Inspiration

பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து, பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசா 41:10,13.

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

உலகத்தில் நடக்கின்ற பல சூழ்நிலைகளின் மத்தியில் கர்த்தர் ஒருவரே நமக்கு துணையாக நிற்கிறார். இந்த நாட்களில் எத்தனையோ பேருக்கு இந்த தெய்வம் இல்லை. எத்தனையோ பேர்களுக்கு இந்த வார்த்தையை சொல்லுகின்ற மனிதர்கள் இல்லை. நம் வாழ்க்கையில் இக்கட்டு, ஆபத்து,போராட்டம், துன்பம், சோதனை, பிரச்சனை வரும்போது நமக்கு பயப்படாதே, நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி நமக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டார்கள். நம்மை பார்த்து பாவம் என்று சொல்லிக்கொண்டு போவார்கள். நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். இருக்கிறேன் என்று சொன்னால் எல்லாவற்றையும் நமக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். நம் பிள்ளைகளிடம் ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று நாம் சொல்லிவிட்டால் நீங்கள் தான் சொன்னீர்கள் அதை வாங்கி கொடுங்கள் என்று கேட்பார்கள். உங்களை நம்பி ஒரு குடும்பத்தை கொடுத்தவர். உங்களைப் பார்த்து நீ தடுமாறுகிறாய், பயப்படுகிறாய் எப்படி ஆகுமோ என்று கலங்குகிறாய் நீ பயப்படாதே, நான் உன் வலது கையை பிடித்திருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

1. நான் உன்னுடனே இருக்கிறேன்

இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் கைவிட்டாலும் ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார் நீ பயப்படாதே என்று. அவருக்கு உங்கள் வாழ்க்கை தான் முக்கியம். நீங்கள் சுகவீனமாய் இருப்பது அவருடைய சித்தமல்ல. நீங்கள் பயந்து கொண்டிருப்பது அவருடைய சித்தமல்ல. என் தொழில் என்ன ஆகுமோ, என் வருமானம் என்ன ஆகுமோ, என் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பேன். எப்படி திருமணம் பண்ணி வைக்க போகிறேன் என்று நீங்கள் கலங்கி, பயந்து கொண்டு இருக்கலாம். கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்லுகிறார் நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் என்கிறார். மனைவியோ, கணவனோ பொறுமையாக இருப்பதில்லை. இயேசு கிறிஸ்து மாதிரி உலகத்தில் பொறுமையாக இருந்தவர் யாரும் கிடையாது. பொறுமை உள்ளவர் அவரே சொல்லுகிறார் மாற்கு 9:19-ல் அவர் பிரதியுத்தரமாக, விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள். நான் அவனை சுத்தமாக்குவேன் என்றார்.

உங்களை வாட்டி வதைக்கின்ற, அலைக்கழிக்கின்ற ஆவிகள், சண்டையை தூண்டுகிற ஆவிகள், ஒருமனதை கெடுக்கின்ற, வியாதியை கொண்டு வருகின்ற ஆவிகள் அவைகளை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்கிறார். நீங்கள் ஆண்டவரிடம் உங்களுடைய எல்லாக் காரியங்களையும் சொல்ல வேண்டும். அவர் பொறுமையுள்ள, உங்களை விட்டு விலகாத தேவன். என்றைக்கும் உங்கள் கூட இருக்கிறவர் இயேசு. உங்களிடம் பொறுமையாய் இருக்கிறவர் இயேசு. உங்களையும், உங்களுடைய காரியங்களையும் சகித்துக் கொள்கிறவர் இயேசு. நீங்கள் அவரை குத்தினாலும் உங்களை விட்டு விலகாது இருப்பார்.அவர் இருதயம் பிளக்கப்பட்டாலும் என் பிள்ளைக்காக நான் பரிதபிக்கிறேன் என்றவர். இன்றைக்கு உங்களை ஆசீர்வதிக்க போகிறார். ஏதோ ஒரு காரியம், சரீரத்தில் உள்ள ஒரு கட்டி, எதிர்காலத்தைக் குறித்த கவலை, நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். கணவன் கைவிட்டு விட்டான். பிள்ளைகள் என்னை கைவிட்டு விட்டார்கள், எப்படி வாழ்வது போன்ற காரியங்கள் உங்களை பயமுறுத்துகின்றது. இன்னொருத்தரை நம்பி நீ, என் பிள்ளைக்கு சாப்பாடு போடு என்று ஆண்டவர் சொல்லவில்லை. அவரே உங்களை நடத்தப் போகிறார். எலியாவை போஷித்த தேவன் உங்களையும் போஷிக்க போகிறார்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள், இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். மத் 28:20 உங்கள் துக்க நாட்களிலும்,வேதனையாக நாட்களிலும், உயர்விலும், தாழ்விலும், மனிதர்கள் தலை மேலே ஏறி நடந்து உங்களை அவமானப்படுத்தி, பேரை கெடுக்கும் போதும் அவர் சொல்லுகிறார் உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உன்ரீனோடு கூட இருக்கிறேன் என்று. நம் ஆண்டவர் பெரியவர் இவரை வைத்துக்கொண்டு நீங்கள் என் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனை என்று சொல்லக்கூடாது. இதுவரை கண்ட எகிப்தியனை இனி நீ காணாதிருப்பாய் என்று சொல்லி உங்களை சுகப்படுத்துவார். ஆண்டவரைத் தவிர வேறு ஒன்றும் நமக்கு இருக்கக் கூடாது.

லூக்கா 20 அதிகாரத்தில் அவர் வைக்காததை எடுக்கிறவர் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவர் உங்கள் சரீரத்தில் வைக்காத எந்த கட்டியும் அடைப்பும் உங்கள் மேலó இருக்கக்கூடாது. இயேசு உங்களோடு இருந்தால் அவைகள் எல்லாம் வெளியே ஓடிப்போய்விடும். அதற்குத்தான் பயப்படாதே, நான் உன்னோடு கூட இருக்கிறேன் என்கிறார். ஆண்டவர் உங்களோடு கூட இருக்க வேண்டுமென்றால் நீங்கள் அவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கின்ற இயேசுவை விலகாதபடி காத்துக் கொள்ள வேண்டும்.

2. உனக்கு கேடகமாக, பலனாக இருக்கிறேன்

லூக்கா 4:42-ல் உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத்தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை வேண்டிக்கொண்டார்கள். ஆண்டவரை நீங்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டவர் உங்களுக்கு ஜீவனாக, பலனாக, ஆதரவாக இருக்கிறார். உங்கள் வலது கையை பிடித்திருக்கிறார். அந்த கையை விடவே மாட்டார். அவரை ஸ்தோத்தரியாமாலும், மகிமைப்படுத்தாமலும் இருந்தால் உங்கள் சிந்தை வீணாகி, இருதயம் இருள் அடைந்து விடும். சில நேரங்களில் நீங்கள் நினைப்பீர்கள் நான் நல்ல தான் ஜெபம் பண்ணுகிறேன் ஆனால் ஏன் பதில் வரவில்லை என்று சோர்வு வந்துவிடும்.சாத்தான் உங்களை அதைரியப்படுத்தி விடுவான். சாத்தான் உங்களை ஜெபம் பண்ண விடாமல் தடுத்து விடுவான். ஏவாளை அப்படித்தான் பிசாசு வஞ்சித்தான். உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று ஏவாளிடம் சொல்லி ஏமாற்றினான். இதிலிருந்து உங்களை காப்பாற்ற தான் தேவன் உயிரோடு இருக்கிறார். இவர் எப்பொழுதும் உங்களோடு தான் இருப்பார்.

ஆதி 15:1-ல் இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர், ஆபிராமே, நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.அவர் நமக்கு கேடகமாக,மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன் என்று சொல்கிறார். நமது ஊழியத்தில் ஆரம்ப நிலையில் பொருள் வாங்க முடியாது யாரிடமும் கேட்க முடியாது சோர்ந்து போய் ஆம்ப்ளிபயர் வாங்கணும் ஃபேன் வாங்க வேண்டும் என்ன செய்வேன் என்று ஆண்டவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் நான் ஏழைக்கு பெலன். நெருக்கப்படுகிற எளியவனுக்கு நான் திடனாய் இருப்பேன் ஏசாயா 25 அதிகாரத்தில் அந்த வசனத்தை என்னை வாசிக்க வைத்தார். பலசாலிக்கும் பணக்காரனுக்கும் இல்லை பெலனற்றவனுக்கு பெலனாயிருப்பேன் என்று சொன்னார்.

ஆபிரகாமிடம் உன் இனத்தையும் உன் சொந்தத்தையும் உனக்குரிய எல்லாவற்றையும் விட்டு புறப்பட்டு போ என்று ஆண்டவர் சொன்னார். ஆபிரகாமுக்கு குழந்தை இல்லை சொத்தும் இல்லை. அப் 7:5-ல் இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும் போது, உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்.ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை நடந்தே போக வேண்டும். வனாந்தரத்தில் படுத்து இருந்தான். குழந்தையும் இல்லை ஆபிரகாமை பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார் பயப்படாதே, நான் உனக்கு மகா பெரிய பலனாய் இருக்கிறேன் என்றார். இப்படிப்பட்ட ஆண்டவரை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் வேதனையோடு இருக்கலாம் பிள்ளைகளுக்கு தேவைகள் சந்திக்கப்படாமல் இருக்கலாம் கர்த்தர் உங்களுக்கு மகா பெரிய பலனாய் இருக்கிறார்.

உங்களை கைவிடாமல் நடத்துகிற தேவன், அவர் உங்களுக்கு பலனாய் இருக்கப் போகிறார் உங்களுடைய தேவைக்கு அதிகமாகவே தரப்போகிறார். நம்மிடம் எது இல்லாமல் போனாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலம் கூட இல்லாத போது கர்த்தர் அவனுக்கு எல்லாவற்றையும் கொடுத்தார். அவன் சந்ததியை பெருக பண்ணினார். அந்த தேவன் உங்களோடு இருக்கிறார். உன் அலைச்சல்களை, ஏழ்மையை, பிறருக்கு முன்பாக தலைகுனிந்து நிற்கிறதை அறிந்திருக்கிறார். இன்றைய நாளிலிருந்து கர்த்தர் கட்டாயம் உங்களை ஆசீர்வதிப்பார். அதனாலóதான் ஆண்டவர் ஆபிரகாமை பார்த்து உனக்கு நான் மகா பெரிய பலனும் கேடகமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிறார். உங்களைப் பார்த்து தான் ஆண்டவர் சொல்லுகிறார் நீ பயப்படாதே என்று.

3. உனக்கு ஜீவனாக இருப்பேன் நீ சாவதில்லை.

ஐந்து அப்பம், இரண்டு மீன் தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் கர்த்தரால் அதைக் கொண்டு 5000 பேரை போஷிக்க முடியும், மீதம் 12 கூடை எடுக்க முடியும். கர்த்தர் அதற்குத்தான் உங்களோடு கூட இருக்கிறார். நியா 6:23-ல் அதற்குக் கர்த்தர், உனக்குச் சமாதானம் பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.ஏசாயா சொல்லுகிறார் அசுத்த உதடுகள் உள்ள நான் சேனைகளின் கர்த்தரைக் கண்டேன். பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு உள்ளே போயிட்டு வெளியே வந்திருவேனா? என்று அந்த காலத்தில் ஆசாரிய ஊழியம் பண்ணுகிறவர்கள் பயப்படுவார்கள். ஏதாவது வியாதி வந்து விட்டால் ரொம்ப பயப்படுவார்கள், கடந்த மாதம் நம்முடைய வானத்தின் வாசல் கூட்டத்தில் ஒரு சகோதரி முகத்தை மூடிக்கொண்டு வந்தார். நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் ஏன் அப்படி மூடிக் கொண்டிருந்தீர்கள் என்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் எனக்கு வரக்கூடாது வியாதி வந்து விட்டது பிரதர். யார் சொன்னது என்று கேட்டால் நான் தான் போய் செக் பண்ணி பார்த்தேன் முடியெல்லாம் கொட்டிவிட்டது. நான்காவது ஸ்டேஜ் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அநேகர் உயிருக்கு போராடுகிறார்கள், மருத்துவர்களால் கைவிடப்படுகிறார்கள், அலைக்கழிக்கப்படுகிறார்கள். சாகும் வரைக்கும் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுசாத்தான் உங்களை அடிமைப்படுத்தி கர்த்தர் மேல் வைக்க வேண்டிய விசுவாசத்தை வைக்க விடாமல் வேலை செய்கிறான்.எசே 18:23,32-ல் துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள், சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.கிதியோனை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார் நீ சாவதில்லை என்று. எசேக்கியா ராஜாவுக்கு வீட்டு காரியங்களை ஒழுங்குபடுத்து என்றார். எசேக்கியா ராஜா என் ஆயுசின் வருஷங்கள் முடிய போகிறதே என்று சுவர் பக்கமாய் திரும்பி அழுகிறான். ஏசாயா தீர்க்கதரிசி முற்றம் வரைக்கும் கூட போயிருக்க மாட்டார். ஆண்டவர் அவரை திரும்பு என்று சொல்லுகிறார். நீ போய் என் தாசனாகிய எசேக்கியாவுக்கு சொல், உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கண்டேன், ஆயுசு நாட்களை 15வருடம் கூட்டி கொடுத்தேன் நீ சாவதில்லை என்று சொல் என்றார்.

சங் 31:15 என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது, என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கையில் இருக்கிறது மரித்தும் நம்மை வாழ வைக்கிற தேவன் இயேசு கிறிஸ்து. நமக்கு வர வேண்டிய தண்டனையை எல்லாம் அவர் ஏற்றுக்கொண்டார். இன்றைய காலகட்டத்தில் சின்ன பிரச்சனை வந்தாலும் உடனே விவாகரத்து பண்ணிவிடுவேன் என்று சொல்லுகிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு சகிப்புத்தன்மையே இல்லை. 1 பேதுரு 2:23-ல் அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் அபிஷேகம் பண்ணப்படுவது சந்தோஷமாக ஆசீர்வாதமாக இருப்பதற்கு மட்டும் அல்ல, பாடுகள் வரும்போது அதை சகித்து கொள்வதற்காகவும் தான்.

இயேசுவை தேடி ஒரு மனிதன் வந்தான், அவன் என் மகள் மரணம் அவஸ்தையாயிருக்கிறாள் என்று சொல்லுகிறதிற்குள்ளே இன்னொரு அம்மா வந்து 12 வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரி இயேசுவின் ஆடையை தொட்டாள். மாற்கு 5:35,36 அவர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; சிலர் வந்து உன் மகள் மரித்து விட்டாள் போதகரை தொந்தரவு படுத்தாதே என்று சொன்னார்கள். இந்த செய்தி ஜெப ஆலய தலைவரின் மனதை வெகுவாக பாதித்தது அழுதான். கர்த்தர் ஜெப ஆலய தலைவனை நோக்கி பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு என்று சொன்னார்.மரித்து போன மகளை உயிரோடு எழுப்பினார்.

4. உன்னை வெட்கப்பட விடமாட்டேன்

லூக்கா 1:13-ல் தூதன் அவனை நோக்கி, சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக என்று சகரியாவை பார்த்து சொல்லுகிறார். நீண்ட நாள் ஜெபத்திற்கு இன்று பதில் தர போகிறார். உங்களுடைய வேண்டுதல் இன்று கேட்கப்பட்டது.உங்களை வாழ வைக்கிற தேவன் இயேசு பயப்படாமல் தைரியத்தோடு இருங்கள். உங்களைவெட்கப்பட விடவேமாட்டார். உனக்கும், உன் வீட்டிற்கும் போதுமானவராய் இருப்பார். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீட்டை தருவார். நீங்கள் அலைந்து திரியாதபடி உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் வேண்டுதலை கேட்பார் லூக்கா 5:10-ல் சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.ஒரு நாள் மீன்பிடிக்க சென்றான் ஆனால் மீன் வலையில் விழவே இல்லை, சகித்துக் கொண்டார். வெறுமை, ஒரு தோல்வியில் அந்த நேரத்தில் திரள் ஜனங்கள் கடற்கரை அருகில் இயேசுவிடம் வந்தார்கள். சீமோன் படகில் ஏறி இயேசு பிரசங்கம் பண்ணினார். இயேசு சீமோனை கூப்பிட்டு ஆழத்துக்கு தள்ளி கொண்டு போய் வலையை வீசு என்றார். பேதுரு இப்பொழுது வலையை வீசுகிறார். எல்லாரும் பிரமிக்கத்தக்கவிதமாக மீன்களை வலை கிழியதக்கதாக தேவன் கொடுத்தார். இப்பொழுது யோவானையும் யாக்கோபையும் சைகை காட்டி வாங்க வலையை இழுக்க முடியவில்லை என்று கூப்பிட்டான். பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந்து ஆண்டவரே நான் பாவியான மனுஷன் என்று சொல்லுகிறார்.

பேதுரு சில சமயங்களில் ஆண்டவரிடம் உமக்கும், மோசேக்கும், எலியாவுக்கும் மூன்று கூடாரம் அமைப்பேன் என்று சொல்லுகிறார். மேலும் நீதான் என்றால் நான் இந்த கடலில் நடந்து வரவேண்டும் என்றும் சொல்லுவார். நாம் இதுபோல இருமனமாய் இல்லாமல் ஒரு மனமாய் இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் தொழில் உங்களை கைவிட்டு இருக்கலாம், குடும்பம், சொந்தபந்தங்கள் உங்களை கைவிட்டு இருக்கலாம் கர்த்தர் உங்களை கைவிடமாட்டார்.யோவான் சொல்லுகிறார் இவரே பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி இவரை நான் அறியாதிருந்தேன். இவர் என்னிலும் மேலானவர் என்று. அந்த தேவன் உங்களோடு இருக்கிறார், அதனால் தான் பயப்படாதே இன்று முதல் உங்களை மனுஷனை பிடிக்கிறவர்களாக மாற்றுவேன் என்கிறார். உங்கள் உழைப்பு, ஊழியம் ஒரு நாளும் வீணாகாது. கர்த்தருக்குள் நீங்கள் எடுக்கிற பிரயாசம் ஒரு நாளும் வீணாகாது. ஆபிரகாமுக்கு பயப்படாதே கேடகமாக இருந்து பெலனாயிருப்பேன் என்று இயேசு சொன்னார். கிதியோனை பார்த்து நீ சாவதில்லை என்று சொன்னார். பேதுருவிடம் நீ பயப்படாதே, உன்னை வெட்கப்பட விடமாட்டேன் என்று சொன்ன தேவன் உங்களோடு இருக்கிறார். இன்றைக்கு உங்களுக்கு பெலனாக, கேடகமாக இருந்து, உங்கள் வலது கையைப் பிடித்து துணையாக இருப்பார், உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.