Inspiration
உங்கள் பட்டயங்களை கூர்மையாக்குங்கள்.
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். ஏசாயா 41:15.
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். ஏசாயா 41:15. நீங்கள் மலைகளை மிதித்து நொறுக்க வேண்டும், குன்றுகளை பதராக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உங்கள் வாழ்க்கையில் மழை போல பிரச்சனையா? இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்? பிள்ளைக்கு திருமண ஒழுங்கு செய்தாயிற்று, ஆனால் பணப்பிரச்சனை, நகைவாங்கவில்லை, இன்னும் அந்த வேலையை முடிக்கவில்லை, இந்த வேலை செய்யவில்லை என்று கவலைப்படுகிறீர்கள். படிச்சு முடிச்சாச்சு நல்ல ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், எவ்வளவோ தேர்வுகள் எழுதி விட்டேனே இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லையே என்று சொல்லி கவலைப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வருகின்ற இந்த மலைகளை, குன்றுகளைப் பார்த்து யோசிக்கின்ற உங்களைப் பார்த்து தான் ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களை புதிதும் கூர்மையுமான பற்கள் உள்ள யந்தரமாக்குவேன், நீங்கள் மலைகளை மிதித்து நொறுக்குவீர்கள், குன்றுகளை பதருக்கு ஒப்பாக்கி போடுவீர்கள் என்று. ஆண்டவர் உங்களை இப்படிப்பட்டவர்களாய் மாற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:7 பற்கள் இல்லாதவர்கள் தான்எல்லா உணவையும் விழுங்குவார்கள். பிசாசுக்கும் பற்கள் இல்லை அதனால் தான் எல்லாரையும் விழுங்குகிறவனாகஇருக்கிறான். அவனை அழிப்பதற்கு தேவன் உங்களை கூர்மையான பற்கள் உள்ள யந்தரமாகமாற்றுகிறார். வீட்டில் காய்கறிகள் நறுக்குவதற்கு கத்தி, அறுவாள்மனை வைத்திருப்போம். காய்கறிகள் நறுக்கும்போது அவைகள் வெட்டவில்லை என்றால் அவை கூர்மையாக இல்லை என்று அர்த்தம். இதுபோல நீங்கள் கூர்மை இல்லாதவர்களாக இருக்க கூடாது. சிலரிடத்தில் பட்டயம் இருக்கு ஆனால் அது மழுங்கி இருக்கும், வேஸ்டா போயிருக்கும். அநேகருடைய வாழ்க்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்பாக இருந்த அதே ஜெபம், அதே வேத வாசிப்பு, அதே தொழில், அதே வருமானத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் ஆண்டவர் இன்று உங்களை புதிதும் கூர்மையுமான பற்கள் உள்ள யந்தரமாக மாற்றுவேன் என்று சொல்லுகிறார். ஆண்டவர் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக மாற்றுவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் ஆண்டவருக்கு தேவை.
1. தேவ ஞானமாகிய பட்டயம்
இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம் பண்ண வேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம். பிரசங்கி 10:10.இருப்பாயுதம் மழுங்கினதாய் இருக்குமானால் நீங்கள் அதிக பலத்தை உபயோகிக்க வேண்டியதாக இருக்கும். வீணாக பணத்தை செலவழிக்க வேண்டும், ஆட்களைத் திரட்ட வேண்டும். ஏனென்றால் வல்லமை குறைந்து போயிற்று, பலன் இல்லை. என்றைக்கோ பண்ணின ஜெபம், அதை வைத்துக் கொண்டு இவ்வளவு நாள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கக் கூடாது. உங்களுக்குள் ஒரு புதிய அபிஷேகம், புதிய வல்லமை இவைகளால் அனுதினமும் நிரம்ப வேண்டும். மழுங்கினவர்களாய் அல்லது மழுங்கிப் போனவர்களாய் இருப்பீர்களானால் உங்கள் நிலை ஆபத்தில் போய் முடிந்து விடும். சாத்தான் உங்களை விட அதிக பலவானாய், கூர்மையாக செயல்படுகிறான். மழுங்கிப் போகாதபடிக்கு தீவிரமாய் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் உங்களுக்குள் குழப்பத்தை கொண்டு வருவான். மாதத்தில் ஒரு நாள் உபவாச ஜெபத்திற்கு போனால் போதாதா? வாரத்தில் ஒரு நாள் ஜெபிக்க போனால் போதாதா? என்று சொல்லி நம்மை குழப்புவான். நாம் எந்த அளவினால் அளக்கிறோமோ அதே அளவினால் தான் நமக்கும் அளக்கப்படும் என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் கூர்மையாக இல்லாவிட்டால் மலைகளை மிதிக்க முடியாது, குன்றுகளையும் நொறுக்க முடியாது. ஏனோதானோ என்று வாழ்க்கையில்ஓடிக் கொண்டிருக்கிறீர்களா?. நீங்கள் இந்த நிலைமையில் தொடர்ந்து வாழ்வதை தேவன் விரும்பவில்லை,
எத்தனை நாளைக்கு இந்த போராட்டம் என் வாழ்க்கையில் இருக்கும், எத்தனை நாளைக்கு நான் இந்த பிரச்சனை வழியாய் கடந்து செல்வேன் என்று புலம்பி கொண்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகளை எல்லாம் மேற்கொள்வதற்கு ஆண்டவர் உங்களை கூர்மையான யந்தரமாக மாற்றப் போகிறார். நீங்கள் கூர்மையானவர்களாய் மாற வேண்டுமென்றால் பட்டறையில் வைத்து தீட்டப்பட வேண்டும். அந்த காலத்தில் எல்லாரும் வீட்டு முகவரியை கேட்டால் உடனடியாக சொல்லுவார்கள். ஆனால் இன்று எதைக் கேட்டாலும் சற்றுப் பொறுங்கள் என்று சொல்லி விட்டு செல்போனில் பார்த்து எல்லாவற்றையும் சொல்லுகிறார்கள். ஏனென்றால் இன்று புத்தி மழுங்கிப் போய்விட்டது, கூர்மை இழந்துவிட்டது. எல்லாவற்றையும், நம்முடைய புத்தி முதற்கொண்டு இந்த செல்போனிடம் அடகு வைத்துவிட்டோம். ஆண்டவர் நிறைய தருணங்களை, வாய்ப்புகளை கொடுத்து வைத்திருக்கும் போது நீங்கள் அதை சரியாய் பயன்படுத்த வேண்டும். பனை மரத்தில் நொங்கு வெட்ட வேண்டும் என்றாலும், பதநீர் எடுக்க வேண்டும் என்றாலும் அதில் எப்படி ஏற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுப்பார்கள். அதில் உள்ள கருக்கு, நம்மை காயப்படுத்தாதபடிக்கு அதில் எப்படி ஏற வேண்டும் என்று நமக்கு பயிற்சி கொடுப்பார்கள். இதே போல தான் இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகளை, போராட்டங்களை மேற்கொள்வதற்கு தேவன் நமக்கு சர்வாயுதவர்க்கத்தைதந்திருக்கிறார்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.எபேசியர் 6:11.பிசாசானவன் நமக்கு எதிராக சில தந்திரங்களை செய்து வைத்திருக்கிறான். ஊழியத்தில் முன்னேறக்கூடாது, எதையும் செய்து விடக்கூடாது என்று சொல்லி பல திட்டங்களை, யோசனைகளை போட்டு வைத்திருக்கிறான். ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றால் அங்கு கத்தி தேவைப்படும்.அதற்கென்று டாக்டர்கள் சில இன்ஸ்டுமென்ட் வைத்திருப்பார்கள். சிறிய பொருளை வெட்டுவதற்கு பெரிய ஆயுதம் தேவைப்படாது, வெங்காயம் வெட்டுவதற்கு அரிவாள் தேவைப்படாது. ஆனால் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நின்று ஜெயிப்பதற்கு தேவனுடைய சர்வாயுதவர்க்கமாகிய பெரிய ஆயுதம் தேவை. அதற்கு உங்களிடத்தில் இருக்கிற பழைய வாழ்க்கை, பழைய ஆயுதம், பழைய ஜெபம் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். புதிய கூர்மையான யந்தரமாக மாறவேண்டும்.
2. வேதவசனமாகிய பட்டயம்
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4:12. ஆண்டவருடைய வார்த்தை இன்றைக்கும் ஜீவன் உள்ளதாயிருக்கிறது. அவருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை போல உள்ளது. இந்த கடைசி காலத்தில் நீங்கள் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்க சர்வாயுதவர்க்கம் வேண்டும். ஒரு ஆயுதம் மாத்திரம் இருந்தால் போதாது. பல ஆயுதங்கள் நமக்கு வேண்டும். இந்த உலகத்தில் பல டெக்னாலஜி முன்னேற்றம் வந்து கொண்டிருக்கும்போது தேவப் பிள்ளையாகிய நீங்கள் இருந்த நிலைமையிலேயே இருக்கக் கூடாது. உங்கள் வாழ்க்கையில் பழைய நிலைமையில், பழைய யந்தரமாக, பழையதாய் போனவர்களா இல்லாதபடிக்கு புதிதும் கூர்மையுமானவர்களாய் மாற வேண்டும். அப்பொழுதுதான் மலைகளை மிதித்து நொறுக்க முடியும், குன்றுகளை பதராக்க முடியும். பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம், தேவபிள்ளையின் முன் சமபூமியாவாய். யந்தரத்தை கூர்மையாக்க கொல்லப்பட்டறைக்கு போக வேண்டும். அந்தப் பட்டறையில் அந்த ஆயுதத்தை நெருப்பில் வைத்து சூடாக்கி அடிக்கிற அடியில் அது மிகவும் கூர்மையாகிவிடும். இதுபோல நீங்களும் வேதவசனமாகிய பட்டறையில் வசனத்தைக் கொண்டு உங்களை கூர்மையாக்க வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற முடியாதபடிக்கு பெரிய பெரிய மலைகள், குன்றுகள் போன்ற காரியங்கள் உங்களுக்கு முன்பாக நிற்கிறது. அதைப் பார்த்து மலைத்துப் போய், இந்த பிரச்சனையை நான் எப்படி சமாளிக்க போறேன் என்று திகைக்கிறீர்கள். இந்த கடன் பிரச்சனை எப்படி என் வாழ்க்கையை விட்டு மாறப்போகிறது, என் வியாதி எப்பொழுது என்னை விட்டு நீங்கும், நான் எப்படி இந்த காரியங்களை எல்லாம் மேற்கொண்டு சமாளித்து வாழப் போகிறேன் என்று தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா? சாத்தானுடைய தந்திரம் என்னவென்றால் உங்களை மழுங்க செய்வது தான். நீங்கள் எதையுமே சிந்திக்க கூடாது, அதே பிரச்சனையிலேயே, கவலையிலேயே நினைச்சு நினைச்சு நீங்க வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று உங்களை வஞ்சிக்கிறான். உங்களை எப்பவும் மந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று செயல்படுகிறான். இவைகளுக்கு ஒரு கொல்லன் பட்டறை இருக்கு,அந்த பட்டறை உங்கள் கையிலேயே இருக்கிறது. வேத வசனமாகிய பட்டறையில் தான் நீங்கள் கூர்மையாக்கப்படுவீர்கள். நேற்று வரைக்கும் இருந்த பழைய ஜெபம், பழைய வேத வாசிப்பு, பழைய வாழ்க்கை முறை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுங்கள், இன்றைக்கு தேவன் உங்களை புதிய கூர்மையாக, புதிய வல்லமையினால் உங்களை நிரப்ப போகிறார். உங்களைக் கண்டாலே பிசாசுகள் அலறி ஓடப் போகிறது, உங்களுக்கு எதிரான மந்திர வல்லமைகள் அழியப் போகிறது.
3. ஜெபமாகிய பட்டயம்
இன்றைக்கு நிறைய ஊழியங்களை, சபைகளைகூர்மையாக செயல்படக்கூடாதபடிக்கு அவர்களை மந்த நிலைமையிலேயே வைக்கிறான். வேதத்தில் வாசித்து பார்த்தீர்கள் என்றால் சவுல் ராஜாவின் காலத்தில் பெலிஸ்தர் அடிக்கடி யுத்தம் செய்ய வருவார்கள். எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை.1 சாமுவேல் 13:19.சாத்தான் நீங்கள் கூர்மையாகாதபடிக்கு மழுங்கிப் போனவர்களாய் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதில் அவன் கவனம் வைத்து செயல்படுகிறான். ஏனோதானோ என்ற மழுங்கின ஜெபம் தான் அவர்களிடத்தில் இருக்க வேண்டும், எழுப்புதல் ஜெபம், ஆவிக்குரிய ஜெபம் அவர்களிடத்தில் இருக்ககூடாது என்று கருத்தாய் செயல்படுகிறான். இஸ்ரவேலர் என்றால் தேவனுடைய பிள்ளைகள் என்று அர்த்தம். தேவனுடைய பிள்ளைகள் பட்டயங்களை, ஆயுதங்களை உண்டு பண்ண கொல்லப்பட்டறைக்கு செல்லாதபடிக்கு பெலிஸ்தர் ஆகியசாத்தான் கவனம் வைக்கிறான். அவன் மிகவும் தந்திரமானவன், நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால் அதில் ஒரு பிரச்சனையை கொண்டு வருவான், திருமண காரியம் ஒழுங்கு செய்தால் ஒரு பிரச்சனையை கொண்டு வருவான். உங்களுக்கு விரோதமாய் ஆட்களை எழுப்பி பிரச்சனையை கொண்டுவருவான். எப்படியாவது முடக்க வேண்டும், நல்லா இருந்தால் தானே நீங்கள் ஊழியம் செய்வீர்கள், ஜெபிப்பீர்கள், அதனால் உங்களை முடக்கி ஒன்றும் செய்யக்கூடாதவர்களாய் மாற்றி விடுவான். மழுங்கிப் போகப் பண்ணுவான்.
இருபதாவது வசனத்தில்இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது. இன்றைக்கு நிறைய பேர் மற்றவர்களுக்காக ஜெபிப்பார்கள், ஆனால் தங்களுக்கு தாங்களே ஜெபித்துக்கொள்ள தெரியாது. ஊழியர்களைஅழைப்பார்கள். இதில் சிலர் அவர்களை தவறாக வழி நடத்தி விடுகிறார்கள். உங்கள் வீட்டில் செய்வினை, தகடு இருக்கிறது என்று சொல்லி அதற்கு இவ்வளவு பணம் செலவாகும் என்றும், அமாவாசை ஜெபம் பண்ண வேண்டும் என்று சொல்லி அவர்களுடைய விசுவாசத்தை தளர்ந்து போக செய்கிறார்கள். பெலிஸ்தர் இஸ்ரவேலர் கூர்மையாகாதபடிக்கு பார்த்துக் கொண்டார்கள். இதே போல தான் இன்றைக்கு சாத்தான் நீங்கள் ஜெபிக்க கூடாதபடிக்கு உங்களுடைய ஜெபத்திற்கு விரோதமாக செயல்படுவான், ஜெப நேரத்தை திருடுவான், ஜெபிக்க விடாதபடிக்கு அங்க செல்லுங்கள், இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்லி ஜெப நேரத்தை திருடு விடுவான்.ஆண்டவர் கிருபையாய் கொடுத்த இந்த ஜீவனை, நேரத்தை, காலத்தை நீங்கள் அவருக்காக பயன்படுத்தாமல் வீணாக்குகிறீர்கள். தேவனை துக்கப்பட செய்கிறீர்கள். தேவசித்தம் இல்லாமல் பல காரியங்களை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளுகிறீர்கள், வேதனைகளும், போராட்டங்களும் உங்கள் வாழ்க்கையை மழுங்கிப் போகச் செய்கிறது. பிரச்சனை போராட்டம் என்று எத்தனை நாட்களுக்கு நöங்கள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள், எங்கே போனது உங்களுடைய இரட்சிப்பு, அபிஷேகம், வல்லமை.
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. இஸ்ரவேலருக்கு தங்கள் ஆயுதங்களை கூர்மையாக்கி கொள்வதற்கு அரங்கள் மாத்திரமே இருந்தது ஆனால் இன்று அந்த அரங்களை வைத்துக்கொண்டு உங்களை கூர்மையாக்க முடியாது. அக்கினியில் போடப்பட்டால் தான் கூர்மையாக்கப்படுவீர்கள். ரம்பத்தை கூர்மையாக்கத்தான் அரம் தேவை. ஆனால் ஆண்டவர் உங்களையந்தரமாக மாற்ற விரும்புகிறார்,யந்தரமாக மாற்றுவதற்கு அரம் பத்தாது, அதற்கு வல்லமையான ஜெபஆவி வேண்டும். தேவ ஆவியானவர் உங்களுக்கு வேண்டும். நம்முடைய ஆயுதங்களை நாம் கூர்மையாக்க வேண்டும். நாம் பரலோகத்திற்கு போக வேண்டும் என்றால் கூர்மையாக்கப்பட வேண்டும். அன்றைக்கு தீர்க்கதரிசிகள் தங்கள் நாவை கர்த்தருடைய ஆயுதமாக வைத்திருந்தார்கள். கர்த்தருடைய வாயó இதை சொல்லிற்று என்று சொல்லுவார்கள். இன்றைக்கு தான் பேனா, பேப்பர் உள்ளது, அன்றைக்கெல்லாம் அப்படி எதுவும் கிடையாது .அதனால்தான் சங்கீதக்காரன் சொல்லுகிறார்என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. சங்கீதம் 45:1நாவு விரைவாய் எழுதுகிற எழுத்தாணி என்று சொல்லப்பட்டுள்ளது.
தேவன் உங்களுடைய நாவை கூர்மையாக்கி ஆவிக்கு ஏற்றபடி ஜெபிக்க வைக்கப் போகிறார். இனி நீங்கள் தமிழில் ஜெபிக்க மாட்டீர்கள், ஆவியில் நிரம்பி அந்நிய பாஷையில் ஜெபிப்பீர்கள். இந்த வல்லமை வேண்டுமென்றால் உங்கள் நாவை தேவனிடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும். நம்முடைய ஆயுதங்கள் சாத்தானின் அரண்களை நிர்மூலமாக்குகிறதாக இருக்க வேண்டும். 2 கொரிந்தியர் 10:4-ல் எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று இல்லாதபடிக்கு மலைகளையும் குன்றுகளையும் நொறுக்குவதற்கு கூர்மையான யந்தரமாய் இருக்கிறதற்கு தேவ பலம் உள்ளதாய் இருக்கிறது. நம்மோடு போராடினவர்களை தேடியும் நாம் காணாதிருப்போம். நமக்காக தேவன் யுத்தம் பண்ணுவார். அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். குடும்பத்தில் தர்க்கங்களையும், வாக்குவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்தி மழுங்க செய்கிற ஆவி செயல்படும். ஜெப நேரத்தை குறைக்க பண்ணுகிற ஆவி, நல்லொழுக்கத்தை கெடுக்கின்ற ஆவிகள் செயல்படும் அவைகளை நீங்கள் எதிர்க்க வேண்டும்.
யுத்த நாள் வந்தபோது, பிரச்சனை, போராட்டம் வந்தபோது டென்ஷன் ஆகிவிடுகிறோம். என்ன செய்வது, ஏது செய்வதென்று நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் தரித்த பலவான் எவனும் தன் அரண்மனையை பாதுகாப்பான். ஆயுதம் இல்லாமல், விசுவாசம் இல்லாமல், தேவனுடைய வார்த்தை இல்லாமல், உபவாசம் இல்லாமல், எங்கள் வாழ்க்கை நன்றாக ஓடுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த பூமியில் நீங்கள் நன்றாக இருக்கலாம், சம்பாதிக்கலாம், போராட்டம், சிக்கல் வரும்போது, மனிதர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பும்போது ஆயுதம் இல்லாதவர்களாய் நிற்பீர்களானால் தோற்றுப் போய் விடுவீர்கள். இன்றைக்கு நீங்கள் எத்தனை பிரசங்கம் கேட்கிறீர்கள், எத்தனை ஊழியக்காரர்களுடைய ஆலோசனைகளை கேட்கிறீர்கள். அத்தனையும் கேட்டு இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டு செல்கிறீர்கள். ஆண்டவர் நீங்கள் இப்படி இருப்பதை விரும்பவில்லை உங்களை புதிதும் கூர்மையான யந்தரமாக மாற்ற விரும்புகிறார்.
4. ஆவியானவராகிய பட்டயம்
நம்முடைய ஆயுதத்தை கூர்மையாக்க நாம் அதிகாலையில் எழுந்து தேவ சமூகத்தில போய்பாட்டு பாடி, ஆராதித்து, அந்நிய பாஷையில் ஜெபிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய ஆயுதம் பனை மரத்தில் உள்ள கருக்குகள் எப்படி இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்குமோ அதே போல நம்முடைய ஆயுதமும் இருபுறமும் கூர்மையுள்ளதாய் இருக்கும், சாத்தான் உள்ளே நுழையாதபடி அவன் வந்தால் அவன் தலை வெட்டப்படும். அவனுடைய தலையை வெட்டாவிட்டால் அவன் நம்மை மழுங்கி போகப்பண்ணி விடுவான். குழந்தை பாக்கியம் இல்லையா? அதற்கு ஒரு முடிவு இன்றைக்கு உண்டாக வேண்டும், திருமண காரியத்தில் உண்டான தடைகள் நீங்க வேண்டும், பழைய ஜெப வாழ்க்கை, பழைய வேதவாசிப்பு எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டாகி, முடங்கிப் போன உங்களுடைய தொழிலை கர்த்தர் கூர்மையாக்க போகிறார். உங்களை வன்கண்களோடு, பொறாமை எரிச்சலின் கண்களோடு பார்த்து, உங்களை முடக்க நினைக்கிறவனை தேவன்முடக்கி போடுவார். இஸ்ரவேலே உன்னை சிறையாக்கினவனை சிறையாக்கு. தெபோராளே எழும்பு ,பாட்டு பாடு கர்த்தரை துதி என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் கர்த்தரை பாடி துதித்து அவருடைய நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்தும் போது சாத்தானை ஜெயிப்பீர்கள். வேலைப்பளுவை அதிகமாக்கி உங்களை மழுங்கி போக பண்ணச் செய்கிறான். எபிரேயர்கள் சும்மா இருப்பதினால் தான்மலைகளின் போய் எங்கள் ஆண்டவருக்கு நாங்கள் பலியிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. 1 சாமுவேல் 13:22 சவுலுக்கும், யோனத்தானுக்கும் தவிர அவர்களோடு இருந்த யாருக்கும் எந்த ஒரு ஆயுதமும் இல்லாதிருந்தார்கள். உங்களுடைய ஆயுதங்களை தொலைத்து விட்டு, திடீரென்று பிரச்சனைகள், போராட்டங்கள் யுத்தங்கள் வரும்போது ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டு கொண்டிருந்தால், எப்படி தேவன் உங்களை இரட்சிப்பார். யுத்த நாள் வருவதற்கு முந்தியே நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். யுத்தம் பண்ண உங்களுக்கு ஆயுதம் வேண்டும்,பெலன் வேண்டும், சர்வாயுதவர்க்கம் வேண்டும். கர்த்தருடைய வேதமாகிய பட்டயம் வேண்டும். வேதத்தை நாம் சுமந்தால் வேதம் நம்மை சுமக்கும் இந்த வேதத்தை சுமப்பதற்கு வெட்கப்படக் கூடாது. அரபு நாடுகளில் மக்கள் ஆராதனைக்கு செல்லும்போது வெண்ணுடை அணிந்து, வேதத்தை சுமந்து கூட்டம் கூட்டமாக செல்லுவார்கள். அதனால் தான் அந்த தேசங்கள்ஆசீர்வதிக்கப்படுகிறது.
1 சாமு 13:22 ஆவது வசனத்தின்படி அவர்கள் கைகளில் பட்டயம் இல்லாதிருந்தது. இன்றைக்கு உங்களிடத்தில் அபிஷேகம் இல்லை, பாட்டு பாடுவதற்கு பெலன் இல்லை, சத்துவம் இல்லாமல் இருக்கிறீர்கள். குடும்பத்தை பிரிக்கின்ற, தொழிலை நஷ்டமாக்குகின்ற ஆவிகளை எல்லாம் விரட்ட வேண்டும். குடிகார ஆவிகள், சண்டை போடுகிற ஆவிகள் எல்லாம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அதற்கு நீங்கள் உபவாசித்து ஜெபிக்க வேண்டும். 1 சாமுவேல்3:1-ல் சவுல் குடும்பத்துக்கும், தாவீது குடும்பத்துக்கும் முடிவே இல்லாத ஒரு யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் தாவீது வர வர விருத்தியடைந்தார். சவுலின் குடும்பத்தாரோ பலவீனப்பட்டு போய்விட்டார்கள்.இன்றைக்கு உங்கள் வாழ்க்கை வர வர விருத்தி அடைகிறதாக இருக்க வேண்டும். அதற்காக தான் ஆண்டவர் உங்களை ஆயுதம் தரித்தவர்களாய் மாற்றப் போகிறார். ஆபிரகாமிடத்தில் 318 கை படிந்த வேலையாட்கள் இருந்தார்கள். உட்கார்ந்த இடத்திலேயே அவர் சாதித்தவர். நூறு வயதில் குழந்தையை பெற்றார். உட்கார்ந்த இடத்திலேயே மகனுக்கு பெண் பார்க்க ஆளை அனுப்பி திருமண காரியத்தை நடத்தினார். லோத்துவை மற்ற தேசத்து ராஜாக்கள் வந்து சிறைப்பிடித்துச் சென்றபோது ஆபிரகாம் அவர்களை பின்தொடர்ந்து போய் அவர்களை லோத்தை மீட்டுக்கொண்டுவந்தார். நூறு ஆடுகள் வந்தவுடன் லோதó பெருமைப்பட்டுக்கொண்டு ஆபிரகாமை விட்டு பிரிந்துபோனார்.
இன்றைக்கு நம் வாழ்க்கையிலும் காசு பணம்நமக்கு அதிகமானவுடனே தேவனை மறந்து ஜெபத்தை விட்டு விடுகிறோம். உபவாசித்து ஜெபிப்பதை நிறுத்தி விடுகிறோம் இவ்வளவு நேரம் என்னால் ஜெபிக்க முடியாது இவ்வளவு நேரம் அங்கு வந்து உட்கார முடியாது என்று சாக்குபோக்கு சொல்ல ஆரம்பிக்கிறோம். தினமும் தவறாமல் வேதத்தை வாசிப்போம் என்றால் நம் கண் பார்வையில் உள்ள பிரச்சனைகள் மாறி தெளிவான பார்வை கிடைக்கும். கர்த்தருடைய வேதம் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆபிரகாம் தன் வீட்டில் உள்ள அனைவருக்கும் பயிற்சி கொடுத்து வைத்திருந்தான். அதே மாதிரி யோசபாத் தன்னுடைய வேலை ஆட்கள் எல்லாரையும் உபவாசித்து ஜெபிக்க வைத்தார். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது என்று சொல்ல வைத்தான். யுத்தத்திற்கு போகும் முன்பு பாடகர் குழுவை அனுப்பினான் அவர்கள் கர்த்தரை உயர்த்தி மகிமைப்படுத்தி பாடின போதுஇவர்களுக்கு ஜெயம் கிடைத்தது. கர்த்தரை நாம் உயர்த்தி, மகிமைப்படுத்தி, துதிக்கும்போது நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும். நம்மை ஒடுக்க, அழிக்க நினைக்கிறவன் அடங்கிப் போவான். தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை அவர்கள் அறியும்படி தேவன் செய்வார். தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,ஆதியாகமம் 14:14ஆபிரகாம் அவர்களை பின்தொடர்ந்து போய் ஐந்து ராஜாக்களையும் முறியடித்து ஜெயித்து திரும்பி வந்தார். ஆபிரகாமோடு இருந்து அவருக்கு ஜெயத்தை தந்த அந்த தேவன் இன்றைக்கு உங்களையும் அப்படிப்பட்ட பலமுள்ள ஆயுதமாக பயன்படுத்த போகிறார். மழுங்கிப் போன உங்களுடைய இருதயத்தை இன்றைக்கு அனல் மூட்ட விரும்புகிறார். இழந்து போன ஜெப வாழ்க்கையை மீண்டும் புதுப்பித்து தேவன் தருகிறார்,உங்கள் குடும்பத்தை மேற்கொண்டு இருக்கிற அத்தனை வல்லமைகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அளவுக்கு கர்த்தர் வல்லமையையும் பெலனையும் சத்துவத்தையும் தருகின்றார்.
ஏசாயா 41:15-ல் நான் உன்னை புதிதும் என்று சொல்லப்பட்ட வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கையிலுள்ள பழைய ஜெப ஜீவியம், பழைய செயல்பாடுகள், பழைய யோசனைகள், பழைய நினைவுகள் எல்லாவற்றையும் தேவன் மாற்றப் போகிறார். உன் அறிவுக்கு எட்டின உன்னுடைய நிலை எல்லாவற்றையும் தேவன் மாற்றப் போகிறார். உனக்குத் தெரிந்த உன் மாம்சத்தின் எண்ணங்கள் எல்லாவற்றையும் மாற்றி, நீ அறியாத உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அவர் செய்யப் போகிறார். நீங்கள் அறியாத ஒரு பெரிய திட்டத்துக்குள் தேவன் உங்களை நடத்திக் கொண்டு போகப் போகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் பட்டயங்களை கூர்மையாக்கி, சாத்தனை ஜெயித்து, ஜெயம் பெற்றவர்களாய் வாழ கிருபை செய்வாராக.