதைத்தான் உண்மையான, நிலையான ஐசுவரியம் என்று வேதம் சொல்லுகிறது. யாக்கோபு 2:5-ஐ வாசித்துப் பாருங்கள் என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?ஆம் நம்மை அவருடைய விசுவாசப் பிள்ளைகளாக, அவரை நம்பிமேன்மை அடைகின்ற பிள்ளைகளாக நம்மை மாற்றுகிறார். அவருடைய மேன்மையின் ஐசுவரியம் என்றால் என்ன?ரோமர் 11:33-ல் ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் ஐசுவரியத்தைப் பற்றி வேதம் சொல்லுகிறது எபேசியர் 1:7-ல் அவருடைய கிருபையின் ஐசுவரியம் என்று சொல்லப்பட்டுள்ளது. எபேசியர் 2:4-ல் இரக்கத்தின் ஐசுவரியம் என்று சொல்லப்பட்டுள்ளது. எபேசியர் 2:6-ல் மகாமேன்மையின் ஐசுவரியம் என்று சொல்லப்பட்டுள்ளது. எபேசியர் 3:8-ல் கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மேன்மையான பரலோக ஐசுவரியத்தை நாடாமல், தேடாமல் சும்மா இந்த மண்ணையும், பொன்னையும் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த பூமிக்குரிய ஐசுவரியம் எல்லாம் நிலையற்றது. இதைத்தான் பவுல் எழுதுகிறார் 1 தீமோத்தேயு 6:17-ல் இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இதைத்தான் பவுல் பிலிப்பியர் 4:19-ல்என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்றார்.

உங்களுடைய ஐசுவரியத்தின்படி அல்ல, அவருடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஐசுவரியம், இயேசுவின் ஐசுவரியம் நமக்கு உண்டாயிருக்க வேண்டும். இதுதான் பரலோகத்தில்நம்மை தேவனுக்கு முன்பாக நிறுத்தி குறைவில்லாத ஒரு வாழ்க்கையை கொண்டு வரும். இதைத்தான் பவுல் எழுதுகிறார் கொலோ 3:2-ல் மியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்என்றார். இன்றைக்கு தேவனுக்கு முன்பாகநம்முடைய வாழ்க்கை, கிரியைகள் நிறைவாக, பரிபூரணமாக இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனாக இருப்போம். உலகத்தை ஆண்ட மகா அலெக்சாண்டர் வியாதிப்பட்டு உயிருக்காக போராடினார். அப்பொழுதுதன் மந்திரிமார்களை அழைத்து மூன்று காரியங்களைச் சொன்னார்1. நான் மரித்த பின்பு என்சவப்பெட்டியை மருத்துவர்கள் தான் தூக்கிச் செல்ல வேண்டும் காரணம் மருத்துவம் என்னை காப்பாற்றவில்லை. 2. நான் சேகரித்து சம்பாதித்த எல்லாவற்றையும் ரோட்டில் எறிந்து விட வேண்டும் காரணம் நான் பிறந்த போது ஒன்றும் கொண்டு வரவில்லை, மரிக்கும்போது எவைகளையும் எடுத்துக் கொண்டு போகிறதில்லை.3. என் கையை சவப்பெட்டிக்கு வெளியே நீட்டி வைக்க வேண்டும், நான் ஒன்றையும் இங்கிருந்து எடுத்து போகமாட்டேன்என்றார்.

அந்தக் காலத்தில் தேவனை நேசித்து அவரை பின்பற்றினவர்கள் எல்லாரும் தேவனுக்காக தங்கள் ஐசுவரியத்தை துறந்து, இழந்து தேவனுக்காக வாழ்ந்தார்கள். ஆபிரகாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனை பின்பற்றினான். எலிசா அந்த காலத்தில் பெரியபணக்காரர், பன்னிரெண்டு ஏர்மாடுகளை விட்டு விட்டு தேவ ஊழியத்திற்கு வந்தார். 1 இராஜாக்கள் 19:19-ல் அப்படி சொல்லுகிறது. பவுல் ஆசியாவிலேயே பெரிய பணக்காரர், அந்த காலத்தில் ரோம நாட்டு பட்டம், குடியுரிமை வாங்க வேண்டுமானால் 250 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்க வேண்டும். அந்த ஐசுவரியத்தினாலே அவர் ரோமன் என்ற பட்டத்தை பெற்றார்.அப்போஸ்தலர் 22:27,28-ல் அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.

சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ அந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.அவ்வளவு மேன்மையான ஐஸ்வரியத்தை தேவனுக்காக துறந்து தேவ வல்லமையை பெற்று ஆசியா கண்டத்தை கர்த்தருக்குள் கொண்டு வந்தார். ஆகவே தான் சொல்லுகிறார் எனக்கு லாபமாய் இருந்த எல்லாவற்றையும் நஷ்டமாக குப்பையாக எண்ணுகிறேன் என்றார். இப்படிப்பட்ட வாழ்க்கை தான் தேவனுக்கு முன்பாக செல்வம், ஐசுவரியம். இந்தபுதிய வருஷத்திலே என் தேவன் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உள்ள ஆசீர்வாதங்களினால் உங்களை நிரப்பி ஆசீர்வதித்து அவருடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை நிறைவாக்குவார்.

2. ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்

கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்சங்கீதம் 62:10. இந்த புதிய வருஷத்திலே தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவார் என்று பார்த்தோம். எது ஐசுவரியம், எந்த ஐசுவரியம் என்பதை பார்த்தோம். தொடர்ந்து நாம் ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கக் கூடாது, அதுதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கக்கூடாது. ஆதி திருச்சபை கிறிஸ்தவர்கள் தங்களுக்கு உண்டான உடமை, பொருள், சொத்து எல்லாவற்றையும் அப்போஸ்தலர் பாதத்தில் வைத்துவிட்டுதேவனே போதுமென்று கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் துறந்து, இழந்து வாழ்ந்தார்கள். எல்லாவற்றையும் விட்டு விட்டு எழுப்புதலுக்காக ஓடினார்கள். பிரயாசப்பட்டார்கள்.அப்போஸ்தலர் 2:44,45 அப்படிச் சொல்லுகிறது விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள் காரணம் தேவனை தங்கள் பொருளாக, ஐசுவரியமாக வைத்திருந்தார்கள். நம்முடைய மனம், இருதயம் ஐசுவரியத்தைச் சார்ந்து வாழக்கூடாது, கர்த்தரையே நம்முடையபங்காக,, சொத்தாக வைத்திருக்க வேண்டும். இதைத்தான் தாவீது சொல்லுகிறார் சங்கீதம் 16:5-ல் கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.இதுதான் நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கு, அதை விட்டு விட்டு நாம் ஐசுவரியத்தின் மயக்கத்தினால்மாயையில் வாழக்கூடாது. இதைத்தான் ஆண்டவராகிய இயேசு சொன்னார்மாற்கு 4:18-ல் வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்,இவை தேவனை விட்டு நம்மை தூரப்படுத்துகிறது. ஆகவே ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் ஐசுவரியத்தைக் கொடுக்கிற தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இதைத்தான் பணக்கார வாலிபனை பார்த்து இயேசு சொன்னார்மாற்கு 10:24-ல் சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! என்றார்.

இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிராமல், கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்து அவரை பின்பற்றுங்கள். இதைத்தான் தேவன் பணக்கார வாலிபன் இடத்தில் எதிர்பார்த்தார். எல்லாவற்றையும் விடóடு விட்டு ஐசுவரியத்திற்காக ஊழியம் பண்ணாமல், காலத்தை வீணடிக்காமல், உன்னுடைய உழைப்பை, உன்னுடைய பலத்தை, உன்னுடைய வாழ்க்கையை எனக்காகசெலவிடு என்றார். அவன் அதை செய்ய மனதில்லாமல் மிகுந்த துக்கத்தோடு போய்விட்டான் என்று மார்க்கு 10 22-ல் பார்க்கிறோம். இன்றைக்கு நாம் யாருக்கு சேவை செய்கிறோம், யாருக்கு ஊழியம் செய்கிறோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கா? அல்லது செல்வத்திற்கா? உலகத்திற்காகவா? எதற்காக நாம் அவரை பின்பற்றுகிறோம். அவருடைய ராஜ்யத்திற்காக, அவருடைய மகிமைக்காக வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஆகவேதான் இயேசு சொன்னார்மத்தேயு 6:24-ல் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாதுஎன்றார். ஆகவே இந்த புதிய வருடத்தில் உன்னதமான கர்த்தரையே உங்களுக்கு ஐசுவரியமாக, செல்வமாக வைத்து அவர் மீது உங்கள் வாழ்க்கையை கட்டி எழுப்புங்கள். இதற்காகத்தான் அவர் இந்த பூமிக்கு ஐசுவரிய சம்மன்னராக வந்தார். அந்த ஆண்டவராகிய தேவன் இந்த புதிய ஆண்டிலே எல்லா வெறுமையையும் மாற்றி சகல நன்மைகளாலும் உங்களை நிரப்பி இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசீர்வதித்து நடத்துவார். இந்த புதிய வருஷத்திலும் நம்முடைய தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் சகல குறைவுகளையும் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களை மேன்மைப்படுத்துவாராக! ஆமென்.