Inspiration
உங்களை மயக்கினவன் யார்?
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. கலா 3:1.
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடந்த கலாத்தியாசபையிலுள்ள தேவப்பிள்ளைகளைப் பார்த்து பவுல் அப்போஸ்தலன் நீங்கள் சத்தியத்திற்கு கீழ்படியாமற் போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார் என்று கேட்கிறார், இந்த கலாத்தியா சபையார் இயேசுவுக்காக நன்றாக ஓடினவர்கள், செயல்பட்டவர்கள் இவர்களைப் பார்த்து பவுல் புத்தியில்லாத கலாத்தியரே என்கிறார். நாம் வாழ்கின்ற இந்த கிறிஸ்தவ உலகம் ஒரு மயக்கத்தில் இருக்கிறது.
சரீர பிரகாரமான மயக்கம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரம், எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எதிர்மறையான காரியங்கள், போராட்டமான சூழ்நிலைகள் உருவாகும் போது நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கையில் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை மாத்திரம் தான் நாம் நோக்கிப் பார்க்க வேண்டும். நம் ஜீவன் தேவனுடைய கையில் இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு நாளும் உணர வேண்டும். இந்தப் போராட்டமான உலகத்தில் பல காரியங்களில் சிக்கி மடிந்து, நமக்கு அருமையானவர்களை இழந்து தவிக்கின்ற சூழ்நிலையில், உலக ஆடம்பரங்களைப் பார்த்து, வசதி வாய்ப்புகளை பார்த்து, மற்ற மனிதர்களைப் பார்த்து ஜெபிக்காமல், வேதத்தை வாசிக்காமல் சோர்ந்து போய் நிற்கிறீர்களா?. இன்றைக்கு ஒரு விதமான மயக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊழியம் செய்வதில் மயக்கம், ஜெபம் பண்ணுவதில் மயக்கம், மற்றவர்கள் நம்மிடத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்பதில் கூட ஒரு மயக்கம் எனக்கு எல்லாம் தெரியும் போ என்ற நிலை.
ஒருமுறை நான் காரில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி எனó தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்த நிலையில் மயக்கமாகி விட்டேன். கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி அந்நேரத்தில் என்னை காப்பாற்றினார். இது ஒரு மனிதனுக்கு அவனுடைய சரீர பிரகாரமாக ஏற்படுகின்ற மயக்கம். ஒருவருக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றால் அந்த மனிதனுக்கு மயக்க ஊசி செலுத்துகிறார்கள். இந்த மயக்கத்தை போல தான் அன்று தேவன் ஆதியாகமத்தில் ஆதாமுக்கு ஆழ்ந்த மயக்கத்தை, நித்திரையை உண்டு பண்ணி அவன் மயக்கத்தில் இருக்கும்போதே அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்துவிட்டு அந்த இடத்தை சதையினால் அடைத்தார். இதனால் தான் ஆண்களுக்கு பெண்களை விட விலா எலும்பு ஒன்று குறையாக இருக்கும். அந்த விலா எலும்பைக் கொண்டு ஒரு மனுஷியை உருவாக்கினார்.
இந்த சரீர பிரகாரமான மயக்கத்தை குறித்துநான் உங்களிடத்தில் சொல்ல வரவில்லை.இக்காலத்தில் அநேகருக்குள் ஒருவிதமான ஆவிக்குரிய மயக்கம் காணப்படுகிறது. இயேசுவைப் பற்றி ஒரு உணர்வோ, ஜெபத்தை குறித்த ஒரு தாகமும் இல்லாத நிலை காணப்படுகிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு மயக்கத்தில், ஒரு கோமாவில் நம் ஆத்துமா கிடக்கிறது இது நல்லதல்ல. சங்கீதக்காரன் எழுதுகிறான் சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். சங் 143:3. எத்தனையோ மாதங்கள், எத்தனையோ காலங்கள் இயேசுவுக்கும்உங்களுக்கும் தொடர்பு இல்லை என்ற நிலை காணப்படுகிறது. அவருடன் நீங்கள் பேச முடியவில்லை, ஆவியில் வெளிப்பாடு இல்லை, கர்த்தர் உன்னோடு பேசி பல மாதங்கள், வருஷங்கள், காலங்கள் ஆகிவிட்டது. ஆனால் அந்த பழைய அனுபவத்திலேயே இன்றைக்கும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், வெளிப்புறத் தோற்றத்தில் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான் நான் வெகு காலத்துக்கு முன்னே மரித்தவன் போல் இருக்கிறேன், என்னால் ஜெபிக்க முடியவில்லை, என்னால் துதிக்க முடியவில்லை, கட்டப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.
எவ்வளவு கண்ணீரோடு தன்னுடைய சஞ்சலத்தை இந்த சங்கீதக்காரன் தேவசமுகத்தில் ஊற்றுகிறான். ஆண்டவரே என்னால் ஜெபிக்க முடியவிலóலை, துதிக்க முடியவில்லை நான் இப்படி இருக்கிறேனே, வெகு காலத்துக்கு முன்பு மரித்தவன் போல நான் சும்மா இந்த உலகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். ஆதாமின் நிலையும் இதேதான் இந்த கனியை புசிக்கின்ற நாளிலே நீ சாகவே சாவாய் என்று தேவன் சொல்லி இருந்தும் அவர்கள் புசித்தார்கள். இது என்ன மயக்கம் தெரியுமா? ஆவிக்குரிய மயக்கம். அப்படியே கண்கள் திறந்து இருக்கும், ஆனால் புத்தியில் ஒரு மயக்கம் இருக்கும். அதனால்தான் பவுல் எழுதுகிறார் புத்தியில்லாத கலாத்தியரே, சத்தியத்திற்கு கீழ்ப்படியாத படிக்கு, அதன்படி வாழ முடியாதபடிக்கு உங்களை மயக்கினவன் யார் என்கிறார். நாகரீக உலகம், வசதி வாய்ப்புகள் நிறைந்த உலகம், இன்றுஜெபத்தை அருவருப்பாக பார்க்கிறது, அல்லேலுயா என்று சொல்லி, கைதட்டி பாடல் பாடுவது என்றால் அது கஷ்டமான காரியமாக இருக்கிறது, ஆலயத்தில் ஏசி இருக்க வேண்டும், விதவிதமான லைட்ஸ்கள் இருக்க வேண்டும், கஷ்டப்படாமல் பரலோகம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட மயக்கத்தில் இருந்து புத்தி தெளிய வேண்டும்.
இளையகுமாரன் வாழ்க்கையில் அவள் சுயமாக எதையும் செய்யவில்லை. அவன் நண்பர்கள் அவனுக்கு தவறான ஆலோசனைகளை சொல்லி, அவனை உசுப்பேத்தி அந்த வழியில் செல்ல வைத்தார்கள். அந்த தொழில் செய்யலாம், இந்த தொழில் செய்யலாம், இப்படி பணத்தை சம்பாதிக்கலாம், அதை பெருகச் செய்யலாம் என்று சொல்லி அவனை தகப்பனுக்கு விரோதமாக செயல்பட வைத்து, சொத்தை பிரித்து வாங்கி வரச் செய்து, எல்லாம் செலவான பின்பு கடைசியில் அவனை நடுத்தெருவில் விட்டுச் சென்றார்கள். இதே போலத்தான் சாத்தான் ராஜ்யத்தையெல்லாம் உனக்குதருகிற மாதிரி சொல்லி உங்களை ஏமாற்றி விடுவான். அவன் பொய்யன் தவறான ஆலோசனைகளைச் சொல்லி உங்களை மயக்கி விடுவான். சாத்தானை நம்பி ஏமார்ந்து, மோசம் போகிறவர்கள் தான் அநேகராக இருக்கிறார்கள்.
புத்தியில் மயக்கம்
கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார். உபாகமம் 28:28
முதலில் ஒரு மனிதனுக்கு மயக்கம் எங்கு வருகிறது என்று தெரியுமா?.மூளையில், புத்தியில் வருகிறது. இன்றைக்கு உலகம் ஒரு மயக்கத்திற்குள் செல்லுகிறது அநேகருடைய புத்தியில் ஒரு மயக்கம் உண்டாகிறது. ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் ஆதாமும் ஏவாளும் புத்தியில் ஒரு மயக்கம் அடைந்து விட்டார்கள். தேவனுடைய சத்தம் எது, பிசாசின் சத்தம் எது என்று அவர்களுக்கு பகுத்தறிய தெரியவில்லை. பொல்லாத உலகத்தில் புத்தியில் அந்தகாரப்பட்டுப் போய்விட்டார்கள், எது வெளிச்சம் என்று தெரியவில்லை, எது நல்லது என்று தெரியவில்லை, இந்த கனியை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்று தேவன் சொல்லியிருந்தும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. சாத்தான் ஆதாம் ஏவாளை முதலில் இதை சாப்பிடு என்று சொல்லி வஞ்சித்தான், அவர்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு தேவ மகிமையின் வஸ்திரத்தை இழந்து போனார்கள்.
புத்தியுள்ளவன் கற்பாறையின் மேல் வீட்டை கட்டுகிறான், புத்தி இல்லாதவனோ மணலின் மேல் வீட்டை கட்டுகிறான். அதனால் தான் வேதம் சொல்லுகிறது சகரியா 12:4-ல் அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.குதிரையில் ஏறி இருக்கிறவர்களுக்கு புத்தி மயக்கம் உண்டாகும். உலகத்தின் ராஜாக்களுக்கும், அதிகாரிகளுக்கும், விஞ்ஞானத்தை நம்புகிறவர்களுக்கும் இனி இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும். கர்த்தரை புறக்கணித்துவிட்டு எனக்கு வேலை முக்கியம், எனக்கு சமுதாய முக்கியம், எனக்கு ஜாதி முக்கியம், எனக்கு விசேஷங்கள் முக்கியம் என்று ஓடுகிற ஒவ்வொருவருக்கும் புத்தியில் மயக்கம் உண்டாகும். குதிரையை நம்புகிறவனுக்கும், அதின்மேல் ஏறி இருக்கிறவனுக்கும் புத்தியில் ஒரு மயக்கத்தை உண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கண்களில் மயக்கம்
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள். மாற்கு 14:40
கெட்டதை நல்லதாக காட்டுகிறது தான் நித்திரை மயக்கம். அது கெட்டுப்போன உணவு, அது கெட்டுப்போன ராஜ்யம், ஆப்பிள் இதை தொடக்கூடாது என்பதை சாத்தான் இல்லை இதை நீ சாப்பிடு உன் கண்கள் திறக்கப்படும் என்று சொன்னபோதுஆதாம் தேவ கட்டளையை மீறினான், ஆதாமுக்குள், அவன் கண்ணில் ஒரு மயக்கம் வந்துவிட்டது. இன்றைக்கு நிறைய விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் என்னவென்றால் ஓட்டுநர்கள் தூங்கி விட்டதால் மாத்திரமல்ல அவர்கள் கண்கள் நித்திரை மயக்கத்தினால் நிறைந்திருப்பதும் தான். சிம்சோன் வாழ்க்கையை பாருங்கள் அவன் மகாபலசாலி,பெலிஸ்தியர் தேசத்தின் கதவுகளை தூக்கிக் கொண்டு நடந்தவன். இப்படிப்பட்ட பலசாலியாகிய அவன் தெலாள் என்ற பெண்ணின் மீது கண் மயக்கம் கொண்டு அவளை பார்த்தவுடன் அவன் வாழ்க்கை பரலோகம் போல அவனுக்கு தெரிகிறது.
வேதம் வாசிக்கவில்லை, ஜெபிக்கவில்லை என்றால் நம்முடைய உள்ளம் இருளடையும், உணர்வில்லாமல் போய்விடும். என் பிள்ளைகளுக்காக நான் வாழ வேண்டும், அவர்களை கரை சேர்க்க வேண்டும், அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை நான் சரியாக செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு உணர்வு இருக்கிறது, ஆனால் ஜெபம் செய்ய வேண்டும், வேதம் வாசிக்க வேண்டும், ஆண்டவர் இயேசுவுக்காக ஊழியம் செய்ய வேண்டும் என்பதில் மாத்திரம் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்கள். இதற்கு மாத்திரம் என் வீட்டில் உள்ளவர்களை நான் கேட்க வேண்டும், அவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். சிம்சோன் தெலாள் என்ற பெண்ணை பார்த்தவுடன் கண் மயக்கம் உண்டாகி, அவள் அழகில் மயங்கினான். அவனுடைய இந்த மயக்க நிலையால் அவன் கண்கள் பறிபோனது, முடிவில் அவன் கண்களை இழந்தவனாக நின்றான்.
அப்போஸ்தலர் ஒன்பதாம் அதிகாரத்தில் ஆண்டவர் சவுலை பார்த்து சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று கேட்டார். அதற்கு சவுல் தன்னை நீதிமானாக காண்பித்து, ஆண்டவரே நீர் யார் என்று கேட்கிறான். நான் யார் தெரியுமா? என்று தன் இருதயத்தில் பெருமிதம் கொள்ளும் போது, வானத்திலிருந்து ஒரு ஒளி அவன் மேல் வந்தது. அவன் கண்கள் பார்வையற்று, இருளடைந்தது. அவன் கண்களில் பார்வை பறிபோனது. ஆண்டவர் உங்களை சந்தித்தால் உங்கள் மனக்கண்களை திறந்து விடுவார், இல்லாவிட்டால் அது குருட்டாட்டமான கண்களாகத்தான் இருக்கும். இயேசுவோடு மூன்றரை வருடங்கள் கூடவே இருந்த சீஷர்கள் கூட இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவரைக் காணக்கூடாதபடிக்கு அவர்கள் கண்கள் மயக்க நிலையில் இருந்தது. அவர் யார் என்று கண்டுகொள்ள முடியாதபடிக்கு கண்கள் மூடப்பட்டிருந்தது. அப்பத்தை எடுத்து இயேசு அதை பிட்கிறபோது தான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது, போதகரே என்று சொல்லி அவரை அழைத்தார்கள். நாம் கண் தெரிகிறவர்கள் மாதிரிதான் இருக்கிறோம், ஜெபிக்கிறவர்கள் மாதிரி தான் இருக்கிறோம், நல்லா இருக்கிறவர்கள் மாதிரிதான் இருக்கிறோம், ஆனால் ஆண்டவருக்கு முன்பாக நாம் போய் நிற்கும் போது அவருடைய பிரசன்னத்தில் நிற்கும் போது தான் தெரியும் நாம் கண்கள் திறக்கப்பட்டவர்களா, கண் மூடப்பட்டவர்களா என்று.
எண்ணாகமம் 23 ஆம் அதிகாரத்தில் பிலேயாமை பாலாக் ராஜா இஸ்ரவேல் மக்களை சபிக்க அழைத்த போது ஆண்டவர் அவருடைய கண்களை திறந்தார். கழுதையை கொண்டு அவனோடு பேசினார். இறுதியாக அவன் சொல்லுகிறான் கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறேன் என்று தன்னை சொல்லுகிறான். இன்றைக்கு ஆண்டவர் புத்தி மயக்கத்தில் இருக்கிற, கண் தெரியாத உங்களுக்கு, ஆவிக்குரிய கண்களைதிறந்து, பரலோகத்தை பார்க்க அந்த இடத்திற்கு செல்ல ஆண்டவர் உங்கள் கண்களை திறந்தால் தான் நீங்கள் பார்வை அடைய முடியும், புத்தி அடைய முடியும். இன்றைக்கு நாமும் ஆண்டவர் இடத்தில் நாம் பார்வையடைய வேண்டும் என்று கேட்போம். ஆண்டவர் நமக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் பார்க்கும்படிக்கு ஆண்டவரே இன்றைக்கு இந்த கண் மயக்கத்தில் இருந்து எனக்கு ஒரு விடுதலையை தாரும் என்று கேளுங்கள். என் கண்களைதிறந்தருளும் என்று கேளுங்கள். அவர் நம் கண்களை திறந்தால் தான் நம்மால் தெளிவாக பார்க்க முடியும். மோசே மரிக்கும்போது 120 வயது உள்ளவனாக இருந்தான், அவன் கண்களில் பார்வை குறையவே இல்லை, பார்வை மங்கவே இல்லை என்று வேதம் சொல்லுகிறது. ஆண்டவர் அவருடைய நாட்களுக்கு தக்க பலனை அவருக்கு கொடுத்தார்.
கர்த்தர் உங்களுடைய கண்களைத் திறந்தால் வசனம் உங்களுக்கு வழிகாட்டும், நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று வார்த்தையின்படி நீங்கள் நடக்க வேண்டிய வழியை உங்களுக்கு போதிக்கும். இது தெரியாமல் நீங்கள் உங்கள் நம்பிக்கையை ஒரு ஊழியர் மீது வைக்கும் போது அது குறிசொல்லுதலாக மாறிவிடுகிறது. அது பிலேயாம் செய்தது போல் ஆகிவிடுகிறது. வெளிநாடுகளுக்கு நாங்கள் ஊழியத்துக்கு செல்லும்போது அங்குஅவர்கள் வேதம் கொண்டு வருவதில்லை, கண்களை மூடி ஜெபிப்பதில்லை, ஆனால் எங்களிடத்தில் ஜெபிக்க வரும்போது எங்களை குறித்து ஆண்டவர் உங்களிடத்தில் என்ன சொல்லுகிறார் என்பதை நீங்கள் ஜெபித்து எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்பார்கள். ஊழியம், ஜெபம் என்பது சோசியம் அல்ல என்பதை நீங்கள் புரிய வேண்டும்.
ஆகார்கண் மயக்கத்தில் இருந்தபோது அவ்வளவு பெரிய நீரூற்று அருகில் இருந்தும்அவளுக்கு தெரியவில்லை.கர்த்தர் நமக்காக உண்டு பண்ணி வைத்திருக்கிறதை நம் கண்கள் காணவில்லை, காதுகள் கேட்கவும் இல்லை, அது நம் மனதில் தோன்றவும் இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆகார் என் பிள்ளை சாகிறதை நான் பார்க்க முடியாது ஆண்டவரே என்று சொல்லி அழுது கண்ணீரோடு ஜெபித்த போது கர்த்தர் அவளுடைய கண்களில் இருக்கிற அந்த மயக்கத்தை எடுத்து போட்டு, கண்களில் தெளிவை தந்து நீரூற்றை காணும்படி செய்தார்.எனக்கு வேலை கிடைக்கவில்லை, திருமண நடக்கவில்லை, குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லி முறையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ஆண்டவரிடத்தில் ஆயிரம் வழிகள் உண்டு, நீங்கள் அவரை தேடி அவருடைய சமூகத்திற்கு வந்தீர்களானால் அவர் அனைத்து ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு தருவார். என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டே என்று தேவன் சொல்லுகிறார்.
இன்றைக்கு இந்த கண் மயக்கத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை தரப் போகிறார். ஆகையால் புத்தியில்லாத கலாத்தியரே எத்தனை நாட்களுக்கு தேவன் ஆயத்தம் பண்ணினதை, அவர் உண்டு பண்ணிவைத்திருக்கிறதை நீங்கள் புறக்கணித்துவிட்டு இருப்பீர்கள். இன்றைக்கு இந்த மயக்கத்தில் இருந்து தேவன் உங்களை விடுதலையாக்கப் போகிறார்.தேவன் உங்களுக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை தந்திருக்கிறார். ஒரு போராட்டம், ஒரு பிரச்சனை, ஒரு எதிர்ப்பு, ஒரு தடை வந்தால் நமக்கு இரண்டு மடங்கு மூளை வேலை செய்ய வேண்டும். இதற்கு ஒரே வழி பரத்திலிருந்து வருகிற ஞானம், கலப்படமில்லாத ஞானம், உன் எதிரி ஒருவரும் மேற்கொள்ளாத முடியாத ஞானம்,இந்த வல்லமையை உங்களுக்கும் இன்றைக்கு தந்து உங்களை அந்த மயக்கத்தில் இருந்து விடுதலையாக்குவார்.
ஐசுவரியத்தின் மயக்கம்
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். மத்தேயு 13:22
இன்றைக்கு அநேகர் உலக காரியங்களில் அதிகம் கவலை கொள்ளுகிறார்கள். இன்னும் நான் வீடு கட்டவில்லை, இன்னும் என்மகளை, மகனைநான் கரை சேர்க்கவில்லை, இன்னும் எனக்கு வரவேண்டியது வந்து கிடைக்கவில்லை என்று சொல்லி புலம்புகிறார்கள்.உங்களை வாழ வைத்தவர் உங்கள் பிள்ளையையும் வாழ வைப்பார். நீங்கள் வளர்த்தால் உங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாது அதை ஆண்டவரிடம் கொடுத்தால் அவர் உங்களுக்கு வளர்த்து தருவார். நீ உன் பிள்ளையை தேவனுடைய பலிபீடத்தில் வைத்துவிடு, அன்று பலிபீடத்தில் வைக்கப்பட்ட ஈசாக்கின் மேல் கை போடாதே என்று சொல்லி அவனை ஆசீர்வதித்து, தேசங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றின தேவன், உன் பிள்ளையையும் ஆசீர்வதித்து, தேசங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் ஐசுவரியத்தின் மயக்கத்தினால் நிறைந்திருந்தார்கள்.அவர்கள் பணம் சம்பாதிக்கனும், வட்டிக்கு விடனும் என்று பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்கள். உலக ஆடம்பரங்கள், வசதி வாய்ப்புகள் கொஞ்சம் வந்து விட்டால் போதும் அவர்களை பிடிக்க முடியாது. ஒரு நாளும் ஆடம்பரத்திற்கும், வசதி வாய்ப்பிற்கு இடம் கொடுத்து தேவனை விட்டுவிடாதீர்கள்.
ஐசுவரியத்தின் மயக்கம் என்பது என் பேரில் இத்தனை வீடுகள் இருக்கிறது என்ற பெருமை. நம்மிடம் பெருமிதம், மேட்டிமையும் இருக்கக் கூடாது. நமக்கு ஒரே ஒரு வீடு தான் அது பரலோகத்தில் இருக்கிறது. அந்த வீட்டை உனக்காக கட்டுகிறவர், உனக்கு தருகிறவர் இயேசு. நீ இந்த உலகத்தில் நடக்கிற நடக்கைகள், உன் கிரியைகள், உன் நீதி உத்தமாம் கர்த்தருக்கு கீழ்ப்படிதல், பரிசுத்த வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை, ஊழியம், ஜெபம் இவைகளை தான் ஒவ்வொரு செங்கலாக வைத்து தேவன் உனக்காக பரலோகத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறார், ஆயத்தம் செய்கிறார். ஆண்டவர் சொல்லுகிறார் அநேக வீடுகளை கட்ட நான் அஸ்திபாரம் போட்டு விட்டேன், ஆனால் அதை கட்ட முடியவில்லை.அவர்களுடைய நீதியின் பலன் எனக்கு வந்து சேரவில்லை என்கிறார். கணவன் மனைவி சண்டை, கள்ள உறவுகள், தீமைகள் பெருகி கொண்டிருக்கிறது. என் நாமத்தை வைத்து அநேகரை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள், பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். மேய்ப்பர்கள் மந்தையை அல்லவா மேய்க்க வேண்டும், ஆனால் தங்களை மேய்த்துக் கொள்கிறவர்களுக்கு ஐய்யோ என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால் இந்த வீடு அஸ்திபாரத்தோடு நிற்கிறது, ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் புத்தியில்லாத கலாத்தியரே ஆவியில் வாழ்க்கையை ஆரம்பித்த நீங்கள் மாம்சத்தை நோக்கி, உலகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார். வெளிப்படுத்தல் 2:4-ல் எபேசு சபையைக் குறித்து சொல்லும் போது ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்று கர்த்தர் சொல்லுகிறார். வீடு கட்டியும் கரண்டு இணைப்பு கிடைக்கவில்லை, லைட் எரியவில்லை காரணம் நீங்கள் ஜெபிக்கவில்லை என்றால் உங்கள் வீடு இருளடைந்து கிடக்கும். நீ உயிர் உள்ளவன் என்று சொல்லியும் மரித்தவனுடைய நிலையில் இருக்கிறாய். நீ இந்த நிலையிலிருந்து விழுந்தாய் என்பதை எண்ணி, உன் விளக்கை தண்டின் மேல் வை, மரக்காலில் போட்டு மூடி வைக்காதே, கட்டிலின் கீழ் வைக்காதே, உலகத்துக்காக வாழாதே தேவனுக்காக வாழ தீர்மானி.
உங்களுக்காக தேவன் தூதர்களை ஏற்படுத்தி இருக்கிறார், உங்களை காக்கும்படிக்கு தூதர்களுக்கு கட்டளையிட்டேன் என்று சொல்லுகிறார்.உங்களுக்கு தேவன் ஏற்படுத்தினதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் ஏன் ஜெபிக்கனும், எதற்காக கண் விழிக்கனும், நான் இஷ்டப்பட்டால் தான் ஜெபிப்பேன் என்கிறீர்கள். நமக்குள் ஒரு ஆத்துமா இருக்கிறது, இந்த சரீரம் மண்ணுக்கு போகும், ஆனால் நம்முடைய ஆத்துமா நித்தியத்திற்கு போக வேண்டும், ஆத்துமா நித்தியமாக அவரோடு வாழ வேண்டும். ஆத்துமா விலையேறப்பெற்றது. அதற்குத்தான் நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும்.சங் 115:17,18-ல்மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம் என்று வேத வசனம் சொல்லுகிறது.
சவுல் ராஜா தனக்கு பின்பு தன் மகன் தான் ராஜாவாக வேண்டும் தாவீது ராஜாவாகக் கூடாது என்றும், நான் ராஜாவாக இருக்கும் போதே எனக்கு ஆயிரமும், தாவீதுக்கு பதினாயிரம் என்று பெண்கள் பாடுகிறார்களே, இது நல்லதல்ல என்று சொல்லி தாவீதை ஓட ஓட துரத்திக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் சவுலும் அவனுடைய படைவீரரும் மலையின் அந்த பக்கம் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாவீது அந்த இடத்திற்கு சென்று சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும்,தண்ணீர் செம்மை எடுத்துக் கொண்டு வந்து விட்டான். தூரத்தில் வந்த பிறகு சவுலை நோக்கி கூப்பிட்டு உம்முடைய ஈட்டி எங்கே? உம்முடைய செம்பு எங்கே? என்று பாரும், உம்மை காவல் காக்கும்படிக்கு நீர் வைத்திருந்த உன் காவலாளிகள் ஒருவர் கூட விழித்திருக்கவில்லையா?, இன்றைக்கு தேவன் உம்முடைய ஜீவனை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தார் என்று சொன்னான்.நாளொன்று வரும் கர்த்தரை தேடாத, நம்பாத ஒவ்வொருவருடைய ஜீவனும் நம்முடைய ஜெபத்தினால் பிழைக்கும்.
இன்றைக்கு இந்த மயக்க நிலையில் இருந்து உங்களை ஒரு விழிப்பு தன்மைக்கு தேவன் கொண்டு வரப்போகிறார். தூங்குகிற நீ, மயக்கத்தில் இருக்கிற நீ, தூசியை உதறிவிட்டு எழுந்திரு, மரித்தோரை விட்டு எழுந்திரு, கிறிஸ்து உன்னை பிரகாசிக்கச் செய்வார். சாத்தான் உன்னை இருளில் இருக்க பண்ணுவான் கிறிஸ்து உன்னை பிரகாசிக்கச் செய்வார். இயேசு கிறிஸ்து இந்த மயக்கத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை தந்து, புத்தியில் ஒரு வெளிச்சத்தை கொடுத்து, உன் வாழ்க்கையில், வேலையில், தொழிலில், ஜெப ஜீவியத்தில், ஊழியத்தில் பிரகாசிக்கும்படி செய்யப் போகிறார். உங்கள் உயர்வை யாரும் தடுக்க முடியாது. உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. சாத்தான் வைத்த கண்ணியில் அவன் தான் விழுவான். பிசாசின் மயக்கத்திலிருந்து நீங்கள் தெளிவடைந்து கர்த்தராலே ஆட்கொள்ளப்படுவீர்கள். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் எல்லா மயக்கத்திலிருந்தும் விடுதலையாக்கி, தெளிவை தந்து ஆசீர்வதித்து நடத்துவாராக.