Inspiration

உங்களுக்கான அடையாளம்----அவன்(ள்) இப்பொழது ஜெபம் பண்ணுகிறான்(ள்)

கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, கிறிஸ்தவர்களின் மத்தியில் அதிகப் பிரபல்யமான ஒரு வார்த்தை என்னவென்றால் அது ஜெபம் தான் என்று உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இன்று ஜெபம் செய்தீர்களா? என்ற ஸ்டிக்கர் உங்கள் கண்களில் அடிக்கடி பளிச்சிட்டிருக்கும். ஜெபமே என் வாழ்வின் செயலாக மாற, ஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே என்ற பாடலை உங்களில் சிலர் உள்ளமுருக பாடியிருப்பீர்கள் அல்லது பாடக் கேட்டிருப்பீர்கள். தம்பி ஜெபம் பண்ணு, ஜெபம் பண்ண வா எனறு உங்க போதகரோ, ஆலோசனை சொன்ன அக்காவோ, அண்ணனோ, உங்கள் பெற்றோரோ சொன்னதைக் கேட்டு ஜெபிக்கத் துவங்கி அல்லது ஜெபித்துக் கொண்டிருக்கீர்களா? அல்லது இவங்களுக்கு வேற வேலையில்லை என்று சொல்லி ஜெபத்தை அசட்டை செய்கிறீர்களா? அல்லது அவங்க சொல்றாங்க அதனால செய்வோம் என்று ஏனோ தானோ வென்று பிரையர் பண்றீங்களா? இன்றைக்கும் நாம பைபிள இருந்து ஒரு வாலிபரைப் பற்றியும், அவர் வாழ்க்கையில் எப்படி ஜெபம் பண்ணுகிறவராக மாறினார் என்றும் அறிந்து கொள்ளப் போகிறோம். சவுலாயிருந்த போது, சவுல் என்ற யூத மதத்தைச் சேர்ந்த வாலிபன், கனம் பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்பவரிடத்தில் முன்னோர்களுடைய நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொண்டு, தேவனைக் குறித்து மிகவும் பக்தி வைராக்கியமாய் இருந்தவன் என்று அப் 5:34-லும் அப் 22:34–லும் சொல்லப்பட்டுள்ளது. யூத மார்க்கத்திற்கு மாறான ஒரு புதிய உபதேசத்தை செய்தவரான இயேசுவுக்கும், அவரை பின்பற்றுகிற மக்களுக்கும் விரோதமாய், மூர்க்கவெறி கொண்டு அவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பதும், துன்பப்படுத்துவதும், அவர்களை கொலை செய்யுமளவுக்கு அதில் தீவிரவாதியாய் இருந்தவன் சவுல். ஒருமுறை தர்சுவிலிருந்து தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு சென்று, அந்தப் பகுதியில் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைப் பிடித்து எருசலேமுக்கு கொண்டு போக வேண்டும்ó என்று அங்கு பிரயாணம் போய்க் கொண்டிருந்த போது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் கீழே விழுந்தான். சவுலே, சவுலே நீ எனóனை ஏன் துன்பப்படுத்துகிறாய்? என்ற ஒரு சத்தத்தைக் கேட்டு ஆண்டவரே நீர் யார்? என்றான். அதற்குக் கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குத் தான் கஷ்டம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து, ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப் 9:1-18) சவுலோடு கூட நின்றவர்கள் யாரோ, இவரோடு பேசுகிறார்கள். யாரையும் காணோமே என்று ஆச்சரியப்பட்டு தமஸ்குவுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். மூன்று நாளாய் சவுலுக்குப் பார்வை தெரியவில்லை. அனனியா என்ற ஊழியர் உனக்காய் ஜெபிப்பார், அப்பொழுது உன் கண்கள் திறக்கப்படும் என்று. சவுலோடு பேசின ஆண்டவர் தமஸ்குவிலுள்ள அனனியா என்ற சீஷரிடத்திலும் பேசினார். நீ எழுந்து நேர்த் தெருவிலுள்ள யூதா என்பவரின் வீட்டிற்குப் போய் சவுல் என்பவரைப் பார். அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான் என்றார். சரணடைந்த போது சவுலுக்கு தேவனைக் குறித்த பக்தி வைராக்கியம் இருந்தது, ஆனால் தேவனுக்கும், சவுலுக்கும் எந்தவித உறவும், நெருக்கமும், தொடர்பும் இல்லை. ஜெப ஆலயங்களுக்கு அடிக்கடிப் போய் வந்ததும், ஜெபம் பண்ணியும் பழக்கமில்லை. வேதத்தையே கற்றுத் தேர்ந்தவன் தான், மாற்றம் ஒன்றுமில்லை தனக்கும் தன் மதத்திற்கும் ஒத்துவராத எவரையும், மனதளவிலும் சரீரத்திலும் துன்பப்படுத்தி சந்தோஷப்பட்ட சவுல் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான். எப்படி இந்த மாற்றம் வந்தது?. சவுல் நினைத்தான் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களைத் தான் துன்பப்படுத்துகிறோம் அதனால் தேவனுடைய பிரியத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்று நினைத்தான், ஆனால் ஆண்டவர் சவுலைப் பார்த்து நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றார். ஆண்டவரே நேரடியாக தரிசனமாகி, அவனோடு பேசின போது, ஆண்டவரை ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாது, எந்த அதிகாரமும், அறிவும், அந்தஸ்தும், பட்டமும், பதவியும் ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டு சவுல் ஆண்டவரே, நான் என்ன செய்யனும்-னு உங்க விருப்பமோ, சித்தமோ அதை செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன் என்று உடனடியாக ஆண்டவரிடம் சரணடைந்தார். போ­ஸ் திருடனைப் பிடிக்கும் போது பிடிபட்டவன் இரண்டு கைகளை மேலே தூக்குவது போல சரண்டர் ஆனா சவுலால் இனி இயேசுவை வேதனைப்படுத்த முடியாது. அவருக்குப் பிரியமானவைகளைச் செய்ய அவன் மனம் நாடினது. ஐயோ, இதுவரை நான் செஞ்சதெல்லாம் தவறு, இனி என்ன செய்யனும் என்று நினைத்த போது ஜெபம் பண்ணனும் என்கிற உணர்வு வந்தவுடன் அவன் உடனே ஜெபம் பண்ணுகிறான். இயேசுவுக்கு எதிராயிருந்தவன், அவர் தன்னைச் சந்தித்தவுடன் என்னை மன்னிச்சிருங்கப்பா, இனி நான் உங்க அடிமை, உங்க பிள்ளை, நீரே என் ஆண்டவர், நீரே என் இரட்சகர் என்று அறிக்கையிட்டு தான் மனந்திரும்பினதை, இரட்சிக்கப்பட்டதை வெளிப்படுத்தி அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான் என்று ஆண்டவரே அனனியாவிடம் சொல்லுகிறார். இதை வாசிக்கும் அருமையான தம்பி, தங்கையே, நீங்க எந்த தெருவில், எந்த வீட்டில் இருக்கிறீங்க, என்ன செய்றீங்க என்று உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்த ஆண்டவர் இயேசுவை ஏன் இன்னும் எதிர்க்கிறீர்கள். அவராலேயன்றி வேறே எவராலும், வேறே எதினாலும் இரட்சிப்பு இல்லை. அப் 4:12. நடிகர்களோ, அரசியல் வாதிகளோ, ஸ்போர்ட்ஸ் மேனோ இல்லை. உங்களை ஆண்டவர் பார்க்கும் போது உங்க கையில் செல்போனும், தேவையற்ற காரியங்களும், பேச்சுக்களும், தகாத நட்புகளும்—-இருந்தால், எப்பவும் நண்பர்கள், ரவுண்ட்ஸ் என்றிருந்தால் ஆண்டவர் என்ன சாட்சி சொல்லுவார். ஒரு காலத்தில் எதிரியாயிருந்த சவுல் தான், ஆனா இப்ப இயேசு சந்தித்தவுடன் மாற்றத்திற்கான அடையாளம் தெரிஞ்சிருச்சு. தம்பி, தங்கை இனியும் தாமதிக்காதே, சாக்குப்போக்கு சொல்லாதே, உன் பாவங்களை அறிக்கையிடு, இயேசுவை உன் ஆண்டவராய் ஏற்றக்கொள். உனக்கான அடையாளமான ஜெபத்தை இப்பொழுதே துவங்கு. இதோ இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள். 2 கொரி 6:2. நிச்சயமாய் உங்களோடு இருப்பவர்கள் உங்களைக் குறித்து சாட்சி சொல்லுவார்கள் அவன்(ள்) இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்(ள்) என்று. எப்போதும் சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ண வேண்டும். (லூக்கா 18:1. 1 தெச 5:17) ஜெபம் பண்ணின பவுலை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தினது போல உங்களையும் கர்த்தர் வல்லமையான சாட்சியாய் பயன்படுத்துவாராக.

Youth Special - Sis. Prema David