Inspiration
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!
இதுவரை இல்லாத அளவு விஞ்ஞான வளர்ச்சி, நாகரீக மாற்றங்கள், ஊடகங்கள் வழியாக சினிமா, சின்னத்திரை, சிற்றின்பங்கள் யூ-டியூபில் விதவிதமான சமையல், அழகுக்குறிப்புகள், விதவிதமான வைத்திய முறைகள், வீட்டுத்தோட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய அளவுக்கு பொழுது போக்குகள். இவைகள் நடுவே நம் ஆண்டவர் இயேசுவின் மெல்லிய சத்தம் கேட்க அநேகருக்கு நேரமில்லை, விருப்பமில்லை, முடியவில்லை. சவால்கள் நிறைந்த உலகத்தில் பிள்ளைகள் வளர்ப்பு மிக கடினமானதாய் இருக்கும். இந்த நாட்களில் ஆண்டவர் நம்மைப் பார்த்து பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள், என் வாயின் வார்த்தைகளை கவனியுங்கள்.
(நீதி 7:24) என்கிறார். இதே நீதி. 5:7-ல் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள், என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள். நீதி 8:32-ல் பிள்ளைகளே, எனக்கு செவிகொடுங்கள், என் வழிகளை காத்து நடக் கிறவர்கள் பாக்கியவான்கள் என்று வாசிக்கிறோம் கவனியுங்கள் வசனங்களை விட்டு, வழிகளை விட்டு, நீங்காமல் காத்து நடவுங்கள் என்பதாக ஆண்டவர் நமக்கு சொல்கிறார். இதையே ஏசாயா 28:23-ல் செவிகொடுத்து என் சத்தத்தை கேளுங்கள். நான் சொல்வதைக் கவனித்து கேளுங்கள் என்று ஆண்டவர் சொல்கிறார். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும் ஆசிரியரின் வார்த்தைகளைக் கவனியாமல் பிள்ளைகள் அங்கும் இங்கும் அலசடித்தால் மேஜையின் மீது ஒரு தட்டு தட்டி கவனி என்பார்கள். அதுபோல ஆண்டவர் என் சத்தத்தை, நான் சொல்வதை கவனித்து கேளுங்கள் என்கிறார். கவனித்து கேட்காத எதையும் சரியாக, நிறைவாக நம்மால் செய்யமுடியாது.
ஏசாயா 51:4-ல் என் ஜனங்களே எனக்கு செவிகொடுங்கள். என் ஜாதியாரே என் வாக்கை கவனியுங்கள். வேதம் என்னிலிருந்து வெளிப்படும். என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன் என்கிறார்.
ஏசாயா 55:2-ல் நீங்கள் உங்கள் பணத்தையும், பிரயாசத்தையும் திருப்தி செய்யாத ஒன்றுக்காக செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு கவனமாய் செவிகொடுத்து நலமானதை சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும் என்று சொல்கிறார். நீங்கள் எனக்கு கவனமாய் செவி கொடுத்தால் வேதம் என்னிலிருந்து வெளிச்சமாக உங்களுக்கு வெளிப்படும். இந்த நலமான வார்த்தையை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியடையும். புஷ்டியாகும் என்கிறார். நாம் உயிர் வாழ்வதற்கு அன்றாடம் உழைக்கிறோம். நமக்கு ஏற்ற ஒரு வருமானத்தில் உணவு வகைகள் சாப்பிட்டு, பெலனடைந்து சரீரப்பிரகாரமாக வாழ்கிறோம். ஆனால் தேவனுடைய வாரத்தையால் நம் ஆத்துமா பிழைக்கிறது. அதனால்தான் ஆண்டவர் மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றார்
மத்தேயு 4:4. நம்முடைய ஆத்துமாவில் பெலன் இல்லாவிட்டால் நம் மனம் சோர்ந்துவிட்டால், எவ்வளவு விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டாலும், மருந்துகளை எடுத்து கொண்டாலும் பிரயோஜனமில்லை. நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்தித்து வரும் ஒவ்வொரு போராட்டத்திலும், பிரச்சனைகளிலும், நம் மனம் தான் முதலில் சோர்ந்து விடுகிறது. அந்த சோர்வினால் சரீரம் பாதிக்கப்படுகிறது. சரீரம் பாதிக்கப்பட்டால் வெளிப்பிரகாரம் மருந்துகளை உபயோகித்து ஓரளவு திடனடைந்து விடலாம். ஆனால் இந்தமனச்சோர்வுக்கு மருந்தே இல்லை. ஆத்துமா பெலவீனத்திலிருந்து வெளி வர ஒன்றே ஒன்று. அது கர்த்தருடைய வேதம். அவர் வாயின் வார்த்தைகளை நாம் உட்கொண்டால், நம்பினால் அதுதான் பெலன். ஆறுதல், மனமகிழ்ச்சி. ஆண்டவர் இயேசு தம் சீஷரில் சிலரை அழைத்துக் கொண்டு மறுரூபமலையில் ஏறி அவர்களுக்கு முன்பாக மறுரூபமானபோது அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது.
மத்தேயு 17:5-ல் ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்கு செவிகொடுங்கள் என்ற சத்தம் அந்த மேகத்திலிருந்து உண்டானது. நாம் யாருக்கு செவிகொடுக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு, அவரது வார்த்தைக்கு செவிகொடுக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. எரேமியா 7:23-ல் என் வாக்குக்குச் செவிகொடுங்கள். உங்களுக்கு நன்மையுண்டாக அதிலே நடவுங்கள் என்று ஆண்டவர் சொல்கிறார்.
8 ஆம் வசனத்தில் நீ துரோகம் பண்ணுவாய் என்பதையும், நீ மீறுகிறவனென்றும் அறிந்திருக்கிறேன். ஆண்டவருக்கு செவிகொடுக்கிற நம் வாழ்வில் உண்மை இருக்கிறதா? நீதி இருக்கிறதா? உண்மை என்றால் ஏதோ ஒரு விஷயத்தில் பொய் பேசாமல் வாழ்கிறதல்ல; நம் வாழ்க்கை முழுவதிலும் நாம் நடந்து கொள்கிற விதத்தைத்தான் ஆண்டவர் சொல்கிறார். நீ இஸ்ரவேல்தான்! யாக்கோபின் வம்சம்தான் கர்த்தரின் நாமத்தில் ஆணையிட்டு, இஸ்ரவேலில் தேவனை அறிக்கையிடுகிறாய். யூதாவின் ஊற்றில் சுரந்த உன் வாழ்வில் எத்தனை மீறுதல்கள்! எத்தனை துரோகங்கள் உண்மையும், நீதியும் இல்லாமல் கர்த்தருக்கு மகிமையை செலுத்தாமல், வேறு ஒன்றுக்கும், இல்லாவிட்டால் மகிமையை தனக்கும் எடுத்துக்கொண்டு வாழ்கிற இந்த வாழ்க்கையை விட்டு உன்னை சீர்ப்படுத்த வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார். 9-ஆம் வசனத்தில் இப்படி வாழ்கிற நம்மைப் பார்த்து என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்தி வைத்தேன். உன்னை சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன் என்கிறார். அதனால் தான் நெகேமியா 9:16,17-ல் எங்கள் பிதாக்கள் அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனார்கள். செவிகொடுக்க மனமில்லாமல் நீர் செய்த அற்புதங்களை நினையாமல், தங்கள் அடிமைத்தனத்திற்கு திரும்ப தங்கள். கழுத்தைக் கடினப்படுத்தி தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டாலும், வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களை கைவிடவில்லை. என்கிறார்.
எபிரேயர் 12:25-ல் பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோம் என்று விலகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் பூமியிலே பேசினவருக்கு செவி கொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள், தப்பிப் போகாமலிருக்க பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப்போவோம் என்று வாசிக்கிறோம். பூமியில் ஒரு அதிகாரத்திற்கு செவிகொடாமல், அவர்கள் சொல்கிறதை செய்யாமல் இருந்தால் நம்மை சும்மா விடுவார்களா? நாம் அதற்கு பயப்படுகிறோமே! கணவர் வந்தால் அவர் சொன்னபடி செய்யவில்லை என்று கடிந்து கொள்வாரே! அப்பா வந்தால் திட்டுவார் என்று நடக்கிறோமே! அப்படியானால பரலோகத்திலிருந்து பேசுகிறவருக்கு நாம் எவ்வளவு பயந்து அவர் வார்த்தைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் பல சமயத்தில் அனுதினமும் நாம் தவறுகிறோம். ஆனால் வெகுவாய் மன்னிக்கிறவர், இரங்குகிறவர் நம்மை கைவிடாமல் நடத்துகிறார். அவர் நாமத்தினிமித்தம் கோபத்தை நிறுத்தி வைத்து, அவர் புகழ்ச்சியினிமித்தம் நம்மேல் பொறுமையாய் இருக்கிறார்.
எசே 36:23-ல் அவருடைய மகத்தான பரிசுத்த நாமத்தை நாம் தீமையான நடக்கைகளால் பரிசுத்த குலைச்சலாக்கின போது அவர் என் நாமத்தை பரிசுத்தம் பண்ணுவேன் என்கிறார். அதனால்தான்
மத் 6:9-ல் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று ஜெபிக்க சொல்லிக் கொடுத்தார். இன்றே இரட்சண்ய நாள், இதுவே அநுக்கிரக காலம். எனவே கிறிஸ்துவின் அன்பண்டை ஓடி வந்துவிடுவோம்.நாம் பேசும்போது சிலர் நின்று கவனித்து கேட்பார்கள், சிலர் சில வேளையை செய்து கொண்டு சொல்லுங்க கேட்கிறது என்று சொல்வார்கள். சிலர் பிரயாணம் பண்ணிக் கொண்டே சில பாடல்கள், செய்திகளை கேட்பார்கள். வேதத்தில் விதைக்கிறவன் ஒருவன் விதைக்கச் செல்லும் போது சில விதைகள் வழியருக்கே, பாறை நிலத்தில், முட்செடியில், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என்று பல விதங்களை விளக்கிக் கூறி விட்டு, ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் என்று
லூக் 8:18-ல் ஆண்டவர் சொல்கிறார்.என்வார்த்தைகள் உங்கள் இருதயத்தில் விழுந்த உடனே பிசாசானவன் அதை மறக்கப் பண்ணி பறித்துக் கொண்டு போகிறானா? சற்று முளைத்து வருகிறதை பாடுகளாலும் பிரச்சனைகளாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தாலும், சிற்றின்பங்கள் இச்சைகள்,உலக கவர்ச்சிகள் இவைகளால் நெருக்கிவிட்டதா? இல்லை முப்பதும், அறுபதும் நூறுமாக பலன் கொடுக்கிறதாய் இருக்கிறதா? நீங்கள் எந்த விதத்தில் கேட்கிறீர்கள்? என்பதைக் கவனியுங்கள் என்கிறார். ஆண்டவர் சீஷர்களிடத்தில் லூக் 9:44-ல் நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய் கேளுங்கள். மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்று கவனமாய் கேளுங்கள் என்று சொல்லித்தான் சொல்கிறார். ஆனால் அவர்களோ 45 வசனம் சொல்கிறது. அவர்கள் அந்த வார்தையின் கருத்தை அறியவில்லை.அது அவர்களுக்கு தோன்றாமல் மறைபொருளாயிருந்தது. அந்த வார்த்தையைக் குறித்து அவரை விசாரிக்கப் பயந்தார்கள். அதை அறிந்து கொள்ள விரும்பாமல், ஆண்டவரிடமும் கேட்காமல் ஏனோ தானோவென்று இருந்து தங்களுக்குள் யார் பெரியவன்? என்று சர்ச்சை பண்ணிக் கொண்டிருந்தார்கள். சில வேளைகளில் சில வசனங்களின் அர்த்தம் நமக்கு விளங்குவதில்லை, மறைப்பொருளாய்தான் இருக்கிறது. ஆனால் ஆண்டவர் கவனமாய் கேளுங்கள் என்று சொல்லும்போது சோம்பல்படாமல், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் இந்த வசனம் எனக்கு என்ன சொல்கிறது? ஆலோசனையா? வழி நடத்துதலா? பாவத்தைக் குறித்து எச்சரிப்பா? ஆறுதலான வாக்குத்தத்தமா? வரபோகிற காரியமா? என்பதைக் கவனித்தால் அதன் மூலம் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.
எபிரேயர் 4:2-ல் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப்படவில்லை. மிக முக்கியமான ஒன்று விசுவாசம். வசனத்தை நாம் விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டால் அதை கேட்டால் அந்த வசனம் அப்படியே பலிக்கிறது. எனவே நாம் எப்படி இந்த வார்த்தைக்கு செவிகொடுத்து கேட்கிறோம் என்பதை கவனித்து நம்மை சரி செய்து கொள்வோம். ஆண்டவருக்கு செவிகொடுக்கிறவர்கள் வாழ்வில் என்ன நன்மை உண்டாகும் நீதி 1:33-ல் எனக்கு செவி கொடுக்கிறவன் எவனோ அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நாம் ஆண்டவருக்கு செவிகொடுத்தால் ஆபத்துக்கு பயப்படாமல் அமைதியாயிருப்போம். நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருந்தாலும், ஒரு தீமையும் நம்மை அணுகாமல் அமைதியாய் இருப்போம். புயல், காற்று, கடல் கொந்தளிப்பு இவைகளின் நடுவில் சீஷர்கள் சென்ற அதே கடலில், அதே படகில் இயேசு இருந்தார். ஆனால் பிதாவுக்கு செவிகொடுத்து, தாமாக எதையும் செய்யாமல், அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதையே இயேசு செய்ததாலேயே கொந்தளிப்புகள் நடுவே படகில் அமைதியாய் நித்திரை செய்தார். அதேபோல எல்லா சூழ்நிலையிலும் இயேசுவுக்கு செவிகொடுக்க நம்மை அர்ப்பணிப்போம். அப்போது அமைதி நம் வாழ்வில் உண்டாகும். ஏசா.48:17,18,19-ல்.. தேவனாகிய கர்த்தர். ஆ என் கற்பனைகளை கவனித்தாயானால் நலமாயிருக்கும் அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும். நம்மை போதித்து நடத்துகிற கர்த்தரின் கற்பனைகளை கவனித்து நடந்தால் நம் சமாதானம் நதியைப்போல இருக்கும். நம் சந்ததி மணலத்தனையாய், அணுக்களத்தனையாய் பெருகவும், பலுகவும் செய்வார். சங் 81:13,14-ல் ஆ என் ஜனம் எனக்கு செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும். நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாய் திருப்புவேன். நாம் ஆண்டவருக்கு செவிகொடுத்து, அவர் வழிகளில் நடக்கும் போது நமக்கு எதிராய் வருபவர்களை ஆண்டவர் சீக்கிரத்தில் தாழ்த்திப் போடுவார். அவர் கையை சத்துருக்கு விரோதமாய் திருப்புவார். பார்வோனும், அவன் சேனையும் திரும்ப இஸ்ரவேல் வாழ்வில் வரவே முடியாத அழிவு வந்தது போல சத்துருக்கள் இச்சகம் பேசி அடங்கி போவார்கள்.
உபா 28:9,10-ல் நீஉன்தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னை தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்கு தரிப்பிக்கப்படும் என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்கு பயப்படுவார்கள். நாம் அவருக்கு செவிகொடுத்து அவர் வழிகளில் நடக்கும்போது பெரிய பாக்கியம். நம்மை அவருக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். அவருடைய நாமம் நமக்கு தரிக்கப்படும் அதைக் கண்டு பூமியின் ஜனங்கள் பயப்படுவார்கள். நீ என் பிள்ளைதான் என்று தமது நாமத்தை நமக்கு தரிப்பிப்பது, நம்மை நிலைப்படுத்துவது எவ்வளவு மேலானது. 14 ஆம் வசனத்தில் நீ எனக்கு செவிகொடுத்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார். நீ கீழாகாமல் மேலாவாய் என்கிறார். ஏசா 1:19-ல் நீங்கள் மனம் பொருந்தி செவி கொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் என்கிறார். எத்தனை மேன்மை! நாம் கர்த்தருக்கு செவிகொடுத்து, அவர் வழிகளில் நடந்து, கட்டளைகளைக் கைக்கொள்ளும் போது இத்தனை மேன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அவர் வைத்திருக்கிறார். எனவே தான் பிள்ளைகளே எனக்கு செவிகொடுங்கள் என்கிறார். சவுலுக்கு சொல்லப்பட்டதுபோல பலிகளைக்காட்டிலும் செவிகொடுக்க சேர்வதே கர்த்தருக்கு பிரியம் என்பதை அறிந்து இன்னும் எதில் நாம் தவறி இருக்கிறோமோ உண்மையாய் அவரிடம் வந்து தம்மை தாழ்த்தி இரக்கத்தை பெற்று மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் வாழ்வோம். என் ஆண்டவர் தாமே நாம் சரி செய்து கொள்ள வேண்டிய விஷயத்தில் நமக்கு உதவி செய்து நம்மை நம் ஆத்துமாவை காப்பாற்றுவாராக!.
By Sis. Kala VincentRaj