Inspiration

விசுவாசம்

சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். லூக்கா 18:8

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த மாதஇதழ் மூலமாக மீண்டும் உங்களைச் சந்திக்க தேவன் தந்த கிருபைக்காக அவருக்கு நன்றி சொல்லுகிறேன்.

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு மீண்டும் வரும்போது உங்களிடத்தில் எதிர்பார்க்கின்ற ஒரு காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இரண்டாம் முறையாக இந்த பூமிக்கு அவர் வரும்போது இந்த பூமியிலே ஜனங்களிடத்தில் விசுவாசத்தைக் காண்பாரோ என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைக்கு உங்களுக்கு விசுவாசம் தேவையா? அது ஏன் உங்களுக்கு அவசியமென்றால் உங்களுக்கு வரும் போராட்டங்களை. பிரச்சனைகளை நீங்கள் மேற்கொள்ள விசுவாசம் தேவை. ஒவ்வொரு மனிதனுக்கும் விசுவாசம் கண்டிப்பாக தேவை. ஆனால் சாத்தானுக்கே மனிதர்கள் தேவன் மேல் விசுவாசம் வைப்பது பிடிக்காது.

லுக்கா 22:32-நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன். நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். இயேசு பேதுருவிடம் நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார். நமக்காக வேண்டுதல் செய்கிற தேவன் இருக்கிறார். இந்த விசுவாசமானது பத்து வெள்ளிக்காசு போன்றது. பத்து வெள்ளிக்காசு என்பது பரிசுத்தம். விசுவாசம். தேவனுடைய வார்த்தை என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். சாத்தான் வந்து உங்கள் வெள்ளிக்காசை திருடாதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜெபிக்க நினைக்கும் போது அல்லது ஜெபத்திற்காக வெளியே செல்லும்போது சாத்தான் பலவிதமான தடைகளை போராட்டங்களை கொண்டு வருவான். ஆனால் நீங்கள் விசுவாசத்தில் முன்னேறிச் சென்று அவனை மேற்கொள்ள வேண்டும்.

பேதுரு இயேசுவுக்காக தன் உயிரையே கொடுப்பேன் என்று சொன்னவுடன் சாத்தான் அவனுடைய விசுவாசத்தை சோதிக்க ஆரம்பித்து விட்டான். இந்த பத்து வெள்ளிக்காசில் ஒன்றை நான் திருடுகிறேன் என்று சொல்லி அவன் விசுவாசத்தை திருட பார்க்கிறான். ஆனால் ஆண்டவர் பேதுருவின் சூழ்நிலைகளை, இயலாமையை அறிந்த தேவன் நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லுகிறார். இன்றைக்கு அந்த ஆண்டவர் உங்களுடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு. சாத்தான் திருடாதபடிக்கு உங்களை நேசிக்கிற தகப்பன் கல்வாரி நேசர் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறார். ஆகவே நீங்கள் ஜெயிப்பீர்கள். சோதனையில்
ஜெயம் பெறுவீர்கள். உங்களுக்கு ஒரு வழி திறக்கப்படும். உங்கள் தோல்விகளை ஜெயமாக மாற்றுவார். 2 தீமோத் 1:12 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும். நான் வெட்கப்படுகிறதில்லை. ஏனென்றால். நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். இந்த வசனத்தில்
பவுல் அப்போஸ்தலன் சாத்தானுக்கு சவால் விடுகிறார் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் என்று சொல்லுகிறார்.

1. விசுவாசம் உங்களுக்கு எதற்காக வேண்டும்

சிலர் ஒரு தேவையோடு ஜெபிப்பார்கள். இன்னும் சிலர் தாகத்தோடு ஜெபிப்பார்கள் சிலர் இன்னும் தேவனை ஜெபத்தில் தேடனும். அதிகமாக அவரை கிட்டி சேரனும் என்று ஜெபிப்பார்கள். உங்களுக்கு நிறைய பணத்தேவைகள். பொருள் தேவைகள் இருக்கும் அதற்காகவும் ஜெபிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள். போராட்டங்கள் மாறும்படியாக நீங்கள் ஜெபிப்பீர்கள். சிலருக்கு ஜெபத்தில் கேட்ட காரியங்களுக்கு உடனே பதில் வரும், சிலருக்கு சில வருடங்கள் கூட ஆகலாம். எலிசபெத் சகரியா இருவரும் குழந்தைக்காக பல வருடங்களாக ஜெபித்தார்கள். ஏறக்குறைய 84 வயதில் அவர்களுக்கு அந்த ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. இன்றைக்கு உங்களுடைய ஜெபம் கேட்கப்படவில்லை என்றால் ஆண்டவர் மீதுள்ள உங்களுடைய நம்பிக்கை தளர்ந்து போக ஆரம்பிக்கும். விசுவாசம் குறைய ஆரம்பிக்கும். கர்த்தர் கண்டிப்பாக உங்களுக்கு தருவார் என்ற நம்பிக்கையில், விசுவாசத்தில் இருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பதிலை தருவார். உங்கள் விசுவாசத்தை குறைந்து போக அவர் விடமாட்டார்.

அதனால் தான் வசனம் சொல்லுகிறது விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று. பிசாசானவன் இந்த பத்து வெள்ளிக்காசியில் ஒன்றான விசுவாசத்தை நம்மை விட்டு எடுத்து போடப்பார்ப்பான். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்று நீங்கள் சோர்ந்து போகிறீர்கள் ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார் அவர் மீது விசுவாசம் வையுங்கள் என்று. நீங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கும்போது அநேக நன்மைகள், அநேக ஆசீர்வாதங்கள், அநேக வாசல்ளை உங்களுக்காக தேவன் திறப்பார். உங்கள் ஆத்துமா சோர்ந்து போகும் போது சங்கீதக்காரன் சொல்லுகிறார் சங் 62:5-ல் என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும் என்று. இன்றைக்கு அநேகருடைய விசுவாசம் நம்பிக்கை குறைந்து போகத் தொடங்கி விட்டது. கானாவூர் கல்யாண வீட்டில் வெறுமையான கச்சாடிகள் தான் இருந்தது. இன்றைக்கு அநேகருடைய விசுவாசம் வெறுமையானதாக இருக்கிறது. விசுவாசம் இல்லாத வெறுமையான கச்சாடியாக தான் இருக்கிறது. இயேசு சொல்லுகிறார் மார்த்தாளைப் பார்த்து நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று.

2. கடுகளவு விசுவாசம்

உங்களை தேவன் கனத்துக்குரியவர்களாக மாற்ற வேண்டுமானால் உங்களுடைய விசுவாசம் பெரிதாக இருக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிற ஆண்டவர் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களுக்கு 40 வருடங்களாக வனாந்தரத்தில் மூன்று நேரம் உணவு கொடுத்து வழி நடத்தின தேவன் என்பதை நீங்கள் மறந்து போகாதீர்கள். உங்களுக்கு இருக்கின்ற வேலைப்பளு, கடன் தொல்லை, வருமானம் இல்லை இப்படிப்பட்ட இந்த உலகத்தில் நீங்கள் சூழ்நிலையைக் கண்டு பதறுகிறீர்களா?. கலங்குகிறீர்களா? உங்களுடைய விசுவாசம் காணாமல் போய்விட்டதா? தொலைந்து போய்விட்டதா? உங்கள் நம்பிக்கை தளர்ந்து போய் விட்டதா? உங்கள் அடிகள். கால்கள் சறுக்குகிறதா? தேவன் உங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்வார். உங்கள் ஜெபத்திற்கு தேவன் இன்றைக்கு பதில் தருவார்.

அன்னாள் ஒவ்வொரு வருடமும் ஆலயத்திற்குச் சென்று குழந்தைக்காக ஜெபித்து வந்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை துக்கமுகமாகவே இருந்தாள். ஒரு நாள் தன் இருதயத்தை ஊற்றி தேவசமுகத்தில் கண்ணீரோடு ஜெபித்தாள். தேவன் அவள் இருதயத்தில் விசுவாசத்தை கொடுத்தார் அதற்குப் பிறகு அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை. உங்களுக்குள்ளும் தேவன் கடுகளவு விசுவாசத்தை வைக்கிறார். உங்களை துக்கப்படுத்துகிற காரியங்களை உங்களை விட்டு தேவன் அப்புறப்படுத்துகிறார். உங்கள் துக்கத்தை சந்தோஷமாக தேவன் மாற்றுகிறார்.

கர்த்தர் ஆபிரகாமிடம் உன் பிள்ளையை தகனபலியாக பலியிடு என்று சொல்லி விட்டார். அவன் உள்ளத்தில் அதை குறித்து அழுதாலும் ஆபிரகாம் சந்ததி இல்லாமல் அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காக ஆண்டவர் அவனுக்குள்ளாக கடுகளவு விசுவாசத்தை வைத்து விட்டார். ஆபிரகாம் தன் வேலைக்காரர்களிடம் நாங்கள் இருவரும் அந்த மலைக்கு போய் விட்டு திரும்ப வருவோம் என்று சொன்னார். கர்த்தர் மேல் உள்ள அவனுடைய விசுவாசம் அவனை தடுமாற விடவில்லை. இன்றைக்கு சாத்தானுடைய வேலையே நீங்கள் தேவன் மேல் விசுவாசம் வைக்கக் கூடாது. அவரை விட்டு பின்வாங்கிவிட வேண்டும், உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பது தான். கடுகளவு விசுவாசம் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் பின்னோக்கி செல்ல மாட்டீர்கள். கர்த்தரிடத்தில் முன்னோக்கி செல்வீர்கள். ஆபிரகாமை அப்படித்தான் அவர் முன்னோக்கி செல்ல வைத்தார். விசுவாசத்தில் முன்னேற வைத்தார். விசுவாசத்தின் தகப்பன் ஆக்கினார்.

நீங்கள் இரட்சிக்கப்படும் போது தேவன் உங்களுக்குள் ஆவியின் கனிகளை தருகிறார் அதில் ஒன்று தான் விசுவாசம். மாற்கு 11:23,24-ல் எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து. சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி. தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால். அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையில் உள்ள போராட்டங்களை. பிரச்சனைகளை பார்த்து நீ போ என்று சொல்லி விசுவாசத்தோடு கட்டளையிடுங்கள். அது உங்களை விட்டு அகன்று போகும். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோல்விகள் ஜெயமாக உங்களுக்கு தேவை விசுவாசம். இதுவரைக்கும் உங்கள் வாழ்க்கையில் தாமதித்த காரியங்களை எல்லாம் ஆண்டவர் நிறைவேற்றி தரப்போகிறார். தடைப்பட்ட காரியங்கள். அடைக்கப்பட்ட வழிகளை எல்லாம் தேவன் திறப்பார்.

உங்கள் குடும்பத்தின் மீது, உங்கள் தொழிலின் மீது பிசாசுக்கு எந்த விதத்திலும் அதிகாரம் கிடையாது. உங்கள் குடும்பம் கர்த்தரால் கட்டப்படும். தேவனுடைய கை உங்களோடு இருக்கிறது என்று விசுவாசியுங்கள். நீங்கள் சோர்ந்து போன நேரத்தில் தேவன் உங்களுக்குள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணுவார். லூக்கா 17:5-ல் அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள். இப்பொழுது நீங்கள் போய்க் கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில் உங்களுக்குள் இருக்கிற விசுவாசம் போதாது. இயேசுவிடம் உங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணுங்க அப்பா என்று நீங்கள் கேட்க வேண்டும். விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று பவுல் எழுதுகிறார். உங்கள் விசுவாசத்தை சேதப்படுத்துகிறவனை நீங்கள் சேதப்படுத்த வேண்டும். நீங்கள் எதிர்பார்த்து நிற்கும் காரியங்களை தேவன் உங்களுக்கு வாய்க்கப் பண்ணுவார்.

3. விசுவாச குறைவு

நீங்கள் விசுவாசத்தில் குறைவுபடத் தொடங்கும் போது கர்த்தரை தேடுவதிலும், அவரை நேசிக்கிறதிலும் குறைவு காணப்படும். யோவான் 11:21-ல் மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்று முறையிடுகிறாள். லாசரு நோய்வாய் பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தபோது எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழ்நிலையில் இருந்தபோது மார்த்தாள். மரியாள் இயேசுவுக்கு சொல்லி அனுப்பினார்கள் இயேசு இவர்கள் சொல்லி அனுப்பின வார்த்தைகளை கேட்டுவிட்டு அங்கேயே மேலும் இரண்டு நாள் தங்கி விட்டார். அதற்குள்ளாக லாசரும் மரித்துப் போய்விட்டார். அடக்கம் பண்ணி விட்டார்கள். நான்கு நாட்கள் கழித்து இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது ஆண்டவரே நீர் எங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான் என்று மார்த்தாள் சொன்னாள். சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் உங்களை மிகவும் சோர்ந்து போக வைக்கிறது. அதை போல தான் இங்கு மார்த்தாளும் இயேசுவின் வருகை தாமதமானதால் சோர்ந்து போய்விட்டாள். இரண்டு நாட்கள் முன்பாக வந்திருப்பீரானால் கூட நன்றாக இருந்திருக்கும், ஆனால் இப்பொழுது அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதே என்று சொல்லுகிறாள்.

மாற்கு 9:19-ல் அவர் பிரதியுத்தரமாக, விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். கடுகளவு விசுவாசம்கூட இல்லாத
சந்ததியே எதுவரைக்கும் நான் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன் என்று சொல்கிறார். மார்த்தாள். மரியாளுடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு தேவன் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த தீமையை நன்மையாக மாற்றினார். ஆண்டவர் பொறுமையாக இருந்து மார்த்தாள். மரியாளைத் தைரியப்படுத்தினார். இன்றைக்கு அநேகர் உங்களுக்கு ஏற்றமாதிரி ஜெபிக்கிறீர்கள். மார்த்தாளுடைய ஜெபம் நீர் நான்கு நாட்களுக்கு முன்பாக வந்திருப்பீரானால் இது நடந்திருக்காது. இனி நீர் வந்தால் என்ன. போனால் என்ன என் சகோதரன் மரித்துப்போய் விட்டானே என்று கலங்கினாள். ஆனால் இயேசு அவளை கல்லறையினிடத்தில் அழைத்துச் சென்று, இந்த கல்லை புரட்டித் தள்ளுங்கள் என்று சொல்லி அவள் சகோதரனை உயிரோடு எழுப்பி தந்தார்.

சிலருடைய ஜெபங்கள் ஆண்டவருக்கு பிரியமானதாக இல்லை. ஏனென்றால் அவர்களிடத்தில் விசுவாசம் இல்லை. மார்த்தாளுடைய ஜெபமும் அப்படித்தான் இருந்தது. நீர் நான்கு நாட்களுக்கு முன்பாக வந்திருக்க வேண்டும், என் சகோதரனை எழுப்பி இருக்க வேண்டும். முன்பே வந்திருப்பீரானால் இப்படி நடந்திருக்காது என்று சொன்னாள். இயேசு நான்கு நாட்களுக்கு முன்பாகவே வந்திருந்து லாசருவை உயிரோடு எழுப்பி இருப்பாரானால் யூதர்கள் ஒருவர் கூட அவரை நம்பி இருக்க மாட்டார்கள். அவர்களும் விசுவாசிக்கும் படியாகத்தான் இயேசு நான்கு நாட்கள் கழித்துவந்து தேவனுடைய மகிமை வெளிப்படச் செய்தார். ஓசியா 6:2-ல் இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார். மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார். அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம் என்று சொல்லப்பட்டுள்ளது. மரித்துப்போன ஒரு ஆவி மீண்டும் அந்த சரீரத்துக்குள் வருவதற்கு 72 மணி நேரத்துக்குள் முயற்சி செய்யுமாம், இது யூதர்களுடைய கணிப்பு. அதனால்தான் இயேசு மூன்றாவது நாள் வராமல் நான்காவது நாள் அங்கே வந்தார். அவர்களுடைய மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து போடும்படியாக இயேசு பெத்தானியாவுக்கு வந்தார்.

எலியாவின் விசுவாசத்தை பாருங்கள் என்னுடைய வாக்கினால் அன்றி இந்த தேசத்தில் மழையோ, பனியோ பெய்யாது என்று கட்டளையிட்டான். அவன் சொன்னபடியே மூன்று வருஷமும் ஆறு மாதமும் மழையோ பனியோ அந்த தேசத்தில் பெய்யவில்லை. அந்த நாட்டின் ராஜா ஆகாப் எலியாவை அழைத்து என் தேசத்தில் மழை பெய்யும்படியாக நீ ஜெபிக்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது எலியா நீ உன் தேசத்தில் உள்ள பாகாலின் விக்கிரக தோப்புகளையும் ஒழித்து விட்டு தேவனுக்கு பிரியமானவராய் மாற வேண்டும் என்றான். பாகாலின் தீர்க்கதரிசிகள் பாகாலை நோக்கி கூச்சலிட்டுத் தங்களைக்கீறி கொள்ளுகிறார்கள் ஆனால் அங்கிருந்து எந்த ஒரு பதிலும் அவர்களுக்கு வரவில்லை. ஆனால் எலியா தேவனை நோக்கி நான் உம்முடைய பிள்ளை என்றும் நீர் ஜீவனுள்ள தேவன் என்று இந்த ஜனங்கள் அறியும்படியாக இன்றைக்கு என் ஜெபத்தை கேட்டருளும் என்று சொல்லி ஜெபித்தார். ஜெபித்த உடனே வானத்திலிருந்து அக்கினி வந்து அனைத்தையும் பட்சித்து போட்டது. கர்த்தரே தெய்வம் என்று எல்லா ஜனங்களும் அறிந்து கொண்டார்கள். கர்த்தர் எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தார். அவர் ஜெபித்த போது உள்ளங்கையளவு மேகம் வந்தது. எலியாவின் விசுவாசம் தளர்ந்து போக தேவன் விடவில்லை.

ஆனால் 19 ஆம் அதிகாரத்தில் அவர் நான் ஏன் வாழ வேண்டும் என்று சொல்லி சோர்ந்து போகிறார். ஆகாபின் மனைவியாகிய யேசபேல் எலியாவின் தலையை வாங்க வேண்டும் என்று சொல்லி தீவிரமாய் செயல்பட்டார். இந்த செய்தியை அறிந்த எலியா மிகவும் சோர்ந்து போய் ஒரு சூரைச் செடியின் கீழே உட்கார்ந்து ஆண்டவரே நான் வாழ்வதை காட்டிலும் மரித்துப் போவது நலம் என்று சொல்லி கொண்டிருந்தார். இதைப் போலத்தான் அநேகருடைய இருதயத்தில் இருந்து விசுவாசமும் வருகிறது அவிசுவாசமும் வருகிறது. எலியாவும் கூட ஒரு முறை விசுவாசத்தோடு தேவனுக்காக பெரிய காரியங்களை செய்தவர். ஒரு சூரைச் செடியின் கீழே அமர்ந்து நான் வாழ்ந்தது போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும் என் பிதாக்களைப் பார்க்கிலும் நான் நல்லவன் அல்ல என்று சொல்லி ஜெபிக்கிறான். எலியாவின் விசுவாசம் தளர்ந்து, அவர் சோர்ந்து போனதை அறிந்த தேவன் அவரை தூதனை கொண்டு தேற்றுகிறார். எலியா ஜெபித்தது போல நீங்கள் ஜெபிக்க கூடாது. அநேக நேரங்கள் ஜெபத்தில் பதறி ஜெபிக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஜெபத்தை செய்யக்கூடாது.

இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் உங்கள் ஜெபத்திற்கு பதில் வரவில்லை. ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் உடனே நீங்கள் சோர்ந்து போகிறீர்கள் எலியாவின் வாழ்க்கையிலும் இப்படித்தான் சோர்வு வந்துவிட்டது. ஆனால் தேவன் அவரை விட்டு விடவில்லை. அவரைத் தேற்றி, அவர் செய்ய வேண்டிய காரியங்களை அவரைக் கொண்டே செய்து முடித்தார். ஆண்டவர் அவிசுவாசத்தில் போராடுகிற நம்மை அப்படியே கைவிட்டு விடமாட்டார். நம்மை தட்டி எழுப்பி தேற்றி, தைரியப்படுத்தி முன்னேறிச் செல்ல வைப்பார். ஆனால் சாத்தான் உங்களை ஆண்டவர் மேல் உள்ள விசுவாசத்தை, நம்பிக்கையை தளர வைப்பான். அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது. வசனம் தெளிவாக சொல்லுகிறது ரோமர் 14:1-ல் விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள் என்று. நீங்கள் விசுவாசத்தில் பலவீனமுள்ளவர்களாய் இருக்க தேவன் விரும்பவில்லை. மார்த்தாள் அன்றைக்கு விசுவாசத்தில் பலவீனமுள்ளவளாக இருந்ததால் தான் நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான் என்று சொல்லுகிறாள், அப்படி நீங்கள் இருக்கக் கூடாது.

ஒரு வீடு இருக்கா? ஒரு பொருள் ஆசைப்பட்டதை வாங்க முடியுதா? உன்று புலம்புவீர்கள், ஆனால் அவசரப்பட்டு எதையும் வாங்க கூடாது. நீங்கள் விசுவாசியாக இருந்தாலும் கையில் பணம் இருந்தாலும் கர்த்தருக்கு காத்திருந்து, உம்முடைய சித்தமா என்று கேட்டு வாங்க வேண்டும். கர்த்தருக்கு சித்தமில்லாத எதையும் அவசரப்பட்டு வாங்க கூடாது. விசுவாசத்தினால் வராத எல்லாம் பாவம் தான். ரோமர் 14:23-ல் விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே என்று சொல்லப்பட்டுள்ளது. கர்த்தருடைய ஆசீர்வாதம் ஐசுவரியத்தை கொண்டு வரும். அதோடே அவர் வேதனையை கூட்டார். தேவன் வானத்திலிருந்து ரதத்தை அனுப்பி எலியாவை உயிரோடு கூட்டிட்டு போனார். நம்மை கூட்டிட்டு போக பரலோகத்திலிருந்து ரதங்கள் வரப்போகிறது.

மோசே 24 லட்சம் ஜனங்களை நடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் நடந்து போகையில் பகலில் குளிர்ந்த நிழலாக, மேகஸ்தம்பமாகவும். இரவில் அக்கினி ஸ்தம்பமாக. கர்த்தரே நித்திய வெளிச்சமாய் இருந்தார். அப்படி நடத்திப் போய்க் கொண்டிருக்கும் போது எவ்வளவு பிரச்சனை, பிரயாணத்தில் தடைகள், போராட்டங்கள் வந்தது. மோசே ஆண்டவரை நோக்கி முறையிடுகிறான். எண் 11:12-ல் அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி, நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன? இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டு போவதுபோல, உன் மார்பிலே அணைத்துக் கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ? என்று மோசே புலம்புகிறான். யோவான் 11:21,22-ல் ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். நீங்கள்
தேவனிடத்தில் கேட்கிறதை அவர் கொடுப்பார். உங்களுக்குத் தருவார். ஆண்டவர் உங்கள் சூழ்நிலையை மாற்ற முடியும். உங்களுக்கு விரோதமான காரியங்களை நன்மையாக மாற்ற முடியும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஆண்டவர் மோசையை பெலப்படுத்தி அவனை கொண்டு தான் மகிமையான காரியங்களை செய்தார். அந்த தேவன் இன்றைக்கு உங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக உங்களை பயன்படுத்துவாராக.